கரையை தொடும் அலைகள் - செ.பாஸ்கரன்

.

குளிராக எனைத்தீண்டும்
அழகான நதியாகினாய்
நதிஎன்றால் அலையோடு
விளையாடும்
கரைமோதி நடை போடும்
தெரியாத இடம் தேடி
விரைந்தோடி இதமாக்கும்
நீயும் இதமாக்கி  நதியாகினாய்

அலை பேசும் கடலாகினாய்
நிதம் பேசி எனைச் சீண்டி
கரம் கொண்டு எனை நீவி
கரை மீது எனை மோதினாய்

அதிகாலை குளிரோடு
நிதம்தேடி எனைப்பார்க்க
தெருவோரம் விழி வீசினாய்
இளமாலை வெயிலோடு
இதமான கதைபேசி
இருளாகும் பொழுதேகினாய்

வயல்க் காட்டு வரம்போடு
வழிகின்ற சிறு ஓடை
தருகின்ற இதமாகினாய்
அன்பாலே எனை வென்று
அழகாலே எனைக் கொன்று
விதியென்று பெயர் சூடினாய்

புரியாத புதிராக
அனல் காற்றை நீ மூட்டி
உயிர் மூச்சை உனதாக்கினாய்
எரிகின்ற சுடரொன்று
அணைகின்ற தருணத்தை
அழகாக நீ காட்டினாய்



2 comments:

Anonymous said...

நதி போல கால் நனைத்து மனம் வருடி குளிர்வித்து மகிழ்வித்து மெல்லமாய் மென்மையாய் ஈரத்தை விட்டுச் செல்லுது கவிதை....
குரலோடு பேசினாலும் சுவைகூட்டி வளைந்தோடும் மொழிநடை..

கவிஞருக்கு பாராட்டுக்கள்!

tamilmurasu said...

உங்கள் ரசனைக்கு நன்றி. பெயரை போட்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

பாஸ்கரன்