வெள்ளம் வடிந்தபோதும் நீடிக்கிறது மக்களின் அவலம் : 202 பேர் பலி, 6,22,510 பேர் பாதிப்பு
சீரற்றகாலநிலை ; மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி
அவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன
திருடப்பட்டு வெட்டப்பட்ட 38 மாடுகளும் திருநகர் சுடலையில் புதைப்பு
திருடப்பட்டு வெட்டப்பட்டு இறைச்சியாக யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லபட்ட நிலையில் பிடிக்கப்பட்ட 1800 கிலோவுக்கும் மேற்பட்ட இறைச்சி நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திலிருந்து சங்குபிட்டி பூநகரி மன்னார் ஊடாக புத்தளத்திற்கு கூளர் ரக வாகனத்தில் வெட்டப்பட்ட நிலையில் 38 மாடுகளின் இறைச்சி தலைகளுடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் கிளிநொச்சி முழங்காவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் சோதனையிடப்பட்ட போதே இவை பிடிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்றைய தினம் (சனிக்கிழமை) கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 1800 கிலோவுக்கு மேற்பட்ட இறைச்சி கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைப்பதற்கு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து இன்று கரைச்சி பிரதேச சபையினர் தங்களது கனரக வாகனத்தின் மூலம், பணியாளர்களையும் கொண்டு பாரியளவில் குழியினை தோண்டி புதைத்துள்ளனர்.
மாடுகள் கொள்வனவு செய்தமைக்கோ, இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கோ, அல்லது கொண்டு செல்லப்படுவதற்கோ என எவ்விதமான சட்டரீதியான ஆவணங்களும் இவர்களிடம் காணப்படவில்லை.
இதேவேளை சந்தேக நபர்கள் இவரும் இரண்டு இலட்சம் ரூபா தலா இரண்டு ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் வடிந்தபோதும் நீடிக்கிறது மக்களின் அவலம் : 202 பேர் பலி, 6,22,510 பேர் பாதிப்பு
31/05/2017 நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனுடன் இணைந்ததாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்கள் காரணமாக 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகா மைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களை பாதிக்கும் விதமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 19 ஆயிரத்து 68 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஆயிரத்து 754 பேர் 383 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அந்தந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த அனர்த்தங்கள் காரணமாக 901 வீடுகள் முற்றாகவும் 6064 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலகங்கள் உறுதி செய்துள்ளன.
அதிகமான உயிரிழப்புக்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 28 காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனைவிட களுத்துறை மாவட்டத்தில் 59 மரணங்களும் மாத்தறை மாவட்டத்தில் 27 மரணங்களும் பதிவாகியுள்ளதுடன் அந்த மாவட்டங்களில் முறையே 53,16 பேர் காணாமல் போயுள்ளனர்.
தெற்கின் காலி, மாத்தறை, மேற்கின் களுத்துறை ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ள நீர் பெருமளவு வடிந்தோடி வரும் நிலையில் சில பிரதேசங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியதாக காட்சி அளிக்கின்றன. எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றும் தொடர் மழை பதிவான நிலையில் களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ள நீர் மட்டமும் உயர் வடைந்துள்ளது.
தெற்கில் வெள்ள நீர் வடிந்தோடும் நிலையில் நிவாரணம் மற்றும் தொற்று நோய் தொடர்பில் பெரும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. களுத்துறை காலி, மாத்தறை, மாவட்டங்களில் முப்படையினரும் இணைந்து நிவாரண, மீட்புப் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இரத்தினபுரியின் பல பகுதிகளில் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனைவிட மாத்தறை நில்வளா கங்கையின் நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றது. எனினும் பொது மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்த தமது வீடுகளுக்கு செல்ல தொடர்ந்தும் அச்ச நிலையில் உள்ளனர். குறிப்பாக முதலைகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. நில்வலா கங்கையில் உள்ள முதலைகளே வெள்ள நீரில் இவ்வாறு வீடுகளுக்குள் புகுந்துள்ளமை சுட்டிக்காட்டித்தக்கதாகும்.
மாத்தறை மாவட்டம்
மாத்தறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் 27 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளனர். அம்மாவட்டத்தில் மட்டும் 45502 குடும்பங்களைச் சேர்ந்த 170549 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 3054 குடும்பங்களைச் சேர்ந்த 10791 பேர் 21 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் லெப்டினன் கேர்ணல் சிரிவர்தன தெரிவித்தார். மாத்தறையில் 630 வீடுகள் முற்ராகவும் 3113 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாத்தறையின் கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைவிட முலட்டியான பிரதேச செயலர் பிரிவில் 5 உயிரிழப்புக்களும் பிட்டபத்தர பிரிவில் 3 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
வெலிபிட்டிய, ஹக்மன, அத்துரலிய பிரதேச செயலர் பிரிவில் தலா இரு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் திக்வெல்ல. எனகொட பகுதியில் தல ஔயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
மழை வெள்ளம் வடிந்தோடும் போதும் நேற்று பிற்பகல் வேளையிலும் மாத்தறையின் ஹீன் தொட்ட, துடாவெவ, கனத்த கொட பகுதியில் இரண்டடி முதல் 6 அடி வரை வெள்ள நீர் நிரம்பியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
வெள்ளம் வற்றிய பகுதிகளில் சேறு உள்ளிட்ட கழிவுகளை இராணுவத்தினர் அகற்றி அப்பகுதிகளை வழமை நிலைமைக்கு கொன்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
காலி மாவட்டம்
தொடர்ச்சியாக பெய்த அடை மழைக் காரணமாக காலி மாவட்டத்தின் பல பகுதிகளும் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கிய போதும் நேற்று அம்மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் இருந்து மீண்டிருந்தன. கிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தன் விளைவாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறித்த கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கிய போதும் தற்போது வெள்ளம் வடிந்தோடி வருவதாக காலி மேலதிக மாவட்ட செயலாளர் கமல் ரணசிங்க தெரிவித்தார்.
எனினும் காலியின் பத்தேகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ள நீர் தொடர்ந்தும் காணப்படும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள பல கிராம சேவகர் பிரிவுகளுக்கு நிவாரணங்களை கொன்டு சேர்ப்பதில்ல் தொடர்ந்து சிரமம் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக உடுகம, பத்தேகம, இனிதும பகுதிகளில் இந் நிலைமை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார். அனர்த்தம் காரணமாக காலி மாவட்டத்தில் 26072 குடும்பங்களைச் சேர்ந்த 104144 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளதாகவும் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்கடடினார். பாதிக்கப்பட்டோரில் 634 குடும்பங்களைச் சேர்ந்த 1411 பேர் 13 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட காலி மாவட்டத்தில் மட்டும் 161 வீடுகள் முற்றாகவும் 467 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தொடர்பில் இதுவரை தகவல்கள் பதிவாகியுள்ளன.
காலி மாவட்டத்தின் நெலுவ, உடுகம, வந்துரம்ப, போத்தல, இனிதும ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட 19 பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் வரும் 396 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இக்கிராமங்களில் வசித்த அனைவருக்குமான நிவாரண சேவையினை முப்படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக காலி கிங் கங்கையின் நீர் மட்டம் ஓரளவுக்கு குறைந்துள்ளதால் வெகு விரைவில் அனர்த்த அச்சுறுத்தல் நீங்கும் என அதிகாரிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
களுத்துறை மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் காரணமாக 59 பேர் உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மேலும் 53 பேர் காணாமல் போயுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.டி.சி. ஜயலால் தெரிவித்தார். களு கங்கையின் நீர் மட்டம் ஓரளவு குறைந்துள்ள போதும் தாழ் நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை களுத்துறை மாவட்டத்தில் 36036 குடும்பங்களைச் சேர்ந்த 138320 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளதுடன் அவர்களில் 550 குடும்பங்களைச் சேர்ந்த 2295 பேர் 81 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இஒவர்களுக்கு சொந்தமான 223 வீடுகள் முற்றாகவும் 990 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் உயிரிழப்புக்களில் பெரும்பாலானவை மண் சரிவினாலேயெ ஏற்பட்டுள்ளன. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 26 பாரிய மண் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
களுத்துறை, மதுராவல, தொடன்கொட பிரதேச செயலகப் பிரிவுகளின் கீழ் உள்ள பகுதிகள் பல நேற்றும் அபாய எச்சரிக்கையின் கீழேயே இருந்தன. மேல் மாகாணத்துக்கு தொடர்ந்து மழை பெய்யக் கூடிய அபாயம் காணப்படும் நிலையில் களுத்துறை மாவட்டத்துக்கான எச்சரிக்கை தொடர்கிறது.
குறிப்பாக புளத் சிங்கள உட்பட பல பகுதிகளில் பதிவான மண்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்கின்றன. இந் நிலையில் மீட்புப் பணிகளை இரானுவத்தினர் தொடரும் நிலையில் கடற்படையினரும் விமானப்படையினரும் பாதிக்கப்ப்ட்டோருக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன . அங்கு 79 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனைவிட அந்த மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்கு வெள்ள நீர் தொடர்ந்தும் உயர் வடைந்து வரும் நிலையில் நிவாரணஇ மீட்பு பணிகளை விமானப்படை தலைமையிலான முப்படை வீரர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மண் சரிவுஇ வெள்ளம் காரணமாக இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் நேற்று ஐந்தாவது நாளாகவும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியிருந்தன. இரத்தினபுரியில் நேற்று காலை 8.30 மணிக்கு நிறைவுக்கு வந்த 24 மணி நேரத்தில் 85.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அங்கு பதிவாகியிருந்தது. இந் நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 79 பேர் மண் சரிவு மற்றும் வெள்ளத்துக்கு பலியாகியுள்ளதாகவும் மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபோதகம தெரிவித்தார்.
இந்த எண்னிக்கையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கலவான மற்றும் நிவித்திகல அயகம பகுதிகளில் இருந்து தற் சமயமே தகவல்கள் கிடைக்கப் பெற்று வரும் நிலையில் இத்தகைய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரத்தினபுரி யின் 325 கிராம சேவகர் பிரிவுகள் நீரில் மூழ்கியுள்ளன. இரத்தினபுரியின் எலபத்த, பெல்மதுளை, குருவிட்ட, எஹலியகொட, கிரியெல்ல, இம்புளுவ, அயகம, காவத்தை, கலவான ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து தாழ் நிலப் பகுதிகளும் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காட்சியளிக்கின்றன. இந் நிலையில் இந்த பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் முற்று முழுதாக விமானப்படையினரின் கட்டுப்படடில் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக கலவானை வைத்தியசாலை பகுதியும் அதனை அண்மித்த கிராமங்களும் அயகம பகுதியையும் கடற்படையினர் படகுகள் ஊடாக நெருங்குவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் விமானப்படையினர் இப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக விமானப்படையின் எம்.ஐ. 17 ஹெலிகப்டர்கள் 4, பெல் 212 ஹெலிகப்டர் ஒன்று, பெல் 412 ஹெலிகப்டர் ஒன்று ஆகியன இப்பகுதியில் அனர்த்த மீபு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந் நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மட்டும் இந்த இயற்கையின் சீற்றத்தால் 31921 குடும்பங்களைச் சேர்ந்த 121803 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனீ அவர்களில் 10623 குடும்பங்களைச் சேர்ந்த 42975 பேர் 181 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைவிட இரத்தின புரி மாவட்டத்தில் வெள்ளம் மண் சரிவு காரணமாக 163 வீடுகள் முற்றாகவும் 1658வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளமை தொடர்பில் தற்போதைக்கு தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளம் தொடரும் நிலையில் அந்த எண்னிக்கையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் பாதிக்கப்ப்ட்டிருக்கு தேவையான உதவிகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏனைய மாவட்ட விபரங்கள்
இதனிடையே பெரிதும் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு மேலதிகமாக மேலும் 11 மாவட்டங்களில் அடை மழை மற்றும் மண் சரிவு காரணமாக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் குறிப்பாக அம்பாந்தோட்டை கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் உயிர் சேதங்களும் பதிவாகியுள்ளன. அம்பாந்த்கோட்டையில் 2188 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 5 பெர் உயிரிழந்துள்ளனர். கேகாலையில் 1537 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்கள் நான்கும் பதிவாகியுள்ளன. இதனைவிட கம்பஹா மாவட்டத்தில் 3756 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இவற்றைத் தவிர கொழும்பில் 4439 குடும்பங்களும், மாத்தளையில் 14 குடும்பங்களும், கண்டியில் 27 குடும்பங்களும், வவுனியாவில் 31 குடும்பங்களும், முல்லைத்தீவில் 27 குடும்பங்களும் திருமலையில் 206 குடும்பங்களும் மட்டக்களப்பில் நான்கு குடும்பங்களும் நுவரெலியாவில் 87 குடும்பங்களும் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் காணாமல் போனோரைத் தேடி தேடுதல் நடவடிக்கைகள் முப்படையினரால் மும்முரமாக முன்னெடுக்கப்ப்ட்டு வருகின்றன. நன்றி வீரகேசரி
சீரற்றகாலநிலை ; மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி
30/05/2017 சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணங்களை பெற்று தருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு, 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு, அவுஸ்திரேலியா உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு மொத்தமாக 15 மாவட்டங்களில் 149 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 885 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் நிவாரண பணிகளுக்காக, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினுடாக 5 இலட்சம் டொலர்களை கொடுப்பதாகவும், மேலும் இலங்கையின் அனர்த்த செயற்பாடுகள் குறித்து அந்நாட்டு தொடர் அவதானத்துடன் இருப்பதோடு, எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டு இலங்கைக்கான உதவிகளை மேற்கொள்ளுவதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் 3 நிவாரண கப்பல்கள் இலங்கை வந்துள்ள நிலையில், இன்று மலை பாகிஸ்தானின் நிவாரண கப்பல் ஒன்றும், எதிர்வரும் வியாழக்கிழமை 3 சீனக்கப்பல்களும் நிவாரண பணிகளுக்காக இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன
01/06/2017 அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் அடங்கிய விமானமொன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதி அனர்த்த நிவாரணப்பொருட்களே வந்தடைந்துள்ளதாகவும் குறித்த நிவாரணப்பொதியில் மீட்புப் பணிக்கு பயன்படுத்தக்கூடிய படகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment