யானையைச் சுடுதல் - ஜார்ஜ் ஆர்வெல்- தமிழில் :நம்பி கிருஷ்ணன்

.

கீழை பர்மாவின் மாவலமயீனியில் பெரும் எண்ணிக்கைகளில் மக்கள் என்னை வெறுத்தார்கள். வாழ்க்கையில் முதல் முறையாக என் முக்கியத்துவத்தின் காரணத்தால் எனக்கு இவ்வாறு நேரிட்டிருக்கிறது. தாலூக்கா போலீஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு ஐரோப்பியர்களுக்கு எதிரான சல்லித்தனமான காழ்ப்புணர்வு நிலவி இருந்தது. கலவரம் செய்யும் அளவிற்கு எவருக்கும் துணிவில்லை என்றாலும் ஐரோப்பிய பெண்மணியொருவர் தனியே பஜார் வீதிகளில் நடந்து சென்றால் அவர் மீது வெற்றிலைச் சாறு உமிழப்படும் என்பதென்னவோ நிச்சயம். நான் போலீஸ் அதிகாரியாக இருந்ததால் அவர்களது காழ்ப்பிற்கான இலக்காக இருந்தேன் என்பது வெளிப்படை. தங்களுக்கு பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டபின் அவர்கள் என்னை வம்பிழுத்தார்கள். கால்பந்தாட்ட மைதானத்தில்  சுறுசுறுப்பான பர்மிய குடிம்பனொருவன் என்னை வேண்டுமென்றே தடுக்கிவிழச் செய்தபோது ஆட்ட நடுவர் (அவரும் ஒரு பர்மிய குடிம்பன்) அதைக் கண்டும் காணாதது போல் வேறுபக்கம் திரும்பிக் கொள்வார். பார்வையிட்டுக் கொண்டிருக்கும் கூட்டமோ கோரமான பலத்த சிரிப்பொலியொன்றை எழுப்பும். ஒற்றை நிகழ்வாக அல்லாது பலமுறை இவ்வாறே நிகழும். இறுதியில் ஏளனத்தோடு ‘மஞ்சள்’ முகத்துடன் என்னை எங்கும் எதிர்கொண்ட இளைஞர்களும், நான் கடந்து சென்றுவிட்டேன் என்பதை அறிந்துகொண்டபின் அவர்கள் என்மீதெரிந்த வசைகளும் என்னை மிகவும் எரிச்சலூட்டின. இவ்விஷயத்தில் இளம் பௌத்த பிட்சுகளே மோசமானவர்கள். ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களில் ஒருவருக்குக்கூட தெருக்கோடியில் நின்றுகொண்டு ஐரோப்பியர்களை கேலி செய்வதைத் தவிர வேறு வேலையேதும் இருந்ததாகத் தெரியவில்லை.
இவை அனைத்துமே புரிபடாமல் என்னை நிலைகுலையச் செய்தன. ஏனெனில் நான் அப்போது ஏகாதிபத்தியம் ஒரு கேடான விஷயமென்றும் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் என்னால் வேலையை உதறித்தள்ளி விட்டு அங்கிருந்து விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு நல்லது என்றும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டிருந்தேன். கொள்கை ரீதியாக (ஆனால் எவருமே அறிந்து கொள்ள முடியாத வகையில் மறைவாக) பர்மிய மக்களை அவர்களை ஒடுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக நான் ஆதரித்தேன். என் பணியைப் பொருத்தமட்டில் விவரித்து தெளிவுபடுத்தம் என் ஆற்றல்களை மீறும் வகையிலும் அதை நான் வெறுத்தேன். இது போன்ற பணிகளில் பேரரசுகளின் கீழ்த்தரமான அவலங்கள் அருகாமையிலிருந்து கண்கூடாக காணக் கிடைக்கின்றன. துர்நாற்றம் பிடுங்கும் கூண்டுகளில் ஒடுக்கப்பட்டிருக்கும் அவலநிலைக் கைதிகள், பயத்தால் சாம்பல் நிறத்தில் இருண்டிருக்கும் 


ஆயுட்கைதிகளின் முகங்கள், மூங்கில்கழி சாட்டையடிக்கு உட்படுத்தப்பட்ட மக்களின் தழும்பேறிய பிட்டங்கள் – இவையெல்லாம் தாளமாட்டாத குற்றவுணர்வை அளித்து என்னை துன்புறுத்தின. ஆனால் என்னால் எதையுமே ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் இணைத்து சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆழ்ந்த படிப்பறிவில்லாத முதிரா வாலிபனாக இருந்த காலமது. கீழை நாடுகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆங்கிலேயன் மீதும் அதிகாரபூர்வமாக திணிக்கப்படும் ஒட்டுமொத்த மௌனத்தில்தான் எனது பிரச்சினைகளப் பற்றி நான் சிந்திக்க வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இறந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்து, அதனிடத்தை நிரப்பிக் கொள்ளும் இளம் வல்லரசுகளோடு ஒப்பிடுகையில் அது பலமடங்கு உயர்ந்ததாகவே இருக்கும் என்பதைப் பற்றி நான் இன்னமும் குறைவாகவே அறிந்திருந்தேன். நான் பணிபுரிந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான என் வெறுப்பிற்கும் அப்பணியை நிறைவேற்ற முடியாத ஒன்றாக மாற்ற முனையும் தீசல்குணம் கொண்ட மிருகங்களையொத்த மனிதர்களுக்கும் இடையே இருதலைக் கொள்ளி எறும்பாக அவதிப்பட்டேன். என் மனதின் ஒரு பகுதி பிரிட்டிஷ் ராஜ்யத்தை, அடிபணியும் மக்கள் மீது காலகாலத்திற்கும் திணிக்கப்படும் விடுபடமுடியா ஒரு அராஜகமாக பாவித்தது. மற்றொரு பகுதியோ புத்த பிட்சுவின் குடலில் துப்பாக்கிமுனை ஈட்டியை பாய்ச்சுவதே உலகின் தலையாய இன்பம் என்று யோசித்தது. இது போன்ற உணர்வுகள் ஏகாதிபத்தியத்தின் இயல்பான உபவிளைவுகளே; பணி நேரத்திற்கு வெளியே அவர்களை சந்திக்க முடியுமானால், எந்த ஆங்கிலோ-இந்திய அதிகாரியிடமும் கேட்டுப்பாருங்கள்.
ஒரு நாள் சுற்றி வளைத்து ஞானமளிக்கும் வகையில் ஏதோவொன்று நிகழ்ந்தது. சின்ன விஷயம்தான், ஆனால் ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகத்தை, சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்ளும் அரசுகளின் உண்மையான நோக்கங்களை அது எனக்கு காட்டியது. அதிகாலையில் ஊர் எதிர்க்கோடியிலிருக்கும் காவல் நிலையத்திலிருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஃபோனில் என்னை அழைத்து யானையொன்று பஜாரை துவம்சம் செய்து கொண்டிருக்கிறது  என்று கூறினார். தயவு செய்து நான் அங்கு வந்து ஏதாவது செய்ய முடியுமா? என்ன செய்யலாம் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்க்க விரும்பினேன். ஒரு மட்டக் குதிரை மீதேறி புறப்பட்டேன். என் .44 வின்செஸ்டர் துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டேன். அது யானையைக் கொல்லும் அளவிற்கு வலிமை வாய்ந்ததல்ல என்றாலும் அதன் சத்தம் பயமளிக்கக் கூடும் என்ற நம்பிக்கையில். பலதரப்பட்ட பர்மியர்கள் என்னை வழிமறித்து யானையின் செய்கைகளைப் பற்றி கூறினார்கள். அதொன்றும் காட்டு யானை அல்ல நன்றாக பழக்கப்படுத்தப்பட்டதுதான் இப்போது மதம் பிடித்து அலைகிறது. மதமேறும் சமயங்களை யூகித்து பயிற்றுவிக்கப்பட்ட யானைகளை எப்போதும் கட்டிப் போட்டிருப்பார்கள். இதையும் அப்படித்தான் சங்கிலி கொண்டு கட்டியிருந்தார்கள். ஆனால் முன்நாள் இரவு அது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டது. இம்மாதிரியான சமயங்களில் அதன் பாகன் மட்டுமே அதை சமாளிக்க முடியும். அவனோ இப்போது பன்னிரெண்டு மணி நேரத் தொலைவிலிருக்கும் ஓரிடத்திற்குச் சென்றிருந்தான். யானை காலையில் திடீரென்று ஊருக்குள் மீள்பிரவேசம் செய்திருக்கிறது. பர்மிய ஜனத்திடையே ஆயுதமேதும் இல்லாததால் அவர்கள் அதை எதிர்க்க முடியாத கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். யானை ஏற்கனவே எவரோ ஒருவரின் மூங்கில் குடிலை நொறுக்கி, ஒரு மாட்டைக் கொன்று, சில பழக்கடைகளை சூறையாடி சரக்கிருப்பை விழுங்கியிருக்கிறது; மேலும் ஒரு நகராட்சி குப்பை லாரியையும் எதிர்கொண்டு, அதன் ஓட்டுனர் அதிலிருந்து கீழே குதித்து பயந்தோடிய பின், அதைக் குப்புறப்படுத்தி மூர்க்கமாக தாக்கியிருக்கிறது.
யானை  முன்னதாக பார்க்கப்பட்ட குடியிருப்பில் பர்மிய சப்-இன்ஸ்பெக்டரும் ஏதோவொரு இந்திய போலீஸ்காரரும் எனக்காக காத்திருந்தனர். அது மிகவும் ஏழ்மையான குடியிருப்பு, பனையோலை கூரை வேய்ந்த இழிநிலை மூங்கில் குடிசைகள் திருக்குமறுக்காக செங்குத்தான மலைச்சரிவெங்கும் படர்ந்திருந்தன. மழைக்காலத்தின் அறிவிப்பாக அக்காலை மேகமூட்டத்துடன் வெக்கையாக இருந்தது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. யானை எங்கு சென்றது என்பதை அங்கிருந்த மக்களிடம் விசாரிக்கத் தொடங்கினோம். எப்போதும் போல திட்டவட்டமான செய்தி எதுவும் எங்களுக்கு கிட்டவில்லை. கீழை நாடுகளில் தவறாமல் ஏற்படும் பிரச்சினைதான்; நிகழ்வுகளின் தடத்தை நெருங்க நெருங்க அவை தெளிவற்று மங்கலாகி விடும். சிலர் யானை இந்தத் திசையில் சென்றது என்றார்கள், வேறு சிலரோ மற்றொரு திசையைக் காட்டினார்கள், சிலர் யானை அங்கு வந்ததே தங்களுக்கு தெரியாது என்று சத்தியம் செய்தார்கள். இவை எல்லாமே கட்டுக்கதை என்ற முடிவுக்கு வருகையில் சற்று தூரத்திலிருந்து கூக்குரல்கள் கேட்டன. ‘பிள்ளைகளா மரியாதையா போயிடுங்க! உடனே போயிடுங்க!” என்று அதிர்ச்சியுற்ற குரலில் ஒரு குச்சியை வீசியபடி குடிசையிலிருந்து வெளியேறி அம்மணமாக திரிந்த சிறுவர் கூட்டமொன்றை மூர்க்கமாக ஒரு கிழவி விரட்டிக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து நாக்கால் மடக்கொலி எழுப்பிக் கொண்டு, கூக்குரலிட்டபடி மேலும் சில பெண்கள் ஓடி வந்தார்கள்; சந்தேகமில்லாமல் குழந்தைகள் பார்க்கக் கூடாத ஏதோவொன்று அங்கிருந்திருக்க வேண்டும். குடிசையைக் கடந்து திரும்பியபோது ஒரு ஆளின் சடலம் சப்பைக் கிடையாக சகதியில் விழுந்து கிடப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவன் ஒரு இந்தியன், கருத்த திராவிடக் கூலி. கிட்டத்தட்ட  அம்மணமாகக் கிடந்தான். உயிர் பிரிந்து சில நிமிடங்களே ஆகியிருக்க வேண்டும். குடிசையின் ஒரு பக்கத்திலிருந்து சட்டெனத் திரும்பி யானை அவனை எதிர்கொண்டதென்றும் துதிக்கையால் பற்றி, காலை முதுகிலழுத்தி தரையோடு தரையாக நசுக்கி விட்டதென்றும் அங்கிருந்த மக்கள் கூறினார்கள். மழைக்காலம் என்பதால் தரை சொதசொதவென்றிருந்தது. ஒரு அடி ஆழமும் இருமுழ நீளமுமான ஒரு குழியில் அவன் முகம் புதைந்து கிடந்தது. தலை ஒரு பக்கம் வெடுக்கென முறிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டது போல் கைகளை பரப்பியபடி குப்புறக் கிடந்தான். முகமெங்கும் சகதி அப்பியிருந்தது. கண்கள் அகலத் திறந்தபடி, பல்லைக் காட்டிக் கொண்டு தாளமுடியாத வலியை வெளிப்படுத்துவது போல் கோரமான ஒரு சிரிப்பை அவன் சிரித்துக் கொண்டிருந்தான். (இங்கு ஒரு விஷயத்தை நான் கூறியாக வேண்டும்,. சடலங்கள் அமைதியுடன் காட்சியளித்தன என்று என்னிடம் ஒரு போதும் கூறாதீர்கள். நான் பார்த்த சடலங்கள் அனைத்தும், அனேகமாக, கோரமாகவே இருந்திருக்கின்றன). முயலின் சருமத்தை நேர்த்தியாக உரிப்பது போல் அந்த மாபெரும் விலங்கின் மிதியடித் தேய்ப்பு அவன் முதுகின் சருமத்தை உரித்திருந்தது. சடலத்தைக் கண்ட உடனேயே ஏவலனொருவனை ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்று யானையை வேட்டையாடுவதற்கான துப்பாக்கியொன்றை எடுத்துவர ஆணையிட்டேன். மட்டக் குதிரை யானையை மோப்பம் பிடித்து பயத்தால் அதிர்ச்சியுற்று எங்கே என்னைக் கீழே தள்ளி விடுமோ என்று அஞ்சி அதை ஏற்கனவே திருப்பி அனுப்பி விட்டேன்.
சில நிமிடங்களிலேயே ஏவலன் துப்பாக்கியுடன் ஐந்து தோட்டாக்களையும் எடுத்து வந்தான். இதற்கிடையே பர்மியர்கள் சிலரும் அங்கே வருகை புரிந்து யானை நூறடி தொலைவிலிருந்த நெல் வயல்களில் இருக்கிறது என்ற செய்தியையும் எங்களுக்குக் கொடுத்தார்கள். நான் முன்னே செல்லத் தொடங்கியவுடன் அக்குடியிருப்பின் ஒட்டுமொத்த ஜனத்தொகையும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து என்னை பின்தொடர்ந்தார்கள்.  யானை அவர்கள் வீட்டை சின்னாபின்னப் படுத்தியபோதும்கூட அதிகம் அக்கறை காட்டாதவர்கள் இப்போது அது சுடப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பால் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார்கள். அவர்களுக்கு இது சிறு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு கேளிக்கை. ஒரு ஆங்கில மக்கள் திரளும் நிச்சயமாக இவ்வாறே நடந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை; மேலும் யானை மாமிசமும் இவர்களுக்கு வேண்டியிருந்தது. அவர்கள் என்னைப் பின்தொடர்வது இனம்கண்டுகொள்ள முடியாத ஒரு சங்கடத்தை எனக்கு அளித்தது. யானையைச் சுடும் எண்ணம் எனக்கு அறவே இல்லை – தேவைப்பட்டால் தற்காப்பிற்கு உதவியாக இருக்குமே என்றுதான் துப்பாக்கியை எடுத்துவர ஆளை அனுப்பினேன். மேலும் கூட்டம் பின்தொடர்வது என்பது எப்போதுமே ஒரு விதமான பதைபதைப்பை நம்முள் எழுப்புகிறது. துப்பாக்கியை தோளில் சாய்த்துக் கொண்டு மேலும் மேலும் அதிகரித்து என்பின் நெருக்கிக் கொண்டிருக்கும் மக்கட்படையுடன் அங்குமிங்கும் பார்வையிடும் ஒரு முட்டாளென என்னை உணர்ந்தபடியே மலைச் சரிவில் இறங்கிச் சென்றேன். குடிசைகள் அனைத்தும் மறைந்துவிட்ட மலையடிவாரத்தில் உலோகம் பூசிய சாலை ஒன்றிருந்தது. அதன் மறுபுறம் ஆயிரம் அடிகளுக்கு அப்பால் உழப்படாது முதல் மழையால் நீரூறிய முரட்டுப் புல்கற்றைகள் அங்குமிங்குமாக அண்டியிருக்கும் எதற்குமே பயன்படாது வீணாய்ப் போயிருந்த நெல்வயல்கள். தன் இடப்பக்கத்தை எங்களுக்குக் காட்டியபடி சாலையிலிருந்து நாற்பது முழத் தொலைவில் யானை நின்று கொண்டிருந்தது. நெருங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தை அது கண்டு கொள்ளவே இல்லை. புற்கற்றைகளை அள்ளிக்கிழித்து, சுத்தப்படுத்துவதற்காக அவற்றை கால்களிலடித்து உதறி வாயில் திணித்துக் கொண்டிருந்தது.
நான் ரோட்டிலேயே நின்று விட்டேன். யானையைப் பார்த்த உடனேயே அதை சுடக்கூடாதென்று எனக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்திருந்தது. யானையைச் சுடுவதென்பது சாதாரணமான காரியமல்ல -விலையுயர்ந்த மிகப்பெரிய இயந்திரத்தை அழிப்பதற்கு சமமானது. மேலும் தவிர்க்க முடிகையில் அதைச் செய்யாதிருப்பதே உசிதம் என்பது வெளிப்படை. தொலைவில் அமைதியாக புசித்துக் கொண்டிருந்த அந்த யானை ஒரு பசுவைக் காட்டிலும் அபாயகரமாக எனக்குப் படவில்லை. அதன் ‘மதம்’ இறங்கி விடும் நிலையிலிருக்கிறது என்று நான் அப்போது நம்பினேன். இப்போதும் கூட அதுவே சரி என்று எனக்குப் படுகிறது; அப்படியெனில் இன்னும் சிறிது நேரத்தில், பாகன் திரும்பி வந்து அதைப் பிடிக்கும் வரையில், அது பாட்டிற்கு அபாயமேதும் அளிக்காமல் தன்வழியே அலைந்து திரிந்து கொண்டிருக்கும். இன்னும் சற்று நேரத்திற்கு அது மீண்டும் மூர்க்கமாகாது என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக அதை பார்த்திருந்து விட்டு வீடு திரும்பலாம் என்று முடிவு செய்தேன்.
ஆனால் அந்தக் கணத்தில் என்னைப் பின்தொடர்ந்த கூட்டத்தைச் சுற்றி நோட்டமிட்டேன். பிரம்மாண்டமான கூட்டம்தான், குறைந்தபட்சம் இரண்டாயிரம் நபர்களாவது இருந்திருப்பார்கள். மேலும் ஒவ்வொரு நிமிடமும் கூட்டம் பெரிதாகிக் கொண்டே இருந்தது. தென்படும் தூரம் வரையிலும் சாலையின் இருபுறத்தையும் மறித்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கண்ணுறும் ஆடைகளுக்கு மேல் கடல் போல் விரிந்த ‘மஞ்சள்’ முகங்களை பார்த்தேன் – அனைத்து முகங்களிலும் இந்த சிறு கேளிக்கை ஏற்படுத்தியிருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும். யானை சுடப்படப் போகிறது என்பதை கடுகளவும் சந்தேகிக்காமல் அனைவருமே நம்பினார்கள். மாயாஜாலம் செய்பவனொருவனின் அடுத்த தந்திரத்தை எதிர்பார்த்திருப்பதைப் போல் என்னை பார்த்திருந்தார்கள். என்னை அவர்களுக்குப் பிடிக்காதென்றாலும் அந்த மாயத் துப்பாக்கி என் கைகளிலிருந்தது என்னை ஒரு கணத்திற்குமேனும் அவர்கள் பார்வைக்குரியவனாக மாற்றியிருந்தது. இறுதியில் யானையை நான் சுட்டே ஆகவேண்டும்  என்பதை நான் திடீரென உணர்ந்து கொண்டேன். மக்கள் என்னிடம் அதை எதிர்பார்த்தார்கள் என்பதால் நான் அதைக் கண்டிப்பாக செய்தாக வேண்டும், அந்த இரண்டாயிரம் நபர்களின் மனத்திட்பமும் என்னை மறுதலிக்க இயலாத வகையில் உந்தித் தள்ளியது. அந்த நொடியில்தான், கைகளில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த அந்த நொடியில்தான் கீழை நாடுகளில் கோலோச்சிய வெள்ளையனின் ஆதிக்கத்திலிருந்த பயனின்மையையும் வெறுமையையும் முதன் முறையாக புரிந்துகொண்டேன். இதோ இங்கே, ஆயுதமேதும் ஏந்தியிராத உள்ளூர் மக்கள் கூட்டத்திற்கு முன்னே வெள்ளையனான நான் என் துப்பாக்கியுடன் அந்த நாடகீய தருணத்தின் பிரதான நடிகனாக நின்று கொண்டிருந்தேன். ஆனால் என் பின்னேயிருந்த ‘மஞ்சள்’ முகத்திரளின் மனத்திட்பத்தால் அங்குமிங்கும் ஒரு கைப்பாவையைப் போல் அலைக்கழிக்கப்பட்டேன் என்பதே உண்மை. அக்கணத்தில் வெள்ளையன் எப்போது ஒரு சர்வாதிகாரியாக மாறுகிறானோ அப்போதே தன் சுதந்திரத்தையும் அழித்துக் கொள்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். உள்ளீடற்று வழமையின் ‘சாயுபை’ நகலிக்கும் ஒரு பாசாங்கிக்கும் மட்டியாக அவன் மாறிவிடுகிறான். வாழ்நாள் முழுதும் உள்ளூர்வாசிகளை கவர முயற்சித்து ஒவ்வொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஏதிர்பார்ப்பதையே செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவதே அவனது ஆட்சியின் தலையெழுத்து. அவன் அணிந்து கொள்ளும் முகமூடிக்கு ஏற்ப அவன் முகம் வளைந்து கொடுக்க முற்படுகிறது. யானையை நான் சுட்டாக வேண்டும். துப்பாக்கியை கேட்டனுப்பியபோதே இச்செயலைச் செய்வதற்கு நான் ஒப்பிவிட்டேன். சாயுபென்பவன் ஒரு சாயுபாகத்தான் நடந்து கொள்ள வேண்டும்; மனவலிமையுடன் தன் மனதை நன்கறிந்து திட்டவட்டமான செயல்கள் புரிபவனாக அவன் காட்சியளிக்க வேண்டும். துப்பாக்கியும் கையுமாக இரண்டாயிரம் மக்கள் கொண்ட அணிவகுப்பை முன்நடத்தியபடி இவ்வளவு தூரம் வந்துவிட்டு எதையுமே செய்யாது கோழையைப் போல் திரும்பிச் செல்வதா – இல்லை, ஒருகாலும் முடியாது. கூட்டம் என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கும். என் வாழ்நாள் முழுதும், கீழை நாடுகளில் பணியாற்றும் ஒவ்வொரு வெள்ளையனின் வாழ்நாள் முழுதும், மற்றவர்களின் கேலிச்சிரிப்பிற்கு ஆளாகாதிருப்பதற்கான ஒரு நீண்ட போராட்டமே.
ஆனால் யானையைச் சுட நான் விரும்பவில்லை. அது யானைகளுக்கே உரிய அந்த பாட்டிமார்களின் சிந்தனையிலாழ்ந்த தோரணையுடன் புற்கற்றைகளை தன் முட்டிகள் மீது அடித்துக் கொண்டிருப்பதை பார்த்திருந்தேன். அதைச் சுடுவது கொலை புரிவதற்குச் சமம் என்று தோன்றியது. அந்த வயதில், விலங்குகளைச் சுடுவதற்கு எனக்கு கூச்சமேதும் இருக்கவில்லை. ஆனால் இதுவரையிலும் யானையை நான் சுட்டதே இல்லை. அதைச் சுடுவதற்கான விருப்பமும் எனக்கு இருந்ததில்லை. (ஏனோ தெரியவில்லை, பெரிய விலங்குகளைக் கொல்வதே என்னை அதிகம் அருவெறுக்கச் செய்திருக்கிறது). அதோடு, விலங்கின் சொந்தக்காரரையும் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. உயிருள்ள யானை குறைந்த பட்சம் ஆயிரம் பவுண்டுகள் பெறுமானமாவது பெறும்; இறந்து விட்டாலோ, அதன் தந்தங்கள் மட்டுமே விலைபோகும் – தோராயமாக ஐந்து பவுண்டுகள் பெறலாம். ஆனால் விரைவாக செயலில் இறங்கும் கட்டாயம் எனக்கிருந்தது. நாங்கள் அங்கு வந்தடைந்தபோது அங்கிருந்த அனுபவமிக்க பர்மியர்கள் சிலரிடம் யானை தற்போது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் அனைவரும் ஒரே பதிலையே அளித்தார்கள்: தனியே இருக்க அனுமதித்தால் நம்மைக் கண்டு கொள்ளாதென்றும் மிக அருகே சென்றால் நம்மை நோக்கி விரையும் என்று அவர்கள் கூறினார்கள்.
நான் செய்ய வேண்டியது எனக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. சுமார் ஐம்பது கஜ தூரம் வரையிலும் அதனருகே நடந்து சென்று அதன் நடத்தையை சோதித்துப் பார்க்க வேண்டும். என்னை நோக்கி விரைந்தால் அதை என்னால் சுட்டுவிட முடியும். என்னைக் கண்டுகொள்ளவில்லை என்றால் அதை பாகன் வரும் வரையில் அப்படியே விட்டுவைப்பதில் எந்த ஆபத்துமில்லை. ஆனால் அப்படியேதும் செய்யப் போவதில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். எனது துப்பாக்கிக் குறி மிக மோசமானது. மேலும் வயல் நிலம் சேராக இருந்ததால் ஒவ்வொரு அடியிலும் புதைந்துவிடக் கூடிய அபாயமும் இருந்தது. யானை என்னை நோக்கி விரையும் பட்சத்தில் என் குறி தவறுமானால் என் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம், சாலை உருளைக்கடியே சிக்குண்ட தவளை உயிர் பிழைக்கும் சாத்தியத்தை ஒத்திருக்கும். ஆனால் அப்போதும் கூட என்னைக்  காப்பாற்றிக் கொள்வதை விட என்பின் மும்முரமாக என்னையே பார்த்திருந்த கூட்டத்தைப் பற்றியே அதிகம் கவலைப்பட்டேன். ஏனெனில் கூட்டம் என்னையே பார்த்திருந்த அக்கணத்தில், தனியாக இருந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய வழமையான பயத்திலிருந்து வேறுபட்ட ஒரு பயத்திற்கு நான் உட்பட்டேன். வெள்ளைக்காரன் ‘பூர்வீகர்களுக்கு’ முன்னே பயப்படக்கூடாது; ஆகவே பொதுவாகவே அவன் பயப்படுவதும் இல்லை. ஏதாவது தவறு நேரிட்டால் யானை என்னைத் துரத்திப் பிடித்து மேலே மலை உச்சியில் கிடந்த அந்த இந்தியனைப் போல் கோரமாக சிரிக்கும் ஒரு சடலமாக நசுக்குவதை இந்த இரண்டாயிரம் பர்மியர்களும் பார்த்து விடுவார்களே என்ற சிந்தனையே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மேலும் அப்படி ஏதாவது நடந்தால் அனேகமாக அவர்களில் சிலர் சிரிக்கவும் செய்வார்கள். அதைத் தவிர்த்தே ஆகவேண்டும். அதற்கு ஒரேயொரு வழிதான் இருந்தது. துப்பாக்கியின் தோட்டாக்கூண்டில் தோட்டாக்களை திணித்து சரியான குறி கிடைப்பதற்காக ரோட்டில் நெடுஞ்சாண் கிடையாகப் படுத்துக் கொண்டேன்.
கூட்டம் அசைவற்று அமைதியாகியது. திரையரங்கில் காத்திருத்தலுக்குப் பின் ஒருவழியாக திரைச்சீலை மேலே செல்லும்போது மக்களிடமிருந்து எழும் பெருமூச்சைப் போல் ஒரு தாழ்வான குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு எண்ணற்ற தொண்டைகளிலிருந்து எழும்பியது. கிராஸ் ஹேர் சைட்டுகள் பொருத்தப்பட்ட நேர்த்தியான ஜெர்மானியத் துப்பாக்கியது. யானையைச் சுடுகையில் ஒரு செவி துவாரத்திலிருந்து மறுசெவி துவாரம் வரையிலும் கற்பனையில் நீடிக்கும் ஒரு பட்டையை துளைக்கும் நோக்கத்தோடு சுடவேண்டும் என்பதுகூட எனக்கப்போது தெரிந்திருக்கவில்லை. யானை பக்கவாட்டாக என் முன் நின்று கொண்டிருந்ததால் அதன் செவி துவாரத்தை நோக்கி நேராக நான் சுட்டிருக்க வேண்டும். ஆனால் நான், யானையின் மூளை சற்று முன்னே இருக்கும் என்ற நம்பிக்கையில் செவியிலிருந்து சில அங்குலங்கள் தள்ளியே சுட்டேன்.
துப்பாக்கியின் குதிரையை நான் இழுத்தபோது வெடியோசையையோ விசை ஏதிர்ப்பையோ நான் உணரவில்லை (தோட்டா இலக்கை சென்றடையும் சமயங்களில் இவை ஒருபோதும் உணரக் கிடைப்பதில்லை). ஆனால் கூட்டத்திலிருந்து களிப்பை அறிவிக்கும் ஒரு காட்டுக் கூச்சல் எழும்பியது.  அந்த கணத்தில், தோட்டா அங்கு இன்னமும் சென்றடைந்திருக்க முடியாது என்று ஒருவர் கணிக்கக்கூடும் அளவிற்கும் குறைவான நேரத்தில் மர்மம் கலந்த கொடூரமான மாற்றமொன்று யானை மீது கவிழ்ந்தது. கீழே விழாமல் அசைவற்றிருந்தாலும் அதன் உடம்பின் ஒவ்வொறு கோடும் மாறிவிட்டது. தோட்டாவின் அதிர்ச்சியூட்டும் விசை அதை கீழே வீழ்த்தாது உடம்பை மட்டும் முடக்கி விட்டது போல் ஒரு சுருங்கிய பீடிக்கப்பட்டு பெருமூப்பெய்திய தோற்றத்தை அது திடீரென்று அளித்தது. இறுதியில், யுகங்களைப் போல் நீடித்த காலத்திற்குப் பிறகு – ஐந்து நொடிகள் கூட கழிந்திருக்காது என்று நினைக்கிறேன்- தொள்ளலாக முட்டுக்குத்தி கீழே விழுந்தது. அதன் வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தது. மாபெரும் மூப்பு அதன் மீது கவிந்து விட்டது போலிருந்தது. அதற்கு ஆயிரம் ஆண்டுகள் வயதாகிவிட்டதாக ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியும். அதே இடத்தில் மீண்டும் சுட்டேன். இரண்டாவது சுடுதலால் அது ஒடுங்கி விழாமல் இறுதி முயற்சியாக மெதுவாக எழுந்து தள்ளாடும் கால்களுடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு வீரியம் குன்றி நின்றது. நான் மூன்றாவது முறையாக மீண்டும் சுட்டேன். அந்தத் தோட்டாவே அதை வீழ்த்தும் தோட்டாவாக இருந்தது. வலி அதன் உடல் முழுவதையும் உலுக்கி கால்களில் மீந்திருந்த வலிமையை ஒழித்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் வீழ்கையில் அதன் பின்னங்கால்கள் அதனடியே ஒடுங்கி மடங்கியதால் ஒரு கணத்திற்கு துதிக்கை, மரத்தைப் போல் விண்ணையெட்ட முயல, கவிழ்ந்த பெரும்பாறையாக உயர்ந்திருப்பது போல் இருந்தது. அது முதல் முறையாகவும் இக்கேளிக்கையின் ஒரே முறையாகவும் பிளிறிற்று. அதன்பின் வயிற்றுப்பகுதியை எனக்கு காட்டியபடி பேரோசையுடன் தகர்ந்து வீழ்ந்தது. அதன் வீழ்ச்சியின் பின் அதிர்வுகள் என்வரையிலும் எட்டி நான் படுத்திருந்த தரையையும் உலுக்கியது போலிருந்தது.
நான் எழுந்து கொண்டேன். அதற்குள் பர்மியர்கள் என்னைக் கடந்து சகதியில் விரைந்து கொண்டிருந்தார்கள். இரைச்சலான நீண்ட திணறல்களுடன் அதன் மூச்சு ஒரு தாளகதியில் இயங்கிக் கொண்டிருந்தது. பெரும்குன்றைப் போல் காட்சியளித்த அதன் புறம் வேதனையளிக்கும் வகையில் எழுந்தமிழ்ந்து கொண்டிருந்தது. அகலமாக விரிந்த அதன் வாயினூடே ஆழத்தில் அதன் இளஞ்சிகப்புத் தொண்டையின் குகைகள் வரையிலும் என்னால் பார்க்க முடிந்தது. அது மரணிப்பதற்காக நெடுநேரம் காத்திருந்தேன். ஆனால் அதன் மூச்சு தளர்வதாகத் தெரியவில்லை. இறுதியில் அதன் இதயமிருக்கும் இடத்தை யூகித்து அதை நோக்கி எஞ்சியிருந்த இரு தோட்டாக்களையும் சுட்டேன். சிகப்பு வெல்வெட் துணியைப் போல் அதனிடமிருந்து பிசுபிசுத்த குருதி பீரிட்டது.  அப்படியும் அது சாகவில்லை. தோட்டாகள் அதை துளைத்தபோது அதனுடலில் ஒரு குலுக்கல்கூட ஏற்படவில்லை. வேதனைமிக்க அதன் மூச்சியக்கம் மட்டும் இடையறாது தொடர்ந்து கொண்டிருந்தது. மிக மிக மெதுவாக பெருத்த வலியுடன் அது இறந்து கொண்டிருந்தது. ஆனால் துப்பாக்கித் தோட்டா கூட அதை மேலும் பலவீனமாக்க முடியாத என்னிடமிருந்து தொலைவான ஓர் உலகில். பயங்கரமான அந்த சத்தத்திற்கு முற்று வைக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அசையமுடியாது ஆனால் உயிர் துறப்பதற்குக்கூட திராணி இல்லாது கிடந்த அந்தப் பெரும் விலங்கின் உயிரை முடித்து வைக்க முடியாதது அச்சுறுத்துவதாக இருந்தது. என்னுடைய குட்டித் துப்பாக்கியை எடுத்துவரச் சொல்லி தோட்டா மீது தோட்டாவாக அதன் இதயத்தின் மீதும் அதன் தொண்டைக்குள்ளேயும் சுட்டுத் தள்ளினேன். அவை ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. கடிகாரத்தின் டிக் டிக் சத்தத்தைப் போல் ஸ்திதமாக அந்த வலிமிக்க கொடும் மூச்சுத் திணறல்கள் தொடர்ந்தன.
இறுதியில், என்னால் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாததால் அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றேன். அது இறப்பதற்கு அரை மணி நேரம் பிடித்தது என்பது பின்னால்தான் தெரிந்தது. நான் விடை பெறுவதற்கு முன்னதாகவே ‘தா’ என்றழைக்கப்படும் கத்திகளுடனும்  கூடைகளுடனும் பர்மியர்கள் அங்கு வந்து கொண்டிருந்தார்கள். மதியம் வரையில் யானையின் சடலத்தை எலும்புகள் வெளிப்படும் வரையிலும் அவர்கள் உரித்தெடுத்தார்கள் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.
அந்நிகழ்விற்குப் பின், எதிர்பார்த்தபடியே, யானையின் சுடுதலைப் பற்றி முடிவற்ற வாதங்கள் நடந்தன. யானையின் சொந்தக்காரர் சீற்றமடைந்தார். ஆனால் வெறும் இந்தியனாக இருந்ததால் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. மேலும் சட்டப்படி நான் செய்தது சரியே. வெறிபிடித்த நாயைப் போல், சொந்தக்காரர் அதை கட்டுப்படுத்த தவறினால் மதம் பிடித்த யானை கொல்லப்பட வேண்டும். ஐரோப்பியர்களிடையே கருத்து வேற்றுமை நிலவிற்று. வயதில் பெரியவர்கள் நான் செய்ததே சரியென்றும், எந்த கேடுகெட்ட கொரிங்கிக் கூலியைக் காட்டிலும் யானையே பெறுமானமாதலால் கூலியைக் கொன்றதற்காக யானையைக் கொன்றது கேவலம் என்றும் இளைஞர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு, கூலி மரித்தது ஒரு விதத்தில் நல்லதுதான் என்று மிக மகிழ்ச்சியுடன் அர்த்தப்படுத்திக் கொண்டேன். சட்டத்தின் பார்வையில் அது என்னை நியாயப்படுத்தி யானையை கொல்வதற்கான போதுமான சமாதானத்தை எனக்களித்தது. நான் முட்டாளாக தோன்றுவதைத்  தவிர்ப்பதற்காகவே அப்படிச் செய்தேன் என்பதை மற்றவர்களும் புரிந்து கொண்டார்களா என்று நான் பல முறை யோசித்திருக்கிறேன்.
~oOo~

மூலம்: Shooting An Elephant, Essays, George Orwell, Everyman’s Library, 2002

மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்
nantri  solvanam.com/2018/08/யானையைச்-சுடுதல்

No comments: