உலகச் செய்திகள்


அமெரிக்கா - வடகொரியா இடையே முறுகல் நிலை தீவிரம்; அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை

117 வடகொரியர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் மலேசிய அரசின் அறிவிப்பு

வைத்தியர் ஒருவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய நிறுவனம்: அதிருப்தியில் மக்கள்! (காணொளி)

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு; ஆசிரியை, எட்டு வயது மாணவன் மரணம்

எகிப்து தேவாலயத்தில் இடம்பெற்ற கொடூரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு :  ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை! (காணொளி இணைப்பு)








அமெரிக்கா - வடகொரியா இடையே முறுகல் நிலை தீவிரம்; அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை

12/04/2017 தம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞை ஏதேனும் கிடைத்தால் அமெரிக்கா மீது அணுவாயுதத் தாக்குதலை நடத்தத் தயங்க மாட்டோம் என வடகொரிய அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா - வடகொரியா இடையே சூடான நிலை தோன்றியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. மற்றுமொரு பரிசோதனையை விரைவில் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க கடற்படையை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பிவைக்க வொஷிங்டன் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியா பிரச்சினைகளை வலியத் தேடுகிறது என்றும் அந்தப் பிரச்சினையை அமெரிக்கா முடித்துவைக்கும் என்றும் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா விரும்பினால், வடகொரியாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், அதற்கு சீனா சம்மதிக்காவிட்டால் அமெரிக்காவே அதைத் தனியாக எதிர்கொள்ளும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வடகொரியா தனது தன்னிச்சையான போக்கைக் கைவிடவேண்டும் என்றும், இதற்காக இராணுவ நடவடிக்கை உட்படப் பல தீர்வுகளைத் தாம் முன்வைத்திருப்பதாகவும் அதில் வடகொரியா எதை வேண்டுமானாலும் தெரிவுசெய்யலாம் என்றும் சிரியாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல் வடகொரியாவுக்கான ஒரு எச்சரிக்கை மணி என்றும் அமெரிக்க இராஜாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள வடகொரியா, அமெரிக்காவின் எந்தவித ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும், வலுவாகவுள்ள தமது அதிநவீன ஆயுதப் படையினர் அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வையும் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்கொரியா மட்டுமன்றி, அமெரிக்காவின் பிரதான நகரங்கள் மீதும் அணுவாயுதங்களைப் பிரயோகிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதைக் கண்டித்திருக்கும் தென்கொரிய பதில் ஜனாதிபதி ஹ்வாங் க்யோ ஆன், அமெரிக்காவின் கட்டளைகளைச் செயற்படுத்தத் தயாராகுமாறு அந்நாட்டுப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி  












117 வடகொரியர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் மலேசிய அரசின் அறிவிப்பு

12/04/2017 மலேசியாவில் உரிய அனுமதியின்றித் தங்கிப் பணியாற்றும் 117 வடகொரியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மலேசிய அரசு பணித்துள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் உறவினரான கிம் ஜோங் நம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையால், மலேசியாவில் உள்ள வடகொரியர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதையடுத்து நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கிப் பணியாற்றிவரும் 117 வட கொரியர்கள் அடையாளம் காணப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு வார காலத்தினுள் அவர்கள் வெளியேற வேண்டும் என மலேசிய குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த 117 பேரினது தங்குமிடம் உட்பட சகல தகவல்களும் தம் வசமிருப்பதாகவும், ஏழு நாட்களுக்குள் அவர்களில் எவரேனும் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண நடைமுறைதானா அல்லது கிம் ஜோங் நம்மின் கொலையை அடுத்து மலேசிய அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கையா என்பது பற்றி குறித்த அமைச்சு கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.   நன்றி வீரகேசரி 











வைத்தியர் ஒருவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய நிறுவனம்: அதிருப்தியில் மக்கள்! (காணொளி)

11/04/2017 தமது ஊழியர்கள் பயணம் செய்யவேண்டும் என்பதற்காக, பயணியொருவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய அமெரிக்காவின் யுனைட்டட் விமான சேவை நிறுவனம் மக்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று யுனைட்டட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சிக்காகோவில் இருந்து கென்டக்கி புறப்படவிருந்தது. அப்போது, யுனைட்டட் விமான ஊழியர்கள் நால்வரை அவசரமாக கென்டக்கிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், யாராவது பயணிகள் நால்வர் தமது ஆசனங்களை ஊழியர்களுக்காக விட்டுத் தருமாறு கோரப்பட்டது. 
அதற்கு மறுத்த பயணியொருவரை விமான நிறுவன ஊழியர்கள் அவரது ஆசனத்தில் இருந்து பலவந்தமாக இழுத்துச் சென்றனர். சக பயணிகள் இதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியுற்றதுடன், ஊழியர்களின் செயலை வன்மையாகக் கண்டித்தனர். இந்தக் காட்சியை சக பயணியொருவர் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பலரும் யுனைட்டட் விமான சேவை நிறுவனம் குறித்து தமது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.
ஒரு ஆசியர் என்ற காரணத்தினால்தான் அவரைத் தெரிவுசெய்து வெளியேற்றியிருக்கிறார்களா என்றும் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
குறித்த பயணி, தான் ஒரு மருத்துவர் என்றும், கென்டக்கியிலுள்ள தனது நோயாளர்களைச் சந்திக்கவேண்டியிருப்பதால் ஆசனத்தை விட்டுத் தர முடியாது என்றும் கூறினார். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத விமான ஊழியர்கள், அவரது கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றனர். இதன்போது அவரது முகத்திலும் காயம் ஏற்பட்டு இரத்தக் கசிவும் ஏற்பட்டது.
அவசர நேரங்களின்போது ஆசனங்களை விட்டுத் தரக் கேட்பது நியாயமானதே என்றாலும் இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் பயணிகளை வெளியேற்றமை குறித்து சிக்காகோ விமான சேவைகள் திணைக்களம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், இச்சம்பவம் குறித்து மன்னிப்புக் கேட்க யுனைட்டட் விமான சேவை நிறுவனத் தலைவர் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 













பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு; ஆசிரியை, எட்டு வயது மாணவன் மரணம்

11/04/2017 பாலர் பாடசாலைக்குள் திடீரெனப் புகுந்த நபரொருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியையும், எட்டு வயது மாணவனும் பரிதாபமாகப் பலியாகினர். துப்பாக்கிதாரியும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்டவரின் பெயர் செட்ரிக் எண்டர்சன் என்றும், இவர், கொல்லப்பட்ட ஆசிரியையான இலெய்ன் ஸ்மித்தின் முன்னாள் கணவர் என்றும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்பாடு, குடும்ப வன்முறை போன்ற பல குற்றச்சாட்டுக்களையடுத்து செட்ரிக்கை விட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் இலெய்ன் ஸ்மித் பிரிந்தார்.
இந்நிலையில், இலெய்னிடம் சில பொருட்களைக் கையளிக்க வேண்டும் என்று கூறி, இலெய்ன் ஸ்மித் பணியாற்றிய பாலர் பாடசாலைக்குள் நுழைந்தார் செட்ரிக். இலெய்னின் வகுப்பறைக்குச் சென்ற அவர், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன்வசமிருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாகச் சுட்டார்.
இதில் இலெய்னும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எட்டு வயதுச் சிறுவன் ஒருவனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு சிறுவன் படுகாயமடைந்தான். சற்றும் தாமதிக்காமல் செட்ரிக் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.
ஆபத்தான நிலையில் செட்ரிக்கும் மற்றொரு சிறுவனும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். எனினும் செட்ரிக்கின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
 இந்தச் சம்பவத்தினால் கடும் அதிர்ச்சிக்குள்ளான அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை முன் உடனடியாகத் திரண்டனர். எனினும் சுமார் இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னரே அவர்கள் தங்கள் பிள்ளைகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.   நன்றி வீரகேசரி 













எகிப்து தேவாலயத்தில் இடம்பெற்ற கொடூரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு :  ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை! (காணொளி இணைப்பு)

10/04/2017 எகிப்து தலைநகர் கெய்ரோவின் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில், நேற்று (09) குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்திருந்துது.

இதில் நேற்றைய தகவலின்படி 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில் குறித்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 47 ஆக உயர்ந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த குண்டுவெடிப்பில் தேவாலாயத்தின் உட்பகுதியிலிருந்த 27 பேரும், தேவாலயத்தின் வெளிப்பகுதியிலிருந்த 16 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தேவாலயத்தில் நடத்தப்பட்டுள்ள குறித்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளதுடன், மேலும் தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
நன்றி வீரகேசரி














No comments: