கைகொடுக்கும் ஆன்மீகம் ! - எம் . ஜெயராமசர்ம .........மெல்பேண் ... அவுஸ்திரேலியா


மதிமயக்கும் பொருளை உண்டு 
    மனங்குழம்பும் கூட்டம் இன்று 
பொறியழிந்து நெறி பிறழ்ந்து 
    புதை குழிக்குள் விழுகிறதே 
அறிவிழந்து தனை உணரா
     அக்கூட்டம் விடிவு பெற 
ஆன்மீக வழி  ஒன்றே
     அருந்துணையாய் அமையும் அன்றோ !
image1.jpeg
 கடவுளில்லை என்று  சொல்லி
    கருவறுக்கும் ஒரு கூட்டம்
காமுகராய் மாறி நின்று
    கற்பழிக்கும் ஒரு கூட்டம்
கடவுள் சிலை திருடிநின்று
   காசுசேர்க்கும் ஒரு கூட்டம்
கண்ணியமாய் திருந்தி வர
     காட்டி நிற்போம் ஆன்மீகம் !

மற்றவர்கள் மனம்  உடைய
    வைக்கச்  செய்யும்  ஒருகூட்டம்
பெற்றவர்கள் வருந்தி  நிற்க 
     பிரியச் செய்யும்  ஒருகூட்டம்
கற்றுத் தந்த ஆசானை
     கலங்கச் செய்யும் ஒருகூட்டம்
கட்டாயம் திருந்தி நிற்க 
      கை கொடுக்கும் ஆன்மீகம் !


ஆணவத்தில் அமிழ்ந்து  நிற்பார்
     அதை விட்டு  வரவேண்டும்
அறவழியை மறந்து செல்வார்
     அதை நாடி வரவேண்டும்
 பூமிதனில் வாழும் மக்கள்
     புனிதமுடன் வாழ வேண்டில்
சாமி என ஆன்மீகம்
      தான் துணையாய் ஆகுமன்றோ !


 ஈனமுடை  எண்ணம் எலாம்
      எமை விட்டுப் போவதற்கு
 ஈசன் அருள் எப்போதும்
      எமக்கு துணை ஆகிநிற்கும்
ஊனமுடை எண்ணம் எலாம்
    உளம் விட்டு போவதற்கு
ஆழம்  உடை ஆன்மீகம்
    அருந்துணையாய் ஆகும் அன்றோ !       


No comments: