அயலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழி நிலைத்திருக்குமா?

.

போன வாரம் புத்தாண்டு விருந்திற்கு நானும் எனது மனைவியும் தமிழ் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கே மேலும் சில தமிழ் குடும்பத்தினரையும் சந்திக்க நேர்ந்தது. அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். டொராண்டொவை விட்டு இங்கே வந்த புதிதில் இங்குத் தமிழர்களைச் சந்திப்போம் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டை விட்டு வெகுதொலைவில் வாழ்கின்ற எங்களுக்கு இத்தகைய சந்திப்புக்கள் மனதை இலேசாக்கி சந்தோசமடையச் செய்தது என்றே சொல்ல வேண்டும். விருந்தில் பெரியவர்கள் ஒரு பக்கம் பேச்சில் ஆழ்ந்த போது, அங்கே வந்திருந்த சிறுவர்கள் அனைவரும் ஒன்று கூடி விளையாடினர். அதில் ஒரு குழந்தை தற்போது தான் தமிழ்நாட்டிலிருந்து பெற்றோரோடு வந்திருக்கின்றாள். அதனால் தான் என்னவோ மற்ற குழந்தைகளும் சரளமாகத் தமிழில் பேசின.

ஒரு மொழி என்பது நம்மை எப்படி வடிவமைக்கின்றது. ஒத்த மொழி பேசுகின்ற ஒரு சூழலில் நாம் இயல்பாக உணர்கின்றோம், அது நமக்கு மகிழ்ச்சியையும் தருகின்றது. ஆனால் மொழி சார்ந்த இனமான தமிழர்களின் பிரதான அடையாளமான மொழி அந்நிய நாடுகளில் அடுத்தடுத்த தலைமுறையைச் சென்றடையுமா என்றால் அது கேள்விக்குறிதான்.

எந்த மொழியில் ஒரு மனிதன் சிந்தித்து, தனது எண்ணங்களைத் தடையின்றி வெளிப்படுத்துகின்றானோ. அது தான் அவனது தாய்மொழியாகும். அந்த மொழியே அவனது பெற்றோரின் மொழியாகவும், அவனது பிள்ளைகளுக்கும் மொழியாகவும், அவனது சுற்றத்தின் மொழியாகவும், அவனது கல்விக்கான மொழியாகவும், அவனது பணியிடத்து மொழியாகவும், அவனது பொழுதுபோக்கு மொழியாகவும், அவனது நண்பர்களின் மொழியாகவும், அவனது உறவினர்களின் மொழியாகவும் இருக்க வேண்டியதில்லை. அப்படி அனைத்து மொழியும் ஒன்றாக இருந்தால் அது சிறப்பானது தான், ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை. எந்தவொரு மொழி அவனது எண்ணக்கருவை, சிந்தனைப்புலனை, நினைவாற்றலை பெருக்கிக் கொண்டு முதன்மை மொழியாகவும், அவனது எண்ணம், பேச்சு, எழுத்து, தொடர்பாடல் போன்றவற்றில் முதன்மை மொழியாகத் திகழ்கின்றதோ அது தான் அவனது முதன் மொழி, தாய் மொழி, தந்தை மொழி எல்லாம். பிள்ளையின் தாய்மொழியாக எது இருக்க வேண்டும் எனப் பெற்றோரும், வாழ்வியல் சூழலும் தான் தீர்மானிக்கின்றன.



நிச்சயம் தமிழ் தாயகப் பகுதிகளில் ( தமிழகம், புதுவை, வட இலங்கை ) இருந்து நாம் வேற்றிடத்துக்குப் புலம்பெயரும் போது நமது முதன்மை மொழி என்பது அடுத்தடுத்த தலைமுறைகளில் மாறிவிடுகின்றது. ஒரு வட்டாரத்திலோ, ஒரு பகுதியிலோ பெருமளவிலான ஒரே மொழி பேசும் மக்களாகப் புலம்பெயரும் போது, அங்கு மாற்று மொழிக்கான தேவை குறைந்துவிடும் போது அங்குத் தாய்மொழி நிலைத்திருக்கும்.

இதனால் தான், தமிழ்நாட்டுக்கு வெளியே இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் தமிழ் முழுமையான வாழும் மொழியாகத் திகழ்ந்து வருகின்றது. இத்தோடு தமிழ் மொழிவழி கல்வியும் பெரும் பங்காற்றுகின்றது.

அத்தோடு தமிழர்கள் செறிந்து வாழும் பெங்களூரு, மும்பை, அந்தமான், சிங்கப்பூர், வளைகுடா போன்ற இடங்களில் தமிழ் ஓரளவிற்குக் கல்வி மொழியாகவும், பேச்சு மொழியாகவும் இருந்து வருகின்றது. பெங்களூரு போன்ற தமிழகத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்வோருக்குத் தமிழ் தாய்மொழியைப் போதிப்பது எளிது தான். ஒன்று பெங்களூரு தமிழக எல்லையில் இருக்கிறது. பெங்களூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை அதிகம், பெங்களூரின் பிரதான மொழியான கன்னடம் தமிழோடு தொடர்புடையது. பெங்களூருவில் தமிழ் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், பத்திரிக்கைகள் கிடைக்கின்றன, பெங்களூருவில் பள்ளியில் தமிழை ஒரு பாடமாகவும், அல்லது முழுத் தமிழ் வழியிலும் கூடக் கல்வி கற்க முடியும். ஆனால் தமிழ்நாட்டவர்கள் மற்ற மாநிலங்களுக்குப் போன பின் தமிழுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது தான் நிதர்சன உண்மையாகும்.

ஆனால், அதையும் கடந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழி மூன்று தலைமுறைகள் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மொரிசீயஸ், றியூனியன், தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் நூறாண்டுகளுக்கு முன் குடியேறிய போது இன்றுள்ளது போல வானொலி, தொலைக்காட்சி, இணையம் என எந்தவித வசதியும் இருந்திருக்கவில்லை. தமிழைக் கற்க புத்தகங்கள் கூட இல்லை, அதனால் அங்குள்ள தமிழர்கள் தமிழை மறந்து போயினர்,

ஆனால் ஐரோப்பா, கனடா, அமெரிக்கா என இன்று குடியேறுகின்ற தமிழர்களுக்குத் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைகள், இணையதளங்கள், அவ்வளவு ஏன் தமிழ் வகுப்புகள் கூடக் கிடைக்கின்றன. ஆனால், தமிழைக் கற்கும் மனப்பாங்கு குறைந்தே காணப்படுகின்றன.

அமெரிக்காவின் பென்சில்வானியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையைச் சேர்ந்த சுரேஷ் கனகராஜா என்பவர் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா நாடுகளில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர் மத்தியில் நடத்திய ஆய்வில் தமிழ் மொழி அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்றடைவதில் உள்ள இடர்களைத் தெளிவாகக் கண்டறிந்துள்ளார். இந்த நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்களில் வெறும் 42 % பேருக்குத் தான் தமிழ் தெரிந்திருக்கின்றது. மூன்றாம் தலைமுறையை அடையும் போது, இது மேலும் குறைந்துவிடும்.

இந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் அடுத்தத் தலைமுறையினரது முதல் மொழியாக என்னவோ அந்தந்த நாட்டு மொழியாகவே இருக்கின்றன என்பது தான் உண்மை. சில பெற்றோர்கள் மட்டுமே சிரத்தை எடுத்து தமிழை ஒரு கூடுதல் மொழியாகக் கற்பிக்கின்றனர். தமிழை வாரயிறுதி நாட்களில் மட்டும் கற்றுக் கொண்டு 18 வயதை அடைந்ததும் தமிழோடு எவ்வித பிணைப்புமின்றிப் போய் எதோ கொஞ்சம் தமிழ் பேச வரும், பேசினால் புரிந்து கொள்வார்கள் என்ற நிலையில் சிலரை நான் சந்தித்தும் இருக்கின்றேன். சுத்தமாகத் தமிழே தெரியாமல் பேசினால் புரிந்து கொள்வார்கள் என்ற நிலையில் உள்ளோரையும் கண்டதுண்டு.

கனடாவைச் சேர்ந்த விபூசன் எழுதுகின்றார், "நான் கார்ட்டூன் பார்ப்பதற்காக எல்லாம் தமிழ் வகுப்புக்களுக்கு மட்டம் போடவில்லை. நான் தமிழ் வகுப்புகளுக்குப் போக விரும்பியதே கிடையாது, ஏனெனில், தமிழ் படிப்பது மிகக் கடினமாக இருந்தது. என்னால் நல்லாவே தமிழ் பேச முடியும், ஆனால் வாசிக்கிறதோ, எழுதிறதோ வேறு கதை. ஒவ்வொரு வரியா எழுத்துக் கூட்டி தமிழில் வாசிக்கிறதுக்கே ஒரு மணிநேரம் ஆயிடும், அதை நினைச்சாலே எனக்கு அவமானமாவும், வெட்கமாவும் இருக்கும். இத்தனைக்கும் தமிழ் வகுப்பாசிரியரே என் அம்மா தான்." என்கிறார்.

அயலகங்களில் தமிழைப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுப்பதில் முக்கியப் பங்கு நமது தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சிகளின் பாப்புலராட்டி மட்டுமே. அவையும் இல்லை என்றால் மாற்று மொழி பகுதிகளில் வாழ்வோருக்குத் தமிழ் மீதான ஈடுபாடே இல்லாமல் போயிருக்கும்.

உண்மையில் பல தமிழ் குழந்தைகள் தமிழைக் கற்க விரும்புவதில்லை. அதற்குப் பிரதான காரணமே, நம் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கும் தமிழானது கிபி 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணத்தை வைத்துக் கொண்டு, பேச்சு மொழிக்குத் தொடர்பே இல்லாத ஒரு தமிழை நம் பிள்ளைகள் மீது திணிக்கின்றோம். ஏனைய மொழிகளை விடத் தமிழ் இருமைய மொழியாக இருக்கின்றது. நாம் பேசும் தமிழ் ஒரு மாதிரியாகவும், எழுதும் தமிழ் வேறு மாதிரியாகவும் இருக்கின்றது. குழந்தைகளுக்கு இந்த இருவிதமான தமிழ் குழப்பமடையச் செய்கின்றது.

Harold F. Schiffman என்ற தமிழறிஞர் இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பலமுறை எழுதி வந்திருக்கின்றார். மலையாளம் போன்ற மொழிகளை அதிகளவு தங்குதடையின்றிப் பிள்ளைகள் கற்கின்றனர். ஏனெனில், தமிழை விட மலையாளத்தில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் அதிக வேறுபாடு கிடையாது. குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பேச்சு மொழியை ஒத்த எளிய தமிழைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், அதை நன்கு கற்றுத் தேறிய பின், மெல்ல உயர்வகுப்புகளில் இலக்கியத் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

அதுமட்டுமின்றித் தமிழர்கள் தம் பிள்ளைகளை அடிக்கடி தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர், உற்றோர், உறவினர் வீடுகளுக்குக் கூட்டிச் சென்று கோடை விடுமுறையில் போய்த் தங்கிவிட்டு வாருங்கள். செவியும், கண்ணும் தமிழைத் தானாகக் கற்றுக் கொடுக்கும். மொழி அதன் வாழும் சூழலிலேயே போய்க் கற்பது தான் இயல்பானது,

ஆனால் வெகுசிலரே அடிக்கடி தமிழ்நாட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் வருகின்றனர். அதிலும் சிலர் மட்டுமே அங்குச் சில வாரங்களாகவது கழிக்கின்றனர். அவ்வாறு தமிழைக் கற்று, தமிழ்நாட்டுக்கு அடிக்கடிப் போய் அங்கே ஒரு சில வாரங்களாவது தங்கி வந்தால் மட்டுமே தமிழ் மொழியானது அப் பிள்ளைகள் மனதில் பதிகின்றன.

என்ன தான் தமிழைப் பேசவும், எழுதவும் தெரிந்து கொண்டாலும் தமிழின் தனித்தன்மை அதன் அழகியல் அதன் இலக்கியத் தகமை அதன் வரலாற்றுப் பின்புலம் அதன் பழமை அதன் ஆழமான அறிவுக் கோட்பாடுகளைத் தமிழை ஆழமாக கற்று கொண்டால் மட்டுமே பெற முடியும். ஆனால் அவரவர் தேவைகள், வசதிகள், வாய்ப்புக்கள், எதிர்காலத் திட்டங்களுக்கு அமையத் அவரவர் வாழ்வில் தமிழின் இடம், இடம்மாறி விடுகின்றது. என்ன இருந்தாலும் தாய்நாட்டோடும் தமிழ் பண்பாடோடும் தொடர்பில் இருக்க விரும்புவோர் தம் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பது மட்டுமே ஒரே வழி.

- பிரக்ஞகன்

http://pragnaigal.blogspot.com.au


உங்கள் கட்டுரை எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. பல மொழி பேசும் மாநிலங்கள் அடங்கிய இந்தியா போன்ற தேசத்தில், தில்லியில் இருக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழில் பேச மட்டுமே வரும்; எழுதப் படிக்க வாராது. தமிழ்நாட்டில் வசிக்கும் லட்சக்கணக்கான தெலுங்கர்களுக்கு அம்மொழியைப் பேச மட்டுமே வரும்; எழுதப் படிக்க வராது. கர்நாடகத்தில் மங்களூர், குடகு மக்களுக்கு கன்னடத்தைப் பேச மட்டுமே வரும்; எழுதப் படிக்க வராது... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மொழி என்பது ஒரு absolute thing அல்ல. பணம் மாதிரி அதுவும் ஒரு பயன்பாட்டுப் பொருள். குறிப்பிட்ட மொழியால் பயன் கிடைக்கும் என்றால் மட்டுமே அதை ஒருவர் படிக்க ஆரமிக்க விரும்புவார்கள். தாய்மொழியைவிட இன்னொரு மொழிதான் தனக்கு சோறுபோடும் என்றால், அந்த இன்னொரு மொழியைத்தானே அவன் கற்க வேண்டியதாகிறது?

நாம் செய்யவேண்டியது, தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மீடியத்தில் படிக்குமாறு செய்வதே.

பிற நாடுகளில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகள் தமிழைப் படிக்காமல் இருப்பதில் வியப்பில்லை. ஆனாலும், பெற்றோர்கள் என்ற முறையில் அவர்களுக்கு தமிழ் மொழியை சிறிதளவாவது நாம் சொல்லிக்கொடுத்தால் என்றாவது பயன் விளையலாம்.
-இராய செல்லப்பா நியூஜெர்சி

No comments: