விடை பெற்றார் பான் கீ மூன்
விமான நிலையத்தில் ஐவர் சுட்டுக்கொலை; அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர் கைது (படங்கள் இணைப்பு)
இராணுவப்படை தாக்குதல் : 32 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா : 23000 பேர் பாதிப்பு
பிலிப்பீன்ஸில் சிறை தகர்ப்பு; 150 கைதிகள் தப்பியோட்டம்
தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தெரிவு.!
விடை பெற்றார் பான் கீ மூன்
02/01/2017 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றிய தென்கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் சேவை காலம் முடிந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் தனது பதவியிலிருந்து விடைபெற்றுள்ளார்.
மேலும் நியூயோர்க்கில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் பேசியுள்ள பான் கீ மூன்,
2007 ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை தான் செய்த பணிகளை நினைவு கூர்ந்துள்ளதோடு எதிர்வரும் நாட்கள் தன்னை சாதாரண மனிதனாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தா ஐநா பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஹெடோனியோ கட்டர்ஸ் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில்,
உலக மக்களை அமைதிக்காக வழிநடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்கால உலக சமாதானத்திற்கான தனது அயராத பணிகளை தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
விமான நிலையத்தில் ஐவர் சுட்டுக்கொலை; அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர் கைது (படங்கள் இணைப்பு)
07/01/2017 அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஃபோர்ட் லோடர்டேல் விமான நிலையத்தில், அமெரிக்க முன்னாள் இராணுவ வீரராகக் கருதப்படும் இளைஞர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் எண்மர் காயங்களுக்கு உள்ளாகினர்.
குறித்த விமான நிலையத்துக்கு வந்த இந்த இளைஞர், தனது பயணப் பொதியில் இருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கழிவறைக்குச் சென்றிருக்கிறார். அங்கே துப்பாக்கியை இயக்குவதற்கத் தயார் செய்த அவர், வெளியே வந்ததும், பயணப் பொதிகளைப் பெற்றுக்கொள்ளும் மண்டபத்தில் நின்றிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனால் கலவரமடைந்த பயணிகள் அல்லோல கல்லோலத்தின் மத்தியில் பாதுகாப்புத் தேடி ஓடினர்.
திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் ஐவர் ஸ்தலத்திலேயே பலியாகினர். மேலும் எண்மர் படுகாயமடைந்தனர். எனினும், சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் மின்னல் வேகத்தில் இயங்கி துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எஸ்டீபன் சண்டியாகோ என்றும் இவரிடம் அமெரிக்க இராணுவ அடையாள அட்டை காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2007 முதல் 2016 வரை அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய இந்த இளைஞர், சிறந்த வீரருக்கான பல பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றவர். கடந்த நவம்பர் மாதம் தனது மூளையை யாரோ கட்டுப்படுத்துவதாகக் கூறிய இவர் மனநல ஆலோசனை பெற அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. நன்றி வீரகேசரி
இராணுவப்படை தாக்குதல் : 32 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
06/01/2017 சிரியா நாட்டில் துருக்கி இராணுவப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த ஆறாண்டுகளாக அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான இராணுவப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு உதவியாக ரஷியா நாட்டு போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
சிரியா எல்லையோரம் உள்ள துருக்கி நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளின் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடிக்கடி ரொக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக சிரியா நாட்டுக்குள் அவர்கள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து துருக்கி நாட்டு விமானப்படையும் தாக்கி வருகிறது.
அவ்வகையில், சிரியாவின் வடபகுதியில் உள்ள அல்-பாப் மற்றும் உட்பட்ட பகுதிகளில் துருக்கி நாட்டு போர் விமானங்கள் மற்றும் தரைப்படைகள் 21 இடங்களில் நேற்று குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டன.
இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 32 பேர் பலியானதாக துருக்கி அரசு இன்று அறிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
05/01/2017 தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மலேசியாவில் இதுவரை சுமார் 23000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இவ்வருடம் அதிகளவிலான மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து சுமார் 23 ஆயிரம் பேர் இதுவரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 139 நிவாரண முகாம்கள் மூலம் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. என அந்நாட்டு அரச தரப்பு தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
பிலிப்பீன்ஸில் சிறை தகர்ப்பு; 150 கைதிகள் தப்பியோட்டம்
04/01/2017 தென் பிலிப்பீன்ஸில் உள்ள சிறைச்சாலை ஒன்றினுள் ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் சிலர், அங்கிருந்த காவலர் ஒருவரைக் கொன்று 150க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச் சென்றுள்ளதாக பிலிப்பீன்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டபாட்டோ மாவட்டத்தின் கிடாபவான் நகரில் உள்ள இந்தச் சிறைக்குள் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரெனப் புகுந்த ஆயுத தாரிகள், காவலர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளை இயக்கினர்.
பின்னர், குறிப்பிட்ட சில சிறையறைகளைத் தகர்த்த அவர்கள் அதில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்தனர். மொத்தமாக இருந்த 1,511 கைதிகளுள் 158 பேர் தப்பியோடினர். எனினும் நால்வர் மீண்டும் கைதுசெய்யப்பட்டனர்.
ஆயுத தாரிகள் முஸ்லிம் இயக்கங்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடாக விளங்கும் பிலிப்பீன்ஸில் கடந்த ஓரிரு தசாப்தங்களாக முஸ்லிம் கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன.
இதைத் தடுக்கும் முகமாக அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டியூடர்தே முஸ்லிம் கிளர்ச்சிக் குழு உறுப்பினர்களை சிறைவைக்கப் பணித்துள்ளார். இதன்படி தடுத்து வைக்கப்பட்டவர்களையே ஆயுத தாரிகள் விடுவித்துச் சென்றுள்ளனர். நன்றி வீரகேசரி
தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தெரிவு.!
04/01/2017 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக தெரிவு செய்யப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அவர் முழுமையாக கட்சிப் பணிகளை ஆற்ற முடியாத நிலையில் இருப்பதால் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தி.மு.க. பொதுக்குழு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் இன்று காலை 9 மணிக்கு கூடியது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. எனவே பொதுச்செயலாளர் அன்பழகன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
அன்பழகன் பெயரை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்மொழிய, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழி மொழிந்தார். இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் முதலில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா, முன்னாள் அமைச் சர்கள் கோ.சி.மணி, சற்குண பாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோ, நடிகை மனோ ரமா, வ.செ.குழந்தைச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு மேலும் 16 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தி.மு.க.வுக்கு செயல் தலைவரை தெரிவு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்காக தி.மு.க.வின் சட்ட விதியில் திருத்தம் மற்றும் புதிய இணைப்பு ஒன்று செய்யப்பட்டது. அந்த சட்ட திருத்தத்தை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொண்டு வந்தார். அதை பொதுக்குழு கூட்டத்தில் வாசித்தார்.அவர் கூறியதாவது:-
கழக சட்ட திட்டத்தின் விதி 18ல் ஏற்கனவே 3 பிரிவுகள் உள்ளன. 4-வது பிரிவாக சட்ட திட்டத்தில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி விதி 18 பிரிவு 4-19-ல் குறிப்பிட்டுள்ளதில் மாறுபாடு இன்றி தலைவர் பதவி விலகினாலோ நீண்ட நாட்களுக்கு பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டாலோ கழக பொதுக்குழு செயல் தலைவராக ஒருவரை நியமிக்கலாம். இந்த சட்ட திருத்தத்தில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்.
இந்த சட்ட திருத்தத்துக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடனே அரங்கில் கூடியிருந்த நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் நீண்ட நேரம் கரவொலி எழுப்பினார்கள். அண்ணா அறிவாலயத்துக்கு வெளியேயும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
அதன்பிறகு தி.மு.க. சட்டவிதி திருத்த அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகனிடம் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.
அதைப் பெற்றுக் கொண்டு அன்பழகன் பேசுகையில், கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கழக சட்ட திட்ட விதி 18, 4ன் கீழ், செயல் தலைவராக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிகிறேன். அவர் பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றார்.
உடனே மு.க.ஸ்டாலின் எழுந்து அன்பழகன் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். பிறகு அன்பழகனிடம் இருந்து செயல்தலைவர் நியமன அறிவிப்பை ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை வழிமொழிந்து துரைமுருகன், அன்பழகன் ஆகியோர் பேசினார்கள்.
இறுதியாக மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். அத்துடன் காலை 10.30 மணிக்கு பொதுக்குழு நிறைவடைந்தது.
பின்னர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டிற்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment