இலங்கையில் பாரதி - அங்கம் 15 -- முருகபூபதி


.

இலங்கைவாழ் தமிழ்ப்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதித்துவத்தை பெற்றிருப்பதாக சொல்லப்படும் இன்றைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியும் அதற்கு முன்னர் தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரசும் இயங்கின. இன்றும் இவ்விரு கட்சிகளும் நடைமுறையில் இயங்கினாலும்,  இவை தவிர பல தமிழ் விடுதலை இயக்கங்களும் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்த காலப்பகுதியில் தோன்றின.
இந்தத் தமிழ் அரசியல் அணிகளுக்கு  பாரதியின் கருத்துக்களில் மிகுந்த பற்றுதலும் ஈடுபாடுமிருந்தன. இந்த அணிகளைச்சார்ந்து நிற்போர் தம் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பாரதியிடம் குடியிருந்த 'தமிழ் உணர்வையே' பிரதிபலித்தனர்.
               இடதுசாரி இயக்கங்களிலும் முற்போக்கு இலக்கிய முகாம்களிலும் இருந்த தமிழ் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் பாரதியின் தேசிய - சர்வதேசிய குணாம்சங்களை எவ்வாறு மேற்கோள் காட்டியும் பிரயோகித்தும் எழுதினார்களோ, பேசினார்களோ,    அதேபோன்று " தமிழ் அரசியல் அணிகள் " பாரதியின் தமிழ் உணர்வை, மொழிப்பற்றை தேச விடுதலை குறித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி  தத்தம் இயக்கரீதியிலான நடவடிக்கைகளுக்கு சார்பாகவும் சாதகமாகவும் பயன்படுத்திவந்தார்கள்.
அத்தகையதொரு முகாமிலிருந்து சுதந்திரன் ஏட்டை வெளியிட்ட சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டட் நிறுவனத்திலிருந்துதான் கலை, இலக்கிய மாத இதழான ' சுடர்' வெளிவந்தது.




இலங்கைத் தலைநகரில் பண்டாரநாயக்கா மாவத்தையில் அமைந்திருந்த  சுதந்திரன் அலுவலகத்திலிருந்து  சுமார்  எட்டுவருடகாலம் வெளியான சுடர், 1982 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பாரதி நூற்றாண்டு சிறப்பிதழை வெளியிட்டது.
சுதந்திரன் ஆசிரியராக பணியாற்றிய கோவை மகேசன்தான் தொடக்கத்தில் சுடர் ஆசிரியராக இருந்தார். 1977 இற்குப்பின்னர் சுதந்திரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவர நேர்ந்தமையால் கோவை மகேசனும் அங்கு இடம்பெயர்ந்தார். சுடரின் ஆசிரியர் பொறுப்பை கவிஞர் காசி ஆனந்தன் ஏற்றார்.
இக்காலப்பகுதியில்தான் தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே நிழற்போர் தொடங்கியது. அவர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்சினை கட்டம் கட்டமாக வெளியே துலாம்பரமாகியது.


இன்றும் இதுதான் நிலை.
இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே முரண்பாடுகள் நீடித்திருந்தன. பாரதி கலந்துகொண்ட சூரத் காங்கிரஸ் மாநாட்டில் கருத்தியல் போராட்டமும் வெடித்தது.
பாரதி தீவிரவாதிகள் பக்கம்தான் நின்றார். இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்விலும் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடு இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
அன்று வெளியான சுதந்திரன், ஏடு கூட்டணித்தலைவர்களையும் கூட்டணியின் நடவடிக்கைகளையும் கடுமையாக கண்டித்து விமர்சிக்கும் படலத்தை 1978 இற்குப்பின்னர் ஆரம்பித்தது. சுதந்திரனையும் சுடரையும் வெளியிடும்  நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரஹாசன், தமிழர் அரசியலில் மிதவாதிகளின்  கருத்துக்களிலிருந்து  மாறுபட்டிருந்தார்.
இதன் விளைவாக மிதவாதிகளின் பக்கம் சார்ந்து நின்ற காசி ஆனந்தன், 1980 ஆம் ஆண்டில் சுடர் பொறுப்பிலிருந்து முற்றாக விலகிக்கொண்டார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியை தீவிரமாகக்கண்டிக்கும் பணியை சுதந்திரன் ஆக்ரோஷமுடன் தனது தரப்பு நியாயத்துடன் மேற்கொண்டதன் விளைவாக த.வி. கூட்டணிக்கு தனது தரப்பு நியாயத்தை பிரசாரப்படுத்துவதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது.
( சுதந்திரன் த.வி. கூட்டணியின் அங்கீகாரத்துடன் வெளியான அதன் உத்தியோகபூர்வ ஏடு அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்)
அதனால் யாழ்ப்பாணத்தில் உதித்தது உதயசூரியன். இது த.வி. கூட்டணியின் பிரசாரப்பத்திரிகையாகவும் அதே சமயம் சுதந்திரனையும் தமிழீழ விடுதலை அணியையும் சாடும் பத்திரிகையாகவும் வெளியானது.
உதயசூரியன் பின்னர் செங்கதிராகி மங்கி மறைந்துவிட்டது.
காசி ஆனந்தன் சுடரிலிருந்து ஒதுங்கியதும் சட்டத்தரணியான கரிகாலன் (நவரத்தினம்) 1981 இல் சுடர் ஆசிரியரானார். இரண்டு ஏடுகளையும் வெளியிட்ட நிறுவனம், சுதந்திரன் வார இதழை தமிழின விடுதலைக்காக குரல்கொடுக்கவும் சுடரை இலக்கியத்திற்காகவும் நடத்தியது. காசி ஆனந்தனும் கரிகாலனும் சுடரில் பணியாற்றிய காலகட்டத்தில் இவர்களுக்குத்  துணையாக இயங்கியவர் கனகசிங்கம். இவருடைய புனைபெயர் பொன்னரி. இவர் ஓவியருமாவார். வீரகேசரியில் ஒப்புநோக்காளராக பணியாற்றியவாறு பகுதிநேரமாக சுடர் பொறுப்புகளையும் கவனித்தார்.
காசிஆனந்தனும் கரிகாலனும் அடுத்தடுத்து சுடரிலிருந்து ஒதுங்கிக்கொண்டதும்,  கனகசிங்கமே அதன் ஆசிரியராக இயங்கினார். ஒரு இலக்கிய இதழை தனிநபர் ஒருவர் நடத்துவதற்கும் கூட்டுறவு அடிப்படையில் வெளியிடுவதற்கும், ஒரு நிறுவனத்தின் வெளியீடாக நடத்துவதற்கும் பற்பல வேறுபாடுகள் இருக்கின்றன.
ஒரு தனிநபர் இலக்கிய இதழின் ஆசிரியர் பொறுப்புடன் நடத்துவது சுலபம். ஆனால், கூட்டுச்சேர்ந்து நடத்தும்போது அல்லது நிறுவனத்தின் கீழ் சிலர் இணைந்து நடத்தும்போது அவரவர் வரித்துக்கொண்ட அரசியல் கொள்கைகள் பிரதிபலிக்க நேர்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரிந்ததே.
காசி ஆனந்தனும் கரிகாலனும் சுடர் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வதற்கு கட்சி அரசியலே அடிப்படை. கனகசிங்கம், சுடரின் பொறுப்பை ஏற்றதன் பின்னர்  தமிழீழ விடுதலை அணியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே இயங்கினார். இதனைப்பிரதிபலிக்கும் வகையில் சுடரின் பாரதி நூற்றாண்டு சிறப்பிதழின் ஆசிரியத்தலையங்கத்தை " வாய்ச்சொல்லில் வீரரடி" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.


" கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணம் என்ற அற்புத காவியத்தை சிருஷ்டித்தான். அவனின் கதாபாத்திரங்களான இராமரையும் சீதையையும் தெய்வங்களாக நாம் வழிபடுகிறோம்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற தெய்வீக இலக்கியத்தை படைத்தார். சிலம்பின் நாயகி கண்ணகிக்கு நாம் கோயில் அமைத்து கும்பிடுகிறோம்.
இப்படி தெய்வீகப்பிறவிகளையே நம் கண்முன்கொண்டுவந்து நிறுத்திய கம்பனுக்கும் இளங்கோ அடிகளுக்கும் கொடுக்கும் மதிப்பைவிட  மேலான ஒரு மதிப்பை, சிறப்பை பாரதிக்கு அளிக்கின்றோம். இது ஏன்...?
அடிமைத்தளையினின்றும் மக்களை விடுவிக்க கனல் தெறிக்கும் கவிதைகளையும் அவன் பாடினான். விடுதலைப்போரில் மக்களை விறுகொண்டெழவைக்கும் உணர்ச்சிக்கவிகளை அவன் வடித்தான். அதனால் விடுதலைக்கவியாக புரட்சிக்கவியாக நம் மனங்களில் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
ஒரு இலட்சியத்தை முன்வைத்து தமிழ் மக்களிடம் ஆணை கேட்டவர்கள், அரசாங்கத்தலைவர்களுடன் சமரசம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற உட்கருத்துடன் அவர்களைச்சாடுவதற்காக பாரதியின் கவிதை வரிகளையே சுடர் தனது ஆசிரியத்தலையங்கத்தில் எடுத்தாண்டது.
"யார் அந்த வாய்ச்சொல் வீரர்கள்...?" சுடரின் வாசகர்கள் மட்டுமல்ல அனைத்து தமிழ்ப்பேசும் மக்களும் புரிந்துகொள்ளட்டும் என்ற உள்நோக்கத்துடன் அவ்வாறு எழுதப்பட்டிருந்ததானது, பாரதியின் கருத்துக்களை சந்தர்ப்ப சமயம் அறிந்து பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியத்தையே காட்டுகின்றது.
'மதி' யின் ஈழத்தில் பாரதி இன்றிருந்தால், காவலூர் எஸ். ஜெகநாதனின் பாரதியே புதுமைச்சாரதியே, திமிலைக்கண்ணனின்    பாரதி கண்ட கனவு பலிக்க, ஏ. எம். எம். பாறுக்கின் வீரமுழக்கம் செய்தவன் நீயே முதலிய கவிதைகளும் செல்வா தம்பிஐயாவின் பாரதி இனங்காட்டிய பச்சோந்திகள், எஸ்.பி. கிருஷ்ணனின் ' தீக்குள் விரலை வைத்தால்' முதலிய சிறு கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.
பாரதியின் கவிதை வரிகள் இரண்டை தலைப்பாகக்கொண்ட இரு சிறுகதைகளும் அதில் வெளியாகியிருந்தன.
இச்சிறப்பிதழில் சிறப்பான அம்சம் என்று குறிப்பிடத்தக்கதாக " மூவர் முன்மொழிந்த கருத்துக்கள்" என்ற பத்தியும் இடம்பெற்றிருந்தது. பாரதியின் பாடல்கள் ஈழத்தமிழர்களுக்கு எந்தளவில் பயன்படுகின்றன...? என்ற வினாவை தலைப்பாகக்கொண்டிருந்தது. நா. சுப்பிரமணியன், நாவேந்தன், செம்பியன் செல்வன் ஆகியோர் அந்த வினாவுக்கு பதில் வழங்கியிருந்தனர். இதனைத்தொகுத்து பதிவுசெய்தவர் தமிழ்ப்பிரியா.  இவர் குறமகளுடன் (வள்ளிநாயகி இராமலிங்கம்) நடத்திய இலக்கியச்சந்திப்பு நேர்காணலும் பாரதியின் கருத்துக்களை அடியொற்றிய பெண்விடுதலை தொடர்பான சிந்தனைகளிலிருந்தே எழுதப்பட்டிருந்தது.
சுடர்,  தான் சார்ந்திருந்த தமிழீழ விடுதலை அணியின் தேவையை ஒட்டியும் அன்றைய காலத்தின் தேவை கருதியும் வெளியிடப்பட்ட சம்பிரதாய சிறப்பிதழாகவே சுடரின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.
இலங்கையில் பாரதியின் சிந்தனைகளை பரப்பிய முன்னோடியாக சுவாமி விபுலானந்தர் விதந்து போற்றப்படுபவர் என்று இந்தத்தொடரின் ஓர் அங்கத்தில் முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.
இவர்பற்றியும் வசனநடை கைவந்த வள்ளாலர் எனப்போற்றுப்படும் ஆறுமுகநாவலரையும் தமிழ் ஆராய்ச்சிக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளாரையும் பற்றிய பிரக்ஞை தமிழகத்தில் எவ்வாறு இருந்தது...? என்பதை ஆராய்ந்தால் சுவாரஸ்யங்களை தெரிந்துகொள்ள முடியும்.
ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த கங்கை இதழின் ஆசிரியர் பகீரதன் தமிழ் இலக்கிய வளர்ச்சியில்  தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, இலங்கை பத்தாண்டுகள் பின்னிற்கிறது என்ற குரலை எழுப்பிவிட்டுச்சென்றார்.
ஆனால், தமிழ்நாடும் எவ்வளவு தூரம் பின்னிற்கிறது என்பதை சுட்டிக்காண்பிப்பதற்கு எவரும் முன்வரவில்லை.
ஒருசமயம் ஆனந்தவிகடன் ஆசிரியராக பணியாற்றிய ( பின்னாளில் ஆனந்தவிகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது இதழை நடத்தியவர்) மணியன் இலங்கை வந்தபொழுது யாழ்ப்பாணத்தில் அவரை வரவேற்றவர்கள், ஆறுமுகநாவலரைப்பற்றிச்சொன்னதும், " யார் அந்த நாவலர்.... தனக்கு நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்"  எனச்சொன்னார்.
அதுபோன்று தினமணிக்கதிர் இதழின் ஆசிரியராகவும் பின்னர் தனது பெயரிலிலேயே சாவி என்ற இதழை நடத்தியவருமான சாவி ( சா.விஸ்வநாதன்) தனிநாயகம் அடிகளா...? யார் அவர்...? என்ற வினாவைத்தொடுத்தார்.
இந்த இலட்சணத்தில் யார் யார் எவை எவற்றில் பின்தங்கியிருக்கின்றனர் என்ற முடிவுக்கு வாசகர்கள் வருவார்கள்.
தமிழ்நாடு கடலூரில் ஆறுமுகநாவலர் வள்ளலார் இராமலிங்கம் சுவாமிகளை எதிர்த்து வழக்காடியவர். தனிநாயகம் அடிகளார் தமிழாராய்ச்சி மாநாடு தமிழ்நாட்டிலும் வேரூன்றுவதற்கு கால்கோள் நாட்டியவர். அதன்தொடர்ச்சியே கலைஞர் ஆட்சியில் நடந்த செம்மொழி மாநாடு.
இலங்கையில் பாரதி நூற்றாண்டு காலம் நினைவுபடுத்தப்படுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தது.  அதன்பின்னரே தமிழ் நாவல் நூற்றாண்டு பற்றி தமிழகம் தெரிந்துகொண்டது.  இவ்வாறு தமிழும் இலக்கியமும் சார்ந்த பல விடயங்களுக்கு இலங்கை முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது.
பாரதியின் தாக்கம் இங்கு இருந்தமையால்தான்  மேற்படி நிகழ்வுகள் இங்கு சாத்தியமாகியிருக்கின்றன. இங்கு வாழ்ந்த முன்னோடிகளான இலக்கிய ஆளுமைகளை  இவ்வேளையிலாவது நினைவுகூர்வோம்.
விபுலானந்தரும் சுந்தர ராமசாமியும்
சுவாமி விபுலானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தம்.
இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப்பெற்றவரான தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் ஸ்தாபகருமான சுந்தரராமசாமி, இலங்கைப்பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களுக்கு 13-10-1992 ஆம் திகதி எழுதிய கடிதத்தைப் பார்ப்போம்.
"........ விபுலானந்த அடிகளைப்பற்றி இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று செ. யோகநாதன் எழுதியது. மற்றொன்று பெ.சு. மணி எழுதியது. இரண்டுமே அறிமுகம் என்ற அளவில் எனக்கு உபயோகமாக இருந்தன. அடிகள் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. தமிழுக்கு உண்மையான தொண்டாற்றியிருப்பவர்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறார்கள். மேலோட்டமானவர்கள் மிகுந்த புகழ் பெற்றிருக்கிறார்கள். கலாசாரவாதி, அரசியல்வாதிகளின் தயவில் வாழவேண்டிய பரிதாப நிலைதான் இன்றும் இருக்கிறது. அங்கு எப்படி என்று தெரியவில்லை. ( ஆதாரம்  கிழக்கிலங்கை ஏடு களம் - மே 1998)
சுந்தரராமசாமி குறிப்பிடும் பெ.சு. மணியின் நூலில் சுவாமி விபுலானந்தர் நோக்கில் மகாகவி பாரதியார் என்ற கட்டுரையில் பாரதியை அறியாத ஒரு தமிழ்மகன் பற்றிய தகவல் பதிவாகியிருக்கிறது.
ஒருசமயம் திருக்கோணமலை இந்துக்கல்லூரியில் நடந்த பாரதிவிழாவில் ஒருவர் பாரதியைப்பற்றி அறிந்தார். ஆனால், அவரே சில நாட்களுக்குப்பிறகு அந்தக்கல்லூரிக்கு வந்து, பாரதி படத்தைப்பார்த்துவிட்டு, " இவர் யார்...? " என சுவாமி விபுலானந்தரிடம் கேட்டார்.
பாரதியை நினைவில் நிறுத்தத்தவறிய அவர்மீது துறவியாக இருந்தும் சுவாமி விபுலானந்தர் சற்றே சீற்றமடைந்தார். " அவர்தாம் கவி அரசர் பாரதி. தமிழகத்தை உய்விக்க வந்த தெய்வம்" என்று சற்று கடுகடுத்த குரலில் கூறினார் விபுலானந்தர்.
1947 இல் மறைந்த சுவாமி விபுலானந்தர், தாம் ஸ்தாபித்த கல்லடி சிவானந்தா வித்தியாலய வளாகத்தில் அமையப்பெற்ற கல்லறையிலேயே  நிரந்தரத்துயில்கொண்டார்.
(தொடரும்)

No comments: