உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ள வடகொரியா..!
ஜெயலலிதா, சசிகலாவின் சொத்துக்கள் தமிழக அரசால் பறிமுதல்
ஆப்கானிஸ்தானில் பாரிய குண்டுவெடிப்பு 50 இற்கும் மேற்பட்டோர் பலியென அச்சம்..!
மலேசிய விமானத்தைக் கடத்த முயற்சி; கைதானவர் இலங்கையர்?!
அவுஸ்திரேலியாவுடன் மலபார் போர் ஒத்திகை : மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா
உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ள வடகொரியா..!
29/05/2017 ஐக்கியநாடுகள் சபை மற்றும் உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி, வடகொரியா மீண்டும் ஜப்பான் கடலில் ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளது.
மேலும் குறித்த ஏவுகணை பரிசோதனையானது, ஜப்பான் மற்றும் கொரிய கடல் பகுதிக்கு இடையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த ஏவுகணை பரிசோதனையை வடகொரிய ஜனாதிபதி கிங் ஜோங் உன் பார்வையிட்டதாக தென் கொரிய மற்றும் ஜப்பானிய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
வடகொரியாவின் குறித்த ஏவுகணையானது, சுமார் 450 கிலோமீற்றர்கள் வரை சென்று, இலக்கை தாக்கக்கூடிய வல்லமை உடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, குறித்த ஏவுகணை பரிசோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உலக நாடுகளின் கண்டனத்தை மீறி, தமது நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் வடகொரியாவின் செயற்பாடுகளுக்கு முடிவை ஏற்படுத்துவதற்கு, தாம் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மூன் ஜெ-இன், தான் தகுந்த சமயம் பார்த்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இருநாட்டு அச்சுறுத்தல்களுக்கு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதற்காக செயற்படுவதற்கு தான் ஆர்வமாகவுள்ளதாக அறிவித்திருந்த சில நாட்களிலேயே, வடகொரியாவின் குறித்த ஏவுகணை பரிசோதனையானது பதற்ற நிலையை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஜி 7 நாடுகளின் மாநாட்டில் வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை பரிசோதனைகளுக்கு எதிரான கண்டா அறிக்கையொன்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு முடிவை ஏற்படுத்துவதற்கு எத்தனித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
30/05/2017 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.
இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரது 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன. மொத்தமாக 128 சொத்துக்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பினும், அவற்றுள் 68 சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்படவுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் சிலவற்றைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் தமிழக அரசுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
31/05/2017 சற்று நேரத்திற்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.
குறித்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ள பகுதியிலேயே, அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதுவர்களின் குடியிருப்புகள் காணப்பட்டுள்ளன.
மேலும் அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் கார் குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இருப்பினும் குறித்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை, அதோடு உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோர் பற்றிய உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் இடுப்பற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மலேசிய விமானத்தைக் கடத்த முயற்சி; கைதானவர் இலங்கையர்?!
01/06/2017 மெல்போர்னில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பறந்துகொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.
எம்.எச்.128 என்ற பயணிகள் விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி இரவு 11.11 மணிக்கு மெல்போனில் இருந்து புறப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, பயணியொருவர் விமானியின் அறைக்குள் புக முற்பட்டார். சக பயணியொருவர் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது, தன்னிடம் ஒரு குண்டு இருப்பதாகவும் அதை வெடிக்கச் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
அதேவேளை, மேலும் சில பயணிகளும் சிப்பந்திகளும் அவரை மடக்கிப் பிடித்துக் கட்டிவைத்தனர்.
இது குறித்து விமானச் சிப்பந்திகள் விமானிக்குத் தகவல் தரவே, அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானத்தை மெல்போனுக்குத் திருப்பினார்.
குறித்த நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா வந்தவர் என்றும் கூறிய விமான நிலைய அதிகாரிகள், மேலதிக தகவல்கள் முழு விசாரணையின் பின் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலியாவுடன் மலபார் போர் ஒத்திகை : மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா
01/06/2017 மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு விருப்பம் தெரிவித்திருந்த அவுஸ்திரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டிருந்தது.
குறித்த கூட்டு கடற்படை பயிற்சியானது இந்துசமுத்திற கடல் எல்லையிலிருந்து கிழக்கே பசுபிக் கடல் எல்லை வரை நீடித்திருந்தமையால், கடற்படை பயிற்சியானது சீனாவை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவும், ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆதிக்கத்தை மீள் பிரவேசிக்க செய்யும் செயற்பாடாகவுள்ளதாக சீனா குற்றம் சுமத்திவந்தது.
இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் இடம்பெறவுள்ள மலபார் பயிற்சியில் பங்குபற்றுவதற்கு ஆஸ்திரேலியா கடற்படை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அனால் அவுஸ்திரேலியாவின் இணைவு அயல் நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனக்கூறி இந்தியா அவுஸ்திரேலியாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இந்தியாவின் குறித்த நிராகரிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீனா, பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்திய உணர்ந்துள்ளதாகவும், அதற்கு நன்றி என தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment