தீர்வு - சிறுகதை - யோகன் - கன்பரா

.


அந்த வெள்ளை வானை மிக அண்மையில் கண்டதும் தில்லைக்கு திக்கென்றது. இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை. வீடு போய்ச் சேரும் அவசரத்தில் இப்படி அகப்பட்டாயிற்று. காலையில் இதைபற்றி உஷாவுடன் விதண்டாவாதம் செய்தது ஞாபகத்திற்கு வந்து போனது.

வெள்ளை வான் என்றதும் இது ஊரில் நிகழ்ந்த ஆட்கடத்தல் விவகாரம் என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.
கன்பெரா நகரின் பல இடங்களிலும் இப்போது பெருகி வரும் வாகன வேகத்தை சோதிக்கும் ஸ்பீட் கமரா வெள்ளை வானைப் பற்றித்தான் இது.

பலரும் ஏறி விழும் குதிரைதான் இந்த வெள்ளை வான் ஆனாலும் எப்படி தில்லைக்கு மட்டும் இது அடிக்கடி நிகழ்கிறது?

ஐந்து மணிதான் என்றாலும்  வின்டருக்கு இருளத் தொடங்குகிறது.
மலைகளுக்கு மேல் வானம் கறுத்துப் போய் ஓரிரு வெண் மேகங்கள் மட்டும் மலை நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தன. பாதையின் இறக்கத்தில் செல்லும் காரிலிருந்து பிரிண்டபெலா மலைச்சாரலை முன் கண்ணாடிக்குள்ளால் பார்த்தபடியே வந்தான்.  வானத்தின் நிறத்தைப் போல மலைகளும் கறுத்துக் கிடந்தன. பனிபுகாரில் நீலமாயும் வெயிலில் பச்சையாயும் உருமாறும் அதே மலைகள்தான்.
சரிவில் இறங்குகையில் காரின் வேகம் அதிகரித்திருந்தது என்பதை வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த வெள்ளை வானைக் கண்ட பின்னரே தெரிந்தது. எண்பது கிலோமீட்டரில் ஓடவேண்டியது தொண்ணூறைத்தொட்டு விட்டது. இப்படியாக தில்லை ஒரு தண்டப் பணம் கட்டினான்.



இருபது வருடங்களுக்கு மேல் கார் ஓடும் தில்லை எந்த கார் விபத்திலும் அகப்பட்டது கிடையாது. ஒரு தடவை பின்னாலிருந்து வந்த ஒரு முன் யோசினை இல்லாதவன் வந்து இவன் காரை முட்டியது தவிர.

'உங்களுக்கு மட்டும் முன் யோசினை நிரம்பி வழிகிறதாக்கும். அடிக்கடி ஸ்பீட் கமரா fine கட்டுவதிலிருந்து தெரிகிறதே"
அவன் மனைவி உஷாவும்; காரில்தான் வேலைக்குப் போகிறாள். இது வரை பில் ஒன்றும் வரவில்லை.

இன்று காலை உஷா ஒரு விவாதத்தைக் கிளப்பினாள். நடுவர் ஏதுமில்லாத விவாதத்தில் வழமை போல் பிரதி வாதியாக தில்லை தோன்றினான்.

"எப்பொதும் பிந்தி வீட்டுக்கு வருவதால்தான் இந்தப் பிரச்சினை"

"பிந்தி வாறதுக்கும் வெள்ளை வானுக்கும் என்ன சம்பந்தம்?"

"பிந்தி வந்தால் தெருவில் ஆட்கள் இல்லை என்ற தைரியத்தில் காரில் கனா கண்டு கொண்டு வேகமாய் ஓடுகிறீர்கள்"

"வேலையில் எத்தனையோ பிரச்சினைகள்; உமக்கென்ன தெரியும்"

“ஏதோ நீங்கள் ஒருவர்தான் உலகத்திலை வேலை செய்கிற ஆள் போலை கிடக்கு.”

“நாய் செய்யிற வேலையை கழுதை செய்ய ஏலுமோ?”

"பெரிய வேலை. எல்லாரும் வீடு வார நேரத்துக்கு வந்தால் றோட்டிலை நிறைய கார்கள் போகும். fast ஆக போக ஏலாது. பிடிபடவும் மாட்டீர்கள்."

இரண்டாம் வகுப்புப்; படிக்கும்; அஞ்சலியை தில்லைதான் பாடசாலையில் விடுகிறான்.
7 மணிக்கு வேலை தொடங்கும் உஷா மகளை பாடசாலை முடிய ஏற்றுவதற்கு வசதியாக இருவரிடமும் கார் இருந்தது. கார் இல்லார்க்கு கன்பெரா இல்லை.  

அன்று பாடசாலைக்கு கொஞ்சம் முந்தி வந்து விட்டான் அது தனியார் பாடசாலை. சிறு பிள்ளைகள் காரிலிருந்து இறங்க கதவைத்திறந்து உதவும் பெண்ணைக் காணவில்லை. பின்னால் ஒரு கார் நின்றது. அஞ்சலியே கதவைத்திறந்து கொண்டு இறங்கி கதவை சாத்தி bye சொல்லி போனாள்.

அஞ்சலி பாடசாலை பஸ்கள் வரும் சிறு தெருவொன்றையும் கடக்க வேண்டும். சில வினாடிகள் பொறுத்து நிற்கையில் பின்னாலிருந்த பொறுமையில்லாதவன் ஹெட் லைட்டை அடித்து அவசரப்படுத்துகிறான். தில்லை காரை மெதுவாக எடுத்துவிட்ட போதும்; மனம் கேட்கவில்லை. பாதுகாப்பாக கடந்திருப்பாளா? யோசினையில் பாடசாலையின் வளைந்த தெருவில் அவன் கார் ஊர்ந்தது. பின்னால் தொடர்ந்து வந்த அந்த அவசரக்குடுக்கை ஹோர்ன் அடித்ததும் தில்லைக்கு கோபம் தலைக்கேறியது. அவசரமாகக் காரைத் தெருவுக்கு எடுத்த தில்லை பாடசாலைப் பிராந்தியத்தில் அமைதியாக அடக்க ஒடுக்கமாக நின்றிருந்த வெள்ளை வானைக் கவனிக்கத் தறிவிட்டான்.;
40 இல் 49 இல் ஓடி நூற்று முப்பது டொலர்களுக்கு தண்டம் வந்தது.

மீண்டும் வீட்டில் குருஷேத்திரம்.

“இப்ப எல்லா இடங்களிலும்தான் செக் பண்ணுகிறாங்கள். தெருவைப் பார்த்து ஓடத் தெரியாதே”

“எந்த இடத்தில் எந்த வேகத்தில் ஓட வேண்டும் என்பதை மறப்பதுதான் பிரச்சினை.”

“என்னப்பா பெரிய எழுத்திலை 40 60 80 எண்டு எழுதியிருக்கிறது கண்ணுக்குத் தெரிகிறதில்லையே”

“கண்ணுக்குத் தெரிந்தாலும்; சில வேளை வேறு யோசனைகள் வந்து இதை மூழ்கடித்து விடுகிறது.”

“அப்படி என்னப்பா  யோசினை உங்களுக்கு ?”

“மூளை இருந்தால் யோசினை இருக்கத்தான் செய்யும்.”

இதன் பின் யாருக்கு மூளை உண்டு யாருக்கு இல்லை என்ற வாதம் விதண்டாவாதமாகி;  தொடர்ந்தது யுத்தம். களத்தில் குற்றுயிராகக் கிடந்த தில்லையை காப்பாற்ற வந்தாள் அஞ்சலி. காப்பாற்ற எங்கே வந்தாள்? பசிக்குதென்று அழுது கொண்டு வந்ததால் யுத்தம் நின்றது.



கன்பெராவில் தேர்தலுக்கான ஆரவாரங்கள் தொடங்கி விட்டன. தெருவோரமெங்கும் விளம்பரங்கள் பனிக்கு காளான் போல முளைக்கத் தொடங்கின. வேலை செல்லும் அவசரத்தில் பலரும் இவற்றை பார்த்தும் பாராததுமாகச் செல்கின்றனர்.
ஆளும் எதிர்க்கட்சிகளை விட பல்வேறு பெயர்களில் சிறிய கட்சிகளின்; பதாகைகள் தத்தமது கோஷங்களுடன் எழுந்து நின்றன.

கார் ரேடியோவில் வேறு கட்சிகளின் வாதபிரதி வாதங்கள்.  அன்று ரேடியோ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் இன்னொரு சுவாரஸ்யமான தலைப்பை தொடங்கினார். வெள்ளை வான் சோதைனகள் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கிறனவா அல்லது திறைசேரியின் வருமானத்தை கூட்டுகின்றனவா என்பதுதான் அது. எது எப்படியிருந்தாலும் இந்த சோதனைகளால் தில்லை போன்ற காரோட்டிகளுக்கு சோதனை காலம் என்பது மட்டும் உறுதி.

தில்லையின் வியாள மாற்றமோ அல்லது அட்டமத்துச் சனியனோ அன்று கார் ரேடியோவை கேட்டுக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில்; மூன்றாம் தடவையாக வெள்ளை வானிடம் சிக்கினான். வளைந்த தெருவில் மறைவாகப் பதுங்கியிருந்த வெள்ளை வான் ஓநாய் கோழியை பக்கென்று அமுக்கிப் பிடிப்பது போல தில்லையின் காரை சட்டென்று கமராவில் படம் பிடித்துக்; கொண்டது.

இந்த வருடத்தில் மூன்றாவது பில். தண்ணீரும் மூன்று முறை தான் பொறுக்கும் என்பார்கள்.

டிவி குறுந்தொடர் நாடகம் போல இழுத்தடிக்காமல் இந்தக்  பிரச்சினைக்கு ஒரு முடிவு காண விரும்பினான் தில்லை. பஸ்சில் வேலைக்குப் போய் வந்தால் என்ன? நிலவுக்குப் பயந்து பரதேசம் போவதா? பரதேசம் அல்ல பல தேசம் காட்டும் பஸ். தில்லையின் வீட்டுக்கு வர எக்ஸ்பிரஸ் பஸ் இல்லை. பல ஊர்களைச் சுற்றியே வரவேண்டும்.  காரை விட இருமடங்கு நேரம் பஸ்சில் இருக்க வேண்டும். அதை விட அஞ்சலியை பள்ளியில் விடுவது இன்னொரு பிரச்சினை.

ஒரு பிரச்சினையைத் தீர்க்கப் போனால் பல புதுப் பிரச்சினைகள் முளைக்கும்.
இதனால் பிரச்சினையை தீர்க்காமல் கொஞ்சக் காலம் ஆறப்போட்டான் தில்லை பதவிக்கு வரும் அரசாங்கங்கள் செய்வது போல. மறந்து விடுவதைப் போல மருந்து வேறென்ன உண்டு உலகில்.?

நாலைந்து மாதங்கள் கடந்தன. அதிஷ்டவசமாக உஷாவுக்கு புதிய வேலையொன்று பதவி உயர்வுடன் தில்லையின் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே கிடைத்தது. இருவரும் ஒரே காரிலேயே வேலைக்குப் போய் வந்தனர். இவர்கள் வேலையால் வரும் வரை அஞ்சலியை பாடசாலையிலேயே பராமரிக்கும் ஒரு ஒழுங்கு செயப்பட்டது.

நாட்களின் ஓட்டத்துடன் போட்டியாக அவர்களின் ஓட்டமும்; தொடர்ந்தது.

அன்று காரில் இருவரும் வேலைக்குக் போய்க்கொண்டிருக்கையில் உஷா அவனிடம்

“இருந்தாலும் உங்கள் பிரச்சினைக்கு இப்பிடி ஒரு தீர்வு வருமெண்டு நான் நினைச்சும் பாகேல்லை.”
“என்ன பிரச்சினை”
“ஸ்பீட் கமராதான்”
..”ம்….” என்றான் தில்லை யோசனையிலாழ்ந்தவாறு.

அதையிட்டு அவள் அலட்டிக் கொள்ளவில்லை.

காரணம் இப்போது ட்ரைவர் அவளல்லவா?

No comments: