நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்15 மக்கள் திலகத்தின் இலங்கைப்பயணம் எம்.ஜீ. ஆரின் "எங்கவீட்டுப்பிள்ளை" ஒளிப்படக்கலைஞர் ராஜப்பன்! - ரஸஞானி


ஆனால், அவரது ஒளிப்படம்தான் எனக்கு கிடைக்கவில்லை! இத்தனைக்கும் அவர் கொழும்பில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சிறந்த ஒளிப்படக்கலைஞர். சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவும் நடத்தியவர்.
கேரளாவிலிருந்து இளம் வயதிலேயே இலங்கைத் தலைநகரம் வந்து, ஒளிப்படக்கலைஞராக வளர்ந்து, பின்னாளில் சொந்தமாகவே ராஜா ஸ்ரூடியோ என்ற நிறுவனத்தையும் தொடங்கியவர். முன்னாள் இலங்கை அதிபர் மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்து, அவர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த வேளையில் கட்டிடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபையிலும் அங்கம் வகித்தவர்.
மத்திய கொழும்பில் புதுச்செட்டித்தெருவில் ராஜா ஸ்ரூடியோவையும் பின்னாளில் அதன் அருகாமையில் ஒரு அச்சகத்தையும் நிறுவியவர். இவரது மனைவி  கௌரீஸ்வரி அக்கால கட்டத்தில் இலங்கையில் புகழ்பெற்ற கர்னாடக இசைப்பாடகியாவார்.
கௌரீஸ்வரி கனகரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டிருந்த அவர் ராஜப்பனை திருமணம் செய்தபின்னர் கௌரீஸ்வரி ராஜப்பன் என அழைக்கப்பட்டார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது தமிழ்த்திரைப்படம் தோட்டக்காரி. இதில் ஒரு பாடலுக்கு இவர் பின்னணிக்குரல் வழங்கியவர். பல மேடை இசைநிகழ்ச்சிகளிலும் தோன்றி இலங்கையின் பல  பாகங்களிலும் புகழ்பெற்றிருந்தார்.
ராஜா ஸ்ரூடியோவின் ஒரு தளத்தில் சங்கீத வகுப்புகளும் நடத்தினார்.
ராஜப்பன் தலைநகரில் ஒரு சிறிய ஒளிப்படக்கருவியை ( கெமரா) வைத்துக்கொண்டு, பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளின் படங்களை எடுத்துவந்து, வீரகேசரிக்கும் தினகரனுக்கும் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளுக்கும் கொடுத்து வருமானம் தேடிய அதேசமயத்தில் இப்பத்திரிகைகளில் நிரந்தரமற்ற ஒளிப்படக்கலைஞராகவும் பணியாற்றியவர்.
அதாவது அவர் இந்தப்பத்திரிகைகளுக்கு படங்களை கொடுத்து, அவை பிரசுரமானால்தான் பணம் கிடைக்கும். எனினும் மனைவியின் இசைப்பணியால் கிடைக்கும் வருமானத்தையும் தனது ஒளிப்படக்கலைத்தொழிலிலிருந்து கிடைக்கும் சன்மானங்களையும் வைத்து வாழ்க்கைப்படகை செலுத்தி வந்திருக்கும் அவருக்கு, அந்தப்படகை மேலும் வேகமாக செலுத்துவதற்கு துணைசெய்திருப்பவர், யார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

அந்த பெரும் புகழ்பெற்ற மனிதரும் இலங்கையில்தான்  1917 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவர்தான் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஜீ.ஆர். இவருக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் என்றெல்லாம் பட்டங்கள் சூட்டப்பட்டன.
இவரது வெற்றிப்படம் எங்க வீட்டுப்பிள்ளை. 1965 ஆம் ஆண்டு சென்னை விஜயா கம்பைன்ஸ் தயாரிப்பில் வெளியாகி வெள்ளிவிழாக்கண்ட படம்.
கொழும்பில் தமிழ், சிங்கள, ஆங்கிலப்பத்திரிகைகளை வெளியிட்டு வந்திருக்கும் எம்.டீ. குணசேனா நிறுவனத்தின் வார இதழ் ராதா என்ற பத்திரிகையின் ஏற்பாட்டில் மலையகத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் ஓர் அழகுராணி போட்டி நடந்தது. அதன் பிரதமவிருந்தினர்களாக வந்தவர்கள் அக்காலப்பகுதியில் தமிழ்த் திரையுலக காதல் நட்சத்திரங்கள் எம்.ஜீ.ஆரும் சரோஜாதேவியும்.
இவர்கள் இணைந்து நடித்த எங்கவீட்டுப்பிள்ளை இலங்கையிலும் திரைக்கு வந்த வேளையில்தான் ( 1965 அக்டோபர் மாதம்)  ராதா பத்திரிகை இவர்களை அழைத்திருந்தது.
இரத்மலானை விமான நிலையத்தில் இவர்கள் வந்திறங்கிய விமானம் வரும் வரையில் காத்திருந்து, அன்று முதல் எம்.ஜீ.ஆர். செல்லும் ஊர்கள் மற்றும் இடங்கள் எங்கும் உடன் பயணித்து படங்கள் எடுத்து கொழும்பு பத்திரிகைகளுக்கு கொடுத்துக்கொண்டிருந்தவர்தான் இந்தப்பதிவின் நாயகன் ஒளிப்படக்கலைஞர் ராஜப்பன்.
நட்சத்திரக்காதலர்கள் தலைநகரில் தங்கியிருந்து இடம் காலிமுகத்திடலில் இன்றும் காட்சி தரும் கோல்பேஸ் ஹோட்டல்.
அருகில் கடற்கரைக்காற்று தழுவும் இந்த அழகிய உல்லாச விடுதியிலிருந்தவாறு எம்.ஜீ.ஆர். பல இடங்களுக்கும் சென்றார். வீரகேசரி பத்திரிகையின் வரலாற்றை எம்.ஜீ.ஆருக்குச்சொன்ன ராஜப்பன் ஒருநாள் அவரை அங்கும் அழைத்துச்சென்றார்.
எம்.ஜீ.ஆர். - சரோஜாதேவி ஜோடி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தளை, நுவரேலியா முதலான நகரங்களுக்கும் சென்றனர். கடந்த வாரம் நாம் பதிவுசெய்திருந்த சினிமாஸ் குணரத்தினம் அவர்களின் விருந்தினர்களாக இலங்கையில் சுற்றுலா மேற்கொண்ட இவர்களை மட்டக்களப்பில் அச்சமயம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை அவர்கள் வரவேற்று மட்டக்களப்பு நகரசபை மண்டபத்தில் மாபெரும் வரவேற்பு வழங்கினார்.
யாழ்ப்பாணம் திறந்த வெளி அரங்கிலும் இவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மயிலிட்டி என்ற இடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எம்.ஜீ.ஆர். உதவினார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளியான ஒருவர் பாதுகாப்பு தடைகளையும் மீறி மேடையருகே வந்து பொன்மனச்செம்மலின் பொன்னான கரத்தை தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டார்.
உடனே அந்த மாற்றுத்திறனாளியை  அருகே அழைத்து, அவர் கையில் ஐநூறு ரூபா பணத்தை வைத்து வாழ்த்தினார் எம்.ஜீ.ஆர்.
எம்.ஜீ.ஆர். - சரோஜாதேவி கலந்துகொண்ட மற்றும் ஒரு நிகழ்ச்சியில் அச்சமயம் சிறுவனாக இருந்த நேசம் தியாகராஜன் என்பவர் மிருதங்க கலைஞர் அச்சுதனிடம் மிருதங்கம் கற்று வந்தார். இவரது அரங்கேற்றம் கொழும்பு ரோயல் கல்லூரியில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் ஏற்கனவே நடைபெற்றிருந்தது.
குறிப்பிட்ட இளம் கலைஞர் நேசம் தியாகராஜன் நிகழ்த்திய இசை நிகழ்ச்சியையும்  எம்.ஜீ.ஆரும் சரோஜாதேவியும் கண்டு களித்தனர்.
இந்தக்கலைஞர்தான் பின்னாளில் கண்ணன் என்ற மற்றும் ஒரு கலைஞருடன் இணைந்து கண்ணன் - நேசம் இசைக்குழுவை உருவாக்கி நாடெங்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். கோமாளிகள், ஏமாளிகள் ஆகிய மரைக்கார் இராமதாஸின் திரைப்படங்களுக்கும் பின்னணி இசை வழங்கியவர்கள்.
எம்.ஜீ.ஆர், அச்சமயம் இலங்கை பிரதமராக பதவியிலிருந்த டட்லி சேனாநாயக்காவையும் சந்தித்துப்பேசினார். அக்காலப்பகுதியில் எம்.ஜீ.ஆர். திராவிட முன்னேற்றக்கழகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும் தீவிர அரசியலுக்குள் பிரவேசித்திருக்கவில்லை. அவர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து திரையுலகில் சக்கரவர்த்தியாகத்திகழ்ந்தவர்.
எண்ணிறந்த ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்தவர். அவரது இலங்கைப்பயணத்தில் அவர் சென்று வந்த இடங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் உடன் சென்ற ஒளிப்படக்கலைஞர் ராஜப்பன், தன் வசம் வைத்திருந்த சிறிய கெமராவின் துணையுடன் ஏராளமான படங்களை எடுத்துக்கொண்டே இருந்தார்.
இன்றுபோல் அன்று கலர்ப்படங்கள் இல்லை. டிஜிட்டல் தொழில் நுட்பமோ, கணினி தொழில் நுட்பமோ இல்லாத காலம். கறுப்பு - வெள்ளை படம் எடுத்த அதன் பிலிம் சுருள்களை  Dark Room இல் கழுவி பிரிண்ட் எடுத்து காயவைத்து தரவேண்டும்.
இவ்வாறு குறைந்தவளங்களுடன் அன்று எமது ஒளிப்படக்கலைஞர்கள் வாழ்ந்தனர். அவர்கள் நடந்தும் பஸ், ரயில் மார்க்கமாக பயணித்தும் தமது தொழிலை செவ்வனே நடத்தியவர்கள். அவர்களுக்கென்று சொந்தமாக இருந்த வாகனம் துவிச்சக்கர வண்டிமாத்திரம்தான்.
ராஜப்பனும் அவ்வாறு எளிமையாக வாழ்ந்தவர். அவர் வசித்த புதுச்செட்டித்தெருவில்தான் கொழும்பு மத்திய தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் வி. ஏ. சுகததாசவின் இல்லமும் அமைந்திருக்கிறது. அதனால் தொகுதி எம்.பி. என்ற அடிப்படையில் அவரது நட்பும் ராஜப்பனுக்கு கிடைத்திருந்தது.
வி. ஏ. சுகததாச கொழும்பு மாநகரின் மேயராகவும் பதவி வகித்தவர். இவரது பெயரில் விளங்கும் சுகததாச ஸ்ரேடியத்தை இன்றும் காணமுடியும்.
எம்.ஜீ.ஆர் - சரோஜாதேவியுடன் அவர்களின் பயணங்களில் தொடர்ந்து பின்தொடர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டிருந்த ராஜப்பன் எம்.ஜீ.ஆரின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக்கொண்டார்.
இந்த நட்சத்திர ஜோடி தமிழகம் திரும்பும் நாள் நெருங்கியது. ஒரு நாள் கலை காலிமுகத்திடல் கோல்பேஸ் ஹோட்டலுக்கு ராஜப்பன் ஒரு பெரிய அல்பத்துடன் சென்றார்.
அதில் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆரின் இலங்கைப்பயணம் என்று அச்சில் பதிவுசெய்து அழகாக பொதிசெய்து எம்.ஜீ.ஆரிடம் வழங்கினார். கொழும்பு இரத்மலானையில் அவர் விமானத்திலிருந்து இறங்கியது முதல், கொழும்பு நகரில் காரில் பவனி வந்த காட்சிகள் உட்பட அவர் எங்கெங்கு சென்றார், யார் யாரைப்பார்த்தார், எந்தெந்த  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் முதலான அனைத்துவிபரங்களும் அழகான கறுப்பு - வெள்ளைப்படங்களாக பெரியதொரு ஆவணமாகவே காட்சியளித்திருந்தது.
எம். ஜீ.ஆர். திகைத்துப்போனார்! அதற்கு முன்னர் அவ்வாறு எந்தவொரு கலைஞனும் அப்படி ஒரு ஒளிப்பட ஆவணத்தொகுப்பினை அவர் முன்னால் வைத்ததில்லை. எத்தனையோ திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும்கூட எந்தவொரு ஸ்டில் ஃபோட்டோ கிராஃபரும் இத்தகைய அரிய செயலை அவருக்காக செய்திருக்கவில்லை.
இலங்கைப்பயண நிகழ்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்த அவருக்கு ராஜப்பனுடன் சாகவாசமாக பேசுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை. அதற்கு உகந்தநேரம் காலைவேளைதான் என்பதை புரிந்துகொண்டு ராஜப்பன் அன்று அவரைச்சந்தித்து தனது நினைவாக அந்த ஆவணத்தை (அல்பத்தை) வழங்கினார்.
ராஜப்பனின் பூர்விகம் கேரளா! எம்.ஜீ.ஆரும் கேரளா! " இவன் நம்மாளு! இவன் எங்க வீட்டுப்பிள்ளை! இவனை கவனிக்கவேண்டும்" என்று அந்தக்கணமே அந்த பொன்மனச்செம்மல் தீர்மானித்திருக்கவேண்டும்.
" இப்படி எத்தனை நாட்களுக்கு இந்த சின்னக்கெமராவை வைத்துக்கொண்டு காலம் தள்ளப்போகிறாய். சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவை தொடங்கு. நான் உதவி செய்கின்றேன்" என்றார் மக்கள் திலகம்.
அடுத்த கணம் அவரை இலங்கை  அழைத்திருந்த எம்.டீ. குணசேனா நிறுவனத்தின் இயக்குநர் சபைக்கு தகவல் சென்றது. கணிசமான ஒரு தொகையை ராஜப்பனுக்கு வழங்குமாறு உத்தரவிட்டார்.
எம்.ஜீ.ஆர். அந்த அழகிய நினைவுப்பரிசு அல்பத்துடன் தமிழகம் திரும்பினார். சில வாரங்களில் ராஜப்பன் சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவை திறந்தார். அதனைத்திறந்து வைத்தவர் பிரதமர் டட்லி சேனாநாயக்கா. பிரதம விருந்தினர்கள் வி.ஏ. சுகததாச, ஆர். பிரேமதாச.
எம்.ஜீ.ஆர் செய்த மகத்தான உதவிக்காக ராஜப்பனும் செய்நன்றி மறவாதிருக்க ஒரு காரியம் செய்தார். வீரகேசரியில் ஒரு சிறிய விளம்பரம் கொடுத்தார். தனது " ராஜா ஸ்ரூடியோவில் அடுத்து ஒருவாரத்திற்குள் படம் எடுக்க வருபவர்களுக்கு ஒரு எம்.ஜீ.ஆர். படம் இலவசமாகத்தரப்படும் " என்று அந்த விளம்பரம் சொன்னது!
தலைநகரிலிருந்த  எம்.ஜீ.ஆர். ரசிகர்கள் ராஜா ஸ்ரூடியோவுக்குப்படை எடுத்தனர். அங்கு படம் எடுத்துக்கொண்டவர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இலங்கைப்பயணத்தில் எம்.ஜீ.ஆர். சம்பந்தப்பட்ட படம் இனாமாக வழங்கப்பட்டது.
இந்தப்பதிவின் தொடக்கத்தில் எழுதிய வரிகளை மீண்டும் பாருங்கள்.
"ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்"
(தொடரும்)
(நன்றி: அரங்கம் - இலங்கை இதழ்)


-->




No comments: