போட்டோ - சிறுகதை - யோகன்

.
                                                                      

எட்டு மணியாகி விட்டது. இன்னும் அரியம் என்று அவர் கூப்பிடும் அவர் மனைவி அரியமலர் எழுந்திருக்கவில்லை.. யன்னல் திரையை விலக்கி வெய்யில் வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு  உள்ளே போக திரும்பியபோதுதான் பிள்ளைக்கு கார்ப்பெட்டில் விழுந்து கிடந்த போட்டொ எதேச்சையாக கண்ணில் பட்டது. கண்ணாடி குறுக்காக உடைந்து பிரேமும் படமும் மட்டும் தப்பியது..

அரியத்துக்குத் சொல்லாமல்  கண்ணாடித் துண்டுகளை குப்பைத் தொட்டிக்குள்; போட்டு விட்டு படத்தையும் பிரேமையும் அலுமாரிக்கு மேலே வைத்தார். கண்ணாடிப்   படம் உடைந்தால் வீட்டுக்கு கூடாது என்பாள் அரியம். தமிழ்ப் படங்களில் வருமல்லவா பூவை சாமிப் படத்தில் வைக்க அது கீழே விழும். அல்லது எங்கிருந்தோ வீட்டுக்குள் வரும் காற்றினால் விளக்கு ஒன்று அணையும் இதுவும் அந்தக் கேஸ்தானோ ?  பிள்ளைக்கு மனம் பதறியது.

கொஞ்ச நாட்களாக ஒன்று மாறி ஒன்றாக வருத்தப் படுக்கையில் கிடக்கும் அரியத்துக்குத்தான் எதேனும் நடந்து விடுமோ.? போட்டோ உடைந்ததை அரியத்துக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் யோசித்து இன்னும் வருத்தம் கூடிவிடும்.


அவரது அறை அரியத்தின் அறையைப் பார்த்தபடி நேர் எதிரே இருந்தது. "அரியம் அரியம் " கூப்பிட்டவாறே அரியத்தின் அறைக்குள் செல்ல யுகலிப்டஸ் மணம் பரவிய நீராவி மூக்கினுள் அடித்தது. இரவெல்லாம் இருமிக் கொண்டிருந்து காலையில்தான் அயர்ந்து தூங்குகிறாள்.
கையுடன் கொண்டு வந்த அவர் தயாரித்த ஓட்ஸ் கஞ்சியையும்  தேநீரையும் அரியத்தின் கட்டிலுக்குப் பக்கத்திலுள்ள சிறிய ஸ்டூலில் வைத்து விட்டு அவளை எழுப்பாமல் திரும்பினார்.


அறையின் மூலையில் இரு கதிரைகளும் ஸ்டூலும் மேலே கரம் போட்டில்  காய்கள் சிதறிக்  கிடந்தன. வரவேற்பறையில் கிடந்த கரம் போட்டை உள்ளே அரியத்தின் அறைக்குள் கொண்டு வைத்திருந்தார்.

முன்பு அரியம் படுக்கையில் விழ முன்னர் இருவரும் மதிய உணவுக்குப் பிறகு ஒரு ஆட்டம்; பிறகு இரவு படுக்கைக்குப் போக முன்னர் ஒரு ஆட்டம் என்று ஒரு வழக்கமாகவிருந்தது. பள்ளி நாட்களில் அவர் கரம் விளையாட்டில் சம்பியன். அவர்தான் அரியத்துக்கும் அறிமுகப்படுத்தினார்.


கதவு  பலமாகத் தட்டப்படும்  சத்தம்.
அழைப்பு மணி இருப்பது தெரிந்தும் கதவை உடைப்பது போல தட்டுவதென்றால் அது லிங்கத்தார் ஆகத்தான் இருக்கவேண்டும். வேண்டா வெறுப்பாக போய் கதவைத்  திறந்தார்.

" என்ன சரியான பிஸி போல "  வோக்கிங் போகும் ஆயத்தங்களுடன் லிங்கத்தார் நிற்கிறார். பக்கத்திலுள்ள முதியோர் இல்லமொன்றில் இருக்கிறார். அவர்  மனைவி இறந்து விட்டாள். 

"என்ன பெல்லை அடிக்காமல் கதவைத் தட்டுறீர் "

"எத்தனையோ தரம் அடிச்சனான். உமக்குத்தான் காது கேக்கேல்லை"
அரியத்தின் நித்திரை குழம்பாமலிருப்பதற்காக அவர்தான் பெல் சத்தத்தை குறைத்து வைத்திருந்ததை மறந்து விடடார். அதை சொல்லாமல்,

" சரி உள்ளை வாரும்"

" சீச்சீ நான் வோக்கிங் போறன்.  நீரும் வாருமேன்"

"இல்லை நான் ஒருக்கால் கடைக்குப் போக வேணும்." கடத்துகிறார் பிள்ளை.

"நேற்று கோல்ப் விளையாட்டுக்குப் போனதில் நாள் முழுவதும் போய் விட்டது."
லிங்கத்தார் முதியோர் இல்லத்தில் நல்லாக என்ஜோய் பண்ணுகிறார். பிள்ளைக்குப் பொறாமையாகவிருந்தது.
லிங்கத்தார் போய் விடடார்.  

பிள்ளை சமையலறைக்குப் போய் பிரிஜ்ஜிலிருந்து இரவே எடுத்து சிங்க்கிற்குள் போட்டிருந்த சிக்கினைத் தொட்டுப் பார்த்து விட்டு வெங்காயங்களை வெட்டத் தொடங்கினார்.
பிள்ளை நல்ல சமையற் கலைஞன். வேலை பார்ப்பதற்க்காக ஊரில் தனிக்கடடையாக இருந்தபோதே இந்தக் கலையை கற்றுத்  தேர்ந்து விடடார் .

இரு வருடங்களுக்கு முன்பு  கோடை காலத் தொடக்கத்தில் அரியத்துக்கு அடிக்கடி களைப்பு, பசியின்மை ஏற்பட்டு வைத்திய பரிசோதனைகள்  பல செய்தபின்  சிறுநீரக வீக்கம் இருப்பது தெரிந்தது.  அன்றிலிருந்து எதோ மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.
இந்த வின்டருக்கு நியுமோனியா வேறு வந்து வாட்டி எடுத்தது. அறையை விட்டுஅவள் வெளியே வரவே இல்லை. எந்நேரமும்ஓடிக்கொண்டிருக்கும் ஒயில் ஹீட்டர. வரட்டு இருமல் கொள் கொள் என்று அடிக்கடி. எதாவது பேசத்தொடங்கினால் குறுக்கிடும் இருமல். பிறகு சைகையால் பேச்சு. இப்படித் தொடர்கிறது அவள் பாடு.   
அரியம் போய் விட்டால் அம்பிகா தன்னை வீட்டொடு வந்திருக்கச் சொல்வாள் என்பது பிள்ளைக்குத் தெரியும். பிள்ளைக்குத் துளியும் பிடிக்காத விசயம் அது. ஆதைவிட முதியோர் இல்லத்திற்கு   செல்வதே மேல் என்பது அவர் எண்ணம்.
அதனாலேயே பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு அறை வீடொன்றை ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அரியத்துடன் குடிபுகுந்தார் பிள்ளை.  


அம்பிகாவுக்கு அரசாங்க திணைக்களத்தில் உயர் பதவி. அடிக்கடி  கூட்டம்  மகாநாடு என்று பயணங்கள் . வீட்டில் இருப்பதே குறைவு ஆனாலும்  சனிக்கிழமைகளில்  அரியத்தையும் பிள்ளையையும் வந்து பார்க்கிறாள். மருமகன் திவாகர்  சாதாரண அரச உத்தி யோகம்தான்.  ஆனால்  கட்டிட லைசென்ஸ் வைத்திருந்து தனியார் வீடுகள் கட்டி கொடுப்பதில் பெரும் பணம் சம்பாதிக்கிறான். சனி, ஞாயிறுகளில் திவாகர் ஒரே பிஸி.   ஒரே மகள் திவ்யா பல் வைத்தியம் படித்து சிட்னியில் தொழில் பார்க்கிறாள்.

எல்லாவற்றையும் நன்கு யோசித்த பிறகு ஒருவருக்கும் தெரியாமல் முதியோர் இல்லத்திற்கு போவதற்கான ஆயத்தங்களை இரகசியமாக செய்யத் தொடங்கினார் பிள்ளை. அரியத்திடமும் சொல்லவில்லை.
லிங்கத்தார் இருக்கும் முதியோர் இல்லம் ஒரு பழைய கட்டிடம்பிள்ளை இப்போது பார்ப்பதோ பல மில்லியன்கள் செலவழித்து அண்மையில் நவீன முறையிலே கட்டப்பட்ட முதியோர் இல்லம்.

அன்று திங்கட்கிழமை காலை உணவை முடித்தபின்
அந்த முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் அனுமதிக்கான பத்திரங்களை கேட்டு வாங்கினார். உள்ளே ஒருமுறை பார்க்க அனுமதி கேட்டு சுற்றிப் பார்க்கவும் தவறவில்லை. பொது அறையில் டிவியுடன் பத்திரிகை சஞ்சிகைகள் கிடந்த மேசை வேறும் அமர்ந்திருந்து விளையாடும் பல விளையாட்டுப் பொருட்கள் மத்தியில் கரம் போட்டும் இருந்தது அவருக்குச் சந்தோசந்தான். ஸ்விம்மிங் பூல் கூட கட்டி வைத்திருந்தார்கள். ஸ்விம்மிங் பழகாமல் விட்டு விட்டொமே என்று சற்று வருத்தம் அவருக்கு.

அன்று வீட்டுக்குத் திரும்பியதிலிருந்து அவர் மனம்   உற்சாகமாகவிருந்தது.
மதியம் வெயில் ஏறி குளிரின் உக்கிரம் கொஞ்சம் குறைந்து போக தொப்பியும் சப்பாத்தையும் கொழுவிக்கொண்டு மரக்கறித் தோட்டப்பக்கம் போனார். வீட்டுக்குப் பின்னே சிறிய பாத்தியொன்றில் மிளகாய் கத்தரி தக்காளி என்று பிள்ளை கோடையில் மரக்கறிகளை முளைக்கப் போடுவது வழக்கம். அவரது பின் வேலிக்கும் வீட்டுச்சுவருக்கும் இடையிலுள்ள சிறு நிலத்துண்டுதான் அந்தப் பாத்தி. கையுறைகளைப் போட்டுக்கொண்டு தோட்டத்தில் குளிரில் விறைத்துப்போய் பட்டுபோயிருந்த செடிகளைப் பிடுங்கினார். வேர்கள் அழுகியதில் மண்ணுடன் சேர்ந்து முரண்டு பிடிக்கும் செடிகள் கூட இலகுவில் வேருடன் வந்தன. மண்ணைக் கொத்திக் கொண்டிருக்கையில் பெரிய மண்புழுவொறு வந்தது. அதன் பருமனும் நீளமும் அசாதாரணமாகவிருந்தது.

பிள்ளைக்கு விபரீதமான பரிசோதனையொன்று என்ணத்திலுதித்தது. புழுவைகொண்டு போய் சற்றுத் தூரத்திலிருந்த கொங்ரீட் தரையில் போட்டார். வெயிலின் இதமான சூட்டில் புழு சில கணங்கள் அசையாது படுத்திருந்தது. பிறகு மெதுவாக உடலைச் சுருக்கி விரித்து முன்னேறியது. அந்த வேகத்தில் அது மண்ணுக்குத்திரும்ப குறைந்தது ஒரு மணி நேரமாவது செல்லும். அவரது பரிசோதனை இதுதான். மைனாக்களுக்கும் மக்பைகளுக்கும் வேறும் குருவிகளுக்கும் கண்ணில் படாது உயிர் தப்பி மண்ணுக்கு புழு திரும்ப வேண்டும். இந்த ஒரு மணி நேரமும் மூன்று மீட்டர் தூரமுந்தான் புழுவின் விதியைத் தீர்மானிக்கப்போகிறது.

இனி வரும் ஒரு மணி நேரத்திற்கு அவர்தான் புழுவின் கடவுள். பறவைகள் வந்தால் துரத்தி புழுவை காப்பாற்றவும் முடியும் அல்லது பேசாமல் சாகவும் விடவும் முடியும்இதில் பிள்ளைக்கு பெரும் சந்தோஷம். புழுவின் மேல் கொஞ்சம் கழிவிரக்கமும் ஏற்பட்டது. இந்த விளையாட்டைத்தான் மேலிருந்து கடவுள் தினசரி விளையாடுகிறார் போலும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

மைனா ஒன்று அவர் தலையத் தொட்டு விடுமாற் போல் பறந்து புழுவை காணாமலேயே போய் விட்டது. பிள்ளை வழமையாகப் கொங்றீட் தரையில் போடும் சாப்பாட்டுக்குத் தேடிவரும் மக்பைகளையும் காணோம்.


மேலும் கொஞ்ச நேரம் வரப்போகும் புழுவின் எமனுக்காகக் காத்திருந்தார் பிள்ளை. எதுவும் வரவில்லை. கேவலம் ஒரு புழுவின் விதியக் கூடத் தன்னால் தீர்மானிக்க அந்தக் கடவுள் விடவில்லையே என்று ஒரு சலிப்பு வந்தது. வல்ல சீவன் தான் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் சலிப்புடன் புழுவை மீண்டும் தூக்கி வந்து மண்ணில் போட்டார். தண்ணீருக்குள் மீன் குதிப்பது போல அது மண்ணுக்குள் குதித்தது.


   *                  *                  *

அந்த முதியோர் இல்லத்தில்  பிள்ளைக்கும் அரியத்திற்கும் தரப்பட்ட அறையில் இரட்டை படுக்கையுடன் சிறிய மேசை கதிரையுடன் ஒரு பிரிஜ்ஜும் தெரிகிறது. டிவியும் சுவரில் கொழுவியிருந்தார்கள். பக்கத்தில் மணிக்கூடும் ஒரு கலண்டரும்.
அறையுடன் தொடுத்துக் கட்டப்பட்ட பாத்ரும். அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தியது போல் சகலத்தையும் ஒரு அறைக்குள் அடக்கியிருந்தார்கள். கலண்டரிலுள்ள ஆண்டை கவனித்தால் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது தெரிகிறது.

கண்ணாடி யன்னலூடு வெளியே தெரிவது ஒரு செயற்கை நீர்த்தடாகம். காலையிலும் மாலையிலும் நடை போவதற்காக போடப்பட்ட கொங்றீட் பாதை அவர்களின் அறைக்கு அருகாக செல்கிறது. நேற்றுத்தான் அம்பிகா அவர்களது பழைய வீட்டில் எஞ்சியிருந்த பொருட்களை காரில் கொண்டு வந்திருந்தாள்.
    


பிள்ளை கட்டிலில் படுத்திருக்க அரியம் டிவி பார்த்துகொண்டிருக்கிறாள். சாப்பாடு பரிமாறுவதற்காக தாதிப் பெண் கொண்டு வந்த ட்ரொலியில் வெறும் பிளேட்டுகள் கிடக்கின்றன. கட்டிலுக்குப் பக்கத்தில் பிள்ளை நடப்பதற்காக பாவிக்கும் கை பிடித்து தள்ளும் வண்டில் நிற்கிறது. பிள்ளை அரியத்தை ஒரு கணம் பார்க்கிறார். இரண்டு  வருடங்களில் எத்தகு மாற்றம்? ஒரு வகையில் அவருக்குத்தான் ஏமாற்றம். வருத்தப் படுக்கையில் இருந்த அரியம் எழுந்திருக்க தான் படுக்கையில் விழுந்து விட்டதுதான் அந்தப் பெரிய மாற்றம்.

பிள்ளையின் இடப்பக்க முளையில் வந்த ஸ்ட்ரோக் வலப்பக்க கை காலுடன் வாயையும் ஒரு பக்கம் இழுத்து விட்டது. அவ்வப்போது அவரை விஷேட சிகிச்சை பயிற்சி என்று கூட்டிச் செல்கிறார்கள். குறைந்தது ஆறு மாதமாவது செல்லுமாம். சொற்களை சரியாக அவரால் உச்சரிக்க முடியவில்லை தொண்டையின் நரம்புகளும் கையை விரித்து விட்டன. அதற்கும் தனியே பயிற்சி உண்டு. அவர் உச்சரிக்கும் சொற்கள் ஓசையில் வேறு விதமாக வந்து விழுகிறது. அதனால் அவ்வப்போது சைகையால் பேசிக் கொள்கிறார் முன்பு அரியம் செய்தது போல.

டிவி பார்த்துக்கொண்டிருந்த அரியம் ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தது போல உள்ளே போய்பேப்பரில் சுற்றியிருந்த எதையோ எடுத்து வருகிறாள். கதிரையில் அமர்ந்து பேப்பரை விரித்து அதை வெளியே எடுக்கிறாள். அது முன்னர் உடைந்த அதே போட்டோதான். வீடு மாறும் போது அலுமாரிக்கு மேலிருந்து கண்டெடுத்த அதே போட்டோ. ஆனால் அதை இப்போது அவள் சுவரில் கொழுவவில்லை கண்ணாடி பிரேமும்  போடவில்லை. பிளாஸ்டிக் பிரேம் போட்ட படத்தை மேசையில் ஒரு ஸ்டாண்டில் கவனமாக வைக்கிறாள். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்பது அவள் எண்ணம்.

போட்டோவை பார்த்ததும் பிள்ளையின் முகத்தில் ஒரு வியப்பு. பரபரப்புடன் எதோ சொல்ல முயற்சிக்கிறார் அது முடியாமல்  சைகையால் ஏதோ காட்டுகிறார். எல்லாம் தனக்குத் தெரியும் என்பது போல அரியம் அவரை அமைதியாக்குகிறாள்.

அரியம் மணிக்கூட்டைப் பார்த்து விட்டு நேரமாகி விட்டது போல எழுந்து கொள்கிறாள். எங்கே என்பது போல பிள்ளை பார்க்க

"லிங்கத்தாருடன் கரம் ஆடிவிட்டு வருகிறேன். அவர் எப்போதும் உங்களைத்தான் எப்போது குணமாகி மீண்டும் கரம் ஆட வருவார் என்று அடிக்கடி கேட்டபடி."  சொல்லிகொண்டே வெளியே  போகிறாள்.


ஆம். பிள்ளை எதிர் பார்த்திருந்த அந்த புதிய இல்லத்தில்  அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. லிங்கத்தார் இருக்கும் அதே பழைய முதியோர் இல்லத்திலேயே இருவருக்கும் அனுமதி கிடைத்தது.

அரியம் வெளியே செல்லபிள்ளைக்கு திடீரென ஏனோ அந்தப் மண்புழுவின் ஞாபகம் வந்தது. மண்ணுக்குள் இன்னும் அது உயிரோடிருக்குமா? ஆனால் அந்த மண்புழு இன்னும் மண்ணுக்குள்தான் இருக்கிறது என்பது சுந்தரம்பிள்ளைக்குத் தெரிந்திருக்கவில்லை.


No comments: