.
2014 ஆண்டு மே மாதத்தில் தற்போதைய இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, கடந்த இரண்டு வருடகாலத்தில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவரது இந்த இரண்டு விஜயங்களுமே 2015 ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரே நிகழ்ந்துள்ளன. 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் நரேந்திர மோடியின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ அரச விஜயம், 28 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் (1987 ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்) மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அப்போது அந்த விஜயம், இந்திய அரசின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த விஜயமாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் 11ந் திகதி சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி இலங்கைக்கு மீண்டும் வருகைதந்தது பற்றிக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினை வடக்குக் கிழக்கில் அமுல்படுத்துவதில் தோல்வியைத்தழுவிய இந்திய அரசாங்கம், ராஜீவ்காந்தி புலிகளால் 1991 ஆண்டில் கொல்லப்பட்ட பின்னர், நீண்ட காலமாக இலங்கையின் இனப்பிரச்சனையில் அரசியல் ரீதியாக பகிரங்கமாகத் தலையிடுவதில்லை என்ற மௌன நிலைப்பாட்டினையே கடைப்பிடித்து வந்தது. ஆனால் 2009 ஆண்டில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வினை வலியுறுத்துவதிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்வதிலும், போர்க்குற்ற விசாரணையிலும் இந்தியா அக்கறைகாட்டத் தொடங்கியது.
அத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடிப்பதும், அவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும் கைதுசெய்வதும் என்றொரு பிரச்சனையும் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் நீண்டகாலமாகவே இருந்து வந்தது. அதுவும் பூதாகரமான ஒரு பிரச்சனையாக உருவெடுக்கத் தொடங்கியது. இந்தப் பிரச்சனை அனைத்து இந்தியக்குடிமக்களை நேரடியாகப் பாதிக்காவிடினும், இந்தியாவின் மிகமுக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டு மீனவரது பிரச்சனை. இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதானது இலங்கை அரசு என்பதே ஒட்டுமொத்த தமிழ் விரோத அரசாக சித்தரிக்கப்பட்டதனால், இந்தியா தமிழர் தரப்பில் ஆஜராக வேண்டிய பாரம்பரிய நிலைப்பாட்டிற்குத் தள்ளப்படுவதாக மீண்டும் தன்னை உருவகப்படுத்தியது. இதனால் மோடியின் இலங்கைக்கான முதலாவது விஜயம் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்தது.
இதைவிட, மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு போர் முடிவுற்ற பின்னர், சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு இலங்கையில் தரித்துச்செல்ல அனுமதி வழங்கியதால், இலங்கை அரசினை சீனசார்பு அரசெனக் கருதிய இந்திய அரசு, 2015 ஆண்டில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதில் பின்னின்று செயற்பட்டு, வெற்றியும் கண்டது. இதனால் இந்திய சார்பு இலங்கை அரசினை வைத்து சகலதையும் செய்யலாம் (இனப்பிரச்சனை மற்றும் மீனவர் பிரச்சனைக்களுக்குத் தீர்வுகள், சீன ஆதிக்கத்தினைக் குறைத்தல்) எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சீன ஆதிக்கத்தினை பொருளாதார உதவியுடன் மட்டுப்படுத்தல் (இம்மாதம் சீன நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றுக்கு இலங்கையில் எரிபொருள் நிரப்பவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது) என்பதைத்தவிர, வேறொன்றும் இதுவரையில் நடக்கவில்லை. அத்துடன் இந்தியா, இலங்கையுடன் பொருளாதார ஒப்பந்தம் (Economic and Technology Co-operation Agreement - ETCA) ஒன்றினைச் செய்வதிலும் தீவிரமாக முனைப்புக்காட்டியும் வருகின்றது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு தென்னிலங்கை அரசியலில் பாரிய எதிர்ப்புள்ளது.
இந்த நிலையில், முதலில் வடக்கிற்கு விஜயம் செய்த மோடி, இம்முறை தெற்கில் வெசாக் தினக்கொண்டாட்டத்துடனும் மலையகத்தில் வைத்தியசாலைத் திறப்புவிழாவுடனும் நிறுத்திக் கொண்டது பல வினாக்களையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடனான மோடியின் சந்திப்பு இந்தியாவிற்கு திரும்புகையிலேயே விமான நிலையத்தில் வைத்தே நிகழ்ந்துள்ளது. ஆனால் இலங்கை பெருமபான்மையின மக்களால் இன்னமும் நேசிக்கப்படும், அதேவேளை இந்தியாவால் விரும்பப்படாதவராய்க் கருதப்படும் மகிந்த ராஜபக்சவை மோடி இரண்டாவது முறையாகச் சந்தித்தும் இருக்கிறார். இந்தச் சந்திப்பும் வெசாக் வழிபாடும் இலங்கையில் மீண்டும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் எதிர்கால அரசினையும் கைக்குள் வைத்துக் கொள்ளும் இந்தியாவின் தந்திரோபாயமாகவும், சிங்கள, பௌத்தர்களின் நம்பிக்கையைப் பெறும் புதிய தோற்றமாகவும் இருக்கலாம். ஆனால் மோடி அரசின் இந்தப் ‘புதிய பருப்பு’ இலங்கையில் வேகுமா?
சிவசண்முகமூர்த்தி
No comments:
Post a Comment