பயணியின் பார்வையில் --- 01 - இலங்கையிலிருந்து முருகபூபதி

.
கோடையில்  ஒரு  நாள் மழை  வரலாம்
 
                     

" எமது தாயகத்தில் டெங்கு - வைரஸ் காய்ச்சல் அத்துடன் கடுமையான வரட்சி, கடும்கோடை வெயில். இத்தனைக்கும் மத்தியில் அவுஸ்திரேலியாவின் குளிர்கால சுகத்தை துறந்துவிட்டுச்சென்று சிரமப்படப்போகிறீர்களா...? " என்று வீட்டில் குடும்பத்தினர் எச்சரித்துக்கொண்டிருந்தனர்.
" இத்தனைக்கும் மத்தியில்தானே அங்கு வெசாக் பண்டிகை நடக்கிறது. பாரதப்பிரதமர் நரேந்திரமோடியும் வருகிறார்." என்று திருப்பிக்கேட்டேன்.
" எதற்கும் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டு செல்லவும்" வீட்டில் அக்கறையான ஆலோசனை.  அதன் விலையோ 125  ($125) வெள்ளிகளுக்கும் மேல்.




குளிர்காலக்காய்ச்சலைத்தடுப்பதற்காக  அவுஸ்திரேலியாவில் தரப்படும் Flue தடுப்பூசியும் செலுத்தவேண்டும் என்றார் எனது G.P. அவர் ஒரு பெண். என்னுடன் நிரந்தரமாகியிருக்கும் பல நோய் உபாதைகளை  தடுப்பதற்காக என்னில் தீவிர கவனம் செலுத்திவருபவர். எனக்கு அன்றாடம் தேவைப்படும் மருந்துகள், இன்சுலின் உட்பட அனைத்துக்கும் மேலதிக Scripts  தந்தார்.
ஒருநாள் அழைத்து அமரச்செய்துவிட்டு  தாதியொருவரையும் அறைக்கு  அழைத்தார். இருவரும் எனக்கு வலதும் இடதுமாக நின்றுகொண்டு, இரண்டு ஊசிமருந்துகளையும் ஏற்றினார்கள். அந்தக்கண்கொள்ளாக்காட்சியை   பார்ப்பதற்கு  மனைவி அருகிலிருக்கவில்லை. அந்தக்காட்சியை  பகிர்ந்துகொள்வதற்கு என்னிடம் முகநூலும்  இல்லை.
இந்தப்பயணம் கடந்த ஏப்ரில் மாதம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் நான் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா ஏற்பாடுகள்  இருந்தன. நண்பர்கள் ஞானம் ஆசிரியர் ஞானசேகரனும் தமிழ் அபிமானி மடுளுகிரியே விஜேரத்னவும் விழாவுக்கு வரவிருக்கும் சூழ்நிலையில் பயணம் செய்வது உகந்ததல்ல என்று மனம் உணர்த்தியது. அதனால் பயணத்தை ஒத்திவைத்து, கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவில்  புறப்பட்டேன்.
ஏறியது Malaysian Airline.  இந்தச்சேவை பற்றியும் ( அதில் ஒன்று Malaysian Airline 370 -  சில வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனது முதல் ) வந்த - வரும் விமர்சனங்கள் மனதைக்கலக்கியது.


இந்தப்பின்னணிகளுடன் நண்பர் நடேசனின் அதே பெயரில் ஏற்கனவே  வெளியான சிறுகதைத்தொகுதியை நண்பர் மடுளுகிரியே விஜரேத்ன சிங்களத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டு எடுத்துவருகிறார் என்ற தகவலும்  கசிந்திருந்தது.
விழாவன்றுதான்  அந்தச் சிங்கள மொழிபெயர்ப்பு  நூலை மடுளுகிரியே விஜேரத்ன எனக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறார் என்ற செய்தியும்  தெரியவந்தது.
அவரே விழா அரங்கில் அதனை என்னிடமும் நடேசனிடமும்  தந்து வெளியிட்டு  வைத்தார். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை என்று ஏற்கனவே பலதடவைகள்  எழுதிவிட்டேன். ஏனோ தெரியவில்லை,  இந்த வசனத்தை எனது வாழ்வில் தொடர்ந்தும் எழுத நேர்ந்திருப்பதும்  விதிப்பயன்தானோ...?


கடந்த காலப்   பயணங்களில்  நடுஇரவுப்பொழுதிலேயே  எனது தாயகத்தின் மண்ணைத்தொட்டிருக்கின்றேன்.  இம்முறை பகலில் சென்று இறங்கவேண்டும் என்ற வினோத ஆசையும் வந்தது.
ஆனால், இந்த ஆசை தேவையற்றது என்பதை பயணத்திலேயே புரிந்துகொண்டேன்.  கடந்த 10 ஆம் திகதி அதிகாலையே எமது விமானம்  கோலாலம்பூருக்கு வந்துவிட்டது. சுமார் 4 மணிநேரங்கள் இடைத்தங்கல் ( Transit).
காலையில் எடுக்கவேண்டிய  இன்சுலின், மற்றும் மருந்துகள் நினைவுக்கு வந்து தொல்லைத்தரத் தொடங்கின. அவுஸ்திரேலியா - மலேசியா  நேர மாற்றங்கள். வயிற்றில் ஏற்கனவே இருக்கும் அல்சர் தனது  குணத்தைக்காண்பிக்கத்தொடங்கியது. அதிகாலை நடைப்பயிற்சி  நல்லதுதானே என்று விமான நிலையத்தினுள் நடந்து திரிந்து நேரத்தைப்போக்கினேன். வயிறும் எரியத்தொடங்கியது. மலேசிய நாணயத்தை மாற்றிவிட்டு, இன்சுலினும் செலுத்தி காலை உணவுக்கு மேல் அவசியம் எடுக்கவேண்டிய மாத்திரைகளையும் உட்செலுத்திக்கொண்டேன்.
இல்லையேல்,  அந்தப்பிரமாண்டமான விமான நிலையத்தில் ஒரு செய்திக்கு  இலக்காகி  என்னை நேசிப்பவர்களுக்கு பெரும் கலக்கத்தை தந்திருப்பேன்.
கட்டுநாயக்காவுக்காவுக்கான பயணம் Srilankan Airline.  விரும்பியபடியே  பகல்பொழுதுப்பயணம்.  எதிர்பாராமல் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தரையிறங்கிவிட்டது. பயணிகளுக்கு மிக்க மகிழ்ச்சி.
ஆனால், எனக்குத்தான் பெரும் சோதனையாகிவிட்டது. பொதிகளை எடுத்துக்கொண்டு  வெளியே வந்தால்  பாண்பேக்கரிக்குள்


நூழைந்துவிட்டதான  உணர்வு. வெய்யில் கொளுத்துகிறது. வெசாக் பண்டிகை  களைகட்டியிருந்தது. வழக்கமான ஜனநெரிசல்.  புறப்படும் - வந்திறங்கும் பயணிகள், அவர்களுடன் வந்து படையாக குவியும் குடும்பத்தினர், உறவினர்கள் நிரம்பியிருந்த அந்தத்தளத்தில் எனது தங்கை வீட்டாரைத்தேடினேன். அவர்களின்  முகமே  கண்களில் தென்படவில்லை.
வெளியே வந்து பார்க்கின்றேன். அங்கும் இல்லை. தெரிந்த முகம் எதுவும் கண்களுக்குத்  தென்படவில்லை. விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு  முன்பே வந்துவிட்ட தகவல் தங்கை வீட்டாருக்குத் தெரிவதற்கு  நியாயம்  இல்லை.
எனது அவுஸ்திரேலியா கைத்தொலைபேசியும்  இயங்கவில்லை. அத்தகைய  ஒரு சங்கடமான ஒரு பொழுது முன்னரும் கைத்தொலைபேசி  இல்லாத  காலத்தில் - பல வருடங்களுக்கு முன்னர்  அங்கு  எனக்கு  வந்திருக்கிறது. தொலைபேசி எடுத்து தகவல் தெரிவிக்க கைவசம் இலங்கை நாணயம் இல்லாமல் தவித்தபோது எனக்கு  ஒரு  ஐந்து ரூபா நாணயக்குற்றி தந்து உதவிய அந்த சிங்களச்சகோதரியின்  முகமும்  பின்னர்  மறந்துவிட்டது.
எனது குடும்பத்தினர் தமாதமாக வந்ததும், " எனது தயாகத்தில் என்னை  ஒரு பிச்சைக்காரனாக்கி , இரந்து கேட்க வைத்துவிட்டீர்களே..." என்று அன்று வைதேன்.
இப்போது அந்த நினைவுதான் வந்தது. அங்கு  பலரிடம் கைத்தொலைபேசி  இருந்தும் ஒரு அழைப்பிற்காக கேட்கத் தயக்கம். மீண்டும் மீண்டும் எனது அவுஸ்திரேலிய கைத்தொலைபேசியை அழுத்தி முயன்றேன்.  அது அடம்பிடித்து மறுத்தது.
அச்சமயத்தில் ஆபத்பாந்தவனாக ஒருவர் என் முன்னால் தோன்றினார். அவரை எங்கோ முன்பு பார்த்துப்பேசியிருக்கின்றேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடன் நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன்.
நிச்சயம்  அவர்தானா.... இவர்...? என்ற சந்தேகமும்  உடன் வந்தது. அதனால் அருகே சென்று பேசவும் சற்றுத்தயக்கம். ஒருவர் போல் ஒருவர் தோற்றத்திலிருந்தவர்களை பார்த்து  முன்னரும் பலதடவைகள் ஏமாந்திருக்கின்றேன்.
அந்த அன்பரும் தன்னை அழைத்துச்செல்லவருபவர்களுக்காக காத்து நின்றார். அதனால் அவர் என் பக்கம் திரும்பவில்லை.
தயக்கத்தை விட்டுவிட்டு, அருகில் சென்று ," சேர்.... நீங்கள் பேராசிரியர் ராஜன் கூல்தானே...? " என்றேன்.
" ஆமாம்...."
" சேர்  என்னைத்தெரிகிறதா... கனடாவில் 2007 இல் சந்தித்தோம். முருகபூபதி" என்றேன்.


" ஹலோ... ஹலோ... எப்படி இருக்கிறீர்..." அவர் முகம் மலர்ந்து பேசினார். தாம் கொரியாவிலிருந்து வருவதாகவும். அங்கு தேர்தல் கண்காணிப்பு பணிக்கு சென்றிருந்ததாகவும் சொன்னார்.
எனக்கிருந்த  சங்கடத்தை சொன்னேன்.
என்னிடம்  இலக்கம் பெற்று தமது தொலைபேசி ஊடாக தொடர்பு ஏற்படுத்தித்தந்தார். சற்று நேரத்தில் தங்கை வீட்டார் வாகனத்துடன் வந்து சேர்ந்தனர். அவருக்கும் வாகனம் வந்துவிட்டது. அவரை எங்கள் குடும்பத்தினருக்கு  அறிமுகப்படுத்திவிட்டு, விடைபெற்றேன்.
தொலைபேசி இலக்கம் பரஸ்பரம் இருப்பதால் தொடர்புகொள்வோம் என்று கூறிவிட்டுச்சென்றார்  இணைய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட  பேராசிரியர் ராஜன் கூல்.

