"வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை. ஆனால், வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை
அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும்
கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்...?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன். அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால், கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க
முடியும்...? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்
நிறைந்திருப்பது இயற்கைதானே...? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை
கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே
விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட
அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா...? " இவ்வாறு மனம் திறந்து பேசியவர் யார்
தெரியுமா...?
1897
ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது ஏழு வயதில், 14
வயது நிரம்பிய பாரதிக்கு வாழ்க்கைப்பட்டவரான
செல்லம்மாள்தான் அவர். 1951 ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் " என்கணவர்" என்ற தலைப்பில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.
செல்லம்மாள்,
தனது கணவர் பாரதியுடன் எத்தகைய வாழ்க்கையை தொடர்ந்தார் என்பதை பாரதியின்
வரலாற்றின் பக்கங்களிலிருந்தும் செல்லாம்மாள் எழுதியிருக்கும், பேசியிருக்கும் குறிப்புகளிலிருந்தும்
தெரிந்துகொள்கின்றோம்.
மேலும்
தெரிந்துகொள்ளவேண்டுமானால் ஞான ராஜசேகரன் இயக்கிய
பாரதி படத்தைப்பார்க்கலாம்.
செல்லம்மாள் திருச்சி
வானொலியில் மேலும் தெரிவித்திருப்பதைப்பாருங்கள்.
" கவிஞர்களில்
பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும்
கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக
மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும்
கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே
தொல்லைக்குள்ளாகியது. ஆனால், நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல
அடக்குமுறையை உடைத்துக்கொண்டு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேலைச்சுடர் வானை
நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய
ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான்
வெய்யிற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர்
அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய்
இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான
காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை
வேண்டுமானாலும் பொறுக்க முடியும். ஆனால், கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப்
போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே
முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை.
கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும்
பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச
வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது
எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன
செய்யும்...? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும்
ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப்
பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை
லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான்
கொடுத்தது. புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண்
எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும்
எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து
வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை
அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என்
கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.
புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும்
இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி
பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள்
எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை
இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம்
மோதி மிதித்துவிட்டுத்
தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.
மகாகவி நாட்டிற்காக, அதன்
சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை
முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த
தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று. ஆனால், இன்று அவரது பூத
உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து
நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை
மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது."
பாரதியின்
உள்ளும் புறமும் எவ்வாறு இருந்தன என்பதை உடனிருந்து உள்வாங்கியிருக்கும் செல்லம்மாளின் வாக்குமூலம் இவ்வாறு பதிவாகியிருக்கும்
அதே சமயம், பாரதியை பலகோணங்களில் பார்க்கும்,
ஆராயும் பாரதிக்குப்பின்னர் வந்தவர்கள் பாரதியினால்
கருத்துமோதல்களிலும் ஈடுபட்டுவந்திருக்கின்றனர். பாரதியே சொல்லியிருப்பதுபோன்று "விண்டுரைக்க மாட்டாத விந்தை" தான் அவர்
எம்மவரிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாரிய தாக்கம்.
கடந்த அங்கங்களில்
தமிழகப்பேச்சாளர்களின் இலங்கை விஜயம் குறித்து எழுதியிருந்தோம். அவர்களின் கருத்துக்களினால்
இலங்கையில் உருவான எதிர்வினைகளையும் இந்தத் தொடரில் பதிவுசெய்யவேண்டியது அவசியம் எனக்கருதுகின்றோம்.
கொழும்பு
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற எழுத்தாளர்கள் சந்திப்பில் ரகுநாதன் நிகழ்த்திய
உரையில் அவர் குறிப்பிட்ட கருத்தினால் வெகுண்டவர் இலங்கையில் கவிதை மற்றும் வானொலி,
பத்திரிகை ஊடகத்துறையில் பிரபல்யம் பெற்றிருந்த
சில்லையூர் செல்வராசன். இவர் கலை, இலக்கியத்துறையில்
பன்முக ஆற்றல் கொண்டிருந்தமையால் பல்கலைவேந்தன்
என்ற பட்டத்தையும் பெற்றவர்.
தான்தோன்றிக்கவிராயர் என்ற புனைபெயரிலும் எழுதியிருப்பவர்.
பம்பலப்பிட்டி
சரஸ்வதி மண்டபத்தில் ரகுநாதன் பேசுகையில்,
" இலங்கையில் பாரதியின் கவிதைகளின் தாக்கத்தை இலங்கைக்கவிஞர்களில் தான் காண்பதாகவும்,
அத்துடன் தாம் இருபத்தியைந்து வருடங்களின் முன்னர் எழுதிய கவிதைகளின் தாக்கம் இலங்கையிலும் இருப்பதாகவும் சொன்னார்.
அதற்கு
எதிர்வினையாற்றும் சந்தர்ப்பம் சில்லையூர்
செல்வராசனுக்கு அந்த நிகழ்வின் பின்னர், கொழும்பு
தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் கிடைத்தது.
இதனை ஒழுங்குசெய்திருந்தவர்கள்,
சில்லையூர் செல்வராசன், இந்நிகழ்வில் எதிர்வினையாற்றுவார் என்பதை முற்கூட்டியே தெரிந்துகொண்டு
மிகவும் சாதுரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் அன்றைய நிகழ்விற்கு ரகுநாதனை அழைக்காமல்
இலங்கை வந்திருந்த மற்றும் ஒரு பேச்சாளரான பேராசிரியர் இராமகிருஷ்ணனை அழைத்துப் பேசவைத்தனர்.
கவிஞர்கள்
நீலாவணனின் வேளாண்மை, கல்வயல் குமாரசாமியின்
சிரமம் குறைகிறது ஆகிய நூல்களின் வெளியீட்டில் பேசிய சில்லையூர் செல்வராசனுக்கு
தான்தோன்றிக்கவிராயர் என்ற புனைபெயரும் இருக்கிறது என்பதை முன்னர்
சொல்லியிருக்கின்றோம்.
ரகுநாதன்
அதற்கு முன்பே, தமிழகத்தில் தமக்கு திருச்சிற்றம்பலக்
கவிராயர் என்ற புனைபெயரைச்சூட்டிக்கொண்டு கவிதைகளை வரவாக்கியிருப்பவர்.
ரகுநாதன்
சொல்லியிருப்பதுபோன்று, இலங்கையில் பாரதியின் கவிதைகளின் தாக்கம் இருப்பதாகச்சொல்ல
முடியாது என்பதுதான் சில்லையூர் செல்வராசனின் வாதமாக அன்றைய நிகழ்வில் அமைந்தது. அவரது
உரை இவ்வாறு அமைந்திருந்தது.
"
கடந்த வாரம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு கருத்தரங்கில் நானும் கலந்து கொண்டேன். நான் முதலிலேயே
பேசிவிட்டேன். எனக்குப்பிறகு பேசிய ரகுநாதன், " இலங்கையில் இருக்கும் கவிஞர்களுக்கு
பாரதியின் தாக்கமும் தனது கவிதைகளின் பாதிப்பும் இருப்பதாகச்சொன்னார். அதனை ஏற்கமுடியாது.
ரகுநாதன் திருச்சிற்றம்பலக்கவிராயர் என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகளில் சிலவற்றைத்தான்
இலங்கைக்கவிஞர்கள் படித்திருப்பார்கள். எமது கவிஞரான அமரர்
நீலாவணன், மிகவும் எளிய தமிழில் அதாவது வீட்டுத்தமிழில்," வாடா தம்பி,
குடிடா சோடா, பத்துடா பீடி" என்ற ரீதியில் மரபு இலக்கணத்தில் நின்றுகொண்டு கவிதை
எழுதியிருக்கிறார். இத்தகைய எளிய தமிழில் தமிழகத்தில் எவரும் எழுதியிருப்பதாகத்தெரியவில்லை.
தமிழகத்தவர்கள், " இலங்கை எழுத்தாளர்களுக்கு எழுதத்தெரியாது, இலக்கியம் தெரியாது
என்று சொன்ன காலமும் முன்பிருந்தது. அங்கிருந்து
வந்த கங்கை இதழின் ஆசிரியர் பகீரதன், இலங்கை எழுத்தாளர்கள் இலக்கியத்தில் பத்தாண்டுகள்
பின்னிற்பதாகச்சொன்னார்.
அந்த ரீதியில்
இன்று இங்கு வந்திருக்கும் ரகுநாதன், எமது கவிஞர்களிடம் பாரதியினதும் தமதும் தாக்கம்
இருப்பதாகச்சொல்கிறார்.
நான் வீரகேசரி
வாரவெளியீட்டில் பணியாற்றிய காலத்தில், கைலாசபதி, சிவத்தம்பி, சிவகுருநாதன் ஆகியோர்
கல்லூரி மாணவர்கள். அச்சமயத்தில் ஒவ்வொரு வாரமும் இலங்கை கவிஞர்களின் கவிதைகளுக்கு
வீரகேசரி வார வெளியீட்டில் நல்ல களம் கொடுத்து வளர்ந்தவர்கள்தான் பின்னாளில் பிரபல்யம்
பெற்றவர்கள். கவிஞர்கள் முருகையன், நீலாவணன் போன்றோர் இப்படித்தான் அன்று இங்கு வளர்க்கப்பட்டார்கள்.
எமது கவிஞர்களின் வளர்ச்சி மிகவும் வேகமானது.
பாரதியாருக்கு
" பாரதி" பட்டத்தை சூட்டியவரே ஒரு இலங்கைக்கவிஞர்தான். ஆனால், துரதிஷ்ட வசமாக
அவரது பெயரை அறியமுடியாதவர்களாக நாம் இருக்கின்றோம். சுப்பிரமணியம் என்ற 12 வயதுச்சிறுவனுக்கும்,
சோமசுந்தரம் என்ற சிறுவனுக்கும் முறையே சுப்பிரமணிய பாரதி, சோமசுந்தர பாரதி என்ற பெயர்களை
வழங்கியவர் எமது தாயகத்தைச்சேர்ந்தவரே என்று, சோமசுந்தர பாரதியார் தமது கட்டுரை ஒன்றில்
குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த அந்தக்கவிஞரின் பெயரை தாம் மறந்துவிட்டதாகவும்
அதில் தெரிவித்துள்ளார். இது இவ்விதமிருக்க ரகுநாதன் வந்து பாரதியினதும் தமதும் தாக்கம்
இலங்கையிலிருப்பதாகச்சொல்வது நகைப்புக்குரியது.
இந்த விழாவில்
உரையாற்றிய தமிழகப்பேச்சாளர் பேராசிரியர் ராமகிருஷ்ணன், " மரபுக்கவிதை - புதுக்கவிதை
சர்ச்சைகள் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையிலும்
உச்சக்கட்டத்திலிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. புதுக்கவிதையும் கவிதைதானா என்று
என்னிடம் எவரும் கேட்டால், கவிதையில் கருத்து இருந்தால், எழுச்சி இருந்தால், உணர்ச்சி
இருந்தால் மக்களின் பிரச்சினை இருந்தால் அதனை நான் கவிதை என்பேன். மரபுக்கவிதைக்கு
பாரம்பரியம் இருக்கிறது. புதுக்கவிதை ஆங்கில இலக்கியத்திலிருந்து பிறந்தது. மேனாட்டில்
முதலாளித்துவாதிகளினதும் தொழிலாளி வர்க்கத்தினரதும் பக்கங்கள் சாராமல் நடு நிலையில்
நின்று பிறந்தது புதுக்கவிதை. அதிலும் அழகியல் அம்சங்கள் இருக்கின்றன.
இன்று தமிழ்நாட்டில்
புதுக்கவிதை உச்சத்தில் கொடி கட்டிப்பறக்கிறது. ஆனால், முன்னர், புதுக்கவிதையை குப்பைத்தொட்டியில்
போடுங்கள் என்ற குரலும் கேட்டது. கவிஞர்கள் எதனை எழுதினாலும் அதில் மக்களின் பிரச்சினைகள்
சொல்லப்படல் வேண்டும். அதற்குத்தான் வரவேற்பிருக்கும்." எனத்தெரிவித்தார்.
இந்த வாதங்கள்
1970 களில் உக்கிரம் பெற்றிருந்தன. இன்று மரபுக்கவிதை - புதுக்கவிதை என்று பார்க்காமல்
கவிதை என்றே பார்க்கும் நிலை வந்துவிட்டது. இவற்றுக்கு மத்தியில் ஹைக்கூ கவிதை என்ற வடிவமும்
வந்திருக்கிறது.
கவிஞர்கள்
- எழுத்தாளர்களிடையேயான மோதல்கள் இன்று நேற்றல்ல, நக்கீரன்
- சிவபெருமான் , கம்பர் - ஒட்டக்கூத்தர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது.
பாரதி பட்டத்தை சுப்பிரமணியனுக்கு யார் கொடுத்தது...?
என்ற கேள்வியை எழுப்பி, சோமசுந்தர பாரதியின் கட்டுரையிலிருந்து ஆதாரம் சொன்ன சில்லையூர்
செல்வராசனுக்கு அன்றைய நிகழ்வில் எவரும் எதிர்வினையாற்றவில்லை.
ஆயினும், பாரதி பட்டத்தை சுப்பிரமணியன் என்ற
பால்யகாலத்து சுப்பையாவுக்கு அவரது 11 வயதில் 1893 ஆம் ஆண்டில், எட்டயபுரத்தின் அரண்மனையில்
அன்றைய சமஸ்தானப்புலவர்கள்தான் வழங்கினார்கள் என்றுதான் இற்றைவரையில் பாரதியின் வரலாறு
பேசுகின்றது.
அந்தச்சபையில் பாரதியின் கவிபுனையும் ஆற்றலை
நன்கு சோதித்துவிட்டே பாரதி பட்டத்தை அளித்திருப்பதாக பல பதிப்புகளில் தொடர்ச்சியாக
வெளியாகிக்கொண்டிருக்கும் மகா கவி பாரதியார்
கவிதைகள் நூலில் பதிவாகியிருக்கிறது. கலைமகளின் மறுபெயர் பாரதி.
உண்மையிலேயே
பாரதி பட்டத்தை யார் வழங்கினார்கள்...?
என்பதை சொல்வதற்கு இன்று எட்டயபுரம் சமஸ்தானமும் இல்லை. பாரதியும் இல்லை. சோமசுந்தர
பாரதியாரும் இல்லை. சில்லையூர் செல்வராசனும் இல்லை. சோமசுந்தர
பாரதியார் குறிப்பிடும் ஈழத்தின் அந்த மூத்த
கவிஞரின் பெயரும் தெரியவில்லை.
இவ்வாறு
பல "இல்லைகள்" தொடர்வதிலும்
பாரதியின் தாக்கம் எம்மவர் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.
பாரதியுடன்
சொற்ப காலமே (1897 - 1921) வாழ்ந்த செல்லம்மாவுக்கும் கணவர் குறித்து பல எதிர்வினைகள் இருந்திருக்கின்றன.
ஆனால் அதனை அவர் நயமாக உரைத்திருப்பதையே இந்த அங்கத்தின் முதற்பகுதியில் பாரத்தோம்.
ஆனால்,
பின்னாளில் பாரதியை ஆய்வுசெய்தவர்களும் மேடைகளில் உரையாற்றியவர்களும் பல முனைகளில்
ஒருவருக்கொருவர் எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கின்றனர். அந்த எதிர்வினைகளிலும் பாரதி
வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்.
( தொடரும்)
No comments:
Post a Comment