.
தமிழ் இலக்கியங்கள் பசியைப் பற்றி நிறையவே பேசி இருக்கிறது. இசையையும் நடனத்தையும் வாழ்க்கை முறையாக வைத்திருந்த பாணர்கள் என்கிற கலைஞர்களை எப்போதும் பசியோடிருக்கும் படியாகப் பார்த்துக்கொண்டது சங்ககாலச் சமுதாயம்.
பசியைப் பற்றி அதிகமாகப் பாடிய மனுஷி, ஒளவை. தமிழில் நாலு அல்லது ஆறு பேர் ஒளவை என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள். நாம் பேசப் போவது 'வாக்குண்டாம்,’ 'நல்வழி’ எழுதிய ஒளவை பற்றி. பசி வயிற்றோடு அவள் ஒரு சம்பாஷணை நடத்துகிறாள்.
'வயிறே... சும்மா ஒரு வேளைக்கு சோறு கிடைக்காமல் போனால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறாய். சரி, நிறையக் கிடைக்கும்போது இரண்டு மூன்று வேளைக்கும் சேர்த்து எடுத்துக்கொள் என்றாலும் மாட்டேன் என்கிறாய். நான்படும் அவஸ்தை உனக்குப் புரியாது. எப்போதும் எனக்குத் துன்பத்தையே தரும் வயிறே. உன்னோடு வாழ்தல் அரிது!’ என்கிறாள்.
பசியே, மனித குலத்தைத் துரத்தும் ஆதிப் பகை. மனித ஆத்மாவைக் கொல்கிற அழிக்க முடியாத கிருமி அது. இன்னொரு மனிதனுக்கு முன்னால் மனிதனை மண்டியிட வைக்கிற பெரும் பாவி அது. காதல்கூட பசித்தவனைப் பகிஷ்கரிக்கிறது. முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது. பசித்த வயிறு காதலின் ஈரத்தை வளரச் செய்கிறது.
சோபி, ஓர் இளைஞன். அவனுக்கு ஓர் ஆசை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அவன் சிறைக்குப் போக வேண்டும். அதுவும் தீவுச் சிறைக்கு. இரண்டு காரணங்கள். சிறையில் உயிர்வாழ சோறு கிடைக்கும். உயிர் போகாமல் இருக்க, குளிர் இல்லாத பாதுகாப்பான இடம் கிடைக்கும். அமெரிக்க, ஐரோப்பிய வாழ்க்கையின் மிக முக்கியத் தேவை, குளிர் தாக்கிக் கொல்லாத வாழிடம். இந்தியாவைப் போல சட்டையே அணியாமல் தெரு ஓரத்திலேயே வாழ்க்கை முழுதும் வாழ்ந்திட முடியாது ஐரோப்பிய குளிரில். குளிர்காலம் என்பது பசியின் காலமும் கூட. எப்போதும் வயிறு தன்னை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
சோபி, அவனுக்கு முன், மரங்கள் இலைகளை உதிர்த்து ஒரு கடுமையான குளிர்காலம் வரப் போவதை அறிவிக்கின்றன. பறவைகள், திக்குகள் அறியாது பறந்தன. பனிக் காலத்தை எப்படி எங்குக் கடத்துவது என்று சிந்திக்கத் தொடங்கினான். அவன் ஆசைகள் பேராசைகள் அல்ல. கப்பல் பிரயாணம் செய்வது, வேறு ஊருக்குச் சென்று ஆனந்தமாகப் பொழுதைப் போக்குவது என்பதெல்லாம் அவனது சக்திக்கு அப்பாற்பட்டது. அவன் விருப்பம், மூன்று மாதக்குளிர்காலத்துக்குப் பசிக்கு உணவு, படுக்க இடம், உடுத்த உடை இந்த மூன்றும்தான். அவை கிடைக்கும் இடம் தீவுச் சிறைதான்.
உதவும் முகங்களை அவன் அறிவான். காசுகள், அவன் பசியைக் கால்வாசி குறைத்தது. உதவுபவர்கள் கம்பளிச் சட்டைக்கும் நல்ல அறைக்கும் தேவையான அளவு கொடுப்பது சாத்தியம் அல்லவே. உதவுபவர்களின் வாழ்க்கையில் கை ஏந்துவதன் மூலம் குறுக்கிட அவன் விரும்பவில்லை. அதோடு அவன் கைகளில் வந்து விழும் காசுகள் அவனை அவமானப்படுத்தின. சட்டமே அவனைக் காப்பாற்றும். சட்டத்தை எப்படிக் கைதட்டிக் கூப்பிடுவது? அவனுக்குச் சில வழிகள் தெரியும். ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்து, ஒரு வாத்து ரோஸ்ட், ஒரு புட்டி மது, ஒரு விலையுயர்ந்த சுருட்டு ஆகியவற்றை எடுப்பது. பிடிபட்டதும், போலீஸ் அழைக்கப்படும். அவனுக்குத் தீவுச் சிறை திறக்கும். ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தான். உட்காரப் போகிறான். ஹோட்டல் மேனேஜர் கண்ணில் அவனது அழுக்குக் கோட்டும் பழுதடைந்த ஷூக்களும் தென்படுகின்றன. அடுத்த கணம் அவன் வீதியின்நடுவில் வந்து விழுகிறான்.
கொஞ்சதூரம் நடந்தான். ஒரு கடை வாயிலில் அலங்காரத்துடன் விலை உயர்ந்த பொருட்கள் மக்கள் பார்வைக்கு கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருப்பதை அவன் கண்டான். உடனே அந்த எண்ணம் தோன்றியது. வீதியில் கிடந்த ஒரு கல்லை எடுத்து கண்ணாடி மேல் எறிந்தான். கண்ணாடி சுக்கலானது. போலீஸ்காரன் ஒருவனும் வந்து சேர்ந்தான்.
'கண்ணாடியை உடைத்தவன் எவன்’ என்றான் போலீஸ்காரன்.
'என்னைப் பார்த்தால் கண்ணாடி உடைக்கிறவன்போல் தோன்றவில்லையா?’
போலீஸ்காரன், சோபியின் சொற்களை நண்பனுடைய கிண்டல் போல் எடுத்துக்கொண்டான். சோபி சந்தேகிக்கப்படுபவன் தோற்றம் கொண்டிருக்கவில்லை. குற்றம் செய்தவன் செய்த இடத்திலேயே நிற்பானா என்ன? உலகம் முழுவதுமே போலீஸ்காரர்கள், குரூரம் மற்றும் அபத்தம் ஆகிய இரண்டு வேதிப் பொருள்களால் ஆனவர்களாகவே இருக்கிறார்கள். இந்த போலீஸ்காரன், சோபியைத் தவிர மற்றவர்களைச் சந்தேகிக்கிறான். அப்போது எவனோ ஒருவன் எதற்காகவோ ஓட, அவனைத் துரத்திக்கொண்டு ஓடினான் போலீஸ்காரன். சோபியை கடவுள் கைவிட்டுவிட்டாரே!
இன்னொரு ஹோட்டலுக்குச் சென்றான். அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருந்தது. நிறையச் சாப்பிட்டான். புகைத்தான். ஸ்டைலாக 'என்னிடம் செப்புக் காசும் இல்லையே’ என்றான். 'போலீஸை கூப்பிடுங்கள்’ என்றான். உனக்குப் போலீஸ் வேறு வேணுமா என்றபடி இரண்டு கிங்கரர்கள் வந்தார்கள். சோபியைத் துவைத்து தரதர என்று இழுத்து வந்து குப்பைத் தொட்டியில் தூக்கிப்போட்டுச் சென்றார்கள்.
சோபி, முயற்சியைக் கைவிடமாட்டான். நடந்தான். ஒரு கடைமுன் ஓர் இளம்பெண் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள். சற்று தூரத்தில் ஒரு போலீஸ்காரனும் நின்றிருந்தான். சோபி அந்தப் பெண்ணிடம் சென்று, கனைத்துக்கொண்டு 'இன்று இரவு என்னுடன் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாட சம்மதமா’ என்று போலீஸ்காரனைப் பார்த்துக்கொண்டே சொன்னான். அவள், கத்திச் சத்தம் போடப் போகிறாள். அவனை போலீஸ் பிடிக்கும். தீவுச்சிறை... பேஷ்.
அந்தப் பெண்ணோ 'வருகிறேன். கொஞ்சம் தள்ளிப் போய்ப் பேசுவோம். போலீஸ் பார்க்கிறான்’ என்றபடி நடந்தாள். கடவுளே. சோபி நடந்தான். குளிருக்கான கம்பளி உடை அணிந்த மக்கள் எதிர்ப்பட்டார்கள். ஒரு கடைக்குமுன் வாடிக்கையாளர்களின் குடைகள் வைக்கப்பட்டிருந்தன. இருப்பதிலேயே விலை உயர்ந்த குடையை எடுத்துக்கொண்டு மெள்ள நடந்தான். குடையாளி பிடிக்கப் போகிறான். தீவுச் சிறைதான். உணவு நிச்சயம். குளிருக்கான உடையும் நிச்சயம்.
ஒரு நபர், அவன் பின்னால் வந்து, அவனை நிறுத்தினார்.
'இது என் குடை’ என்றார்.
'அப்படியா, போலீஸைக் கூப்பிட்டு என்னைப் பிடித்துக் கொடுங்கள்’ என்றான் சோபி. அந்தக் குடையாளி பயந்து போனான்.
'மன்னியுங்கள். இன்று காலையில்தான். வேறு ஒரு கடையில் இதைத் திருடினேன். தாங்கள் பேசுவதைக் கேட்டால், இது உங்கள் குடை என்று தெரிகிறது’ என்று சொல்லிவிட்டு அந்த நபர் மறைந்து போனான். சோபி எரிச்சலுடன் குடையைத் தூக்கி எறிந்தான். ஒரு திருப்பத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சோபி ஒரு குடிகாரன்போல நடிக்கத் தொடங்கினான். சத்தம் போட்டு, தெருவில் போவோரை மறித்து கலாட்டா செய்தான். 'இப்போ போலீஸ் கைதுசெய்யப் போகிறான்.’
ஒரு போலீஸ்காரன், இன்னொருவனிடம் சொன்னான். 'இந்தப் பயல்கள் கலாட்டா பண்ணுவார்கள். போய்விடுவார்கள். ஆபத்தானவர்கள் இல்லை. முக்கியம், எது என்றால் இவர்கள் கைதுசெய்யப்படக் கூடாதவர்கள்.’
தீவுச்சிறை எட்டி எட்டிப் போய்க்கொண்டிருந்தது. குளிர், பசியைக் கிளர்த்தியது. ஆவது ஆகட்டும் என்று, எதிரில் தோன்றிய ஒரு போலீஸ்காரனை வேண்டுமென்றே சென்று மோதினான். அந்தப் போலீஸோ 'மன்னியுங்கள்’ என்றபடி நகர்ந்தான். நடக்கும்போது, ஒரு ஜனநடமாட்டம் இல்லாத ஒரு தெருவை வந்து அடைந்தான். ஒரு பழைய இடிந்த மாதா கோயிலைக் கண்டான். அங்கிருந்து வெளிச்சம் தெருவில் பாய்ந்தது. பியானோவின் இனிய ஓசையும் உடன்பாடிய சிலரின் சங்கீதமும் தெளிவாகக் கேட்டன. மேலே பூரண சந்திரன் ஒளியை வாரி இறைத்தது. இந்த இனிய சங்கீதம் அவனை ஸ்தம்பிக்கச் செய்தது. வெறிச்சோடிய தெரு. பறவைகளின் குரலோசை. அவன் மனம் அசைந்தது. அந்த இரவும், இசையும், ஒளியும் அவனை மாற்றிக் கொண்டிருந்தன. திகைத்துப் போய் நின்றான் அவன். அவன் செய்த தவறுகள், குற்றங்கள், தவறவிட்ட வாய்ப்புகள் துர்குணங்கள் அனைத்தும்அவனுக்குள் தோன்றின.
ஆத்மாவின் பேராறு அவன் கசடுகளை அடித்துச் சென்றது. அவன் புதிய மனிதன் ஆனான். நாளை முதல் அவன் புதிய மனிதன். அவன் ஒரு வேலைக்குச் செல்லப் போகிறான். உழைத்து உண்ணப் போகிறான். மரியாதைக்குரிய பிரஜையாக அவன் வாழ்வான். அந்த எண்ணமே அவனை மகிழ்ச்சியுறச் செய்தது. அவன் பரிசுத்தனாக நின்றான். அவன் தோளில் ஒரு கை வீழ்ந்தது. ஒரு போலீஸ்காரன்.
'இங்கே என்ன செய்கிறாய்?’
'சும்மா.’
'என்னுடன் வா.’
மறுநாள் காலை, மிகப்பெரிய வன்முறைக் குற்றவாளிகள் மத்தியில் அவன் நின்றான். நீதிபதி அவனுக்கு மூன்று மாத தீவுச் சிறைத் தண்டனை கொடுத்தார்.
தமிழர் வாழ்க்கை மரபில் தொடக்கத்தில் பிச்சை இல்லை. பசிக்கிறது என்று சொல்லிக் கையேந்துவது இழிவு என்ற கொள்கை தமிழர்க்கு உண்டு. சமண மதமும், புத்த மதமும் தமிழகத்துக்கு அறிமுகம் ஆன பிறகு, பிச்சை எடுத்தல் புண்ணிய காரியமாயிற்று. துறவிகள், பசிக்கு இல்லறத்தானே பொறுப்பு என்றன அந்த மதங்கள். வள்ளுவர்கூட அறம் சொல்வோர்க்கு உதவுதல் குடும்பத்தில் இருப்பவர் கடமை என்கிறார். பட்டினத்தார் என்கிற பட்டினத்து அடிகள்வித்தியாசமான பிச்சைக்காரர். அவர் பிச்சை எடுப்பவர்தான். ஆனால் எப்படிப்பட்ட பிச்சைக்காரர்? உங்கள் வீட்டுக்கு அவர் வரமாட்டார். அவர் இருக்கும் இடத்துக்கு நீங்கள் சோறுடன் போக வேண்டும். கண்ட சமயம் போகக் கூடாது. அவருக்கு எப்போது பசிக்கிறதோ அப்போது போக வேண்டும். எப்படிப் போக வேண்டும். பிச்சைக்காரர் என்கிற அலட்சியம் ஆகாது. உருக்கத்தோடு போக வேண்டும். அவரே இப்படிப் பாடுகிறார். ''இருக்கும் இடம் தேடி, என் பசிக்கே அன்னம், உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன்!'' பட்டினத்தார் பிச்சைக்காரர்இல்லை. பிச்சை கொடுப்பவர்.
ஒரு தேசத்தின் கலாசாரம், பண்பாடு, சமூக நீதி என்பவை தீர்மானப்படுவது, அந்த தேசத்துப் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துதான். 'எங்கள் இந்தியாவில் ஒரு குழந்தைகூடப் பசியோடு உறங்கப் போவதில்லை’ என்று ஒரு பிரதமர் சொல்ல முடியுமானால், இது தேசம்.
வள்ளுவர் மிகுந்த கோபப்பட்ட இடங்கள் சில உண்டு. 'ஒரு மனிதன், இன்னொரு மனிதனிடம் இரந்து உயிர் வாழ்ந்து தீர வேண்டும் எனில், அந்த இரப்பவனைப் படைத்த கடவுள் கெட்டு ஒழியட்டும்’ என்று சாபம் இடுகிறார். வள்ளுவர் சாபம் நிறைவேறவில்லை.
இலவசங்கள் மூலம் ஒரு சமூகத்தையே பிச்சைக்காரர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள், வள்ளுவர் வழி வந்த தமிழர் தலைவர்கள்.
நன்றி: விகடன்
No comments:
Post a Comment