.
”சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை
இருக்கின்றாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார் பிடிக்கப்
போயிட்டார்” அம்மா சொன்னார்.
நாங்கள் குடும்பமாக போவது என்றால்
தான் அப்பா கார் பிடிப்பார். முன்னர் ஒரு தடவை ‘அன்னையும் பிதாவும்’ படம் பார்க்க அப்படிப்
போயிருந்தோம்.
அமரசிங்கம் அண்ணையின் கார்
வந்துவிட்டது. அப்பா சைக்கிளை காரின் மேல் போட்டுக் கொண்டுவந்தார்.
நான் காரின் ஜன்னலோரமாக
அமர்ந்திருந்தேன். அப்பா முன் சீற்றில் இருந்தார். அமரசிங்கம் அண்ணைக்கும் சிவராசன் அண்ணையைத்
தெரிந்திருந்ததால், அவரைப் பற்றிக் கதைத்துக் கொண்டு வந்தார் அப்பா.
”சிவராசன் குடிக்கிறவன் தான். ஆனால் ஒருநாளும் வேலைக்குப் போகும்போது குடிப்பவன் அல்ல. வேலைக்கும் நல்ல ஒழுங்கு. எனக்கென்னவோ சந்தேகமாத் தான் கிடக்கு”
“சந்தேகம் எண்டா?” அமரசிங்கம் அண்ணை கேட்க,
“உவங்களிலைதான்” என்றார் அப்பா.
எனக்கு சிவராசன் அண்ணையை எப்போதில்
இருந்து தெரியும்?
w
சிவராசன் அண்ணை ஒவ்வொரு வருடமும்
மாமரங்கள் காய்த்து, காய்கள் முற்றிக் கனியாகும்
காலத்தில் வருவார். அது எப்படி சரியாக அச்சொட்டாக அந்தக்காலப்பகுதியில்
வருகின்றார் என நான் நினைப்பதுண்டு. அவர் தான் இருக்கும் கிராமத்தில்
மாமரங்களில் காய் கனியாகும்போது, இங்கேயும் அப்படித்தான் இருக்கும்
என நினைப்பார் போலும்.
அம்மா ஒருநாள் சொன்னார்:
“எங்கடை இந்த வளவிலை, பாதிக்காணி எங்களுடையது அல்ல. அது சிவராசனுக்கும் அவனுடைய இரண்டு
சகோதரங்களுக்கும் சொந்தமானது.”
இந்தக்காணி பற்றிய சூக்குமங்கள்
எல்லாம் சிவராசன் அண்ணையின் வரவின் பின்னர்தான் எனக்கு மெல்லத் துலங்கியது.
எங்கள் வளவு விசித்திரமான
அமைப்பைக் கொண்டது. நீளம் கூடி அகலம் குறைந்த செவ்வக வடிவமைப்புக்
கொண்டது. அதன் இரு மருங்கிலும் வீதி ஓடுகின்றது. அதாவது ஒரு நீளம் ஒரு அகலத்தைச் சுற்றி வாகனங்கள் செல்லும் தார்வீதி
உண்டு.
புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பது போன்று வீட்டு
வேலிக்கும் வீதிக்குமிடையே இருக்கும் நிலப்பரப்பு மூன்றாம் உலகநாடுகளில் இருப்பது
கிடையாது.
எங்கள் காணியின் சரி மையத்தில் ஒரு
கிணறு இருந்தது. அந்தக்கிணற்றின் சரி நடுவில் இருந்து, இருபக்கத்து நீளப்பக்க வேலிகளையும் நோக்கி கிளுவைகளிலான
வேலி ஒன்று ஓடியது. அந்தக் கிழுவை வேலி எங்கள் காணியை இரண்டாகப்
பிரித்தது. ஒரு காணிக்குள் இரண்டு நிலப்பரப்புகள்.
ஒருபுறத்தில் எங்கள்வீடும்
பாதிக்கிணறும் ரொயிலற் மற்றும் பலா மா பப்பாசி அன்னமுன்னா போன்ற பழமரங்களும் - மறுபுறத்தில் இரண்டு மாமரங்களும் பாதிக்கிணறும் இருந்தன.
ஒருநாள் பாடசாலை முடித்து வீடு
வரும்போது, கையில் தேநீர்க்கோப்பையுடன் சிவராசன் அண்ணை
அம்மாவுடன் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். முற்றத்தில் அவர் சைக்கிள் ஒரு
ஓலைப்பையுடன் நின்றது. கிட்டப் போகும்போது கள்ளு நாற்றம்
அடித்தது. கட்டிப்பிடிச்சு என்னைக் கொஞ்சினார். கள்ளு நாற்றத்துடன் சுருட்டின் வாசமும் சேர்ந்து கொண்டது.
”குடிச்சுக் குடிச்சு நீ ஒருநாள் சாகப் போகிறாய்” என அப்பா அவரைப் பார்த்துப் பேசினார். அதை அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.
சிவராசனுக்கு புத்தி சுவாதீனமான
தம்பியும், அக்காவும் இருக்கின்றார்கள். பள்ளிக்கூடம் போகாமல் விளையாடித் திரிந்ததற்காக
சிவராசனையும் அவனது தம்பியையும் மரத்தில் தலைகீழாகக் கட்டி அடிப்பாராம் அவர்களது
தந்தை.
பெண்கள் ஒழுங்காக இருந்ததால் அவர்களுக்கு இந்தப் பூசை
கிடைக்கவில்லை.
“எடேய் உன்ரை தம்பி யோகன் இப்பவும் கொக்கா பராசக்தியோடைதானே
இருக்கிறான்?” அப்பா கேட்டார்.
“இல்லைச் சின்னையா! அத்தான் மோசமானாப் பிறகு, அக்கா தன்னாலை பாக்கேலாமல் கிடக்கு
எண்டு சொல்லி தம்பியை ஆச்சிரமத்திலை சேத்துப் போட்டா. ஆச்சிரமம் வீட்டுக்குப் பின்னாலைதானே இருக்கு. இடைக்கிடை பாத்துவர வசதியா இருக்கும் எண்டு அக்கா சொல்லுறா.
ஒருநாளைக்கு தம்பியை நல்ல
டாக்குத்தரிட்டைக் காட்ட வேணும். காசு வரட்டும் எண்டிருக்கிறன்” நம்பிக்கையுடன் சொன்னார் சிவராசன் அண்ணை.
அம்மாவுடன் நேரம் போவது தெரியாமல்
கதைத்தபடி, புதினங்கள் சொல்லியபடி இருப்பார்.
ஒவ்வொருமுறை வரும்போதும் ஒவ்வொரு
புது இடமாகச் சொல்லி, அங்கிருந்து வருவதாகச் சொல்லுவார். அவர் மின்சாரத்திணைக்களத்தில் வேலை பார்க்கின்றார். மாலை நேரத்தில் தெருவீதிகளில் இருக்கும் மின்கம்பங்களில்
உள்ள மின்குமிழ்களின் ஆழியைப் போட்டு வெளிச்சம் தருவார். பின்னர் அதிகாலையில் அவற்றை மீண்டும் அணைப்பார். தெருத்தெருவாக ஒரு தடி கொண்டு திரிவது அவர் தொழில். அந்தத் தடியின் நுனியில் ஒரு கொழுக்கி இருக்கும். அதனால்தான் சுவிச்சைத் தட்டுவார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்
வந்தபோது, தான் திருமணம் செய்துவிட்டதாக அம்மாவிடம் சொன்னார். அம்மா சிரித்தபடியே அப்பாவைக் கூப்பிட்டு,
“இஞ்சைபாருங்கோ…. சிவராசன் என்ன சொல்லுறான் எண்டு
ஒருக்காக் கேளுங்கோ” என்றார்.
உண்மையில் அவர் அதைச் சொல்லும்போது
சிவராசனுக்கு இரண்டு பிள்ளைகள்கூட இருந்தார்கள்.
“உதையேன் முந்தி வரேக்கை சொல்லேல்லை?”
“மனிசிதான் இப்பெல்லாம் சொல்லவேண்டாம் எண்டு சொன்னவ! எனக்கு இப்ப இரண்டு பிள்ளையள் இருக்கு.”
இரவு சாப்பிட்டு, தேநீர் அருந்திவிட்டுப் பெரும் குரல் எடுத்துப் பாடுவார். எல்லாப் பாடல்களும் ஒரேமாதிரி ராகத்தில்தான்
அமைந்திருக்கும். அப்படி ஒரு ராகத்தில் நான் இதுவரை எந்தச்
சினிமாப்பாடலையும் கேட்டது கிடையாது. அது அவரது கற்பனையில் உருவான ராக
உருப்படி. “அக்கம்பக்கத்திலை ஆக்கள் நித்திரை
கொள்ளுறேல்லையோ” என்று அப்பா சத்தம் போட்டபின்னர்தான் படுப்பார். அப்பா காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பூப்பறித்து சுவாமி
கும்பிடுவார். அந்த நேரத்தில் முற்றத்தில் சிவராசனின் சைக்கிளைக்
காணமுடியாது. அவர் வேளைக்கே, அப்பா எழும்புவதற்கு முன்னராக
எழுந்து, பின் வளவிற்குள் இருக்கும் இரண்டு மாமரங்களிலும்
கொப்புகளை உலுப்பி மாங்காய்களைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுவார். முத்தலும் பிஞ்சும் என்று அங்கே ஒன்றும் இருக்காது. பின் வளவைப் போய்ப் பார்த்தால் மாமரக் கொப்புகள் முறிந்து
காணப்படும்.
ஆனால் எங்கள் வளவிற்குள் இருக்கும்
மரங்களிலிருந்து ஒரு துரும்பைக் கூட அவர் கொண்டு சென்றது கிடையாது.
“அடுத்த தடவை வந்தால் அடித்துக் கலைப்பேன்” என்று சத்தமிடுவார் அப்பா. ஆனால் அது நடக்காது. வருடம் ஒன்றாக மறந்து போய்
விடுவார். அல்லது மன்னிக்கும் மனப்பான்மை வந்துவிடும். திரும்பவும் பழைய பல்லவிதான்.
“உவனென்ன கண்டுகளோடை மாட்டை அவிட்டு வந்திட்டானோ?” ஒருநாள் அப்பா அம்மாவிடம் கேட்டார்.
அம்மாவுக்கு பின்புறமுள்ள
காணித்துண்டை வாங்கிவிடவேண்டுமென்று நீண்டநாள் ஆசை இருந்தது. எல்லாரும் பத்திரத்தில் கையெழுத்திட்டால், அவர்களுக்குச் சேரவேண்டியதைக் கொடுத்துவிட்டு காணியை
வாங்கிவிடலாம். அதற்கு முட்டுக்கட்டையாக சிவராசன் அண்ணையின் மனைவி
இருந்தார்.
ஒருநாள் அம்மா என்னையும்
கூட்டிக்கொண்டு அவர்களின் வீட்டிற்குப் புறப்பட்டார்.
போய்ச் சேர மதியமாகிவிட்டது.
கொட்டில் வீடு.
சிவராசா அண்ணையின் மனைவி அவரைவிட
வெள்ளையாக, அழகாக உயரமாக இருந்தார். எங்கள் வரவை அவர் எதிர்பார்க்காததால் முகத்தை நீட்டி
வைத்துக் கொண்டார். உள்ளே வந்து எங்களை அமரும்படி சொல்லவில்லை. உள்ளே போய்விட்டார். அவரைத் தொடர்ந்து உள்ளே போனோம். முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று ஆண்பிள்ளைகளும்
உள்ளே வந்து தயங்கியபடி நின்றார்கள்.
அம்மா மூன்று பிள்ளைகளைக் கண்டதும்
திகைத்துப் போனார். மூன்றாவது வந்து உதித்தது அவருக்குத் தெரியாது.
உள்ளே உட்காருவதற்கு எதுவும்
இருக்கவில்லை. அவர் பாய் ஒன்றை கொண்டுவந்து உதறி விரித்தார். தூசுப்படலம் பறந்து அதில் மனிதர்கள் உட்கார்ந்து பலநாட்கள்
என்று சொல்லியது.
பிள்ளையள்…. அண்ணாவைக் கூட்டிக் கொண்டு போய் வெளியிலை விளையாடுங்கோ.”
அம்மாவுடன் உட்காரத் தயாரான நான்
அவர்களுடன் விளையாடப் போனேன். அந்தப் பெண்மணி அம்மாவுடன்
உட்காரவில்லை. நிறுதிட்டமாக நின்றார்.
அம்மா அவரை நிமிர்ந்து பார்த்து,
“உங்களின் பெயர்?” என்று மொட்டையாகக் கேட்டார்.
“ஜெயலக்சுமி” என்று மறுத்தான் பதில் வந்தது.
அவரை எங்கோ பார்த்திருப்பது போல்
மனம் சொன்னது.
“அம்மா பொய் சொல்லுறா. அம்மாவின்ரை பெயர் படாபட் ஜெயலக்சுமி. அப்பா அப்பிடித்தான்
கூப்பிடுகிறவர்” அவர்களின் கடைக்குட்டி சொல்ல, அவர் முகத்தைச் சுழித்து பெருமை பிடிபட,
“சரிதான் போ. போய் வெளியிலை விளையாடு” என்றார்.
மனதில் ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் வந்து போனது. வெளியே சாம்பல் பூத்த நிலத்தில் நாங்கள் நாலுபேரும்
விளையாடினோம். அவர்கள் மூன்றுபேருமே நல்ல மொழுப்பான குண்டுகுண்டுப்
பையன்கள்.
உள்ளே அம்மாவும் படாபட்டும்
வாக்குவாதப்படும் சத்தம் கேட்டது. வாசலில் போய் எட்டிப் பார்த்தேன். அம்மா தான் கூப்பிடும்போது என்னை வரும்படி சொன்னார். நீண்ட நேரம் விளையாடினோம். அதன்பிறகு அம்மா சாப்பிட வரும்படி கூப்பிட்டார்.
“அன்ரி சாப்பிடச் சொல்லுறா. கெதியிலை சாப்பிட்டிட்டு வா. வீட்டை போவம்.”
“அம்மா உங்களுக்கு?”
“எனக்கு வேண்டாம்.”
“அம்மா எங்கட வீட்டிலை சாப்பிட மாட்டா!” என்றார் படாபட்.
“அப்பிடியெண்டில்லை. வெள்ளிக்கிழமை விரதம். வீட்டிலை போய் தான் சாப்பிடுவன்.”
”அதுதான் வெள்ளிக்கிழமையாப் பாத்து வந்தனியளோ?”
தட்டில் சோறும் முருக்கங்காய்க்
குழம்பும் இருந்தன.
“அம்மா புளிக்குது!”
“சாட்டுக்கு கொஞ்சமாச் சாப்பிட்டிட்டு மிச்சத்தைக்
கொட்டு” சொல்லியபடியே அம்மா தட்டை எட்டிப் பார்த்தார்.
“நீங்கள் என்னவென்று குழம்பு செய்யிறனியள்?”
“சோறு வடிச்ச கஞ்சியைப் தேங்காய்ப்பாலுக்குப் பதிலாப்
போடுறனான். உடனை சாப்பிட சுப்பரா இருக்கும். வைச்சுச் சாப்பிட முடியாது. இந்த மனிசன் எங்கை காசைத் தருது. உழைக்கிற காசு முழுதையும்
குடிச்சுப் போட்டு வருது” கண்ணீர் வடித்தாள் ஜெயலக்சுமி.
“முடிவா என்ன சொல்லுறியள்?” அம்மா வீட்டை விட்டுப் புறப்படும்போது அவரிடம் கேட்டார்.
“அம்மா, திரும்பவும் சொல்லுறன் அம்மா. அந்தக் காணி நாறிப்போன மீன் இல்லை அம்மா.”
அம்மா ஒன்றும் சொல்லாது என் கையைப்
பிடித்தபடி வீட்டை விட்டுப் புறப்பட்டார். நான் சிறுவர்களுக்கு கை
காட்டியபடியே அம்மாவின் பின்னால் விரைந்தேன்.
”உந்த நாட்டியம் இருக்கும் வரை காணி வாங்கேலாது” வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் அம்மா சொன்னார்.
“பிளையள் மூண்டும் உரிச்சு வைச்சமாதிரி அச்சு அசல்
பாடபட் ஜெயலக்சுமிதான்”
அதன்பிறகு இரண்டு தடவைகள் சிவராசன்
அண்ணை வந்து மாமரத்தை உலுப்பிச் சென்றார்.
அம்மா காணி வாங்கும் விடயத்தை அறவே
மறந்துவிட்டார்.
ஒருநாள், “சின்னம்மா… சின்னம்மா…” என்று பதறியடித்துக் கொண்டு வாசலில் சிவராசன் அண்ணையின்
குரல் கேட்டது. எட்டிப் பார்ப்பதற்கிடையில் சைக்கிளுடன் விழுந்து
போனார் அவர். நிறை வெறி. சத்தி வேறு எடுத்திருந்தார்.
அப்போது மாமரங்கள் பூத்துக்
காய்க்கத் தொடங்கவில்லை.
எல்லோருமாக அவரைத் தூக்கிச் சென்று
கதிரையில் இருக்க வைத்தோம். கதிரையுடன் சேர்த்து அவரை முழுக
வார்த்தோம். மாற்றுவதற்கு ஆடைகள் குடுத்தோம். சுய நினைவுக்கு வந்ததும்,
“நீங்கள் காணி வாங்க நான் கையெழுத்து வைக்கிறன்” என்றார்.
“உன்ரை மனிசி ஓமெண்டிட்டாளோ? அதை முதலிலை சொல்லு” அம்மா கேட்டார்.
“அவளை விடுங்கோ!”
அம்மா திரும்பத் திரும்ப அதையே
கேட்டார். அவரும் அதே பதிலையே சொன்னார்.
அப்பா அதிகம் கதைக்கமாட்டார். அடக்கித்தான் வாசிப்பார். ஆனால் சிவராசன் அண்ணை எல்லை மீறும்போது காளி ஆகிவிடுவார்.
“எட அறுவானே! நீ அவளையும் கூட்டிக்கொண்டு வா. பிறகு எல்லாத்தையும் பார்ப்பம்,”
“இருந்தாத்தானே கூட்டி வாறதுக்கு!” சொல்லிவிட்டு பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.
“என்ன சொல்லுறாய்?”
“ஓடுகாலி நாய். ஓடிப்போயிட்டாள்.”
“பிள்ளையள் எங்கை?”
“அதுகளையும் கூட்டிக் கொண்டு போட்டாள்.”
“மனிசியில்லாமல் கையெழுத்தை வைச்சுப் போட்டு பிறகு ஒரு
பிரச்சினையும் வராதே?”
“வராது.”
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்லுறாய்?”
“எங்களுக்கு கலியாணமும் நடக்கேல்லை. எழுத்தும் நடக்கேல்லை. நான் அவளுக்குத் தாலியும்
கட்டேல்லை.”
“அப்ப பிளையளை மாத்திரம் பெத்துப் போட்டியாக்கும்” என்றார் நையாண்டியுடன் அப்பா.
“கடவுளுக்குத்தான் தெரியும். பிள்ளையள் ஒண்டுமே என்னைப் போல இல்லையே சின்னையா.”
அதன் பிறகு வீட்டில் மெளனம்
நிலவியது.
ஒருமாதம் கழித்து எல்லோரும்
கையொப்பமிட்டு காணியை வாங்கினோம். சேர வேண்டிய பணத்தை எல்லாருக்கும்
குடுத்தோம். அன்று சிவராசன் அண்ணை குடித்திருக்கவில்லை. அப்படியும் சொல்லமுடியாது. அளவோடு குடித்திருப்பார். காசு கிடைத்ததில் நல்ல
மகிழ்ச்சியாக இருந்தார். ”இதைவிட எனக்கு பத்திரமான இடம் வேறை
இல்லை”
என்று சிரித்துக் கொண்டே ஓலைப்பையிற்குள் காசை
வைத்தார்.
”காசை என்ன செய்யப் போறாய்?” அப்பா சிவராசன் அண்ணையிடம் கேட்டார்.
“தம்பியைக் கொண்டுபோய் பிறைவேற் ஹொஸ்பிற்றலிலை காட்டப்
போறன்”
சொல்லிப்யபடி சைக்கிளில் ஏறிப் பறந்தார்.
அதன்பிறகு வந்த ஒரு மழை நாளில், அதிகாலை வேலைக்குப் போன சிவராசன் அண்ணை மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்
இருப்பதாக தகவல் வந்தது.
சிவராசன் அண்ணை விளக்கேற்றும்
கள்ளியங்காட்டு வீதிகளில் இரண்டு மூன்று நாட்களாக தெருவிளக்குகள் இரவு பகல் பாராது
எரிந்து கொண்டிருப்பதாக பத்திரிகைச் செய்தி ஒன்றும் வந்திருந்தது.
w
வைத்தியசாலைக்குப் போய்ச்
சேர்ந்தோம். இரண்டொரு கட்டடங்கள் ஏறி இறங்கிய பின்னர் சரியான
இடத்தைக் கண்டுபிடித்தோம். பராசக்தி அக்கா ஓடிவந்து அம்மாவைக்
கட்டிப்பிடித்து அழுதார்.
“சிவராசன் எங்களை விட்டிட்டுப் போயிட்டான்.”
”என்ன நடந்தது?”
“ஆமிக்காரன் காலமை வேலைக்குப் போன தம்பியை சுட்டுப்
போட்டு, கறன்ற் அடிச்சது எண்டு சொல்லி இஞ்சை கொண்டுவந்து
போட்டிட்டுப் போட்டான்கள்.
இவ்வளவு நேரமும் இஞ்சைதான்
நிண்டவன்கள். போஸ்ற் மோட்டம் முடிய பொடியைத் தருவான்களாம். இண்டைக்கு இரவு அல்லது நாளைக்குக் காலமைக்கிடையிலை
எரிச்சுப் போட வேணுமாம்.
தம்பியின்ரை சைக்கிளையும்
ஓலைப்பையையும் தந்திருக்கின்றான்கள்.”
அப்பா அந்த ஓலைப்பையை வாங்கிப்
பார்த்தார். அதில் சில இரத்தக் கறைகள் பொட்டுக்களாக இருந்தன. ஓலைப்பையைத் திறந்து பார்த்த பராசக்தி அக்கா,
“உள்ளே 50 ரூபா இருக்கு” என்றார்.
”அப்ப மிச்சம்?” அப்பா நரம்பு புடைக்கக் கத்தினார்.
w
No comments:
Post a Comment