அவுஸ்திரேலியா- இலங்கை மாணவர் கல்வி நிதியம்:

.
முல்லைத்தீவு - வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடலும்  நிதிக்கொடுப்பனவும்


அவுஸ்திரேலியாவிலிருந்து  இயங்கும்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும்  முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்றுகூடலும் அண்மையில் நடைபெற்றது.
இலங்கையில் நீடித்த போரில் தந்தையை அல்லது தாயை (குடும்பத்தின் மூல உழைப்பாளியை) இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் இந்த ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்குரிய நிதிக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்ச்சிகள்  அண்மையில் முல்லைத்தீவு விசுவமடுவிலும் வவுனியா வேப்பங்குளத்திலும் நடைபெற்றன.
வன்னியில் 2009 இல் நடந்த இறுதிக்கட்டப்போரில் தந்தையை இழந்த பல மாணவர்களுக்கு இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி வருகின்றது. அத்துடன் ஏற்கனவே கடந்த பலவருடங்களாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்  மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும்  பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு இந்நிதியம் உதவிவருகிறது.

நிதியம் ஆரம்பிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதவிபெற்ற  வவுனியா மாவட்ட  மாணவி செல்வி கிருஷ்ணவேணி சுப்பையா தற்பொழுது தமது கல்வியை நிறைவுசெய்து பட்டதாரியாகி,  வவுனியா மாவட்ட பாடசாலையில் அதிபராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவரும் அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடுவில் இயங்கும் கணினி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலில் இம்மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் உதவிபெறும்  மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் சுயஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் தாய்மாரின் கருத்துரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் வவுனியா , யாழ். மாவட்ட மாணவர் கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர். யாழ். மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்களும் வவுனியா மாவட்டத்தின் சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சிகளுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த நிதியத்தின் ஸ்தாபகரும் பரிபாலன சபை உறுப்பினருமான திரு. லெ. முருகபூபதி, க.பொ.த. சாதரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பரீட்சைகள் நிறைவடைந்ததும் தொடரவேண்டிய பயிற்சி நெறிகள் குறித்து உரையாற்றினார்.
கிழக்கு மாகாணத்தில்
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாணவர் ஒன்றுகூடல் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை திருக்கோணமலையில் முற்பகலிலும் சம்பூரில் அன்றைய தினம் மாலையிலும் நடைபெறும். அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட் கிழமை முற்பகல் கல்முனை பெரியநீலாவணையிலும் நடைபெறும்.


இந்நிகழ்ச்சிகளில் நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர் திரு. இராஜரட்ணம் சிவநாதன் கலந்துகொள்வார்.
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் மின்னஞ்சல்:
kalvi.nithiyam@gmail.com
இணையத்தளம் : www.csefund.org

No comments: