“நாங்க ரெண்டு பேர் இருக்கோம்..” -எம்.ஜி.ஆர். வீட்டில் ஏழைகளின் குரல்!

.

நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடி வரும் இந்த தருணத்தில், தனது சொந்த ஊரான மதுரையிலிருந்து சென்னை வந்திருந்தார். மெரினா பீச்சில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம், தி.நகர் ஆற்காடு முதலி தெருவில் உள்ள அவரது நினைவு இல்லம் சென்று வந்த அவர், “எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு இதுவரையிலும் நான் சென்றதில்லை.” என்றார். நண்பரின் அழைப்பைத் தட்ட முடியாமல் ராமாவரம் சென்றோம். 

அரசியல் பேசும் இடம் இதுவல்ல!

“எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது இந்த வீட்டில்தான். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோதே, ஜெயலலிதா பெயரில் பேரவை ஆரம்பித்தவர்களுக்கு, அவர் கடுமையாக டோஸ் விட்டதும் இந்த வீட்டில்தான். ஜெயலலிதாவுக்காக மதுரை பழக்கடை பாண்டி எம்.ஜி.ஆரால் செமத்தியாக கவனிக்கப்பட்டதும் இந்த வீட்டில்தான்.” என்று தனக்குத் தெரிந்த விஷயங்களை எடுத்து விட்டார் நண்பர். “தேவையில்லாத அரசியலெல்லாம் இங்கே பேசாதீங்க..” என்று இடைமறித்தார் ராமாவரம் தோட்ட ஊழியரான பீமராஜா. 




70 வயதைக் கடந்துவிட்ட பீமராஜா ராமாவரம் தோட்டத்துக்கு 30 வயதில் வேலைக்கு வந்தவராம். “எம்.ஜி.ஆர். ஆடு, மாடு, சிங்கமெல்லாம் வளர்த்தது இங்கேதான். உசரமா தெரியுதே அது லிப்ட்டுங்க. மாடியில்தான் தலைவர் இருப்பார். அவர் இறந்தது இந்த வீட்டில்தான். இப்ப எம்.ஜி.ஆர். மனைவி ஜானகியம்மாவோட சொந்தக்காரங்க மூணு பேரு (சுதா விஜயன், ராதா கோபாலகிருஷ்ணன், கீதா மதுமோகன்) இங்கேதான் குடியிருக்காங்க. வீட்டுக்கு வெளிய பார்த்துக்கலாம். உள்ளே போறதுக்கு யாருக்கும் அனுமதி இல்லை. இதுதான் அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர். கட்டிய நினைவு மண்டபம். அப்புறம் இங்கே தன்னோட அம்மா சத்யபாமாவுக்கு எம்.ஜி.ஆர். கட்டிய கோயில், எம்.ஜி.ஆர். இறந்த பிறகு அவருக்கு ஜானகியம்மா கட்டிய கோயில், ஜானகியம்மாவோட சமாதின்னு மூணும் வரிசையா இருக்குது. பார்த்துக்கங்க. அப்புறம் ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னால சசிகலாம்மா திறந்து வச்ச எம்.ஜி.ஆர். சிலை இது.” என்றார் பீமராஜா. உட்புறமாக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளியைப் பார்ப்பதற்கோ, போட்டோ எடுப்பதற்கோ,  யாரையும் அனுமதிப்பது இல்லை என்றார் அங்கே சேர் போட்டு அமர்ந்திருந்த செக்யூரிட்டி. 

எம்.ஜி.ஆர். பேரனின் சினிமா பேனர்!


எம்.ஜி.ஆரை பார்க்க வந்தவர்களுக்கெல்லாம் வயிறு நிறைய சோறு போட்டு அனுப்பிய ராமாவரம் தோட்டம் இப்போது வெறிச்சொடிக் கிடக்கிறது. உள்ளே நுழைவதற்கு கெடுபிடி காட்டிய காலம் போய், கேட் கூட இல்லாமல் திறந்தே கிடக்கிறது. நினைவிடத்துக்கும் நினைவில்லத்துக்கும் வரும் கூட்டம் ராமாவரம் தோட்டத்துக்கு வருவதில்லையாம். ராமாவரம் தோட்ட இல்லத்தின் சுவரில் ஓடு குமார் ஓடு என்ற திரைப்படத்தின் பூஜை பேனரை வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறாராம். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் சுதாகரனின் மகனாம் இந்த ராமச்சந்திரன்.  

தனிமைச் சிந்தனையில் உதித்த வாய் பேசாத, காது கேளாதோர் பள்ளி!


அரசியலில் நேற்று முளைத்த காளான்களெல்லாம் ஆடம்பர சொகுசு பங்களாக்களில் வசித்துவரும் நிலையில், சினிமாவிலும், அரசியலிலும் கோலோச்சிய எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லம் அத்தனை எளிமையாக இருக்கிறது. ராமாவரம் தோட்டத்தை 1958-59 இல் வாங்கினார் எம்.ஜி.ஆர். 1962-இல் ஜானகி அம்மாளோடு இங்கே குடியேறினார். 1987-இல் அவர் மறையும் வரையிலும் இங்குதான் குடியிருந்தார். 6 ஏக்கர் 34 சென்ட் பரப்பளவுள்ள ராமாவரம் தோட்டத்தில், பேச்சு மற்றும் காது கேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளிக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பேச்சு மற்றும் காது கேளாதோர் பள்ளி ராமாவரம் தோட்டத்தில் அமைந்தது குறித்து எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார் இப்படிச் சொல்லியிருக்கிறார் - 


"அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்ப சரியா பேச முடியாத காரணத்தினால... அதிகமா தனிமையை நாடினார். அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார். அப்ப ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டு தோட்டத்துக்கு வந்திருந்தார். அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமத்தான் இந்த நிலைமைக்கு ஆளானதா சொல்லி அந்தப் பெரியவர் அழுதார். உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக்கும் சிகிச்சை செய்யச் சொன்னார். 


ஆச்சர்யப்படற அளவுக்கு அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் (எம்.ஜி.ஆர்.) பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்பதான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ராமாவரம் தோட்டத்துல..  இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதி வச்சிட்டாரு. அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது." என்று கூறியிருக்கிறார் ஜானகி அம்மையார். 


எம்.ஜி.ஆர். உயில்! சொத்து யாருக்கு?

தனக்கு வாரிசு இல்லை என்பதால், தன் மனைவி ஜானகியின் தம்பி நாராயணனின் மகள்கள் லதா, கீதா, ஜானகி, சுதா, பானு, மனோ ஆகியோரை வளர்ப்பு மகள்களாக ஏற்றார் எம்.ஜி.ஆர். தன் உயிலில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார் -  

நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்ற பெயரில் உள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது. என் மனைவி காலத்திற்கு பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ள வேண்டியது. அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ, இது  போன்றவற்றைச் செய்யவோ உரிமையில்லை. அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் ‘எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம்’ என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும். 


சொத்துக்காக கொலை!

எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் பாதை கரடுமுரடானது. சிறுவயதில் ஒரு வேளை உணவுக்காக கஷ்டப்பட்டார். நாடக கம்பெனிகளில் சிறு வேடங்களையும் ஏற்று நடித்தார். சினிமா வாய்ப்புக்காக அலைந்தார். அவரது வெற்றி எளிதில் கிடைத்ததல்ல. இதில் கொடுமை என்னவென்றால், எம்.ஜி.ஆர். சம்பாதித்த சொத்து ஒன்றுக்காக, அவரது உறவினரான பானு, தனது அக்கா சுதாவின் கணவர் விஜயனை ஆள் வைத்துக் கொலை செய்ததுதான். எம்.ஜி.ஆரின் கட்சியான அதிமுகவையும், அந்த அணி, இந்த அணி என, ஆளாளுக்கு இன்று சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 


நண்பர் ராமாவரம் தோட்டத்தை ஏக்கமாக ஒரு முறை பார்த்துவிட்டுத் திரும்பியபோது, “நாங்க ரெண்டு பேரு இருக்கோம்..” என்ற குரல் கேட்டது. நண்பரின் கண்களில் நீர்த்திவலைகள். முகம் இறுக்கமானது. பர்ஸை எடுத்தார். எண்ணிப் பார்க்காமல் கரன்ஸித் தாள்களை அந்த நபரின் கைகளில் திணித்தார். “எம்.ஜி.ஆர். இல்லை. அவர் வாழ்ந்த வீட்டிலும் ஏழைகள் இருக்கிறார்கள்.” என்று பெருமூச்சு விட்டார். 

எம்.ஜி.ஆர் வாழ்ந்த விதமும், அவரது அரசியல் நடவடிக்கைகளும், ராமாவரம் தோட்டமும், அவரது சொத்துக்களும், சரியான தலைமை இல்லாமல், சரிவைச் சந்தித்து வரும் அதிமுக கட்சியும், ஏதோ ஒரு விதத்தில் பாடம் உணர்த்துபவையாக இருக்கின்றன. 

-சி.என்.இராமகிருஷ்ணன்

No comments: