உலகச் செய்திகள்


கட்டாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் நான்கு மத்தியகிழக்கு நாடுகள்..!

லொறியுடன் பஸ் மோதியதால் 22 பேர் உடல்கருகி பலி : உத்தரபிரதேசத்தில் சம்பவம்

120 பேருடன் மாயமான விமானத்தின் பாகங்கள் அந்தமானில் கண்டுபிடிப்பு : ஏனைய பயணிகளின் நிலை குறித்து அச்சம்

 "உலக தமிழ் அழகி" மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு









கட்டாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் நான்கு மத்தியகிழக்கு நாடுகள்..!

05/06/2017 கட்டாருடன் கொண்டிருந்த அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டித்து கொள்வதாக நான்கு மத்தியகிழக்கு நாடுகள் அறிவித்துள்ளமையால் குறித்த பிராந்தியத்தில் பதற்றநிலை தோன்றியுள்ளது.
கட்டார் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு துணைநிற்போருடன் நட்ப்பியல் ரீதியில் பழகுவதாகவும், அவர்களுக்கு உதவிகளை வழங்குவதாகவும் மற்றும் இஸ்லாமிய நாட்டு விதிமுறைகளை மீறி செயற்படும் ஈரானுடன் நட்ப்பியல் நாடாக செயற்படுவதாகம் குற்றம் சுமத்தி, சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து மற்றும் பக்ரேய்ன் உள்ளிட்ட நாடுகள் காட்டருடனான சகல தொடர்புகளையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் கட்டாருடனான போக்குவரத்து தொடர்பையும் துண்டிப்பதாக குறித்த நாடுகள் அறிவித்துள்ளதோடு, குறித்த நான்கு நாடுகளிலுள்ள கட்டார் நாட்டவர்களை இரண்டு வாரங்களுக்குள் தமது நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு மேற்குறித்த நான்கு நாடுகளும், கட்டாரிலுள்ள உயர்ஸ்தானிகர்களை தமது நாட்டிற்கு திருப்பி அழைத்து கொண்டன. இருப்பினும் குறித்த காலப்பகுதியில் இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து மற்றும் பொருளாதார செயற்பாடுகள் இயல்பாக இடம்பெற்று வந்தன.
இச்சுழலில் தற்போதைய அறிவிப்பால் காட்டருடன் கொண்டிருந்த சகல விதமான உறவுகளையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளதோடு, அந்நாடுகளில் இருக்கும் கட்டார் நாட்டவர்களையும் வெளியேற்றுவதற்கு இரண்டுவாரக்காலம் காலக்கெடு வழங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சவுதிஅரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டபோது, முஸ்லீம் நாடுகள் தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென அறிவித்திருந்த நிலையில், தற்போது காட்டருடனான தொடர்பை மத்திய கிழக்கின் முக்கியமான நான்கு நாடுகள் துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









லொறியுடன் பஸ் மோதியதால் 22 பேர் உடல்கருகி பலி : உத்தரபிரதேசத்தில் சம்பவம்

05/06/2017 நெடுஞ்சாலையில் பயணித்த லொறியுடன் பஸ் மோதியதால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில பரேலி நெடுஞ்சாலையில், தலைநகர் புது டில்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநில கோன்டா மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்தமையால், எதிரில் வந்த லொறியுடன் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.  
மேலும் குறித்த விபத்தின் காரணமாக பஸ் மற்றும் லொறி என்பவற்றில் வேகமாக தீ பரவியதால் பஸில் பயணித்தவர்களில் 17 சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததுடன், 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 20 பேர் வரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











120 பேருடன் மாயமான விமானத்தின் பாகங்கள் அந்தமானில் கண்டுபிடிப்பு : ஏனைய பயணிகளின் நிலை குறித்து அச்சம்

08/06/2016 மியன்மாரில் 120 பேருடன் பரந்த இராணுவ விமானம், தொடர்பு எல்லையிலிருந்து காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விமானத்தின் பக்கங்கள் மற்றும் குழந்தை உட்பட மூன்று பேரின் சடலங்கள் அந்தமான் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில், 120 பேருடன் யாங்கோன் பிராந்தியத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், மேக் பகுதியில் வைத்து ராடார் தொடர்பிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், விமானத்தை தொடர்புகொள்ள தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பயன் கிட்டவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்திருந்த.
இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
தாவே நகரில் இருந்து சுமார் 136 மைல்கள் தொலைவிலுள்ள கடலில் விமானத்தின் பாகங்கள் மற்றும் மூன்று பேரின் சடலங்களை கண்டுபிடித்திருப்பதாக மேக் சுற்றுலாத்துறை அதிகாரி நாயிங் லின் ஜாவ் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். 
மேலும் அந்நாட்டு கடற்படை வீரர்கள் தொடர்ந்து குறித்த கடற் பகுதியில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 
குறித்த விமானத்தில் 15 சிறுவர்கள், 35 இராணுவத்தினர் 14 விமான ஊழியர்கள் உள்ளிட்டவர்களுடன் இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 120 பேர் வரையில் இருந்ததாக மியன்மார் இராணுவ விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
அத்தோடு காணாமல் போயுள்ள குறித்த விமானமானது இதுவரை சுமார் 8000 மணித்தியாலங்கள் பறந்துள்ளதுடன், கடந்த வருடம் சுமார் 819 மணித்தியாலயங்கள் பறந்துள்ளதாக மியானமார் விமான தலைமையக தகவல் தெரிவிக்கின்றன. 
கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியாவின் -370 விமானம் 239 பயணிகளுடன் அந்தமான் கடற்பரப்பில் வைத்து காணாமல் போயிருந்த நிலையில், குறித்த விமானம் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் குறித்த கடற்பிராந்தியத்தில் தற்போது 120 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 















"உலக தமிழ் அழகி" மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு

07/06/2017 உலக தமிழ் வம்சாவளி அமைப்பு GOTO (Global Organization of Tamil Origin) அனைத்துலக தமிழ் பெண்களுக்கான அழகி போட்டி  “உலக தமிழ் அழகி”  2018 ஜனவரி மாதம் 5ம் திகதி சென்னையில் 5 நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அவ் நிகழ்விற்கான அறிமுக விழா நேற்று மாலை பேலஸ் ஆப் தி கோல்டன் ஹார்சஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அவ்விழாவில் பேரா மாநில சட்டமன்ற சபா நாயகர் தங்கேஸ்வரி மிஸ் தமிழ் யூனிவெர்ஸ் லோகோவை வெளியிட  கபாலி பட வில்லன்  டத்தோ ரோஸியம் நோர் பெற்று கொண்டார்.
இவ் நிகழ்வின் நோக்கம் பற்றி உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எடிசன் விருது நிறுவனமாகிய செல்வகுமார் கூறியது, “நம் தமிழ் பெண்களிடம் அறிவு கூர்மை, கல்வி, அறிவியல், விவேகம், அழகு கலை போன்ற பல்வேறு திறமைகளை உலகுக்கு உணர்த்தும் விதமாக தமிழ் பெண்களின் தனித்துவம் உலகிற்கு அறியும் வகையில் நிகழ்வை அமைக்க உள்ளோம். இவ் நிகழ்வு ஒவ்வொரு நாட்டிலும் மாநில அளவில் அழகி போட்டி நடத்தி, தேசிய அளவில் தேர்வாகும் தமிழ் அழகிகள் உலக தமிழ் அழகியாக தேர்ந்தெடுக்க படுவார்கள். இது போன்ற நிகழ்வு உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெற்று இறுதியாக தாய் தமிழ் நாட்டில் நடைபெற உள்ளது.
இவ் நிகழ்ச்சியை மலேசியாவில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும்`பினாங்கு, பேரா, மலாக்கா போன்ற மாநிலங்களில் கிளை அமைத்து நிகழ்வு நடை பெற உள்ளது. மேலும் இதன் மூலம் தமிழ் பெண்கள் பன்னாட்டு விளம்பர நிறுவனங்களில் விளம்பர தூதராகவும், விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பும் பிரபலமாக உள்ளவர்களை தேசிய நிறுவனங்கள் உயர் பதவி வழங்கி கௌரவிக்க வழி வகிக்கும் . இதன் மூலம் தமிழ் பெண் சமுதாயம் நல்ல நிலைக்கு வரும் என மலேசியாவிற்கான மிஸ் தமிழ் யூனிவர்ஸின் ஒருங்கிணைப்பாளர் தீனா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, 0166167708 | மின்னஞ்சல்: gotoorganisation@gmail.com


நன்றி வீரகேசரி 











No comments: