2030-ம் ஆண்டிலிருந்து மின்சாரக் கார்கள் மட்டுமே! - பேராசிரியர் கே. ராஜு

.


     2030-ம்  ஆண்டிலிருந்து மின்சாரக் கார்களை மட்டுமே தயாரித்து விற்பது என்ற இலக்கினை அண்மையில் இந்தியா அறிவித்திருக்கிறது. இரு சக்கர வாகனங்களுக்கும் சேர்த்தே இந்த இலக்கா என்பது தெளிவாக்கப்படவில்லை. பெட்ரோலிய இறக்குமதிச் செலவைக் குறைத்து அதன் மூலம் வாகனப் பராமரிப்புச் செலவைக் குறைப்பது, காற்று மாசுபடுவதையும் பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டையும் குறைத்து மக்கள் உடல்நலனைப் பாதுகாப்பது ஆகியவையே இந்த முடிவின் நோக்கம். இந்தியாவின் இந்த அறிவிப்பு உலகம் முழுதும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால் இலக்கை அடைவது எளிதல்ல என்ற எச்சரிக்கைக் குரல்களும் கேட்கின்றன. பேராவலுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த இலக்கை அடைய தொழில்நுட்பம், உற்பத்தித் திறன், உட்கட்டமைப்பு வசதிகள், நிதித் தேவை போன்ற பல்வேறு தடைகளைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
     முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுவது நல்லது. 2030-ம் ஆண்டில் இந்தியச் சாலைகளில் மின்சாரக் கார்கள் மட்டுமே ஓடும் என்ற செய்தியை ஊடகங்கள் பரப்பியுள்ளன. ஆனால் அறிவிப்பில் அடங்கியுள்ள உண்மை வேறு. 2030-க்குப் பிறகு மின்சாரக் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்கப்படும் என்பதன் பொருள் அதற்குப் பின் சாலைகளிலிருந்து பெட்ரோல்-டீசல் கார்கள் மறைந்துவிடும் என்பதல்ல. கார்களுக்கு 15 ஆண்டுகள் ஆயுள் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியெனில் 2029-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோல் கார் 2044-ம் ஆண்டு வரை பயன்பாட்டில்தான் இருக்கும். 2030-லிருந்து பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். இலக்கு சரியாக நிறைவேற்றப்படுமானால் 2044-ம் ஆண்டிலிருந்து மின்சாரக் கார்கள் மட்டுமே இருக்கும்.



     2002-ம் ஆண்டில் இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியாக இருந்தது. தற்போது 20 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2030-ம் ஆண்டில் அது 35 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் தற்போது 8 லட்சம் மின்சார வாகனங்களே விற்கப்படுகின்றன. இந்திய அறிவிப்புக்கு முன்னதாக, 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் 22,000 மின்சார வாகனங்களே (மொத்த விற்பனையில் 1 சதவீதத்திற்கும் குறைவாக) விற்கப்படுகின்றன. இதில் கார்கள் விற்பனை 2000 மட்டுமே. 2020-ம் ஆண்டிற்குள் 60லிருந்து 70 லட்சம் மின்சார அல்லது கலப்பினக் கார்களை (hybrid cars) இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசின் இலக்கிலும் நாடு பின்தங்கியே இருக்கிறது. (மின்சாரத்தையும் டீசல் போன்ற மற்றுமொரு எரிபொருளையும் பயன்படுத்தும் கார் கலப்பினக் கார்  என அழைக்கப்படுகிறது).
     இலக்கை நிறைவேற்றுவதில் மிகப் பெரிய சவாலாக இருக்கப்போவது மின்சாரக் கார்களின் விலைதான். உதாரணமாக, இந்தியச் சந்தையில் மிக மலிவான மின்சாரக் கார் மஹிந்திராவின் e20 கார்தான். இந்த மிக அடிப்படை மாடல் காரின் விலையே 7 லட்சம் ரூபாய்கள் (வரிகள் தனி) எனில் நுகர்வோர்களை மின்சாரக் கார்கள் மிரள வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆறுதலான அம்சம் என்னவெனில். அடுத்த பத்தாண்டுகளில் விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பதுதான். 2022-25க்குள் மின்சாரக் கார்களின் விலை பெட்ரோலியக் கார்களின் விலைக்குச் சமமாக ஆகிவிடும் என தொழில் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
     மின்சார வாகனங்களின் விலை அவற்றில் பொருத்தப்படும் பாட்டரிகளின் விலையைப் பொறுத்தது. தற்சமயம் பாட்டரிகளின் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் அது வேகமாகக் குறைந்து வருகிறது. லித்தியம்-அயனி பாட்டரிகளின் விலை 2011-ல் 600 டாலர்/கிலோ வாட்அவர் ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 150 டாலர்/கிலோ வாட்அவர் ஆகக் குறைந்திருக்கிறது. மற்ற பல நாடுகளில் பாட்டரி தயாரிப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. பாட்டரியின் அளவும் செயல்திறனும் அதிகரித்துவருகின்றன. ஆனால் இந்தியாவில் பாட்டரி தயாரிப்புத் திறன் குறைவாகவே இருக்கிறது. மின்சாரக் கார் தயாரிக்கும் ஒரே நிறுவனம் மஹிந்திரா மட்டுமே. டாடா நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. கார்களை விடுங்கள், இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பே இஙகு குறைவுதான். இந்தியக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்வாகனச் சந்தையில் நுழையத் தயக்கம் காட்டுகின்றன. அந்நிய நிறுவனங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அழைப்பதில் ஆர்வம் காட்டும் இன்றைய மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவுக்கு வந்து தொழிலைத் தொடங்குமாறு வருந்தி வருந்தி அழைத்து வருகிறது. 
     மின்சாரக் கார்கள் தயாரிப்போரையும் உதிரி பாகங்கள் தயாரிப்போரையும் ஊக்கப்படுத்த மானியம் தருவது உட்பட பல நடவடிக்கைகள் எடுப்பது பற்றி இந்தியா யோசித்தாக வேண்டும். கலப்பினக் கார் தயாரிப்பாளர்கள் பெரிய சொகுசுக் கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது போல தங்களது தயாரிப்புகளுக்கும் 28 சத ஜிஎஸ்டி வரியும் கூடுதல் வரி 15 சதமும் விதிக்கப்பட்டிருப்பதற்கு தங்கள் வருத்தத்தைத் தெரிவித்திருக்கின்றனர். தற்சமயம், அயல்நாட்டுக் கார் தயாரிப்பாளர்களுக்கு இந்தியா தரவிரும்பும் மிகப் பெரிய சலுகை அதனுடைய உள்நாட்டு சந்தையின் பிரம்மாண்டம்தான்.
     கார் பாட்டரியை மின்னேற்றம் செய்துகொள்ள பெட்ரோல் நிரப்பிக் கொள்ளும் நிலையங்களைப் போல பொது நிலையங்களை அமைப்பது பற்றியும் இந்தியா திட்டமிட வேண்டும். ஜப்பானில் பெட்ரோல் நிலையங்கள் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இப்படிப்பட்ட மின்னேற்ற நிலையங்கள் இருக்கின்றன!                            
     மாசுபடுதலைக் குறைப்பதற்கு மின்சாரக் கார்கள் ஒரு வழி மட்டுமே.  ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள், வேளாண் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் மீத்தனால் போன்ற போன்ற உயிரி எரிபொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றில் எந்தவொரு முறையையும் புறந்தள்ளிவிடாமல் ஓர் ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்குவது பற்றி அரசு திட்டமிடுவது முக்கியம்.
(உதவிய கட்டுரை : ஜூன் 12-18 பீப்பிள் டெமாக்ரசி இதழில் ரகு எழுதிய கட்டுரை)

No comments: