பயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு உழைக்கும் சிங்கள எழுத்தாளர்களுடன் சந்திப்பு முருகபூபதிபயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு உழைக்கும் சிங்கள எழுத்தாளர்களுடன் சந்திப்பு முருகபூபதி

.

அன்று காலை கொஸ்கமவிலிருந்து இலக்கிய நண்பர் மடுளுகிரியே விஜேரத்ன தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
கடந்த மே மாதம 6 ஆம் திகதி மெல்பனில் நடந்த எமது 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றிவிட்டு, மே 9 ஆம் திகதியே புறப்பட்டவர் இவர்.
முதல்தடவையாக அவுஸ்திரேலியா வந்திருந்த மடுள்கிரியே விஜரத்ன எங்கள் புகலிட தேசத்தைச்சுற்றிப்பார்க்காமலேயே புறப்பட்டமைக்கு வெசாக் பண்டிகைதான் காரணம்.
அவர் சிறந்த தமிழ் அபிமானி. அத்துடன் பௌத்த மத அனுட்டானங்களை பின்பற்றுபவர். வெசாக் காலத்தில் தாம் "சில்" அனுட்டிப்பதாகச்சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.
அவர் மே 9 ஆம் திகதி காலையிலும் நான் அதே தினம் இரவும் இலங்கைக்கு வேறு வேறு விமானங்களில் புறப்பட்டோம்.
அன்று நீர்கொழும்பிலிருந்த எனக்கு அவரது தொலைபேசி அழைப்பு மகிழ்ச்சியைத்தந்தது.
" தோழரே... இன்று உங்களைப்பார்க்க நீரகொழும்பு வருகின்றேன். முகவரி தாருங்கள். இன்று மதியம் உங்களுக்கு நான் ஒரு விருந்து தரப்போகின்றேன்." என்றார்.
" இலக்கிய விருந்தா...?" எனக்கேட்டேன்." அதனைத்தான் தினமும் அனுபவிக்கின்றோமே... அந்த விருந்து அல்ல, உங்களை நீர்கொழும்பில் எங்காவது ஒரு உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று  மதிய விருந்து தருவதற்கு விரும்புகின்றேன்." என்றார்.
" இங்கே எனது அக்கா, தங்கை, தம்பிமார் இல்லங்கள் இருக்கின்றன. நீங்கள் வாருங்கள் நானே உங்களுக்கு விருந்து தருகின்றேன்." என்று அழைத்தேன்.
" இல்லை...., அப்படித்தந்தால் அது உங்கள் ஏற்பாடு. இது எனது ஏற்பாடு....மறுக்காமல் வரவேண்டும்" என்று அன்புக்கட்டளையிட்டார்.
அவரது வருகையை வேறுவிதமாக அமைத்தால்,  யாருக்காவது பயன்படும் என்ற எண்ணம் எனது மனதில் துளிர்த்தது. அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அத்துடன் சிறந்த பேச்சாளர்.
அவருடைய தொலைபேசி அழைப்பு வந்த மறுகணமே, வத்தளையில் வசிக்கும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் திரு. புவனேஸ்வரராஜாவுடன் தொடர்புகொண்டேன்.
அவர், கல்லூரிக்கு புறப்பட்டு வரும்  அவசரத்திலிருந்தார்.
" சேர்... எங்கள் ஊருக்கு தமிழரல்லாத ஒரு தமிழர் வருகிறார்." எனச்சொல்லி மடுளுகிரியே விஜேரத்னவின் சிறப்பியல்புகளை விபரித்தேன்.
அன்றுதான் அவர் விஜேரத்ன பற்றி என்மூலம் அறிகின்றார்.
" உங்கள் கல்லூரியில் பயிலும் உயர்தரவகுப்பு கலைப்பீட மாணவர்களுக்கு அவரிடமிருந்து சிறந்த சொற்பொழிவை பெறமுடியும். மதியம் ஏற்பாடு செய்யுங்கள்." எனச்சொன்னேன்.
அதிபரும் அதற்குச் சம்மதித்தார்.
இந்தத் தகவலை  மடுளுகிரியே விஜேரத்னவுக்கு தெரியப்படுத்தினேன்.
எனது தீடீர் ஏற்பாடு அவருக்கு வியப்பூட்டியது. எமது தமிழ் மாணவர்கள் மத்தியில் இன நல்லிணக்கத்திற்காகவும் மொழிபெயர்ப்பு பணிகளுக்காகவும் அயராது உழைக்கின்றவர்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எனது விருப்பத்தை அதிபர் புவனேஸ்வரராஜா ஏற்றுக்கொண்டதையிட்டு மனநிறைவடைந்தேன்.
" இலங்கையில் பெரும்பாலான இலக்கியக்கூட்டங்களிலும் நூல் வெளியீடுகளிலும் மூத்த தலைமுறையினர்தான் ஆக்கிரமித்திருக்கின்றனர். இளம் தலைமுறையினரும்  பேசுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையவேண்டும். அத்துடன், பாடசாலைகளில் உயர்வகுப்பு மாணவர்கள் மத்தியில் கலை, இலக்கியம், மொழிபெயர்ப்பு சார்ந்த உரைகள் இடம்பெறுவதற்கு பாடசாலை அதிபர்களும் பாடசாலை அபிவிருத்திச்சங்கங்களும் ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும். பாடசாலை நூல் நிலையங்களை மாணவர்கள் முறையாக பயன்படுத்துகிறார்களா...? என்பதையும் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனித்தல்வேண்டும்.
அத்துடன் அதிபர்கள், ஆசிரியர்களும் மாணவர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும். " என்று எனது தங்கையிடம் ஒரு சொற்பொழிவு ஆற்றினேன்.
" முதலில் இந்த அதிபர்கள், ஆசிரியர்களுக்கு வாசிப்பு பயிற்சியை வழங்குங்கள்." என்று ஒரு வார்த்தையில் தங்கை எனது சொற்பொழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
மடுளுகிரியே விஜேரத்ன தமது வாகனத்தில் நீர்கொழும்புக்கு வந்து சேர்ந்தார். அவரை அதிபர், ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியபோது அவர்கள் ஆச்சரியத்தால் புருவம் உயர்த்திப்பார்த்தனர்.
விஜேரத்னவின் அட்சர சுத்தமான தமிழ் உச்சரிப்பைக்கேட்டு வியந்தனர். அவர் தமது கலாநிதிப்பட்டத்திற்காக ஆறுமுகநாவலரையே  ஆய்வுசெய்தார் என்பதையும், சுவாமி விபுலானந்த அடிகள் பற்றி சிங்களத்தில் நூல் எழுதியிருக்கிறார் என்பதையும் அறிந்தவுடன் அவர்களின் வியப்பு பன்மடங்காகியது.
கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபரின் தலைமையில் மடுளுகிரியே விஜேரத்தினவின் உரை நிகழ்ந்தது. அவரைப்பற்றிய சிறிய அறிமுகத்தை நான் நிகழ்த்தினேன்.

" நண்பர் முருகபூபதிக்கு இன்று மதியம் விருந்து கொடுப்பதற்குத்தான் உங்கள் ஊருக்கு வந்தேன். ஆனால், அவர் எனக்கு உங்கள் மத்தியில் வித்தியாசமான ஒரு விருந்து தந்துவிட்டார் " எனத் தமிழில்  தொடங்கி,  தமது உரையை ஆரம்பித்தார். மாணவர்கள் பரவசத்துடன் அவரது உரையை செவிமடுத்தனர். அவ்வப்போது அவர் நாட்டார் பாடல்களையும் பாடினார். ஒரே சமயத்தில் சிங்களப்பாடல்களுக்கு தமிழ் அர்த்தம் தரக்கூடிய வரிகளையும் அத்துடன் தமிழ்ப்பாடல்களுக்கு சிங்கள அர்த்தம் தரக்கூடிய வரிகளையும் இராகத்துடன் பாடி அசத்தினார்.
மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதுவரையில் தாம் சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் இலக்கியப்படைப்புகளின் பட்டியலையும் குறிப்பிட்டார்.
அதில் ஒன்றுதான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன் எழுதிய நீண்ட பயணம் நாவல்.  உயர்வகுப்புகளுக்கு பாட நூலாகவும் இந்த நாவல்  தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தகவலை ஒரு மாணவர் குறிப்பிட்டார்.
 தமிழில்  தீவிரமான ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணத்தை மாணவர்கள்  கேட்டபோது, அதற்கான விளக்கத்தையும் விஜேரத்ன வழங்கினார்.
வவுனியாவின் எல்லைப்புறக்கிராமமான மடுக்கந்தையிலிருந்து, அதிகாலையே துயில் எழுந்து,  மற்றும் ஒரு கிராமத்தில் வசித்த தமிழ்ப்பண்டிதரான கந்தையா என்ற பாடசாலை ஆசிரியரிடம் சென்று தமிழ்படித்த கதையை அவர் நனவிடை தோய்தலாகச்சொன்னார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு - விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு  நாம் வெளியிட்ட நெய்தல் தொகுப்பு நூலை அதிபர்,  விஜேரத்னவுக்கு வழங்கினார். விஜேரத்ன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், பாடகர், கலைஞர். இவ்வாறு பன்முக ஆற்றல்மிக்கவர். தமிழில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருப்பவர். நாடக நடிகர்.
இம்முறை வந்துள்ள  பயணத்தில் சிங்கள எழுத்தாளர்களை சந்திக்கவிரும்புவதாக விஜேரத்னவிடம் சொன்னேன். மே மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் இலங்கை வானொலியும் கொடகே நிறுவனமும் இணைந்து நடத்தும் விழாவில் தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட விருப்பதாகவும், அந்த  நிகழ்ச்சி  ஜனாதிபதி தலைமையில் நடக்கவிருப்பதாகவும் தமிழ் எழுத்தாளர்கள் 'ஞானம்' ஆசிரியர் தி. ஞானசேகரன், சரோஜினிதேவி அருணாசலம், அல். அசூமத்  ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கப்படவிருப்பதாகவும், விழா இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் உள்ளக அரங்கில் நடக்கும் எனவும் தெரிவித்த விஜேரத்ன, அதற்கான அழைப்பினை அனுப்புவதற்கு எனது அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கம் தேவை என்றார்.

இந்த நிபந்தனை  ஜனாதிபதியின்  பாதுகாப்பின் நிமித்தம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.
குறிப்பிட்ட விருது வழங்கும் விழாவுக்கு நண்பர்கள் ஞானசேகரனும் மேமன் கவியும் அழைத்திருந்தனர். அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி சொல்லியிருந்தனர்.

ஆயினும்,  திட்டமிட்டவாறு அந்த விழா அன்றைய தினம் நடக்கவில்லை. தென்னிலங்கையிலும் மலையகத்தில் சில பகுதிகளிலும் வெள்ள அநர்த்தமும் மண்சரிவுகளும் ஏற்பட்டு மக்கள் பலர் பலியானதையடுத்து  அந்த நிகழ்ச்சி வேறு ஒரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும் நான் இலங்கையிலிருந்து புறப்படும்வரையில் அந்த விழா நடைபெறவில்லை.
விஜேரத்ன, ராஜகிரிய என்னும் இடத்தில் எனது நீண்ட கால சிங்கள  நண்பரான பிரபல  எழுத்தாளர் திரு. குணசேன விதான அவர்களின் குருளுபொத்த என்ற பதிப்பகத்தின் அலுவலகத்தில் சிங்கள எழுத்தாளர்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்துவிட்டு அழைத்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தோழர் குணசேனவிதானவை அன்று சந்தித்தேன். முன்னர்,  இலங்கையிலிருந்த காலத்தில்  அவரை கொழும்பு பொரளை கொட்டா வீதியில் அமைந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அடிக்கடி சந்தித்திருக்கின்றேன். மக்கள் எழுத்தாளர் முன்னணி என்ற அமைப்பின் தலைவராக விளங்கியவர்.
இவரது பாலம என்ற சிறுகதையை தோழர் சிவா சுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்தார். மல்லிகையில் வெளியானது. அதே கதையை ஆங்கில மூலம் படித்திருக்கும் ஜெயகாந்தனும் தமிழில் மொழிபெயர்த்து என்.ஸி.பி. எச். வெளியீடாக வந்த கல்பனா இதழில் பதிவுசெய்துள்ளார். ஜெயகாந்தன் மறைந்த தகவல் தெரிந்திருந்த குணசேனவிதான அவர்களுக்கு சிவா சுப்பிரமணியமும் மறைந்துவிட்டார் என்ற தகவல் தெரியாது.
தொடர்பாடல் அருகிவிடுவதனால் பல தகவல்கள் உரிய நேரத்தில் உரிய இடங்களை வந்தடைவதில்லை  என்று எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்திய காலத்தில் எமக்கு பக்கபலமாக நின்றவர் குணசேனவிதான.

எமது நீர்கொழும்பூரில் நாம் ஒழுங்குசெய்திருந்த தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசாரக்கூட்டத்திற்கு இவரும் பேராசிரியர் கைலாசபதியும் வருகை தந்து உரையாற்றியிருக்கிறார்கள்.
கைலாசபதி உரையாற்றிக்கொண்டிருக்கும்பொழுது அந்த மண்டபத்தின் கூரையை ஒரு அரைப்பாதி செங்கல் பதம் பார்த்தது.
அந்தச்சம்பவத்தை பல வருடங்கள் கடந்த பின்னர் நினைவுபடுத்தி சிரித்தார் குணசேன விதான. உடனே எனக்கும் அந்தச்சம்பவம் நினைவுக்கு வந்தது. கைலாசபதி பற்றிய எனது கட்டுரை  ஒன்றில் அதுபற்றி சொல்லியிருக்கின்றேன்.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் அந்தக்கூட்டத்தை நடத்துவதற்கு எனக்கு அனுமதியளித்த மன்றத்தின் ஆட்சிக்குழுவினர் சிலர், என்னால்தான் மண்டபத்தின் கூரை சேதமடைந்ததாக குறைப்பட்டனர். நானே மறுநாள் கூரைமீது ஏறி  அங்கு சிக்கியிருந்த அந்த அரைப்பாதி செங்கல்லை  அகற்றிவிட்டு, புதிய ஓடு பொருத்திக்கொடுக்க நேர்ந்தது. 
( எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணமும் கம்பியூட்டரும் மாத்திரம் தெரிந்தால் போதாது. கூரை ஓடும் மாற்றத்தெரிந்திருக்கவேண்டும் அல்லவா...?)
அந்தக்கல்லை எறிந்தவர் ஒரு தீவிர தமிழ்க்கொழுந்து என்பது பின்னர்தான் தெரியவந்தது. அவர் காசி ஆனந்தனுக்கு எங்கள் ஊரில் மற்றும் சில தமிழ்க்கொழுந்துகள் வரவேற்பு அளித்தவேளையில் தனது கையைக்  கீறி  உணர்ச்சிக்கவிஞருக்கு  இரத்தத்திலகம் வைத்தது.
  குணசேனவிதான குறிப்பிட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டம் பற்றி நினைவுபடுத்தியதும் கடந்த காலத்தை நோக்கி எனது நினைவுகள் பறந்தன.
தமிழ்க்கொழுந்தால் கல்லெறியப்பட்ட  அந்தக்  கூட்டம் முடிந்து,  சில நாட்களின் பின்னர் யாழ். பல்கலைக்கழக வளாகம் அமைந்தது. அதன் முதல் தலைவராக கைலாசபதி நியமனமானார்.
தமிழ்க்கொழுந்துகளின் உணர்ச்சிக்கு என்றுமே குறைவில்லை என்பதற்கு வடக்கில்  அண்மையில் ஒரு முதலமைச்சருக்காக நடந்த ஆர்ப்பாட்டப்பேரணியும்  கடையடைப்பு ஹர்த்தாலும் தொடர்ச்சியான உதாரணங்கள்.
இந்தப்பின்னணிகள் ஒரு புறமிருக்கட்டும். அன்றைய சந்திப்பில் சிங்கள எழுத்தாளர்கள், கமால் பெரேரா, மடுளுகிரியே விஜேரத்ன, தெனகம ஶ்ரீவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பரஸ்பரம் எமது நூல்களை பரிமாரிக்கொண்டோம். நான் அன்று சந்தித்த நான்கு சிங்கள எழுத்தாளர்களும் தமிழ் அபிமானிகள். பல தமிழ் படைப்புகளையும் எழுத்தாளர்களையும் சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
தெனகம ஶ்ரீவர்தன, பல வருடங்களுக்கு முன்னரே எனது மனப்புண்கள் என்ற சிறுகதையை சிங்களத்தில் மொழிபெயர்த்து சிலுமின பத்திரிகையில் வெளியிட்டவர்.
கமல்பெரேராவும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை சிங்கள இதழ்களில் எழுதிவருபவர். கடந்த ஜூன் 4 ஆம் திகதி  ஞாயிறன்று வெளியான சிலுமின பத்திரிகையின் இலக்கியப்பகுதியில்  (சத்மண்டல)  லண்டனில் வதியும் நூலகர் என். செல்வராஜா பற்றிய விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்.
தெனகம ஶ்ரீவர்த்தன என்னை நேர்கண்டு எழுதவிரும்புவதாகச்சொன்னதுடன் சில கேள்விகளையும் தொடுத்தார். அதில் நல்லிணக்கம் குறித்த கேள்வியொன்றுக்கு எனது பதில் இவ்வாறு அமைந்திருந்தது.
" இலங்கையில் ஐம்பெரும் சக்திகள் இருக்கின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள். இவர்கள் அனைவரும்  இனமத மொழி அரசியல் பேதங்களைத்துறந்து தேசத்தின் நலனை முன்னிட்டும் இனங்களின் உரிமை, மற்றும் பாதுகாப்பை முன்னிட்டும் ஒன்றிணையவேண்டும். "
( பயணங்கள் தொடரும்)

No comments: