காலத்தின் வாசனை: பாரதியார் எப்போது போலீஸ்காரர் ஆனார்?

.


பாரதியார் போலீஸ்காரர் ஆன கதையை அப்பா சொல்லிக் கேட்க வேண்டும். சாங்கோபாங்கமாய்ச் சொல்லுவார். இது என்ன கூத்து என்றுதானே கேட்கிறீர்கள்.. கூத்தேதான்! இருபது வருடங்களுக்கு முன்னால் பாரதியாரை போலீஸ்காரர் ஆக்கியதே என் அப்பாதான்!
ஆர்யா வரைந்த பாரதி!
எங்கள் வீட்டில் ஆர்யா வரைந்த பாரதியார் படம் இருக்கிறது. அப்பா சென்னை போய்விட்டு வரும்போது, அதைப் பயபக்தியோடு கொண்டுவந்து கையோடு அய்யங்கடைத் தெருவில் பிரேம்போட்டு வந்து மாட்டிவிட்டார். திடீரென்று எங்கள் வீட்டுக்கு ஒரு புதுவிதமான சோபை ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு தடவை வீடு மாறும்போதும் “பாரதி படத்தை எடுத்துப் பத்திரமாக வச்சுட்டியா?” என்று கேட்பார் அப்பா.
நாங்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்த போது பாரதியார் படத்தை வெகுபத்திரமாகக் கொண்டுவந்தார். சென்னை புறநகர் பகுதியில் நாங்கள் ஒரு அத்துவானக் காட்டில் குடியேறினோம். சுற்றுப்புறத்தில் வீடுகளே இல்லை. எங்கள் வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்கலாம். அந்தப் பகுதியில் திருடர் பயம் இருந்தது. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் குடியேறிவிட்டோம்.
குழந்தைகளைப் பள்ளிக் கூடத்தில் விட்டு விட்டு, நானும் என் மனைவியும் அலுவலகம் சென்றால் இரவுதான் வீடு திரும்புவோம்.
அச்சமில்லை.. அச்சமில்லை!
அப்பா வீட்டில் தனியாக இருப்பார். அவர் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரி யராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். எதற்கெடுத்தாலும் பாரதி பாடல் ஒன்றை முணுமுணுப்பார். என் குழந்தைகள் சிறு வயதிலேயே பாரதி படத்தைப் பார்த்துவிட்டு “அச்சமில்லை… அச்சமில்லை..!’’ என்று மழலைக் குரலில் பாட ஆரம்பித்து விடுவார்கள்.
எல்லோரும் நல்லவரே!


அப்பாவுக்கு எல்லோரும் நல்லவரே. தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதமின்றி எல்லோரையும் வரவேற்று உபசரிப்பார். முதலில் தண்ணீர் கொடுப்பார். பிறகு, வீட்டைச் சுற்றிக் காண்பிப்பார். ஏதோ இவரே கட்டிய வீடுபோல. அதுவும் கொல்லைப் புறத்தில் குலைதள்ளி இருக்கும் வாழை மரத்தைக் காட்டாவிட்டால் இருப்புக் கொள்ளாது. வீடு ஹோவென்று திறந்து கிடக்கும். இவர் கூடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார். “நகை எல்லாம் முதலில் லாக்கரில் வைக்க வேண்டும். உங்க அப்பாவை நம்ப முடியாது” என்று என் மனைவி புலம்புவது வழக்கம்.
வந்தான் திருடன்!
என் மனைவியின் பயம் நிஜமாகிவிட்டது. ஒருநாள் திருடன் வந்தேவிட்டான். இந்தப் பக்கத்து ஆசாமி இல்லை. வடக்கத்திக்காரன் ஜாடை. அரைகுறையாகத் தமிழ் பேசினான். அப்பா வழக்கம்போல் அவனைச் சந்தேகிக்கவில்லை. வரவேற்றார்.. உபசரித்தார். ‘என்ன சாப்பிடுகிறீர்கள்.. மோர் வேண்டுமா?’ என்று கேட்டார்.
அவன் பார்வை வீட்டைச் சுற்றிச் சுழல்கிறது. “வீட்டைப் பார்க்கிறீர்களா.. தாராளமாகப் பாருங்கள்... பழைய வீடுதான்...” அவனை அழைத்துப்போய் வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்துவிட்டு, கொல்லைப்புறம் வாழை மரத்தையும் காண்பித்துவிட்டு சமையல் அறையிலிருந்து மோர் எடுத்துவரப் போயிருக்கிறார். வந்தவன் அதற்குள் பெட்ரூமுக்குள் புகுந்து வந்துவிட்டான். அங்கேதான் பீரோக்கள் இருந்தன. அப்போதுதான் அப்பாவுக்குச் சுருக்கென்று இருந்திருக்கிறது. அடடே.. திருடன்தான்! எப்படித் தப்பிப்பது இவனிடமிருந்து? நடுக் கூடத்தில் திண்டனைப் போல் நிற்கிறான். தெருவில் ஈ காக்கை இல்லை.
பாரதி போலீஸ்!
அப்போதுதான் அவன் கண்களில் பாரதியார் படம் படுகிறது.
“இவர் யாரு?” என்று கேட்கிறான்.
“இவர்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!” என்கிறார் தமிழாசிரியர் கம்பீரமாக. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இவரைப் பார்த்தால் போலீசு மாதிரி இருக்கு.. எங்க ஊர் போலீசு மாதிரி இருக்காரு?”
அப்பா சுதாரித்துக்கொண்டார். “அடடே! கண்டுபிடிச்சிட்டீங்களே!”
“போலீசேதான்.. என் அண்ணன் மகன். பஜாருக்குப் போயிருக்கார்.. வந்துடுவார். அவர் டூட்டிக்குப் புறப்படற நேரம் ஆச்சு.”
கொள்ளைக்காரனை விரட்டிய பாரதி!
திருடன் வெலவெலத்துப் போய்விட்டான். முகம் வெளிறிவிட்டது. அப்பா கொடுத்த மோரைக் குடிக்கவே இல்லை. அப்படியே வைத்துவிட்டு விருட்டென்று வெளியே போய், தெருவில் இறங்கி ஓட்டமும் நடையுமாய் போயே விட்டான்! அன்று சாயங்காலமே பக்கத்து நகரில் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறான். பிடித்துவிட்டார்கள். அப்பா வேடிக்கை பார்த்தபோது அவனை அடையாளம் தெரிந்துவிட்டது!
வீட்டுக்கு வந்து நடந்ததெல்லாம் விவரித் தார். அவர் வழக்கமாகச் சொல்லுகிற கதைகளில் பாரதியார் போலீஸ்காரர் ஆன கதையும் சேர்ந்து கொண்டது. “அன்று வெள்ளைக்காரனுக்கு சிம்மசொப்பனமாக இருந்தான் பாரதி. இன்று கொள்ளைக் காரனை விரட்டிவிட்டான் போட்டோவில் இருந்தபடி’’ என்றார் வெகுளித்தனமான பெருமிதத்துடன். நான் பாரதியார் படத்தைப் பார்த்தேன். பாரதியாரின் வீரத் திருமுகத்தில் புதிதாக ஒரு புன்னகை இழையோடுவதுபோல் இருந்தது!
- தஞ்சாவூர்க் கவிராயர் தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
nantri http://tamil.thehindu.com

No comments: