


1972 முதல்
எனதும் நெருக்கமான இலக்கிய நண்பரானார். கொழும்பு வரும் வேளைகளில் நான் பணியாற்றிய வீரகேசரி
அலுவலகம் வந்து சந்திப்பார். 1983 தொடக்கத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
பாரதி நூற்றாண்டை கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த மூத்த எழுத்தாளர்களும்
பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் எஸ்.
இராமகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கும் அழைக்கப்பட்டனர்.

1983 இனக்கலவர
காலத்தில் யாழ்ப்பாணத்தில் நான் தங்கியிருந்தபோது ஒருநாள் அவரை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில்
சந்தித்தேன். அதுவே அவருடனான இறுதி நேரடிச்சந்திப்பு.

நான் அவுஸ்திரேலியாவுக்கு
புலம்பெயர்ந்த 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் அகஸ்தியர், இளங்கீரன், மல்லிகை ஜீவா, கே. டானியல்
ஆகியோரின் மணிவிழாக்காலமாகும். இவர்களைப்பற்றிய விரிவான கட்டுரையை எழுதி, மெல்பன் 3EA
வானொலி தமிழ் நிகழ்ச்சியில் சமர்ப்பித்தேன். 3EA வானொலி காலப்போக்கில்
SBS வானொலி தமிழ் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.
குறிப்பிட்ட
ஒலிநாடாவையும் அகஸ்தியரிடம் தபால் மூலம் சேர்ப்பித்தேன்.
அவரது பிள்ளைகள்
நவஜோதி, நவஜெகனி ஆகியோரிடமிருந்தும் எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. அகஸ்தியருடனான நேர்காணல்
இடம்பெற்ற எனது நூல் சந்திப்பு 1998 இல் வெளியானது.
எனினும் அந்த
நூலைக்காணக்கிடையாமலேயே அவர் மறைந்தார் என்பது எனது தீராத சோகம். அவுஸ்திரேலியா மெல்பனில்
குறிப்பிட்ட நூல் வெளியிடப்பட்டவேளையில், அகஸ்தியரின்
உருவப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தியே நிகழ்ச்சியை ஆரம்பித்திருந்தேன்.
கண்டியில்
அகஸ்தியருக்கு அறிமுகமான நண்பர் எஸ். கொர்ணேலியஸ்
அவர்கள் அன்றைய தினம் அகஸ்தியர் பற்றிய நினைவுரையை நிகழ்த்தினார்.
அகஸ்தியர்
1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். கடந்த ஓகஸ்ட் 29
ஆம் திகதி அவரது பிறந்த தினமாகும்.
அவருடைய நூல்கள்: இருளினுள்ளே, திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள்,
மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடைபாதை இல்லை,
நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக,
அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள்.
அகஸ்தியரின்
வாழ்வையும் பணிகளையும் பற்றிய பல கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டுள்ளன.
அகஸ்தியர்
எனக்கு எழுதியிருக்கும் கடிதங்களில் சிலவற்றை அவரது நினைவாக இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
திகதிகளின் காலப்பகுதியை அவதானித்து, குறிப்பிட்ட கால கட்டத்தில் அவரது மதிப்பீடுகளையும்
புரிந்துகொள்ள முடியும்.
-------------------------------------------
S.AGASTHIAR எஸ்.
அகஸ்தியர்
(Member
of the Presidium of the
Ceylon Progressive Writers' Association)
180, RUE LA FAYETTE, PARIS. 75010, FRANCE.
1/3/91
தோழமையுள்ள
லெ. முருகபூபதி அவர்களுக்கு,
யாரும் எதிர்பாராதவகையில்
எனக்குண்டான உடற்பாதிப்பு ஓராண்டுக்கு மேலாக அவஸ்தைப்படுத்திக்கொண்டிருக்கிறது. கைலசபதி,
டானியல் வழி வாசல் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கடுஞ்சிகிச்சைக்குட்பட்டிருக்கின்றேன்.
எழுத்தும் என்வசத்தை மீறிக்கோணலாகிறது. திருமதி அன்னலட்சுமியிடமிருந்து ( வீரகேசரி
மூத்த பத்திரிகையாளர்) முகவரி பெற்று இக்கடிம் எழுதப்படுகிறது.
அவுஸ்திரேலியாவிலிருந்து
நீங்கள் இலக்கிய முயற்சியில் ஈடுபட்டுவருவதை அறிந்து ( பத்திரிகையில்) பரவசமானேன்.
அண்மையில் சிறுகதையும் படித் தேன். அரசமரத்தடி அனுபவச்சித்திரிப்பு நன்று.
எஸ்.பொன்னுத்துரை
அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் , பத்திரிகை ஒன்று வெளியிடுவதாகவும் அறிந்தேன். அவர்
பிரான்ஸ் வந்திருந்தபோது எனது இருப்பிடம் தெரிந்தவர்கள் அவருக்கு வழிகாட்டவில்லைப்போல்
தெரிகிறது.
' ஓசை' என்ற காலாண்டு சஞ்சிகை வெளியிடுகிறோம். 5 வது
இதழ் வந்துவிட்டது. ' ஓசை'க்கு ஆக்கங்கள் அனுப்புங்கள். ' பாரிஸ் கலை இலக்கிய வாசகர்
வட்டம்' ஸ்தாபனம் அமைத்து அதன்மூலம் ' ஓசை' வெளிவருகிறது. தரமான ஆக்ககாரர்கள் இங்கே
இல்லை. சிரமப்பட்டே ஆக்கங்கள் பெற்றுத் தரமாக கொண்டுவரவேண்டியுள்ளது. உங்கள் பதில்
கண்டு 'ஓசை' அனுப்பப்படும். உடல்நலம் பாதிக்கப்பட்டதால், என் திட்டம்போல் இலக்கிய உலகில்
செயற்படமுடியவில்லை. கைநடுங்குகிறது.- விரல்கள் குறண்டுகின்றன. மனசுதான் வாலிப உணர்வோடு
உந்துகிறது. எனது உடல்நிலை சரிவர நீண்டகாலம் எடுக்கலாம். அல்லது வேறுவிதமாகவும் நேரிடலாம்.
நான் பதில் எழுதத்தாமதித்தாலும், எனக்கு எழுதிக்கொள்ளுங்கள்.
உங்கள் ஜீவியம்
அவுஸ்திரேலியாவில் எப்படிப்போகிறது? குடும்பம் - பிள்ளைகள் இங்கேயா? இலங்கையிலா? அறிய
ஆவல். இலங்கையில் எனக்கு - என் இலக்கியங்களுக்கு எற்பட்ட அவலங்களை - சேதங்களை நீங்கள்
அறிவீர்கள். பிரான்ஸில் நிவர்த்தி செய்யலாம் என்ற திட்டம் உடற்பாதிப்பால் தடைப்படுகிறது.
1985 ல் அச்சடித்து
முடிந்த " அகஸ்தியர் கதைகள்"
சிறுகதை நூல், கடந்த ஜனவரிதான்(6-1-91)
யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எக்கச்சக்கமான அச்சுப்பிழைகளுடன் நூல் வந்திருக்கிறது.
" ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள்"
பகுப்பாய்வு நூலும், "மேய்ப்பர்கள்"
என்ற சிறுகதை நூலும் N.C.B.H வெளியிட்டிருக்கிறது.
'நரகத்திலிருந்து ' என்ற குறுநாவல் தொகுதியும் , ' எரிநெருப்பில் இடைபாதை இல்லை' என்ற நாவலும்
அடுத்த மாதம் N.C.B.H வெளியிடுகிறது. கடிதம் எழுதியிருக்கிறார்கள். ' கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்' என்ற
நூல் காந்தளகம் வெளியிடவுள்ளது. 1985 ல் இலங்கையில்
இருக்கும்போது எழுதிய ' ஒளிமயமான இருள் காலம்'
என்ற நாவல், முதற்பாகம் (கையெழுத்துப்பிரதி) கடந்த வாரம்தான் இலங்கையிலிருந்து என்
கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
இவற்றைவிட,
' சுவடு' என்ற விவரண நவீனம் ஒன்றும், 'மகாகனந்தாங்கிய' என்ற நாவல் ஒன்றும் (முதற்பாகம்)
எழுதி முடித்துவைத்திருக்கின்றேன்.
இவற்றை நூலுருவில்
கொணர்வதற்கு உடல்நிலைதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சமுதாயத்தை நேசித்த எங்கள்
இணைப்புகள் வலுப்பெறட்டும். இருக்கும் வரை வெல்லற்கரிய எமது இலக்கியக்கோட்பாடுகளை பதிப்பது
அவசியமல்லவா? மனசிற் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டே இது எழுதப்படுகிறது.
எனது நேசிப்புக்குள்ளானவர்களுடன் சங்கமிக்கட்டும்.
உங்கள் சுகசெய்தி அறிய ஆவல். இலக்கிய அன்பர்களுக்கு
என் அன்பைத்தெரிவியுங்கள்.
அன்புடன்
எஸ். அகஸ்தியர்
-------------------------------------------
22/11/91
அன்புள்ள
முருகபூபதி அவர்களுக்கு,
நூல்கள் அனுப்பியதற்கு
எழுதிய பதிற் கடிதம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களிடமிருந்து இன்றுவரை
பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில் எனது கடைசிப்புதல்வி ( ஜெகனி) திருமணம் நிகழ்ந்தது.
திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன். அதற்கான வாழ்த்து மடல் உங்களிடமிருந்து கிடைத்தது.
நன்றி.
இத்துடன் ' கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்'
நூல் வருகிறது. இந்நூல் ஆஸ்பத்திரிக்கட்டிலில் இருந்து எழுதப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்குப்பின்
இப்போ உடல்நிலை தேறிவருகிறது.
இவ்வாரம்
' தமிழன்' பத்திரிகையில் உங்கள் கதை படித்தேன்.
நல்ல உத்தி, நல்ல கதை. மகிழ்ச்சி.
இம்மாதம்
பேர்லினில் 3 நாட்கள் இலக்கியவிழா நடக்கிறது. நானும் கலந்துகொள்கிறேன். விபரம் தெரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
கடந்த ஆண்டு N.C.B.H. வெளியிட்ட எனது மூன்று நூல்களும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து
ஓயாமல் எழுதுங்கள். வளர்ச்சிக்கு அதுவே வழி.
உவ்விடம்
உள்ள எழுத்தாளர்களுக்கு என் அன்பை - நன்றியை கூறுங்கள்.
அன்புடன்
எஸ். அகஸ்தியர்.
-------------------------------------------------------------------------
22-5-91
தோழமையுள்ள
முருகபூபதி அவர்களுக்கு,
நீங்கள் அனுப்பிய
கடிதம், நூல்கள், பார்சல், கசட் அனைத்தும் உரிய காலத்தில் கிடைத்தன. சில அவசர சிகிச்சைகள்
மேற்கொண்டிருந்த வேளையாதலால் உடன் பதில் எழுதவில்லை. இப்போ உடல்நலம் தேறிவருகிறது.
வாரா வாரம் தொடர்ந்து சிகிச்சை நடக்கிறது.
ரத்தம் எடுத்துச்சோதிப்பது
- உடன் ரத்தம் ஏற்றுவது. பூரண சுகம் வர கனகாலம் எடுக்கலாம். டாக்டர்கள், அம்மா, பிள்ளைகள்
விசேட கவனம் எடுத்து பாதுகாத்துவருகிறார்கள்.
இதற்கிடையில்
ராஜீவ் முடிவு என்னை வெகுவாகப்பாதித்துவிட்டது. இலக்கிய ஆக்க உணர்வு ஒன்றே உஷார்ப்படுத்துகிறது.
உங்கள் தொடர்பு மகிழ்ச்சியாகவிருக்கிறது. ' அக்கினிக்குஞ்சு' ஆசிரியர் குழு எனது முகவரிக்குச்
சஞ்சிகை அனுப்பிவைத்தது. முகவரி நீங்கள் கொடுத்திருக்கலாம்.
பொன்னுத்துரையின்
பலவீனம் இவ்வளவு அசிங்கமாக இருக்கத்தேவையில்லை. அவர் ஆற்றல் விளலுக்கிறைத்த நீர். தனிநபர்வாத
- தன்னிச்சாபூர்வ எழுத்து மரபுசார்ந்த இலக்கியநயமாக இருப்பினும், சமூகவியலை அதன் இயக்கவியற்
பாங்காகச் சொல்லத் தெரியாவிடின் பயனில்லை.
" ஆக்கங்கள்
வேண்டின் அனுப்புகிறேன்" என்று சுருக்கப்பதில் அனுப்பினேன். நீங்கள் அனுப்பிய
அகதிகள் நிதி உதவிப்படிவம் 'ஓசை'யில் போட்டிருக்கிறோம்.
அவுஸ்திரேலியாவில்
உள்ள தமிழர் வாழ்வு முறைக்கு முற்றிலும் மாறுபட்டது பிரான்ஸ். உங்கு கலை இலக்கிய கலாசார
பரிவர்த்தனை இடைவிடாமல் நிகழ்கிறது. நல்லது. ஆனால், விமர்சன ரீதியாக ஜெர்மனி, பிரான்ஸ்,
நோர்வே முன் நிற்கிறது போல் தெரிகிறது. அவுஸ்திரேலியாவில் தமிழ் வெளியீடுகள் அதிகம்
வர வசதியிருப்பது போல் தெரிகிறது.
உங்கள் ரஷ்யப்பயணக்கட்டுரை, சிறுகதைத்தொகுப்பு -
இங்கேயுள்ள பத்திரிகைகளுக்கு அறிமுகம் செய்யக்கொடுத்துள்ளேன். இன்று சிறுகதை உத்தியிலும்
நடையிலும் உருவத்திலும் எவ்வளவோ வளர்ச்சியடைந்துள்ளது. இங்கே ' பாரிஸ் ஈழநாடு' என்ற வார இதழ்
ஈழநாடு போலவே வருகிறது. அதற்குச்சிறுகதை அனுப்புங்கள். ஏதாவது ஆக்க இலக்கியம் அனுப்பினால்
நல்லது. அது வணிகப்பத்திரிகையாதலால் எப்படி எழுதவேண்டும் என்று தெரியுந்தானே? ' கசட்'
கேட்டேன்.
அப்படி ஒரு
எண்ணம் தோன்றியிருந்தால், குறிப்பிட்ட நால்வருடனும் தொடர்புகொண்டு, சரியான தகவல் பெற்று,
அதனைச்செய்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும். என்னைப்பற்றி யாரோ தவறாக உங்கள் மனசில்
அழுத்தியவற்றை சொல்லியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. என் மீது கொண்ட பாசத்தால், அபிமானத்தால்
சொல்லியிருக்கிறீர்கள்.
எந்தத்தகவலும்
சரியாக இருக்கவில்லை. நீங்கள் வீரகேசரியிலிருந்த காலத்திலிருந்து இன்றுவரையும் வீரகேசரி
எனது ஆக்கங்களைத் திட்டமிட்ட இருட்டடிப்புச் செய்துகொள்வதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்.
நீங்கள் இருந்தபோதும் உங்களாலும் அங்கே எனது ஆக்கங்களை வெளியிடமுடியவில்லை.
எனது கருத்தியல்
மக்களிடம் சென்றடைய அதிகம் தடையாக இருப்பது இன்றும் வீரகேசரிதான். இதில் வேடிக்கை என்னவென்றால்,
எனது ஆக்கங்களை படித்துவிட்டு, தங்களுக்கு இசைவான பிற்போக்குக் கருத்தியல்வாதிகளைக்கொண்டு
எங்களுக்கு எதிரான கருத்தியலில் ஓயாமல் எழுதுவதுதான்.
அன்புமணி
போன்றோரின் கட்டுரைகளைப்படித்திருப்பீர்கள். வீரகேசரி இப்படி இருட்டடிப்புச்செய்வதால்
நான் அதற்கு எழுதாமல் விடுவதில்லை. எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
நிற்க, உங்கள்
வெளியீடுகளை அனுப்பிக்கொள்ளுங்கள். இங்கிருந்து வரும் வெளியீடுகளை அனுப்பிவைக்கின்றேன்.
மேய்ப்பர்கள் சிறுகதைத்தொகுப்பு வந்திருக்கிறது.
N.C.B.H வெளியீடு. அகஸ்தியர் கதைகள் தொகுப்பு ஒன்று இலங்கையில்
வந்திருக்கிறது. அகஸ்தியர் கதைகள் நூல் கைவசம் இல்லை. மேய்ப்பர்கள் விற்கலாமா என்பதைத்
தெரிவியுங்கள். ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள் நூல் N.C.B.H வெளியிட்டிருக்கிறது. அதுவும் கைவசம் இல்லை. N.C.B.H க்கு எழுதி எடுத்தீர்களாயின் நல்லது.
கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும் என்ற கட்டுரைத்தொகுப்பு நூல் பிரான்ஸில் வெளிவருகிறது.
அனுப்பிவைப்பேன். ஆக்கங்கள் அனுப்பிவையுங்கள். நான் கடிதம் எழுதாவிட்டாலும் அடிக்கடி
எழுதிக்கொள்ளுங்கள்.
பிரேம்ஜி
கனடாவில் நிற்கிறார். வி.பி.யையும் சந்தித்துள்ளார். அடுத்த ஆனிக்கு பிரான்ஸ் வந்து
இலங்கை செல்வார். உலக இலக்கிய ஸ்தாபன அமைப்பு நோக்கம். விபரம் மறு கடிதத்தில் எழுதுவேன்.
தோழமையுடன்
எஸ். அகஸ்தியர்.
-----------------------------0000------------------------------------
letchumananm@gmail.com
No comments:
Post a Comment