பயணியின் பார்வையில் -- அங்கம் 08 - முருகபூபதி

.
" யுத்தமின்றி வெற்றியில்லை;  வெற்றியின்றி யாருமில்லை"
இழப்புகளுக்கு மத்தியிலும் இயங்கும் எழுத்துப்போராளி வெற்றிச்செல்வியுடன் சந்திப்பு
                                                                     

நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கௌரி அனந்தன் தொகுத்திருந்த மௌனவலிகளின் வாக்குமூலம் வெளியீட்டு விழா நடந்துகொண்டிருந்தபோது, எனக்குத்தெரிந்த யாழ். குடாநாட்டு எழுத்தாளர்கள் யாராவது வந்திருக்கிறார்களா... என்று கண்களை சுழற்றி நோட்டமிட்டேன்.
எவரும் தென்படவில்லை. அருகில் கெளரி அனந்தன் இருந்தார். நண்பரும் எழுத்தாளரும் சீர்மியத்தொண்டருமான சந்திரசேகர சர்மா நிகழ்ச்சி முடிந்ததும் என்னை  தமது வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருந்தார்.
மேடையில் பேசிக்கொண்டிருந்த சமூகச்சிற்பிகள் தன்னார்வத்தொண்டு அமைப்பைச்சேர்ந்த ஷெரீன் சேவியர் தமது உரையில், " இங்கே வெற்றிச்செல்வியும் வந்திருக்கிறார்." எனச்சொன்னதும்  முகத்தை திருப்பி மீண்டும்  கண்களை சுழலவிட்டேன்.
வெற்றிச்செல்வியின் படத்தையும் அவரது படைப்புலகம்  பற்றிய குறிப்புகளையும்  ஏற்கனவே  இணைய  ஊடகங்களில்தான் பார்த்திருக்கின்றேன்.
வந்தவிடத்தில் அவரையும் பார்த்துப்பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்  மகிழ்ச்சியோடு  மேடை நிகழ்ச்சிகள் முடிவடையும் வரையில் காத்திருந்து எழுந்தேன்.




கௌரி அனந்தன் எனக்கு வெற்றிச்செல்வியை அறிமுகப்படுத்தினார்.
மன்னாரில் அடம்பன் கிராமத்தில் பிறந்திருக்கும் வெற்றிச்செல்வியின் இயற்பெயர் சந்திரகலா.  இளமைக்கனவுகளை  துறந்து  ஈழக்கனவுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1991 இல் இணைந்துகொண்டவர். 1993 இல் தமது ஒரு கையையும்  ஒரு கண்ணின் பார்வையையும் இழந்தவர். அத்துடன் அவர் ஓய்வுபெறவில்லை.  வீட்டுக்குத்திரும்பவில்லை.  2009 இல் முள்ளிவாய்க்காலில்  முடிவுற்ற இறுதிப்போர் வரையில் வெற்றியின் நம்பிக்கையோடும்  ஓர்மத்துடனும் களத்தில் நின்றவர்.
ஓராண்டு காலம் கண்பார்வையை இழந்திருந்த அவர்,  சிகிச்சையின் பின்னர் ஓரளவு பார்வையை பெற்றிருக்கிறார். இயக்கத்தில் இணைந்திருந்த காலப்பகுதியில்  1997 முதல் இலக்கியத்துறையிலும் ஈடுபட்டவர். கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் முதலான துறைகளில்  எழுதிக்கொண்டிருப்பவர்.
போர் முடிவுக்கு வருமுன்னரே 2007 இல் இப்படிக்கு அக்கா என்ற சிறிய கவிதைத்தொகுப்பையும் எழுதியிருப்பவர்.


இதுவரையில்,  இப்படிக்கு அக்கா, இப்படிக்கு தங்கை, துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்  (கவிதைகள்) காணமல் போனவனின் மனைவி, முடியாத ஏக்கங்கள்  ( சிறுகதைகள்) போராளியின் காதலி (நாவல்) வெண்ணிலா ( குறுநாவல்) ஆறிப்போன காயங்களின் வலி,  ஈழப்போரின் இறுதிநாட்கள் (வரலாற்றுப்பதிவுகள்) முதலான நூல்களை வரவாக்கியிருக்கும் வெற்றிச்செல்வி தொடர்ந்தும் இயங்குகிறார்,  எழுதுகிறார்.
" ஈழப்போரின் சாட்சியாகவும் இடப்பெயர்வுகளின் சாட்சியாகவும் ஈழத்தின் அடையாளமாகவும் நானும் இவ்வெழுத்தில் ஆகியிருக்கின்றேன். என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்திருக்கிறேன். தமிழர்களின் கண்ணீரை கொஞ்சம் இங்கே சேமித்துவைத்திருக்கிறேன். அந்தக்கண்ணீர் காயாத வடிவமெடுத்திருக்கவேண்டும்  என்பதால் இற்றைவரை கண்ணீரையே எழுதிக்கொண்டிருக்கிறேன். இரத்தக்கண்ணீரை" ( நூல்: ஈழப்போரின் இறுதி நாட்கள்)
" தேசத்தின் குருத்துகள், அங்கு அனலிடை வெந்த உணர்வுகளுக்கு ஆளாகினார்கள். அந்த உணர்வுகள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது. தேசத்துக்குருத்துக்களின் வாக்குமூலமாக இதனை எடுத்துக்கொள்ளவேண்டும். நடந்த உண்மைகளை நடந்தது நடந்தபடி வரலாற்றில் பதிவுசெய்யவேண்டும் என்பதே இந்தப்பதிவின் நோக்கம். புனர்வாழ்வு என்று அழைக்கப்பட்ட  தடைமுகாம் ஒன்றில் ஒரு தொகுதிப்பெண் போராளிகள் வாழ்ந்த வாழ்தலின் புரிந்துணர்வுக்கு எடுத்துக்கொண்டால் போதும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்" ( நூல்: ஆறிப்போன காயங்களின் வலி)


" வலியோடும் வேதனையோடும் இதனை எழுதிக்கொண்டிருந்த நாட்களில் வீதியில் பயணித்த ஐ.சி. ஆர். சி. வாகனத்தின் கொடியினால் ஏற்பட்ட சத்தம்கூட எறிகணை பராஜ் பண்ணப்படுவதாய் நினைத்து என்னை நிலத்தில் விழ வைத்திருக்கிறது. காற்றால் அசைக்கப்பட்ட  தகரத்தின் சத்தம்கூட எறிகணை கூவிக்கொண்டு வருவதாய் நெஞ்சை படபடக்கச்செய்திருக்கிறது. அந்த உயிராபத்தான சூழலுக்குள் மீண்டும் வாழ்ந்த உணர்வு, எழுதி முடித்தபோதும் இருந்தது. இதைப்பதிப்பாக்கத்திற்காக கணினியில் பொறித்தபோதும் அதை மீள்வாசிப்புச்செய்தபோதும் மீண்டும் மீண்டும் குருதி பாய்ந்த வன்னிக்குள் கிடந்து எப்படித்துடித்திருப்பேன் என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள்" ( நூல்: போராளியின் காதலி - நாவல்)
மேற்குறிப்பிடும் வரிகளிலிருந்து சந்திரகலா என்ற வெற்றிச்செல்வி கடந்துவந்திருக்கும் பாதையை புரிந்துகொள்ளமுடியும்.
              அன்றைய சந்திப்பில் அவர் எனக்குத்தந்த நூல்களை படித்தபொழுது,  " யுத்தம் இன்றி வெற்றியில்லை, வெற்றியின்றி யாருமில்லை."  என்ற பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. எவருக்கும் தத்தம் வாழ்வில் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருக்கும். அதனால் வாழ்க்கையில் எதிர்நோக்கப்படும் சவால்களையெல்லாம் முறியடிக்க யுத்தம் புரிந்துகொண்டேயிருப்பார்கள்.


யுத்தம் என்றவுடன் பொதுவில் எவருடைய சிந்தனையிலும் வருவது ஆயுதம் ஏந்திய யுத்தம்தான். வெற்றிச்செல்வியின் எழுத்துக்களை படித்தபோது அவர் ஈழத்திற்கான  ஆயுத யுத்தத்திலும், தொடர்ச்சியான  இழப்புகளுக்குப்பின்னரும் வாழத்தான் வேண்டும் என்ற வாழ்க்கை  யுத்தத்திலும் தன்னை ஈடுபடுத்தியவராகவே அறியப்படுகிறார். அவரது எழுத்துக்கள் அதனைத்தான் எமக்குச்சொல்கின்றன.
ஒவ்வொரு போராளியும் வெற்றி நிச்சயம் என்ற கனவுடனும் நம்பிக்கையுடனும்தான் களத்தில் இருப்பார். ஜனநாயக ரீதியிலான தேர்தல்களிலும் கூட ஒரு வேட்பாளர் தனக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன்தான் வலம்வருவார்.
எனவே ஈழக்கனவுக்கான யுத்தத்தின் முடிவு எத்தகையதாக இருந்தபோதிலும்,  வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன்தான் களத்தில் நின்ற போராளிகள் அனைவரும் வாழ்ந்தனர். இறுதித்தருணத்தில் கண்மூடும்வேளையிலும் வெற்றிநிச்சயம் என்ற நம்பிக்கையுடன்தான் உயிர்துறந்திருப்பார்கள்.
போர்க்களத்திலும் அதன்பின்னர் தடுப்பு முகாம்களிலும் வாழ்ந்திருக்கும் வெற்றிச்செல்வி, தனது குடும்பத்தில் மூன்று சகோதரங்களை போரிலே இழந்தவர். தங்கையும் பெற்றவர்களும் காயப்பட்டவர்கள். தானும் ஒரு கையை இழந்தவர். இத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் அவர் ஓர்மத்துடன் இயங்கியிருப்பது வியக்கவைக்கிறது.


நடந்து முடிந்த யுத்தத்தின் இறுதித்தருணம்வரையில் களத்தில் நின்றவர்கள் பலராயிருந்தபோதிலும்,  அங்கே என்ன நடந்தது என்பதை எல்லோராலும் ஆவணப்படுத்த முடியாது. வெற்றிச்செல்வி,  மக்களின் இழப்புகளையும் அவர்கள்   தக்கவைத்திருக்கும் வலிகளையும்  அவர்களின்  எதிர்காலம் பற்றிய ஏக்கங்களையும் உணர்ச்சிபொங்க பதிவுசெய்துள்ளார்.
அதேசமயம் போர்வலயத்தில் சிக்குண்டிருந்த மக்களின் மனநிலையையும் அவர்கள் போராளிகளை எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள் என்பதையும் சித்திரிக்கின்றார்.
"ஆளிணைப்பு போராளிகளை மண்ணை வாரியிறைத்து சபித்தார்கள். ஆனால், களமுனையில் நின்று களைத்து வந்தவர்களை வீட்டுக்குள் வைத்து சோறூட்டி உபசரித்தார்கள்." ( பக்கம் 7- ஈழப்போரின் இறுதி நாட்கள்)
தடுப்பு முகாமில் உடல் ஊனமுற்றவர்களின் அவலத்தை படிக்கின்றபோது,  நீடித்த இந்த யுத்தம் அவர்களுக்குத் தந்துள்ள வெகுமதி கண்டு நெஞ்சம் பதறுகிறது.
" இரண்டு கால்களும் இல்லாத மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். நிலத்தில் இருந்து எழும்புவதிலும் மலசலகூடம் சென்று வருவதிலும் அவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஏற்கனவே அவர்கள் போட்டிருந்த பொய்க்கால்கள் பழுதாகிவிட்டிருந்தன. நாட்கள் செல்லச்செல்ல அவை மேலும் பழுதாகிவிடும். அதைக்கொண்டு அவர்களால் நடப்பது மிகுந்த சிரமம். பலபேருக்கு அதிலிருக்கும் கடினம் பற்றிப்புரியவே இல்லை. அல்லது அவர்கள் புரிந்துகொள்ள முயலவே இல்லை." ( பக்கம்: 54 - ஆறிப்போன காயங்களின் வலி)


இவ்வாறு வெற்றிச்செல்வி எழுதியிருக்கும்  வரிகள் அனைத்தும் போர்க்கால ஆவணங்களாகவும் போர்க்கால இலக்கியங்களாகவும் அமைந்துள்ளன.
             போராளிகள்  இனத்தை, மக்களை,  மொழியை,  போர்க்களத்தில் ஏந்திய ஆயுதங்களை எவ்வாறு நேசித்தார்களோ அதேயளவு நேசிப்பு காதலிலும் அவர்களுக்கு  இருந்திருக்கிறது என்பதையும் வெற்றிச்செல்வி தனது குறுநாவலிலும் ( வெண்ணிலா) நாவலிலும் ( போராளியின் காதலி) சித்திரித்துள்ளார்.
எனினும் யுத்த  வெற்றிக்குப்பின்னர்தான் காதலின் வெற்றியும் தங்கியிருக்கிறது என்ற உணர்வுடன்தான் போராளிகளின் காதலும் தேங்கியிருக்கிறது இவரது படைப்புகளில்.
                       மஞ்சு - இளங்கோ (வெண்ணிலா குறுநாவல்) சுமதி - வாமன் ( போராளியின் காதலி (நாவல்) காதலர்கள் தத்தம் காதலை வெளிப்படுத்துவதிலும் போராடித்தான் இருக்கிறார்கள். போர்முனையில் மலரும் காதலையும் யதார்த்தப்பண்பு குறையாமல் சித்திரித்து அதிலும் வெற்றி காண்கிறார் வெற்றிச்செல்வி.
நல்லூரில் அவர் எனக்குத்தந்திருந்த அவரது நூல்களில் எழுத்தாளர்கள் எம்.கே. முருகானந்தன், தீபச்செல்வன், சிறீ சிறீஸ்கந்தராஜா, ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் ஆகியோரின் கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னும் உயிரோடிருக்கும் மக்களுக்கும், மருத்துவப்போராளிகளுக்கும், விடுதலை வேண்டி சிறைகளில் தம் வாழ்நாட்களை தொலைத்துக்கொண்டிருக்கின்ற ஈழத்தமிழ் இளையவர்களுக்குமே தமது நூல்களை வெற்றிச்செல்வி சமர்ப்பித்திருக்கிறார்.


எனக்கு அவர் தந்திருந்த போராளியின் காதலி நாவலில் சில பக்கங்கள் முன்னுக்குப்பின்னாக பைண்ட் செய்யப்பட்டிருந்தது. அதனால், முன்னே சென்று பின்னே வந்து படிக்கநேர்ந்தது. அனைத்து பிரதிகளிலும் இந்தத்தவறு நேர்ந்துள்ளதோ தெரியவில்லை.
எனினும் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையில் (பத்து ஆண்டுகளுக்குள்) ஒன்பது நூல்களை அவர் வரவாக்கியிருப்பது சாதனைதான்.  இனத்தின் கனவுகளை சுமந்துகொண்டு ஆயுதம் ஏந்தியவர், அதன் வலிகளை சுமந்துகொண்டு எழுத்தாயுதம் ஏந்திக்கொண்டிருக்கிறார்.
இந்த எழுத்தாயுதமாவது அவருக்கு வெற்றியைத்தரட்டும் என வாழ்த்துகின்றேன்.
(பயணங்கள் தொடரும்)



No comments: