கவி விதை - 21 நாடும் காடும் --விழி மைந்தன்--

.

அவனும் அவளும்  ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.  வேடன் அவன். விவசாயியின் மகள் அவள். அவர்கள் வாழ்வது எங்கே? இயற்கையோடு இணைந்த காட்டு வாழ்க்கையை நேசிக்கிறான் அவன். உழைப்பினால் உலகை மாற்றும் நாட்டு வாழ்க்கையை யாசிக்கிறாள்  அவள். விளைவோடு ஒன்றிணைய விரும்புகிறான் அவன். விளைவிக்க விரும்புகிறாள் அவள். 

வசந்தம் 

அவன்:  வசந்த காலம் வந்த போது  மரங்கள் பூத்தன. வனத்தில் வாழும் பறவை யாவும் பாடிக்  களித்தன. அசைந்து  செல்லும் ஓடை நீரின் அழகைப் பாரடீ! ஆலங்கிளையில்  தேனும் சொட்டும்  ஓசை கேளடீ! குளத்தங்கரையில்  காட்டு  முல்லை கொட்டிச் சுகந்தம்  வீசுது. இளைய காடு இனிமையன்றோ? எந்தன் காட்டில் வாழ வா!

அவள்: வசந்த காலம் வந்த போது கரும்பு விளைந்தது. வயலில் செந்நெல் விளைந்து முற்றித் தலையைச் சாய்த்தது.  புதிய நெல்லும் பாலும் கொண்டு பொங்கல் பொங்கலாம்.  பொன்னி நதியின் இனிய புனலில் ஆடி  மகிழலாம். பந்தல் மீது  சிவப்பு ரோஜா படர்ந்து பூத்துச் சிரிக்குது. இந்த நாட்டு வாழ்வு இனிமை. இதனை விட்டு நான் வரேன்!!

வேனில் 

அவன்: கோடைக்காட்டில் மரங்கள் போடும்  குட்டித் தூக்கமே! கொவ்வைக்கனியும் பாலைப் பழமும் பழுத்துச் சொரியுமே! ஆடிக்   காற்றில்  இலைகள் பேசும் பாஷை கேளடீ! அகன்ற கோடை  இரவு வானில் மீன்கள் பாரடீ! உச்சி நேரம்  முதிரை நிழலில் உலகை மறந்து கனவு காண இச்சை கொண்டு நீயும் வாடி, எந்தன் காட்டில் வாழ வா!

அவள்: கோடைக்கால வயலில் சணலும் பூத்து நிற்குது. கொம்பன் மாட்டு வண்டி அரிசி கொண்டு போகுது. பாடி ஆடிக் களத்து  மேட்டில் கும்மி கொட்டுவோம்! பச்சைக்கிளிக்குப்  போட்டியாகப்  பறந்து  திரிகுவோம்! அந்தி நேரம் வயலின் குளத்தில் அல்லிப் பூக்கள் மலர்ந்து சிரிக்கும் இந்த நாட்டில் நானும் வாழ்வேன். எங்கும் போக மாட்டேனே!

மாரி 

அவன்:  வானம் இருண்டு  கொண்டல்  சூழ மாரி  வந்திடும். மங்கற்   பகலை விண்மீனற்ற இரவு தின்றிடும். சீறும்  ஊழிக்காற்றில் மரங்கள்  செத்து  வீழ்ந்திடும்.  கிழக்கு வானில் நெருப்புக்குன்று  தீயைக் கக்கிடும்! பதைத்து மரங்கள் கண்ணீர் சிந்திப் பரிதவிக்கும் போதிலே,  வதைக்கும் கூந்தல் மழையின் நடுவில் வருவேன் உன்னைத் தேடியே!

அவள்: கொடிய மாரி வந்த போது  பாட்டு  நின்றிடும். கும்மிருட்டு வந்து சேர ஒளியும் மங்கிடும். கடின உழைப்பில்  மகிழ்ந்த காலம் கனவாய்ப் போய்  விடும். கழனி எங்கும் வெள்ளம் தேங்கிச் சேறாய்  ஆகிடும்.  வழியை நோக்கி அப்போது, உன் வரவு பார்த்திருப்பனே! மழையின் நடுவில் கரங்கள் கோத்து வழி நடப்போம் இருவரும்.

அவனும் அவளும்: கரங்கள் கோத்து  நாங்கள் நடக்கக் காலை ஒன்று  விடிந்திடும். இருவருக்கும் இனியதான இடமொன்றுலகில் இருந்திடும். 


மல்லிகை  இதழில் வெளியானது 

An Adaptation from J.R.R.Tolkien's English Version in the Lord of the Rings

No comments: