.
அன்பாலயம் நடாத்தும் வருடாந்த கலைநிகழ்வு சென்ற வாரம் Blacktown Bowman Hall இல் இடம்பெற்றது.
அந்த நிகழ்வு மூலம் கிடைக்கும் நிதியினை நம் தாய் நாட்டின் துயர் துடைக்கும் பணியில் செலவிட்டு மக்களுக்கு அரியதொரு சேவையினை படைத்து வருகின்றனர்.
அவர்களின் இந்த சேவை தொடர மக்களாகிய எமது ஆதரவு நிச்சயமாக அவர்களுக்கு கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடனும் அவுஸ்திரேலிய தேசிய கீதத்துடனும் சரியாக
6 மணிக்கு நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடடவாறு ஆரம்பமாகியது
. மேடை அமைப்பும் சற்று வித்தியாசமாக இரு வேறு உயரங்களில் இருந்தமை அழகாகவும் இரு வெவ்வேறு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் காட்டக் கூடியதாகவும் அமைந்திருந்தது.
சற்று வித்தியாசமாக
தமிழ் தாய் வாழ்த்திற்கு மாணவர்கள் அபிநயம் பிடித்திருந்தமை புதியவை புக வழி வகுத்திருந்தது.
எனினும் மக்கள் மத்தியில் தமிழ் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பதா இல்லையா என்ற ஒரு சந்தேகத்தை அது எழுப்பியதை காணக் கூடியதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற அபிராமி குமாரதேவனின் மாணவிகளின் நடனம் மிகவும் நன்றாக இருந்தது.
தொடர்ந்து இடம் பெற்ற Quackers Hill தமிழ் பாடசாலை மாணவர்களின் செம்மொழியாம் தமிழ் மொழி நிகழ்வு இளம் சிறார்களைக் கொண்டு மேடை யேற்றப் பட்டிருந்தது.
ஏராளமான சிறார்கள் அதில் பங்கு கொண்டிருந்தார்கள். மிகவும் அருமையான ஒரு ஆக்கம்
, அழகாக அரங்கேறியது. அந்த நிகழ்வினை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் மேடையின் ஒரு புறமிருந்து மறுபுறம் ஓடிக் கொண்டிருந்ததை தவிர்த்திருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றியது.
அது ஒரு சிறிய குறையே.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இடம் பெற்ற சக்தி இசைக்குழுவினரின் இன்னிசை ராகம் நம்மெல்லோரையும் நாத வெள்ளத்தில் மூழ்க வைத்தது என்றால் மிகையாகாது.
ஒவ்வொரு பாடகரும் தமக்குரிய பாடல்களை மிகவும் அழகாக பாடியிருந்தார்கள்.
அவர்களுக்கு சிகரம் அமைத்தாற்போல் பின்னிசையினால் மக்களை இசையின் வசமாக்கியிருந்தனர் சக்தி இசைக் குழுவினர். அவர்களுக்கு நிச்சயமாக எமது பாராட்டுக்கள். அவர்களின் இசைப் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அதனைத் தொடர்ந்து சிறு இடைவேளையுடன் இடம் பெற்றது ஓர் அரச நாடகம். நீதி கேட்ட சோழ நங்கை எனும் தலைப்பில் கண்ணகியின் கதை அரங்கேறியது. இளையோரினால் வழங்கப்பட்ட நாடகம் எம்மை எம் பாடசாலை வாழ்க்கைக்கு இழுத்துச் சென்றது. பழைய வரலாறுகள் நினைவு கூர நிச்சயமாக இவ்வாறான வரலாற்று நாடகங்கள் இடையிடையே இடம் பெற வேண்டும் என்பது எனது அவா கூட. நடிகர்களிடம் திறமை இருந்தது முக்கியமாக அரசனிடம் குரலில் ஏற்றத் தாழ்வுகள் நன்றாகவே இருந்தது.
எனினும் நாடகத்தின் நேரத்தை சிறிது குறைத்து சொல்லவேண்டியதை சுருக்கமாக சொல்லியிருந்தால் அது இன்னமும் மக்களின் மனதை சென்று தொட்டிருக்கும். கண்ணகியிடம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.
கணவனை இழந்த கண்ணகி சிவப்பு சேலையுடன் வந்தது ஏனொ என எண்ணத்தோன்றியது.
அதனை கொஞ்சம் கவனத்தில் கொண்டிருக்கலாம்.
சோகமான இடத்தில் சோகத்தையும் கோபமான இடத்தில் இன்னும் கொஞ்சம் கோபத்தையும் நாம் எதிர்பார்த்தோம் என்றால் பொய்யில்லை.
இவையாவும் குரலில் காட்ட வேண்டிய உணர்வுகள். இவற்றை அடுத்து வரும் நாடகங்களில் கவனத்தில் கொண்டால் நன்று என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
இனிப் போட்டி நிகழ்விற்குப் போவோமா
? முதலில் பாட்டுப் போட்டி
, 5 சிறார்கள் மிகவும் அருமையாக பாடி மக்களின் கர கோசத்தை பெற்றார்கள்
. மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று திக்கு முக்காடிப் போனார்கள்.
இறுதியாக நம் எல்லோருக்கும் பரிச்சயமான பாடகர் பாவலனின் மகள் அகல்யா
" ஏழு ஸ்வரங்களுக்குள் " பாடலை பாடி ,இந்தக் குழந்தைக்குள் இத்தனை ராகமா என எல்லோரையும் வியக்க வைத்து முதல் பரிசை தட்டிச் சென்றார்.
அதே போல் பல குழு நடனங்கள் இடம் பெற்ற போதும் தனித்து பலவிதமான நடனங்களை ஒரே மேடையில் சில நிமிட நேரத்துக்குள் ஆடி மக்கள் மனதை கொள்ளை கொண்ட குட்டித் தேவதை அஸ்விதா ஸ்ரீதரன் நடனப் போட்டியில் முதல் பரிசை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சி சரியான நேரத்திற்குள் முடிவடைந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை
நிச்சயமாக பாராட்ட வேண்டும். அடுத்த வருடங்களில் நிகழ்ச்சிகளின் தராதரத்தை இன்னும் உயர்த்தினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
No comments:
Post a Comment