குறுகிய கால வெளிநாட்டுப்  பயணங்களில், நேர ஒழுங்கு, திட்டமிடல் என்பவை மட்டுமல்ல உண்ணும் உணவு அருந்தும் பானங்களிலும் விழிப்பாகவும்  இருத்தல் வேண்டும் என்பது பொதுவான விதி. இதனை மீறிவிடுபவர்கள்  பயணங்களை நிறைவாக்கிக்கொள்ளாமல் அவதியுற்ற செய்திகளும்  அறிவோம். குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
பருவகால மாற்றங்கள், நோய்த்தொற்று முதலான இன்ன பல காரணங்கள்  குழந்தைகளை பாதித்தால் வந்த பயணமும் வீணாகிவிடும்  என்பதும்  பலருக்கு புத்திக்கொள்முதல்.


நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக நடத்தும்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்கள், அவர்களின் தாய்மார் மற்றும் பாதுகாவலர்களுடன் சந்திப்பு  ஏற்படுத்தி மாணவர்களுக்கான தகவல் அமர்வுகளை நடத்துவதுதான்  எனது  இந்தப்பயணத்தின் நோக்கம்.
எனது இலக்கிய உறவுகள், மற்றும் குடும்ப உறவுகள் சில அண்மைக்காலத்தில் இழப்புகளை ( மரணங்களை ) சந்தித்திருந்தன.
அவர்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறுவது சம்பிரதாயமான சடங்கு  அல்ல. உறவுகள் பேணப்படுவதும், கசப்புகள்  நீங்குவதும் இத்தகைய  தருணங்களில்தான்.
எமது நீர்கொழும்பூரில்  தெரிந்தவர்கள், உறவினர்கள் குடும்பத்தில்  நிகழ்ந்த மறைவுகளினால் தொடர்ந்தும் துக்கம் அனுட்டிப்பவர்களின்   துயரத்தில் முதல் இரண்டு நாட்களும் கழிந்தன. அத்துடன் அதிகாலை 3 மணிக்கே ( இலங்கை நேரம் ) துயில் எழுந்துவிடுவதும் பல பணிகளை  துரிதமாக செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
இலங்கை வந்திறங்கிய நாளன்று நள்ளிரவு மின்னல், இடியுடன் கூடிய கனத்த மழை பொழிந்தது.
கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என்ற பாடலை நினைத்துக்கொண்டு  அந்த  இரண்டாம் அதிகாலையில் துயில் எழுந்தேன்.
நான் மெல்பனில் நிற்கும்பொழுது அடுத்தடுத்து எனக்கு நன்கு தெரிந்த  மூவர் மறைந்தனர். வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் (கனடா),  வீரகேசரி துணை ஆசிரியரும் காலைக்கதிர் ஆசிரியருமான திருமதி அன்னலட்சுமி அவர்களின் கணவர் திரு. இராஜதுரை,  வானொலி ஊடகவியலாளர் செல்வி சற்சொரூபவதி நாதன். (இவர் நீர்கொழும்பு மருத்துவமனையில்தான் காலமாகியிருக்கிறார்)
இலங்கை வந்து இறங்கியதும், முதலில் திருமதி அன்னலட்சுமி இராஜதுரையுடன் தொடர்புகொண்டு மறுநாள் வருவதாகச்சொன்னேன். அவர் வசிக்கும் வத்தளையில் அவரது வீட்டைத்தேடிக்கண்டுபிடிக்கும்  சிரமத்தை தவிர்ப்பதற்காக என்னுடன் இலக்கிய நண்பர்கள் தெளிவத்தை ஜோசப்பையும் மேமன் கவியையும்  இணைத்துக்கொண்டேன்.
மேமன்கவிக்கு கடந்த 6 ஆம் திகதிதான் கொழும்பில் மணிவிழா சிறப்பாக  நடந்திருந்தது.
மனிதநேசகன்  மேமன் கவி மணிவிழா மலர் மும்மொழியிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த மலர் அதிசய அபூர்வமலர்தான்.
சிங்களத்தில் மானவ ஹித வாதியா எனவும் Lover Of Humanity எனவும் பதிவுசெய்யப்பட்டிருந்தது. பல தமிழ், சிங்கள இலக்கிய ஆளுமைகள் இம்மலரில் மும்மொழிகளிலும் மேமன் கவியின் இலக்கிய,  தனிமனித இயல்புகளை  பதிவுசெய்துள்ளார்.
" வாசிப்பின் மூலம் அனுபவமான கலை, இலக்கியமானது வாழ்க்கையை நான் சிறப்பான முறையில் வாசிக்கும் திறனை எனக்குத்தந்துள்ளது"  என்ற மேமன் கவியின் வாசகத்துடன் மலரின் உள்ளடக்கம்  ஆரம்பிக்கின்றது.
கொடகே புத்தக நிறுவனம், புரவலர் புத்தகப்பூங்கா, இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனம், துரைவி பதிப்பகம், வளரி எழுத்துக்கூடம் ( தமிழ்நாடு) பூபாலசிங்கம் புத்தகச்சாலை, Happy Digital Centre ( மல்லிகை ஜீவாவின் ஏகபுத்திரன் திலீபன் பல வருடங்களாக கொழும்பில் நடத்தும்  பிரபலமான  ஸ்தாபனம்) என்பன மேமன் கவியின் மணிவிழாவுக்கு அனுசரனை வழங்கியிருந்ததும் முன்மாதிரியாகும்.
தமிழரல்லாத இந்த தமிழ்க்கவிஞரை மூவினத்தையும் சேர்ந்த இலக்கிய நேசர்கள் ஒன்றிணைந்து பாராட்டி கௌரவித்திருக்கின்றனர். இவ்விழாவில் பொன்னாடைகள், பூமாலைகள் முற்றாக தவிர்க்கப்பட்டிருப்பதும் முன்மாதிரியானது.
            எனினும் இந்த விழாவுக்கு மல்லிகை ஜீவா வருகை தரவில்லை என்பது மேமனுக்கு சற்று வருத்தமாயிருந்தபோதிலும், அவரது உடல் நலத்தை கருத்தில்கொண்டு அமைதியுற்றார். ஜீவாவின் வாழ்த்துச்செய்தியே " காலத்தால் என்னோடு..." என்ற தலைப்பில் முதல் ஆக்கமாக மலரில் பதிவாகியிருக்கிறது.
வியாழனன்று ( 11 ஆம் திகதி ) காலை நண்பர் தெளிவத்தை ஜோசப் இல்லத்தில் மேமன் கவி தமது மணிவிழா மலரையும் ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து என்ற தமது புதிய கவிதை நூலையும் எனக்குத்தந்தார். மணிவிழா மலரில் இடம்பெற்றிருக்கும் எனது கட்டுரை ( மேமன் கவியின் எழுத்தும் வாழ்வும்) தேனீ உட்பட சில இணையத்தளங்களிலும்  வெளியாகியிருக்கிறது.
அதனைப்பார்த்துவிட்டும் வெளிநாடுகளிலிருந்த பலர் மேமன் கவிக்கு வாழ்த்துத்தெரிவித்திருக்கும் தகவலையும் அன்று காலையில் அவர் சொன்னார்.
தெளிவத்தை ஜோசப் தமது புதிய வெளியீடான " நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 "  என்ற நாவலை எனக்குத்தந்தார். அதனை அவரது துணைவியாரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.
இல்லற வாழ்வில் பொன்விழா காணும் தெளிவத்தை தம்பதியருக்காக எம் அனைவரதும் இலக்கிய நண்பர் பாராளுமன்ற அங்கத்தவர் மல்லியப்பு சந்தி திலகர் தமது பாக்கியா பதிப்பகத்தினால் அந்த நூலை  வெளியிட்டுள்ளார்.
" 83 வன்செயல்களை மட்டுமல்ல அதற்குள் நடந்த ' நன் செயல்கள்' பற்றியும் பேசுகிறது இந்த நாவல்" என்று மல்லியப்பு சந்தி திலகர் இந்நாவல் பற்றிய இரத்தினச்சுருக்கமான அறிமுகத்தையும் தந்துள்ளார்.
( பயணங்கள்  தொடரும்) 

No comments: