என்னடா வாழ்கை இது - கவிதை

.

என்னடா வாழ்கை இது....?
எதற்கு இத்தனைப் போராட்டம்
எதை நோக்கிப் பயணிக்கின்றோம்....?
எதை இங்கு சாதிக்கப் போகிறோம்...?

எதையும் கொண்டுவரவில்லை
எதையும் கொண்டு செல்வதில்லை
விட்டுப்போவதும் நமக்குயில்லை
பெற்றப் பிள்ளைகளும் நம்மவர் இல்லை

சிந்தித்துப் பார்க்கையில் சிலநேரம்
சித்தம் சூனியமாகி செயலிழந்து தவித்திட...
சிகரங்கள் சிறுத்து பார்வைக்குள் மழுங்கிட....அட! வந்துவிட்டோம் வாழ்ந்துவிட்டுப் போவோம்....
நமக்கு மட்டுமா இத்தனை சோதனை...?
நம்மில் பலருக்கு ஆயிரம் வேதனை....
விரல் வெட்டி வீங்கியதற்கே
விம்மி விம்மி அழுகின்றோம்....
கைகால் போனவனே அங்கு
கலக்க மின்றி கடக்கின்றான்....

எண்ணி இதைப் பார்த்து
எதிர்நீச்சல் போடத் துணிந்தால்.....
எட்டிப்போன ஏழரைகள் கிட்ட முட்ட வரும்
பட்டும் படாமலும் நின்ற
பச்சோந்திகள் பல்லை இளிக்கும்
கண்டும் காணாமல் போனவை
கருத்தாய் நோட்டமிடும்.....
கட்டிப் புரண்டவை
காரணமின்றி விலகிச் செல்லும்

சுற்றி நடப்பவை புரியாத புதிராகி
சுழன்று சுழியாகி தொடக்கத்திற்கே வந்து நிற்க....

வற்றிய வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
கற்றதை பாமரனுக்கு புகட்டிட வேண்டும்
நற்றமிழ் பிழைக்க வாழ்ந்திட வேண்டும்
பற்றாகி இலக்குகள் மேலோங்கிப் பொங்கிட
ஊற்றாகிய உணர்வுகள் உள்ளிருத்து உயிர்ப்பித்து
உலக வாழ்விற்கு உன்னை மீட்டுவரும்....

கவிதாயினி அமுதா பொற்கொடி

No comments: