SACHIN: A BILLION DREAMS
இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின். இந்தியா மட்டுமின்றி உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் ஒரு சரித்திர நாயகன் சச்சின். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிரிக்கெட் என்ற ஒரு சொல் தெரியும் என்றால் அதற்கு பெரும்பங்கு சச்சின் என்ற பெயருக்கே உள்ளது. சாதனைகளே அசந்துவிடும் இவரின் சாதனைகளை அறிந்தால், அவரின் வாழ்க்கையை நாம் அறிய சரியான தருணம் தான் இந்த சச்சின் திரைப்படம்.
சச்சின் பல கோடி கனவுகள் இப்படத்தின் கதை, படத்தை பற்றிய அலசல் என்பதை எல்லாம் தாண்டி சச்சின் என்ற ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையில் கடந்து வந்த சாதனைகள் மற்றும் சோதனைகள் என்ன என்பதன் ஒரு டாக்குமெண்ட்ரி என கூறிவிடலாம்.
இந்தியா 1983-ம் ஆண்டு உலக கோப்பை வெற்றி பெற்ற போது கிரிக்கெட் மீது ஒரு சிறுவனுக்கு ஆர்வம் வர, அதன் பின் தன் அண்ணன் அஜித்தின் மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாட தொடங்குகின்றார்.
இதை அனைத்தும் 10-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் நாம் படித்தே தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், இதில் என்ன புதியதை காட்டப்போகிறார்கள் என்றால், கிரிக்கெட் என்றாலே நமக்கு சச்சின் என்று தெரியும். ஆனால், சச்சினுக்கு கிரிக்கெட் எத்தனை முக்கியத்துவம் என்பதை இயக்குனர் James Erskine அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.
சச்சின் என்றாலே அமைதி என்று நமக்கு தெரிந்த முகம். இதற்கு அப்படியே எதிர்மறையாக தன் சிறுவயதில் செம்ம கலாட்டா செய்யும் சுட்டி. அந்த தருணத்தில் அவரை கிரிக்கெட் எப்படி நல்வழிப்படுத்துகின்றது என்பதை காட்டியவிதம் ரசிக்க வைக்கின்றது.
அவரை கிரிக்கெட் மைதானத்தில் பார்த்து வந்த நமக்கு, சச்சின் தன் குடும்பத்தினரிடம் எப்படி நடந்துக்கொள்வார், அவர்களுக்காக நேரம் ஒதுக்குவாரா? தன் நண்பர்களுடன் எப்படி நேரத்தை செலவிடுவார் என நமக்கு தெரியாத பல முகங்களை படம்பிடித்து காட்டியுள்ளனர்.
அதிலும் யாருமே பார்த்திராத, தன் குழந்தைகளுடன் சச்சின் விளையாடுவது, அர்ஜுனிடம் அடிவாங்குவது, நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் கலாட்டா செய்வது என சச்சின் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் விஷயங்கள் அடங்கியிருக்கும்.
அதேபோல் தனக்கு கேப்டன் பதவி எத்தனை பாரமாக இருந்தது. இதனால், தன் அணிக்கு வந்த பிளவுகள் என பல விஷயங்களை தைரியமாக காட்டியுள்ளனர். கிரேக் சாப்பலின் கோச்சிங் நேரம் தான் இந்தியாவின் மிக மோசமான தருணம்.
அவரின் குண நலன்கள் குறித்தும், சீனியர் வீரர்களை அவர் ஒதுக்கியது குறித்தும் பலருக்கும் தெரியாத தகவல்களை காட்டியுள்ளனர். ஆனால், தோனியை கேப்டன் ஆக்கியதே சச்சின் தான்.
இவை தோனி படத்தில் வரவில்லை, ஒருவேளை சச்சின் படத்தில் வரும் என்று நினைத்தால், இதிலும் அதைப்பற்றி ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. 24 வருட கனவாக சச்சின் உலககோப்பையை கையில் ஏந்துவதுடன் படம் நிறைவடைகின்றது.
சச்சினின் கிரிக்கெட் மட்டுமின்றி அவருடைய வாழ்க்கையையும் மிக அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வு. இப்படி பல சாதனைகளை இந்தியாவிற்காக படைத்த ஒரு ஜாம்பவானின் படம், தோனி படத்தை போல் கொஞ்சம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி எடுத்திருக்கலாம். டாக்குமெண்ட்ரி போல் எடுத்தது வருத்தம் தான். இதன் காரணமாகவே ரகுமான் இசையும் பெரிதும் கவரவில்லை.
எது எப்படியோ மைதானம் மட்டுமின்றி அரங்கமும் அதிர்கின்றது சச்சின்...சச்சின் என்ற வார்த்தையால். மார்க் (Rating) மொத்தத்தில் இந்த படம் என்ன என்பதை எல்லாம் தாண்டி சாதனை நாயகனை கொண்டாட இதுவே சரியான தருணம், கண்டிப்பாக சச்சினின் வாழ்க்கை பயணத்தில் நீங்களும் பங்கு பெறலாம்.
No comments:
Post a Comment