இலங்கையில் பாரதி - அங்கம் 28 --- முருகபூபதி

.


பாரதியியலில்  நாட்டம்கொண்டிருந்த பலரும், பாரதியின் கவிதைகளுக்கே  முதன்மை  அளித்திருக்கின்றனர். எனினும்,  பாரதி கவிதைத்துறைக்கு அப்பால், விமர்சனம், கட்டுரை, பத்தி எழுத்து, மொழிபெயர்ப்பு முதலான துறைகளிலும் தீவிரமாக உழைத்தவர்.
பாரதியின் ஆழ்ந்த - தீர்க்கதரிசனமான சிந்தனைகள் அவர் எழுதிய கவிதைகளிலும்,  அதேவேளையில் அவர் எழுதிய உரைநடைகளிலும் தீவிரம் கொண்டிருந்தன என்ற செய்தியை இலங்கையில் எமக்கு வழங்கியவர்தான் பேராசிரியர் க. அருணாசலம்.
இவர் சாவகச்சேரியில் அல்லாரை என்ற ஊரில் 1946 ஆம் ஆண்டில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை அல்லாரை அரசினர் தமிழ்ப்பாடசாலையிலும், உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் பெற்ற பின்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில்   தமிழை சிறப்புப்பாடமாகப்பயின்று  பட்டம்  பெற்றவர்.
தாம் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்திலேயே முதலில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். ஈழத்து தமிழ்ச்சிறுகதைகள் தொடர்பாக  ஆய்வுசெய்து, முதுகலை மானிப்பட்டமும், தமிழ் வரலாற்றுப் புதினங்கள்  தொடர்பாக  ஆய்வுசெய்து கலாநிதிப்பட்டமும்  பெற்றிருப்பவர். பின்னர் பேராசிரியராக பேராதனைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவராகவும் 1998 வரையில் பணியிலிருந்தவர். தேசிய  சாகித்திய விருதும் சாகித்திய ரத்தினா என்னும் இலக்கிய உயர்விருதும் பெற்றிருக்கும் பேராசிரியர் க. அருணாசலம் 2015 ஆம் ஆண்டில், தமது 69 ஆவது வயதில் மறைந்தார்.
இவர் குறித்து இவருடன் பணியாற்றியிருக்கும் தற்போதைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-
" பேராசிரியர் க. அருணாசலம்  அவர்கள், தமிழியலின் ஆய்வுப் பரப்பில் தனது ஆழ்ந்த புலமையால் பங்காற்றியவர்களுள் ஒருவர். இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளில் தாய்த் தமிழ்த்துறையான பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் புலமைப் பாரம்பரிய முன்னெடுப்புக்களில் முக்கிய பங்காற்றியவர்.
 பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிய பேராசிரியர், தமக்கெனத் தகைசான்ற ஒரு மாணவ பரம்பரையையும் உருவாக்கியவர்.
இலங்கைத் தமிழியல் ஆய்வுமுயற்சிகள் தொடர்பாகவும், மலையக இலக்கியப் பாரம்பரியம் தொடர்பாகவும் பாரதிஆய்வியல் தொடர்பாகவும் அவர் நிகழ்த்திய புலமைசார் உரையாடல்கள் தமிழ் உலகில் என்றும் மறக்கமுடியாதவை.


தமிழகத்துத் தமிழ்ப் புலமை மரபிலும் தமது தமிழ்ப் புலமையால் செல்வாக்குச் செலுத்தி ஈழத்தமிழ் அறிவுலகை உயர்த்தியவர்களில் ஒருவர். தமிழ் கூறும் நல்லுலகின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு ஆய்வுகளில் தமக்கெனத் தனி முத்திரை பதித்த பேராசிரியர்."
பேராசிரியர் க. அருணாசலம் எழுதிய பாரதியார் சிந்தனைகள் என்னும் ஆய்வு நூல் 1984 இல் தமிழ்நாடு சோமு புத்தக நிலையத்தினால் வெளியிடப்பட்டது.
பாரதியாரின் கவிதைகளும் உரைநடை ஆக்கங்களும், பாரதியார்: ஆஸ்திகன் - முற்போக்காளன் - பொதுவுடைமையாளன் , பாரதியாரும் அரசியலும், சாதி ஏற்றத்தாழ்வும் விளைவுகளும், தொழிலாளரும் தொழிலும், கல்வியும் அறிவியலும், சமயமும் வாழ்வும், பாரதியாரும் கலை இலக்கியமும், தமிழ்ச்சாதி முதலான ஒன்பது அங்கங்களில் பாரதியை ஆய்வுசெய்திருக்கிறார் பேராசிரியர் க. அருணாசலம்.
" பாரத நாட்டின் தெற்கிலே பாரதியாரும், கிழக்கிலே ரவீந்தரநாத் தாகூரும், மேற்கிலே இக்பாலும் தோன்றி தமது வீறுகொண்ட கவிதைகளாலும் பிற ஆக்கங்களாலும் உலகிற்கு உய்யும் நெறி காட்டினர். தாகூர், இக்பால், பாரதியார் ஆகிய மூவரும் மகாகவிகளேயாயினும்  ஏனைய  இருவரிடமும்  காண முடியாத சில சிறப்பியல்புகளைப் பாரதியாரிடம்  காணமுடிகிறது.
தமது பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட  முயன்ற பாரதியார் வெறுமனே அரசியல்  விடுதலைக்காக மட்டும் கவிதை மழை பொழியவில்லை. அரசியல் விடுதலையுடன் கூடவே சமுதாயம், பொருளாதாரம், சமயம்,  பண்பாடு முதலிய துறைகளிலும் விடுதலையை அவாவி நின்றார்.
தாழ்வுற்று வறுமை மிஞ்சிச் சுதந்திரம் தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத மக்களின் பரிதாப நிலையை ஊன்றிக்கவனித்த பாரதியார்  அவற்றுக்கான அடிப்படைக்காரணங்களையும் தீர்வு மார்க்கங்களையும்  தமது கவிதைகளினூடே விண்டு காட்டியுள்ளார். " என்று பதிவுசெய்கிறார்  பேராசிரியர்  அருணாசலம்.
சாதி ஏற்றத்தாழ்வும் விளைவுகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் அருணாசலம் அவர்கள், பாரதியின் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களையும்  விபரிக்கின்றார்.
பாரதி பிராமணர் சமூகத்தில் பிறந்திருந்தபோதிலும் அச்சமூகம் தொன்றுதொட்டு பின்பற்றிவந்த வைதீக மரபுகளைப்பேணியவரல்ல.
கனகலிங்கம் என்ற அடிநிலை சமூகத்து சிறுவனுக்கு உபநயனம் செய்வித்து, பூநூல் அணிவித்து, " இன்று முதல் நீயும் ஒரு பிராமாணன்தான்." என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்தியவர். சாதி அடக்குமுறைகள்  மேலோங்கியிருந்த காலத்திலேயே  அதனை துச்சமாக  எண்ணி  துணிவுடன் எதிர்த்தவர் பாரதி.
பேச்சில் ஒன்றும் செயலில் ஒன்றுமாக வாழ்ந்தவரில்லை பாரதி.
இலங்கையில் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் எழுதிய நிலவிலே பேசுவோம் என்ற சிறுகதையை  குறிப்பிடுதல் பொருத்தமானது.
யாழ்ப்பாணம் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் சமூகப்பிரமுகராக வாழ்ந்த ஒருவர், தாம் சாதிப்பாகுபாடு பார்ப்பதில்லை என்று வெளியே சொல்லிக்கொண்டு, தன்னைப்பார்க்க வந்த அடிநிலை மக்களை தமது வீட்டினுள்ளே அழைக்காது, " வெளியே நல்ல நிலவு காய்கிறது. வாருங்கள் நிலவிலிருந்து பேசுவோம் என்று  வீட்டு முற்றத்தில் வைத்து பேசி அனுப்புவார். இச்சிறுதையை எழுதியிருக்கும் என்.கே. ரகுநாதன் வடபுலத்தில் நடந்த ஆலயப்பிரவேசப்போராட்டம் தொடர்பாக கந்தன் கருணை என்ற கூத்து வடிவிலான நாடகமும் எழுதியிருப்பவர்.
அடிநிலை மக்களின் எழுச்சிப்போராட்டங்களிலும் பங்கேற்றவர்.
சாதி அடிப்படையில் மக்களை பிரிக்கும் மரபார்ந்த நடவடிக்கைகளில் இலங்கையிலும் தமிழகத்திலும் பல வேறுபாடுகள்  இன்றும் நீடிக்கின்றன.
இலங்கையில் அடிநிலை மக்கள்,    சிறுபான்மைத்தமிழர் என்றும் இந்தியாவின் வடக்கே ஹரிஜனர் எனவும் தமிழகத்தில் தலித்துக்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
 பாரதியார் காலத்தில் அவர் வாழ்ந்த அக்ரஹாரத்தெருவில் தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களுடன் பாடியும் ஆடியும் கலகலப்பாக அவர்களுடன் இணைந்திருந்தவர்.
சாதிவேற்றுமைக்கு எதிராக எழுதியும் பேசியும் வந்திருக்கும் பாரதி தமது தனிப்பட்ட சொந்த வாழ்விலும் அந்த இயல்புகளினால் தமது உறவுகளின் வெறுப்புக்கும் ஆளானவர்.
குறிப்பிட்ட சம்பவங்களையும் பேராசிரியர் அருணாசலம் இக்கட்டுரையில் சுட்டிக்காண்பிக்கின்றார்.
இந்தியாவின் அரசியல் நிலைமைகள் பற்றிய பாரதியின் கருத்துக்களை விளக்கும் நீண்ட கட்டுரையும் இந்நூலில் இடம்பெறுகிறது.
பாரதி மற்றவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் என்பதையும் இந்நூலில் நாம் காண முடிகிறது. எந்தவொரு படைப்பாளியும் அறிவுஜீவியும் தனது பலத்தை வெளிஉலகிற்கு காண்பிப்பதற்குத்தான் முயல்வார். ஆனால், தனக்கும் பலவீனங்கள் உண்டு என்பதையும் பகிரங்கப்படுத்தி, அவற்றை நீக்கும் வலிமையும் தனக்கு வேண்டும் என்று பராசக்தியிடம்  இறைஞ்சியவர்தான் பாரதி என்பதையும் ஆதாரங்களுடன் அருணாசலம் பதிவுசெய்திருக்கிறார்.
" பராசக்தி, ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லாமல், எழுதுவதற்கு எனக்குத்தைரியம் கொடுக்கவேணும். நாம் எழுதுவதைப் பிறர் பார்க்கநேரிடுமென்று கருதி நமது துர்பலங்களை எழுத லஜ்ஜையுண்டாகிறது. பராசக்தி என் மனதில் அந்த லஜ்ஜையை நீக்கிவிடவேண்டும்."
இவ்வாறு தனது வெட்கத்தை வெளிப்படுத்தும் பாரதியிடத்தில் தாழ்வுமனப்பான்மை இருக்கவில்லை என்பதையும் அருணாசலம் இந்நூலில் சுட்டிக்காண்பிக்கின்றார்.
" புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத்
தமிழ் மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லை யெனும்
 வசையென்னாற் கழிந்த தன்றோ" என்று எட்டயபுரம் மகாராசாவுக்கு  அவர் எழுதியிருக்கும் சீட்டுக்கவியில்  இறுமாப்புடன் பாரதி  தன்னைப்பற்றி சொல்லியிருப்பதும்  இந்நூலில் இடம்பெறுகிறது.
இலங்கையில்  பாரதியின் தாக்கம் எத்தகையது என்பதற்கு, அருணாசலம் எழுதியிருக்கும் இந்நூலிலிருந்து பல ஆதாரங்களை நாம் காணமுடிகிறது.
தமிழகத்தில் பாரதியின் கவிதைகளைத்தான் பலரும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். தொ.மு. சி. ரகுநாதன் இதில் சற்று விதிவிலக்கு. ஆனால், இலங்கையில் பாரதியின் உரைநடைகளை ஆய்வுக்குட்படுத்தியவர்களில் முதன்மையானவர்களாக எமக்கு தென்படுபவர்கள் பேராசிரியர்கள் க. கைலாசபதியும் அருணாசலமும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.
பாரதி இயலில் நாட்டம்கொள்ளும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள நூலாக விளங்குகின்றது அருணாசலம் எழுதியிருக்கும் பாரதியார் சிந்தனைகள்.
(தொடரும்)


No comments: