வரலாற்றிற்கு முற்பட்ட கற்கால மனிதனின் கலைகள்

.
கலை, கலகம்: கலை இயக்கங்கள் (பழைய கற்காலம் தொடங்கி போஸ்ட் மார்டனிச காலகட்டம் வரை)
(கி.மு. 7,00,000 - கி.பி. 1950)
bhimbetka art

தொடங்குவதற்கு முன்…
மனிதனின் அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருப்பது கலைகள். நிகழ்கால சமூகத்தின் அக, புறப் பிரச்சனைகளையும், சமூகத்தின் மீதான ஆளும் வர்க்க அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து மனித சமூகம் ஒரு தீர்வை நோக்கி நகர வடிகாலாகவும், கலகக் குரலாகவும் இருந்து செயல்படுபவைகள் கலைகள். அது எந்த வகையிலான கலைகளாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த இயங்கியல் இதுவாகத்தான் இருக்கும். மனித சமூகம் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகளாக கலைகள் மனித சமூகத்தை முன்னகர்த்திச் செல்லும் கருவிகளில் முக்கியமான கருவியாக இருந்து வருகிறது.
மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுடன் சேர்த்து, தன்னையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொள்ள கூடியவைகள் கலைகள். கலைகள் ஒரே கட்டத்தில் தேங்கிவிடக் கூடியவைகள் அல்ல. சமூகத்தின் வளர்ச்சியை விரும்பாத, வளர்ச்சி பெறாத ஒரு சமூகத்தை அடிமையாகக் கொண்டு அதிகார, பொருளாதார குளிர்காய நினைக்கும் மனித முயற்சிகள் வேண்டுமானால் செயற்கையாக கலைகளை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் ஒரு தேக்க நிலையிலேயே முடக்க முடியுமே ஒழிய, கலைகள் தன்னியல்பாக ஓரிடத்தில் தேங்கக் கூடியவைகள் அல்ல. மனித சமூகத்தின் கடந்த கால, நிகழ் கால செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள பண்பாட்டு மானுடவியலும் அடிப்படையாக இருக்கிறது. பண்பாடுகளின் அடிப்படைகளில் ஒன்றாக இருப்பது கலைகள். அதன்படி மனித சமூகத்தின் கடந்தகால நிகழ்காலப் போக்குகளை நாம் புரிந்து கொள்ள கலைகளும் நமக்குப் பெரும் உதவியாக இருக்கின்றன.


கலையின் கடந்த கால பரிணாம வளர்ச்சிகளை நாம் திரும்பிப் பார்க்கும்போது நமக்கு அதன் ஊடே தெரியவருவது மனித சமூக மற்றும் தனி மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சிகளும் கூட. வேட்டை நாகரீக மனிதனின் கலைகள் விவசாயம் கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. அதன் வழி தனி மனித சிந்தனைகள் விவசாய நாகரீகத்தின் அக, புற பிரச்சனைகளில் இருந்து தப்பி, ஒரு தீர்வை நோக்கி நகர துணை செய்கிறது. விவசாய நாகரீகம் உலக பேரரசுகளின் நாகரீகமாக வளரும்போது கலைகளும் தங்களை அதற்கு ஏற்ப அடுத்த வளர்ச்சிக்கு நகர்த்திக்கொண்டு தனி மனித சிந்தனைகளையும் புதிய தீர்வுகளை நோக்கி நகர்த்துகிறது. இப்படியே இன்றைய நவீன காலம் வரை கலைகளின் வளர்ச்சியானது எங்கும் தேங்காத ஒரு நீண்ட பயணத்தை நடத்தி வருகிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட வேட்டை நாகரீகத்தில் தொடங்கி (ஆப்பிரிக்க, இந்திய துணைகண்டம் மற்றும் ஸ்பெயின்), தமிழ் சிந்து, எகிப்து, சுமேரியா, கிரேக்கம், ரோமன், பைசாண்டியம், அமெரிக்க சிகப்பிந்திய கலைகள், சீனம், இஸ்லாமிய கலைகள், மத்தியக் கால கோத்திக் கலை, ரினையசன்ஸ், எக்ஸ்பிரசனிசம், இம்பிரசனிசம், கியுபீசம், தாதாயிசம், அப்ஸ்டிராக்ட்- எக்ஸ்பிரசனிசம், சர்ரியலிசம், ரோமான்டிஸசம், சிம்பாலிசம், நேச்சுரலிசம், இமேஜிசம், ஃபாவுசிம், டே ஸ்சிடஜல், ஃபியூச்சரிசம், மினிமலிசம், நியோ-தாதா, நியோ- எக்ஸ்பிரசனிசம், போஸ்ட்- இம்பிரசனிசம், போஸ்ட்-மினிமலிசம், ரியலிசம், ஓப்-ஆர்ட், போர்க்யூ, கிளாசிசம், புலூம்ஸ்பரி குரூப், பிலாக் மெளண்டேய்ன் காலேஜ், ஆர்ட் டேகோ, ஆர்ட் நுவோ, கன்ஸ்டிரக்டிவிசம், ஃபிலெமிஷ் ஸ்கூல், ஃபிலக்சூஸ், மேனரிசம், மாஸ்சர்ரியலிசம், நியோ-கிளாசிக்கல், போட்டோரியலிசம், பாயிண்டலிசம், பிரீ-ராப்பாலடிஸ், சிச்சுவேசனிசம், ரோகோகோ, நபிஸ், ஆர்லம் ரினையசன்ஸ், கிராஃபிடி ஆர்ட், மார்டனிசம், போஸ்ட்- மார்டனிசம் என்று கலைகள் மனித வரலாற்றினுடே கடந்து வந்தப் பாதை மீக நீண்டது.
கலைகளின் வரலாற்றுப் பயணத்தைக் குறித்து நாம் தெரிந்துகொள்வது மிக அவசியமாகிறது. கலைகள் மனித சிந்தனைப் போக்கில் எத்தகைய தாக்கங்களை செலுத்தி சமூக மேம்பாட்டுக்கான புரட்சிகர மாற்றங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை அதன் முழுப் பரிமாணத்துடன் புரிந்துகொள்ள இது நமக்கு வசதியாக இருக்கும். கலை வரலாறு என்கிற பெயரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்துகொள்வதைவிட முழுமையாக (வாசிப்பில் முழுமை என்பதற்கான வரையறை இல்லை என்கிற போதிலும்) தெரிந்துகொள்வது தமிழ் வெளியில் கலைகள் குறித்த ஆரோக்கியமான விவாதங்களையும் தேடல்களையும் முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதாலேயே இந்தத் தொடரை எழுத உட்கார்ந்தேன். கலைகளின் வரலாற்றைத் தொடங்குவதென்றால் அதன் மூலத்திலிருந்துதானே தொடங்க வேண்டும். தொடங்குவோம் வாருங்கள்.
வரலாற்றிற்கு முற்பட்ட கற்கால மனிதனின் கலைகள்
ஆதிகால மனித சமூகத்தின் கலை வெளிப்பாடுகளில் ஒன்றாக இன்றைக்கு நமக்கு கிடைப்பவைகள் அவன் குகைகளில் தீட்டிய சுவர் ஓவியங்களே. இரண்டு இலட்சம் வருடத்திய தனி மனித சிந்தனை வளர்ச்சிப் போக்கை நமக்கு கண்ணாடி போலக் காட்டுபவைகள் இந்த ஓவியங்கள். கற்கால மனிதன், தன் உணர்வுக் கிளர்ச்சியை, சிந்தனை முதிர்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்திய இசை மற்றும் நடனக் கலைகளை இன்றைய நிலையில் அப்படியே மீட்டு உருவாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. காரணம் ஓவியங்களைப் போன்று அந்த கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே நிலைத்திருக்கும் ஊடகங்களில் நிகழ்த்தப்பட்ட (பாறைகள்) கலைகள் அன்று. அவைகள் குறித்த எத்தகைய எழுத்து வடிவ அல்லது குறியீட்டு வடிவக் குறிப்புகளையும் கற்கால மனிதர்கள் நமக்கு விட்டுச் செல்லவில்லை. ஆக, கற்கால மனிதனின் கலைகள் என்று எடுத்துக்கொண்டால் (நம்மால் இன்றைக்கு காணக் கூடிய கற்கால மனிதர்களின் கலைகள்) அவை ஓவியமும் சிற்ப கலையும் மாத்திரமே.
கற்கால மனிதனின் சிந்தனையில் ஓவியம் என்பது மந்திரத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே இருந்திருக்கிறது. கற்கால மனிதர்கள் தங்களின் அன்றாட வயிற்றுப் பாட்டிற்கு வேட்டைத் தொழிலையே பெரிதும் சார்ந்திருந்தார்கள். வேட்டையின் மூலம் பெறப்படும் உணவுகளே அவர்களின் பிரதான உணவுகளாக இருந்திருக்கின்றன. இன்றைக்கு அரிசி இல்லாத வாழ்வை எப்படி நம்மால் கற்பனையும் செய்துப் பார்க்க முடியாதோ அதேப் போன்று கற்கால மனிதர்களால் வேட்டை மிருகங்களின் வழி கிடைக்கும் மாமிச உணவுகள் இல்லாத வாழ்வை கற்பனைக் கூட செய்து பார்த்திருக்க முடியாது. அதன் காரணமாகவே அவர்கள் கற்பனை முழுவதும் நிரம்பி இருந்தவைகள் வேட்டைத் தொழிலும், அவர்கள் உணவிற்காக வேட்டையாடிய மிருகங்களும். கற்கால மனித சமூகத்தில் வேட்டைத் தொழில் என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருந்திருக்கவில்லை. உடம்பை வளர்க்க தினம் தினம் வேட்டையின்போது அவர்கள் தங்களின் உயிர்களை பணயம் வைக்க வேண்டியிருந்தது. இத்தகைய நித்திய கண்டம் பூரன ஆயுசு போராட்டம் வாழ்வைக் குறித்த சிந்தனை போராட்டத்தையும் அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களைப் பொருத்தவரையில் இயற்கை மற்றும் இயற்கைப் பொருட்களில் இருக்கும் ஆன்ம சக்திகளே (spirits) தங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை (உணவுத் தேடல்) கட்டுப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன என்பது அவர்களது திடமான தத்துவ புரிதல் மற்றும் ஆழமான நம்பிக்கை.
இயற்கைப் பொருட்களில் இருக்கும் ஆன்ம சக்திகளை தங்களின் கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் தங்களின் வாழ்க்கைப் போராட்டம் பாதுகாப்பான ஒன்றாக மாறிவிடும் என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்த அவர்களுக்கு பெரும் துணையாக இருந்தது ஓவியங்கள். கற்கால மனிதர்களின் குகை சுவர் ஓவியங்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல், அவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் ஆன்ம சக்தியைத் தங்களின் கட்டுக்குள் கொண்டுவருவதாகவே இருந்திருக்கிறது. வேட்டைக்குப் புறப்படுவதற்கு முன்பாக வேட்டை மிருகங்களின் உருவங்களை குகைகளின் சுவர்களில் தீட்டி அந்த ஓவியங்களை தங்களின் ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் சடங்கின் மூலம் அந்த மிருகங்களின் ஆன்ம சக்தியை தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினார்கள். இது ஏறக்குறைய ஒருவகை மந்திர சடங்கு போன்றதாகவே கற்கால மனிதர்களிடம் செயல்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய வரலாற்று மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
கற்கால மனிதர்கள் இடையே ஓவியங்களைத் தீட்டும் செயலானது மந்திர மத சடங்காகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம் குகைகள். கற்கால மனிதர்கள் தங்களின் வசிப்பிடமாகக் கொண்டிருந்த குகைகளில் இத்தகைய ஓவியங்களை அவர்கள் தீட்டியிருக்கவில்லை. ஓவியங்களைத் தீட்டுவதற்கென்றே அவர்கள் சில குகைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிற்கால சமூகங்களில் வழிபாட்டிற்காக கோயில்களைக் கட்டி அதில் தெய்வ சிலைகளை வைத்து மனிதன் வழிபாடு நடத்தியதைப் போல, கற்கால மனிதர்கள் ஓவியங்கள் மூலமான தங்களின் மந்திர சடங்கை நடத்த சில பிரத்தியேக குகைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த குகைகள் இன்றைய மனித கண்களுக்கு அகப்படாமல் பாதுகாப்பான மறைவிடங்களில் இருப்பதற்குக் காரணமும் இதுவே. தங்களின் மந்திர சடங்கு ஓவியங்களை மறைவிடத்தில் மிக பாதுகாப்பாக வைத்திருக்க (இயற்கை சீற்றங்களான வெயில், புயல் மழை போன்றவைகளில் இருந்து பாதுகாக்க) கற்கால மனிதர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களின் குகை ஓவியங்கள் எத்தகைய இயற்கை சேதாரங்களும் இல்லாமல் இன்றைக்கு நமக்கு புதிது போல கிடைக்க இதுவும் ஒரு காரணம்.
கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள் பெரும்பான்மையாக ஆப்பிரிக்கக் கண்டத்திலும், இந்தியாவிலும், ஸ்பெயின் மற்றும் பிரான்சின் தெற்குப் பகுதியிலும் இன்றைக்கு நமக்கு காணக் கிடைத்திருக்கிறது. ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இத்தகைய ஓவியங்களை உருவாக்கிய கற்கால (Paleolithic) மனிதர்களை ஆருக்னேசியன்ஸ் என்றும், பிரான்சு மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய பகுதிகளில் குகை ஓவியங்களை உருவாக்கிய கற்கால மனிதர்களை மக்டலேனியன்ஸ் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். இதில் ஆருக்னேசியன்ஸ் வரைந்த குகை ஓவியங்கள் சுமார் 1,00,00 - 40,000 வருடங்கள் பழமை கொண்டவைகள். இதற்கு உதாரணமாக இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருக்கும் பிம்பெட்கா குகை ஓவியங்களைக் குறிப்பிடலாம். குகை ஓவியங்களிலேயே காலத்தால் மிகப் பழமையானவைகளாக கருதப்படுபவைகள் (சுமார் 50,000 – 1,00,000 ஆண்டுகள் பழமையானவைகள்) பிம்பெட்கா குகை ஓவியங்கள்.
bhimbetka art
(பிம்பெட்கா குகை ஓவியங்கள்)
பிம்பெட்கா குகை ஓவியங்களை பெட்ரோகிளிப்ஸ் என்று வகைப்படுத்துகிறார்கள் கலை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். இவைகள் அப்ஸ்டிராக்ட் வகை ஓவியங்களாக இருக்கின்றன. இதற்கு அடுத்து மிக பழமையான குகை ஓவியங்கள் இருப்பதாக சமீபத்தில் கண்டறியப்பட்ட இடம் இந்தோனேசியாவின் சுலவேசியில் இருக்கும் டிம்புசெங் குகை. இவைகளின் காலமும் ஏறக்குறைய 70,000 – 40,000 வருடங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவைகளும் அப்ஸ்டிராக்ட் வகை ஓவியங்களே. இதற்கு அடுத்து கற்கால ஓவியங்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் கிடைப்பது ஸ்பெயினிலும் பிரான்சிலும். பிரான்சின் லாஸ்கா என்னும் இடத்திலும் வடக்கு ஸ்பெயினின் அல்டாமிரா என்னும் இடத்திலும் இருக்கும் குகைகளில் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட குகை ஓவியங்கள் கிடைக்கின்றன.
french art
(பிரான்சின் லாஸ்கா குகை ஓவியங்கள்)
spanish art
(ஸ்பெயினின் அல்டாமிரா ஓவியம்)
கற்கால மனித சமூகத்தில் ஓவியக் கலைஞர்கள் என்று தனி பிரிவு இருந்ததாகத் தெரிகிறது. இவர்கள் அன்றாட வேட்டைத் தொழிலில் ஈடுபடாமல் மந்திர சடங்கு நடத்தப்படும் குகைகளில் பெரும் பகுதி நேரத்தை செலவிட்டு ஓவியங்களை வரைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஓவிய மந்திர சடங்கை நடத்திய பூசாரிகளும் இவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. அப்ஸ்டிராக்ட் (இயற்கையிலிருக்கும் பொருள்களை அப்படியே பிரதியெடுத்தது போல வரையாமல் அந்தப் பொருளை அடையாளப்படுத்தும் ஓர் அடையாளக் குறியையோ அல்லது அடையாளத்தையோ வரைவது. உதாரணமாக காட்டெருமையை அப்படியே வரைவதற்குப் பதிலாக அதன் தலையில் இருக்கும் வளைந்த கொம்புகளை மாத்திரம் வரைந்து காட்டெருமையாக அடையாளப்படுத்துவது) வகை ஓவியங்களையும், நேச்சுரலிச வகை ஓவியங்களையும் கற்கால மனிதர்கள் வரைந்திருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் ஓவியக் கலையின் மேம்பட்ட உத்திகளில் ஒன்றான ஃபோர் ஷார்டனிங் என்கிற உத்தியைக் கூட கற்கால ஓவியக் கலைஞர்கள் தங்களுடைய ஓவியங்களில் பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள்.
வரையப்படும் ஓவியத்திற்கான மாஸ் மற்றும் வால்யூம் போன்ற முப்பரிமாண தோற்றங்களை உண்டாக்க கற்கால ஓவியக் கலைஞர்கள் தாங்கள் வரையும் குகையின் சுவர் பகுதியை மேடு பள்ளங்களாக செதுக்கி அதன் மீது தங்களின் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். சிகப்பு, மஞ்சள், கருப்பு போன்ற நிறங்களையும், இவைகளின் கலவை நிறங்களையும் தங்களின் ஓவியங்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவியத்தின் மீது பூசப்பட்ட வண்ணம் உதிர்ந்துவிடாமல் இருக்கவும், வெளுத்து விடாமல் இருக்கவும் மிருகங்களின் இரத்தத்தையும், மனித சிறுநீரையும், மூலிகைகளின் சார்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவியங்களைத் தீட்ட விரல்களையும், மிருகங்களின் ரோமங்களை சேர்த்துக் கட்டிய கருவிகளையும், மரப்பட்டைகளையும் உபயோகித்திருக்கிறார்கள்.
மனித பரிணாம வளர்ச்சியில் ஹோமோ ஹிரக்டஸ் காலம் தொட்டே மனிதன் ஓவியங்களை வரையத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நமக்கு இப்போது கிடைப்பவைகள் ஹோமோ சேப்பியன்ஸ் கால ஓவியங்களே. சிற்பக் கலையைப் பொருத்த மட்டில் ஹோமோ ஹிரக்டஸ் கால சிற்பங்கள் சில இப்போது நமக்கு கிடைத்திருக்கின்றன. இவைகள் சுமார் ஆறிலிருந்து ஏழு இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டவைகள். சுண்ணாம்பு பாறைக் கற்கள், மிருகங்களின் கொம்புகள் மற்றும் தந்தங்கள் போன்றவற்றில் ஹோமோ ஹிரக்டஸ் காலம் தொடங்கி கற்காலம் வரை சிறிய உருவிலான சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த சிற்பங்களில் பிரதானமானது இன்றைக்கு ஆராய்ச்சியாளர்களால் வீனஸ் என்று அழைக்கப்படும் பெண் வடிவ சிற்பங்கள். இந்த சிற்பங்கள் வளமையின் அடையாளக் குறி என்று மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த சிற்பங்களும் குகை ஓவியங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அனேகமாக கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இது நமக்கு உணர்த்தும் வரலாற்று உண்மை, குகைகளில் ஓவியங்களை வரைந்த கலைஞர்களே இந்த சிற்ப உருவங்களையும் செதுக்கியிருக்க வேண்டும் என்பது.
ஓவியங்கள் மந்திர சடங்கிற்குப் பயன்பட்டதைப் போன்றே சிற்பங்களும் கற்கால மனிதர்களால் மந்திர சடங்கிற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கற்கால மனித சிந்தனை பெண்களை வளமையின் குறியீடாகப் பார்த்திருக்கிறது. மிகவும் குறிப்பாக பெண்ணின் உடலை. தங்களுக்கான வேட்டை உணவு தடையின்றிக் கிடைக்க வேட்டை மிருகங்களின் இனப்பெருக்கம் என்பது மிகுதியான அளவில் இருக்க வேண்டும் என்பதை கண்டு கொண்டிருந்த அவர்கள், தாங்கள் வேட்டையாடும் விலங்குகளின் இனப்பெருக்கத்தை செயல்படுத்தும் இயற்கை சக்தியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கற்கால மந்திர சடங்கு ஷாமன்கள் (குகை ஓவியங்களை வரைந்த கலைஞர்களும் இவர்கள்தான்) பெண் உருவம் கொண்ட வீனஸ் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள். மனித இனத்தைப் பெருக்க பெண்ணின் உடல் கருவியாக இருப்பதைப் போல உணவிற்கான மிருகங்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் இயற்கை சக்தியை கையாளும் கருவியாகவும் பெண்ணின் உடல் இருக்கும் என்கிற மந்திர சிந்தனையின் அடிப்படையிலேயே கற்கால சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கற்கால சிற்பக் கலையை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். முதலாவது, அல்ட்ரா பிரிமிடிவ் ஹியுமனாயிட் ஹாப்ஜக்ட்ஸ். இவைகள் சுமார் 6,00,000 – 7,00,000 வருடங்களுக்கு முற்பட்டவைகள். இவைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல. காற்று மற்றும் நீர் அரிப்பால் இயற்கையாக கற்களில் உண்டான வடிவங்கள். இவைகளை ஹோமோ ஹிரக்டஸ் மனிதர்கள் தங்களின் வசிப்பிடங்களில் சேகரித்து வைத்திருந்திருக்கிறார்கள். தங்களின் மந்திர சடங்குகளுக்கு பயன்படுத்தவேண்டி. உதாரணமாக வீனஸ் ஆப் பெர்கத் ரேம் சிற்பத்தை சொல்லலாம்.
venus of bergathrem
(வீனஸ் ஆப் பெர்கத் ரேம். சுமார் 3,00,000 வருடங்களுக்கு முற்பட்டது.)
இரண்டாவது, பிரிமிடிவ் ரிலிப்ஸ். இவைகள் இன்றிலிருந்து சுமார் 25,000 வருடங்களுக்கு முற்பட்டவைகள். இதற்கு உதாரணமாக வீனஸ் ஆப் வில்லன்டார்ப் சிற்பத்தை சொல்லலாம்.
venus of villaindrop
(வீனஸ் ஆப் வில்லன்டார்ப்)
மூன்றாவது, வீனஸ் பிகரின்ஸ். இவைகள் சுமார் 40,000 வருடங்களுக்கு முற்பட்டவைகள். வீனஸ் ஆப் ஹோலி பெல்ஸ் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
venus of holybells
(வீனஸ் ஆப் ஹோலி பெல்ஸ்)
நான்காவது, கார்விங்ஸ் ஆப் ஆன்திரோபோமார்பிக் பிகர்ஸ். இறுதியாக கார்விங்ஸ் ஆப் அனிமல் பிகர்ஸ். இவை இரண்டும் சுமார் 35,000 வருடங்களுக்கு முற்பட்டவைகள்.
african art
(ஆப்பிரிக்க ஆன்திரோபோமார்பிக் பிகர்)
அப்ஸ்டிராக்ட் வடிவத்தில் தொடங்கிய பழைய கற்கால மனிதனின் கலைகள் (அப்ஸ்டிராக்ட் கலை என்றால் என்ன என்பதுக் குறித்து முன்பேப் பார்த்திருக்கிறோம்) புதிய கற்காலத்தின் உச்சத்தில் நேச்சுரலிசத்தை நோக்கி வளர்ச்சியடைந்திருந்தது. இதை வரலாற்றுக்கு முந்தைய நேச்சுரலிசம் என்றுக் கூட வகைப்படுத்திக்கொள்ளலாம். (நேச்சுரலிச கலை என்பது இயற்கையில் உள்ள பொருட்களை – மனிதன் உட்பட – உள்ளது உள்ளபடி கலைகளில் பிரதிபலிப்பதாகும். இயற்கை வடிவங்களை உள்ளார்ந்த தனிப்பட்ட கருத்துக்களுடன் திரித்தோ அல்லது மாற்றியோ வெளிப்படுத்தாமல் இயற்கையில் இருக்கிறபடி அப்படியே கலை இரசனை மிளிர வெளிப்படுத்துவது நேச்சுரலிசம். நேச்சுரலிசத்திற்கும் ரியலிசத்திற்கும் இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. ரியலிச வகை கலை சொல்லப்படும் பொருளை – கருத்தை - மிக முக்கியமானதாக எடுத்துக்கொள்ளக் கூடியது. நேச்சுரலிசம் சொல்லப்படும் பொருள் எந்த முறையில் – வழி முறையில் - வெளிப்படுத்தப்படுகிறது என்பதை முக்கியமானதாக எடுத்துக்கொள்ளக் கூடியது. இரண்டாவது வேறுபாடு, ரியலிச கலை அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பிரதிபலிக்க கூடியவைகள். நேச்சுரலிசம் அப்படியான எத்தகைய கருத்துக்களையும் வெளிப்படுத்தாது.)
லாஸ்கா மற்றும் அல்டாமிரா குகைகளில் கிடைக்கும் குகை ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய நேச்சுரலிச வகை கலைகளுக்கு உதாரணங்களாக இருக்கின்றன. பிரான்சிலிருக்கும் லாஸ்கா குகை ஓவியங்கள் குறித்த அரிதான ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டிருக்கிறது. The Cave of Forgetten Dreams என்பது அந்த ஆவணப்படத்தின் பெயர். இது 2010-ஆம் ஆண்டு வெளியானது. லாஸ்கா குகை ஓவியங்கள் தற்போது பொது மக்களுக்கு அனுமதி இல்லாமல் மூடப்பட்டுவிட்டது. அதற்குள் இருக்கும் ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டி, லாஸ்கா குகை ஓவியங்கள் குறித்து முதலும் கடைசியுமாக எடுக்கப்பட்ட ஆவணப்படம் The Cave of Forgetten Dreams. இது புத்தக வடிவிலும் கிடைக்கிறது.
(தொடரும்)
- நவீனா அலெக்சாண்டர்
http://keetru.com/

No comments: