இலங்கையில் பாரதி - அங்கம் 21 - முருகபூபதி

.
                                        
“இலக்கியம் மக்களிலிருந்து,  சமுதாயத்திலிருந்து, வாழ்விலிருந்து பிரிந்து மனோரம்மிய கற்பனைகளில்புதைந்து நிற்கவேண்டும் என்ற போலித்தனத்தை  எதிர்த்து எரிசரமாக முன்வந்த நாம், இலக்கியம் மக்களை, அவர்களின் வாழ்வை, வாழ்க்கைப்போராட்டத்தைப் பிரதிபலிக்கவும், அதை முன்னெடுத்துச்செல்லவும்  வேண்டும் என்றோம்.  இலக்கியத்தின் சமூகக்கடப்பாட்டையும்  எழுத்தாளனின் சமுதாயப்பிரக்ஞையையும்  வலியுறுத்தினோம்.”
“ இன ஒதுக்குதலையும்  இனப்பாகுபாட்டையும்  எதிர்த்து முகிழ்ந்த தமிழ்த்தேசியத்தின்  ஜனநாயக அம்சக்கூறுகளுக்கு  நாங்கள்  எப்பொழுதும்   ஊசலாட்டமற்ற  ஆதரவைத்தெரிவித்து வந்திருக்கிறோம்.  ஆனால், அதேநேரத்தில்  இனப்பாகுபாட்டை எதிர்த்த  போராட்டம்  சமூக ஒடுக்குமுறைகளை  எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின்  வர்க்கப்போராட்டத்தினதும், சமுதாய மாற்றத்திற்கான தேசிய – ஜனநாயக இயக்கத்தினதும்  வரம்புக்குள் நடைபெறவேண்டும்  என்றும், இந்த தேசிய – சர்வதேசியப்பேரியக்கத்தின்  ஒரு கூறாக அது  அமையவேண்டும் என்றும்  வலியுறுத்தி வந்துள்ளோம்”
மேற்குறிப்பிட்ட  வரிகளை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்  நடத்திய  இலக்கியப்பேரரங்கில் வெளியிட்ட புதுமை இலக்கியம்  சிறப்பு மலரில்  சங்கத்தின்  பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் எழுதியிருந்தார்.




இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1954 ஆம் ஆண்டு கொழும்பில்  உதயமாகியது. இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட தென்னிலங்கையிலும்  மலையகத்திலும் அதன் கிளைகள் இயங்கின. ஐந்து தசாப்த காலம் செயலூக்கமுடன் பல்வேறு கலை, இலக்கியப்பணிகளை  முன்னெடுத்த  இச்சங்கம் காலப்போக்கில் செயலிழந்தமை  துர்ப்பாக்கியமாகும்.  இதிலிருந்த  மூத்த உறுப்பினர்களின்  மறைவு,  சில உறுப்பினர்களது புலப்பெயர்வு முதலான  இன்னபிற  காரணங்களினால்  அதன்  பணிகள் முடங்கிப்போனாலும்,  இலங்கையில் அரைநூற்றாண்டு காலம் ஈழத்து இலக்கிய  வளர்ச்சிக்கும் தமிழ்த்தேசிய சிந்தனைகளுக்கும், இன ஒற்றுமைக்கும்  உந்து  சக்தியாகவே  விளங்கியது.
இச்சங்கம்  மேற்கொண்ட  பல  அரிய  செயல்களை  இளங்கீரன் எழுதிய  அதன் வரலாற்று நூலிருந்தும் (ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்) புதுமை இலக்கியம் இதழ்கள் மற்றும் சிறப்பு  மலர்களிலிருந்தும்  அறிந்துகொள்ள முடியும்.


1956  ஆம் ஆண்டு  இலங்கையில்  நாடளாவிய  ரீதியில் பாரதி விழாக்களை  நடத்தியிருக்கும் இச்சங்கத்தில்  கே.கணேஷ், அ.ந. கந்தாமி,  சி.வி.வேலுப்பிள்ளை,  பேராசிரியர்கள்  கைலாசபதி, சிவத்தம்பி,   தில்லைநாதன்,  நுஃமான்,  மௌனகுரு,  சபா. ஜெயராஜா, கவிஞர்கள்  பசுபதி,  சுபத்திரன்,  சில்லையூர்  செல்வராஜன்,  இ.முருகையன்,  இ. சிவானந்தன்,  சாருமதி,  மற்றும் படைப்பாளிகள் இளங்கீரன்,   கே. டானியல், டொமினிக் ஜீவா,  சோமகாந்தன்,  செ. கதிர்காமநாதன் ,  செ. கணேசலிங்கன்,  என்.கே.ரகுநாதன்,  எச்.எம்.பி. மொஹிதீன்,  முகம்மது சமீம்,  பத்மா சோமகாந்தன்,  மருதூர்க்கொத்தன்,  மருதூர்க்கனி,   ஏ. இக்பால்,     காவலூர்  இராஜதுரை,  தெணியான்,  செ. யோகநாதன், யோ. பெனடிக்ற்பாலன்,   மு. கனகராஜன்,   சாந்தன்,  ராஜஸ்ரீகாந்தன்,  முருகபூபதி,   அந்தனிஜீவா,   திக்குவல்லைகமால்,   மேமன்கவி, ஆப்தீன்,  கே. விஜயன்   உட்பட   பலர்அங்கம்வகித்தனர்.  இச்சங்கத்தில் நான்கு   தலைமுறைகளைச்சேர்ந்த  படைப்பாளிகள்  இயங்கினர். இவர்களில்   சிலர்  இன்று  எம்மத்தியில் இல்லை.   இவர்கள் அனைவரும்   பாரதியின்  கருத்தியல்களின்  பாதிப்புக்குட்பட்டவர்களே.
இவர்களின்  படைப்புகளில்  பாரதி  நீக்கமற நிறைந்திருந்தார். சிலர் பாரதி  தொடர்பாகவே  நூல்களையும்  கட்டுரைகளையும், ஆய்வுகளையும்   எழுதியிருக்கின்றனர்.
1954  இல் தொடங்கி  இரண்டு  வருடங்களில்  நாடாளவிய  ரீதியில் பாரதிக்கு  விழா  நடத்திய  இச்சங்கம்,  பாரதி  நூற்றாண்டு காலகட்டத்திலும்   நாடெங்கும்  நிகழ்ச்சிகளை  ஏற்பாடு  செய்தது.
பாரதியின்  பிறந்த  தினம்  11-12-1882 .  அவரது நூற்றாண்டுகாலம் ஆரம்பமானதும்  12-12-1981  ஆம்  திகதி  கொழும்பு  தமிழ்ச் சங்கமண்டபத்தில்  பாரதி  நூற்றாண்டுக் கொண்டாட்டத்திற்கான முதலாவது  நிகழ்ச்சி  தொடங்கியது.
இன்று கொழும்பு தமிழ்ச்சங்கமும் தனது பவளவிழாக்காலத்தைக் கொண்டாடுகிறது.
இ.மு. எ.சங்கத்தினால்   அமைக்கப்பட்ட  தேசியக்குழுவில்,  நூற்றாண்டு விழாக்குழு,   நூல்  கண்காட்சிக்குழு,  எழுத்தாளர் ஒளிப்படக்கண்காட்சிக்குழு,   மகளிர் குழு  என்பனவும் உருவாக்கப்பட்டன.
தேசியக்குழுவில்  எழுத்தாளர்கள்  மாத்திரமன்றி,  நீதியரசர்கள், கலைஞர்கள்,   ஊடகவியலளர்கள்,  பொதுசனத்தொண்டர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள்,  கல்வித்துறை  சார்ந்த  அறிஞர்கள்  பலரும் இணைந்திருந்தனர்.


மேற்குறிப்பிட்ட  திகதியில்   பாரதிநூற்றாண்டு  விழாக்குழுத்தலைவர் நீதியரசர்  எச்.டபிள்யூ. தம்பையா  தலைமையில்  நடந்த  முதல் விழாவில்   யோகா  பாலச்சந்திரன்  வரவேற்புரை  நிகழ்த்தினார்.
இவ்விழாவில்  யாழ். பல்கலைக்கழகத்தின்   அன்றைய  துணைவேந்தர் பேராசிரியர்  சு. வித்தியானந்தனும்  சிங்களக்கலைக் களஞ்சியத்தை உருவாக்கிய  பேராசிரியர் டி.ஈ. ஹெட்டியாராய்ச்சியும்  தொடக்கவுரை  நிகழ்த்தினர்.   சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்  நூற்றாண்டு தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் அன்றைய காலகட்டத்தின் தலைவர் பொ. சங்கரப்பிள்ளை  பாரதியின் படத்தை திரைநீக்கம் செய்துவைத்தார்.  சங்கத்தின் வெள்ளிவிழா மலரை அதன் ஆசிரியர் சோமகாந்தன்  அறிமுகம்செய்துவைக்க,  மருத்துவர் திருமதி இந்திரா சிவயோகம்  வெளியீட்டுரையையும்  தினகரன் ஆசிரியரும் உழைக்கும்  பத்திரிகையாளர்  சங்கத்தலைவருமான இ. சிவகுருநாதனும்  இளங்கீரனும்  மலர் பற்றிய  ஆய்வுரையை நிகழ்த்தினர்.
கவிஞர்  இ.முருகையன்  தலைமையில்  நடந்த கவியரங்கில் சில்லையூர் செல்வராசன்,  ஏ.பி.வி.கோமஸ், கலைவாதி கலீல், மேமன்கவி  ஆகியோர்  இடம்பெற்றனர். சொக்கன் நிகழ்ச்சிக்கு வரமுடியாத  நிலையில் த. கனகரத்தினம் அவரது கவிதையை சமர்ப்பித்தார்.
குறிப்பிட்ட  பாரதி  நூற்றாண்டு  அங்குரார்ப்பண  விழா இசைக்கலைஞர்கள்  எஸ்.கே. பரராஜசிங்கம், எம்.ஏ. குலசீலநாதன் வசந்தி சண்முகம்  ஆகியோரின் பாரதி பாடல் இன்னிசை விருந்துடன் நிறைவுபெற்றது.  சபா. ஜெயராஜா நன்றியுரை வழங்கினார்.
முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தை பாரதி வெகுவாகப் பாதித்திருந்தமையால்,  பாரதியின்  சிந்தனைகளை அடியொற்றி இதர நூற்றாண்டு  ஆளுமைகளையும்  நினைவுகூர்ந்த நிகழ்ச்சிகளும் அக்காலப்பகுதியில்  நடந்தன.
உலகப்புகழ்பெற்ற  ஓவியர்  பிக்காஸோ, எழுத்தாளர்  லூசுன், தமிழ்ச்சிறுகதை  முன்னோடி வ.வே.சு. அய்யர்,  பண்டிதமணி கதிரேசன்  செட்டியார்  ஆகியோரின்  நூற்றாண்டுகளையும் நினைவுகூர்ந்து 31-01-1982  இல் ஒரு கருத்தரங்கை தமிழ்ச்சங்க மண்டபத்தில்  சங்கம்  நடத்தியது.
கி. இலக்‌ஷ்மண அய்யர், என். சண்முகரத்தினம், பேராசிரியர் எஸ். தில்லைநாதன், ஓவியர் சௌ ஆகியோர் உரையாற்றிய இக்கருத்தரங்கிற்கு  சமூகப்பணியாளர்  வே. கணபதிப்பிள்ளை தலைமைதாங்கினார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யும்போது," இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து  அதனை அவன் கண்விடல்" என்னும் திருவள்ளுவர் வாக்கை கவனத்தில் எடுத்தே பணிகளை முன்னெடுத்திருப்பதையும் அவதானிக்க  முடிகிறது.
யார் யாரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும் என்பதில் தீர்க்கதரிசனமும்  அனுபவமும்  கொண்டிருந்தவர் செயலாளர் பிரேம்ஜி. சங்கத்தின் உறுப்பினர்களிடம் புரிந்துணர்வை பேணுவதற்காகவும் அனைவரையும் அரவணைத்து இயங்கியவர். அதனால் அவர்தான் நீண்ட காலம் சங்கத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றினார்.
தொடர்பாடலில் அவருக்கிருந்த அனுபவம் சங்கத்தின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வழிகோலியது. அவர் கனடாவுக்குச்சென்று அங்கு மறைந்தார். அவரதும் சங்கத்தினதும் இதர மூத்த உறுப்பினர்களினதும் மறைவும் சங்கத்திற்கு மாத்திரமல்ல ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கியத்திற்கும் பேரிழப்பே.
சங்கத்தின் பா. நூ. தேசியக்குழுவும்  சோவியத் கலாசார இல்லமும் இணைந்து 28-02-1982 இல் மற்றும் ஒரு கருத்தரங்கை சோவியத் கலாசார இல்லத்தில் நடத்தியது.


                            நீதியரசர் வி. சிவசுப்பிரமணியம்     தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில்,       பிரேம்ஜி ஞானசுந்தரன் " பாரதியும் ஒக்டோபர் புரட்சியும் "    என்னும்   தலைப்பிலும் பேராசிரியர்    கா. சிவத்தம்பி " பாரதிக்குப்பிற்பட்ட தமிழ் இலக்கியத்தில் ஒக்டோபரின் செல்வாக்கு" என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.
கருத்தரங்கின் இறுதியில் முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர் மக்ஸிம்கோர்க்கியின் வாழ்க்கையை சித்திரித்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது.
       பெண்விடுதலைக்காக  தனது வாழ்நாளிலேயே குரல்கொடுத்த பெண்ணியச்சிந்தனையும் கொண்டிருந்த பாரதிக்காக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட மகளிர் அமைப்பினால் 27-03-1982 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்த கல்விக்கூட்டுறவு மண்டபத்தில் முழுநாள் கருத்தரங்கு நடைபெற்றது. செல்வி என். காசிப்பிள்ளை, பத்மா சோமகாந்தன், மருத்துவர் இந்திரா சிவயோகம்,வி.ரி.வி ஈஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர்.
கல்வி அமைச்சின் அதிகாரி கலாநிதி செல்வி சிரோன்மணி இராசரத்தினம், பாரதியின் பார்வையில் பெண்கள் - சிறுவர்கள் என்ற தலைப்பிலும், சித்திரலேகா மௌனகுரு, பாரதியும் மாதர் விடுதலையும் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.
பிற்பகலுக்குப்பின்னர் பம்பலப்பிட்டி மிலாகிரிய சென். போல்ஸ் மண்டபத்தில் பாலம் லக்‌ஷ்மணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்  திருமதி வி. பி. கணேசனின் வரவேற்புரையுடன் தொடங்கின.
வெள்ளவத்தை சைவமங்கையர் கழக பாடசாலை மாணவர்களும் கொழும்பு விவேகானந்தா கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்ட பாரதி பாடல் இன்னிசை அரங்கும் இடம்பெற்றது.
இதனையடுத்து  நடந்த கதையரங்கில் எழுத்தாளர்கள் அருண். விஜயராணி, வள்ளிநாயகி இராமலிங்கம், அன்னலட்சுமி இராஜதுரை, பத்மா சோமகாந்தன் ஆகியோர் தத்தம் கதைகளை வாசித்து சமர்ப்பித்தனர்.
பட்டிமன்றமும் நடைபெற்றது. " பாரதி விளைந்த பெண்விடுதலையும் நவீன மாதர் சுதந்திர இயக்கமும் ஒன்றா...? " என்ற தலைப்பில், திருமதிகள் லலிதா நடராஜா, அன்னபூரணம் பேரின்பராசா, செல்வி திருச்சந்திரன், புவனேஸ்வரி அருணாசலம், செல்வி வள்ளிநாயகி கணபதிப்பிள்ளை ஆகியோர் வாதிட்டனர்.
அதனைத்தொடர்ந்து, பேராசிரியர் கைலாசபதி சிறப்புரையாற்றினார்.
19-06-1982  ஆம் திகதி, கொழும்பு விவேகானந்தா கல்லூரியின்  அன்றைய துணை அதிபரும் இலக்கிய விமர்சகருமான சபா. ஜெயராசா தலைமையில் நடந்த  நிகழ்ச்சியில் " பாரதிக்குப்பின்னர்..." என்ற தலைப்பில் இளங்கீரன் உரையாற்றினார்.
01-08-1982  ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய விழாவில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச்செயலாளரும் ஜனசக்தி பத்திரிகையின் ஆசிரியருமாக இருந்த தா. பாண்டியனும் பேராசிரியர் கைலாசபதியும் சிறப்புரையாற்றினர்.
18-09-1982  ஆம் திகதி கொழும்பு சட்டக்கல்லூரியில்  பாரதி நூற்றாண்டு விழா,  நீதியரசர் எம். எம். அப்துல்காதர் தலைமையில் நடந்தது. மகா கவி பாரதி தேசியக்கவிஞனா...? தமிழ் எழுச்சிக்கவிஞனா...? என்ற தலைப்பில் நடந்த விவாத அரங்கில், இளங்கீரன், பொ. கிருஷ்ணசாமி, கனக. மனோகரன், முத்துமீரான், ஹக்கீம் ஆகியோர் உரையாற்றினர்.
சில்லையூர் செல்வராசன் தலைமையில் கவியரங்கும், பாரதி பாடல் இசையரங்கும் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியிலும் பேராசிரியர் கைலாசபதி உரையாற்றினார்.
தலைநகரில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட பாரதி நூற்றாண்டு விழாக்கள் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சங்கத்தினாலும் சங்கத்தின் அனுசரணையுடனும் நடத்தப்பட்டன.
வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, நீர்கொழும்பு, சிலாபம் முதலான நகரங்களிலும் பாரதி எழுச்சியுடன் பேசப்பட்டார்.
மேற்குறித்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருப்பவர்களின் பெயர்களை நினைத்துப்பார்க்கும்பொழுது, அவர்களில் சிலர் இன்று எம்மத்தியில் இல்லை என்பதும், சிலர் கலை, இலக்கியம் மற்றும் அரசியலில் பிரபல்யம் பெற்றிருப்பதும் புலனாகின்றது.
1981 முதல் 1982  இறுதிவரையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி இயங்கிய பேராசிரியர் கைலாசபதி 1982 இறுதியில் டிசம்பர் மாதம் எவருமே எதிர்பாராத நிலையில் திடீரென்று மறைந்தார்.
பாரதி நூற்றாண்டில் நாம் செய்தவை என்ன...? செய்யவேண்டியவை என்ன...? என்பது பற்றியெல்லாம் விரிவாக பல பத்திகளை எழுதியிருக்கும் கைலாசபதி, எம்மிடம் விட்டுச்சென்றிருக்கும் பாரதி இயல் ஆய்வு நூல்கள்: இரு மகாகவிகள், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், பாரதி ஆய்வுகள்.
இன்றும் இந்த நூல்கள் இலக்கிய மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பாடநூல்களாகவே திகழுகின்றன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலங்கையில் இலக்கிய ரீதியில் ஏற்படுத்திய தாக்கம்  விதந்து போற்றுதலுக்குரியது. அந்தத்தாக்கத்தின் ஊடாக பாரதியை பன்முகப்பார்வையிலும் தரிசிக்க முடிந்திருக்கிறது.
( தொடரும்)

No comments: