திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து -- மு.இளங்கோவன்

.


     நாகர்கோயில் திருக்குறள் மாநாட்டில் அகவை முதிர்ந்த ஐயாஒருவர் திருக்குறள் நூலினைச் சுமந்தபடி, அனைவருக்கும்அன்பளிப்பாக வழங்கியவாறுஅவரவரின் முகவரியையும்பெற்றவண்ணம் இருந்தார்எனக்கும் திருக்குறள் நூல் ஒன்று கிடைத்தது. அவர் பெயர் கரு. பேச்சிமுத்து என்பதாகும். அந்தப் பெரியாரின் திருக்குறள் பணியினை அருகிலிருந்த திருக்குறள் செம்மல் பேராசிரியர் பா. வளன் அரசு, முனைவர் கடவூர் மணிமாறன், இராம.மாணிக்கம் ஆகியோரிடம் விதந்து பேசிக்கொண்டிருந்தேன். இவர்களைப் போலும் தன்னார்வலர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்துகொண்டு திருக்குறள் தொண்டூழியம் புரிவதை அறிவேன். கல்விப்புலத்தில் இருப்பவர்கள் இத்தகு இலக்கியத் தொண்டில் ஈடுபடுவது அரிதாகவே என் கண்ணில் தென்படும். தமிழறியாத, கல்லா மக்கள் தமிழ்ப்போர்வையில் நுழைந்துகொண்டு, புளியம்பழம்போல் தமிழோடு ஒட்டாமல் உறவு இல்லாமல் கல்விப்புலங்களில் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொண்டு, பணியாற்றுவதை(!) அனைவரும் நாடெங்கும் காண்கின்றோம். அத்தகையோரை நாளும்  கண்ட கண்ணுக்கு,  இயந்திரப் பொறியியல் துறையில் பயின்ற ஒருவர் திருக்குறள் தொண்டராகப் பார்வையில் தென்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.     திருக்குறள் கரு. பேச்சிமுத்து ஐயா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. கருத்தரங்கில் பரபரப்பாக இருந்த என்னால் அவருடன் தனித்து உரையாட நேரம் இல்லாமல் போனது. ஊர் திரும்பியதும் பேச்சிமுத்து ஐயா வழங்கிய திருக்குறள் மற்றும் ஏழிளந்தமிழ் நூல்களைப் படித்துப் பார்த்தேன். அகரூர்க் கல்வி அறக்கட்டளை என்னும் அமைப்பைத் தம் தந்தையாரின் நினைவாக உருவாக்கி, அதன் வழியாகத் திருக்குறள் நூலினை எளிய அமைப்பில் தொடர்ந்து அச்சிட்டு, அனைவருக்கும் இலவயமாக வழங்குவது இவரின் உயிர்மூச்சான பணி என்பதை அறிந்தேன். ஒரு இலட்சம் படிகளுக்கு மேல் இதுவரை இவர் திருக்குறள் நூலினை அச்சிட்டும், விலைக்கு வாங்கியும் வழங்கியுள்ளார். என் கையில் இருந்தது 2016 சூலையில் அச்சிட்ட, ஐந்தாம் பதிப்பு நூலாகும். இதில் வ.சுப..மாணிக்கம் அவர்கள் வரைந்த உரை இடம்பெற்றுள்ளது. தேவநேயப் பாவாணரின் திருக்குறள் குறித்த எண்ணங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.


திருக்குறள் ஆய்வு என்ற வகையில் திருக்குறளில் இடம்பெற்றுள்ள மொத்த எழுத்துகள் 42914 எனவும், தமிழ் எழுத்துகள் 247 இல் 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை எனவும், அனிச்சம், குவளை என்னும் இரு மலர்களின் பெயர்கள்மட்டும் இடம்பெற்றுள்ளன எனவும், நெருஞ்சிப் பழம் என்ற ஒரு பழத்தின் பெயர் மட்டும் திருக்குறள் நூலில் இடம்பெற்றுள்ளது எனவும், குன்றிமணி என்ற ஒரு விதை மட்டும் இடம்பெற்றுள்ளது எனவும் "ஔ" என்ற ஓர் உயிரெழுத்து மட்டும் பயன்படுத்தப்படவில்லை எனவும், பனை மூங்கில் என்ற இரண்டு மரங்கள்  மட்டும் இடம்பெற்றுள்ளன எனவும், "னி" என்ற எழுத்து மட்டும் 1705  முறை இடம்பெற்றுள்ளது எனவும் "ளீ", "ங", என்னும் இரு எழுத்துகள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும், திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது எனவும் அரிய ஆய்வுக்குறிப்புகளை இந்த நூலில் கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

     நூற்பகுப்பு, அதிகாரவகராதி, பாட்டு முதற்குறிப்பு அகரமுதலி, திருக்குறள் மூலமும் உரையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நறுந்தொகை, நன்னெறி, உலகநீதி என்னும் பிற அற நூல்களும் உரையுடன் இந்தச் சிறுதொகுதியில் உள்ளன. பிழைபடச் சொல்லேல், ஒலிப்புப் படங்கள் என்னும் குறிப்புகளும் இந்த நூலில் அமைந்துள்ள பாங்கினைக் காணும்பொழுது தமிழைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் வேண்டும் என்ற கரு. பேச்சிமுத்து ஐயாவின் உள்ளக்கிடக்கை எனக்குப் புலப்பட்டது.

கரு. பேச்சிமுத்துவின் கல்விப் பின்புலம் என்ன?

     திருக்குறள் தொண்டில் தம்மைக் கரைத்துக்கொண்ட பேச்சிமுத்து அவர்களின் சொந்த ஊர் தேவகோட்டையாகும். 26.09.1944 இல் பிறந்தவர். பெற்றோர் அ. கருப்பையா, பொன்னம்மாள் ஆவர். தேவகோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பினைப் பயின்றவர். மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம் அவர்களின் அன்புக்குரிய மாணவராகச், சிறப்புத் தமிழ் பயின்ற இவர் செம்மலின் திருமகனார் தொல்காப்பியனாருடன் உடன் பயின்ற பெருமைக்குரியவர்.

     புகுமுக வகுப்பை அடுத்து, இயந்திரப் பொறியியல் படிப்பை அழகப்பர் கல்லூரியில் பயின்று பொறியாளராக மிளிர்ந்தவர்(1965). அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு அவர்களிடம் சிலகாலம் பணிபுரிந்த இவர் கரூர் மின்சார வாரியத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தவர். திருச்சிராப்பள்ளியில் அமைந்த பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) 36 ஆண்டுகள் இயந்திரப் பொறியாளராகப் பணிபுரிந்து 1999 இல் ஓய்வுபெற்றவர்.

     மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் அகரமுதலிப் பணிக்கு அன்பர்கள் இணைந்து பொருட்கொடை வழங்கியபொழுது இவரும் முன்வந்து கொடை வழங்கியவர்.

     கரு. பேச்சிமுத்து ஐயாவின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். ஆன்மீகத்தில் ஈடுபட்டு உழைத்த பெருமக்கள். தேவாரமும் திருவாசகமும் முழங்கிய இல்லத்தில் பேச்சிமுத்து வளர்ந்த காரணத்தால் இவருக்குத் திருமுறைகளும் வள்ளலாரும் அறிமுகம் ஆயினர்.

வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகத்தின்,

"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!"

என்னும் வரிகளைக் கேட்ட இவருக்கு, இச் செய்திகள் யாவும் திருக்குறளில் இடம்பெற்றுள்ளனவே என்று உணர்ந்து, திருக்குறளின் பக்கம் தம் கவனத்தைச் செலுத்தினார். தொடர்ந்து திருக்குறளைப் படிக்கவும், பரப்பவும் திட்டமிட்டுத் தம் கைப்பொருள் கொண்டு, திருக்குறள் நூலினை வாங்கியும், அச்சிட்டும் இல்லந்தோறும், பள்ளிதோறும் சென்று வழங்கி வருகின்றார். இவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு 51,794 படிகளும், இல்லங்களுக்கு 15,192 படிகளும்  பள்ளிகளுக்கு 533 படிகளும் வழங்கித் தம் திருக்குறள் தொண்டினைச் செய்துவருகின்றார். மணற்பாறை அடுத்த வையம்பட்டியில் தொடங்கிய இவரின் திருக்குறள் பணி இன்று உலகு தழுவிய பணியாகப் பரந்து நிற்கின்றது.

     கரு. பேச்சிமுத்து அவர்களுக்கு 1966 இல் திருமணம் நடைபெற்றது.துணைவியார் பெயர் திருவாட்டி இராக்கம்மாள் ஆகும்.  இரண்டு மக்கள் செல்வங்கள் இவருக்கு வாய்த்தனர். இவர்கள் யாவரும் பேச்சிமுத்து அவர்களின் திருக்குறள் தொண்டிற்கு அரணாக உள்ளனர்.

     குருதிக்கொடை என்ற வகையில் இதுவரை 81 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார். கண் கொடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். மண்புழு உரம் உருவாக்கம், மரக்கன்று நட்டு ஒராண்டு வளர்த்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு வழங்குவது, கல்வி உதவித்தொகையாக 596 மாணவர்களுக்கு வாழ்நாள் காப்பீட்டுக் கழகத்தில் பணம் செலுத்தி வருதல், திருக்குறள் குறித்த ஒட்டிகள், தட்டோடுகள், குறுவட்டுகள், பேசும் கடிகாரம் வாங்கி அளித்தல், திருக்குறள் தாங்கிய மேலாடை வழங்குதல் என்று தம் வாழ்நாளைத் திருக்குறளுக்கு ஒப்படைத்து வாழ்ந்துவரும் இப்பெருமகனாரின் தொண்டு தொடர்வதாகுக! வாழ்நாள் நீண்டு வளம் பெருகுவதாகுக! 

No comments: