நெல்லைக் கண்ணன் கவிதைகளில் சூழலியல் பதிவுகள்

.

தற்காலத்தில் படைக்கப்படும் இலக்கியங்களில் அறச் சிந்தனைகளுக்கு முக்கிய இடம் இருக்கிறதோ இல்லையோ சுற்றுப் புறச் சூழ் நிலைகளை, அதன் அவசியத்தை, அதன் தூய்மையை வலியுறுத்தும் செய்திகள் பல காணப்பெறுகின்றன. காரணம் படைப்பாளர்களுக்குச் சுற்றுச் சூழல் பற்றிய கவலை, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதே ஆகும். சுற்றுச் சூழல் என்பது ஓர் உயிரியைச் சுற்றியுள்ள் ஒட்டுமொத்த அமைப்பு என்றும் அது காற்று, ஒளி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய மற்ற உயிரினங்களையும், அந்த உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைக் கட்டுப்படுத்தும் காரணிகளை உள்ளடக்கியது என்று விளக்கம் தரப்பெறுகின்றது. இக்கருத்தின்படி படைப்பாளனும் ஓர் உயிரி என்ற அடிப்படையில் அவனைச் சுற்றி நடக்கும் இயற்கைசார் நிகழ்வுகள் சுற்றுச் சூழல் நடப்புகளாகின்றன. அவற்றை அப்படைப்பாளன் பதியவைப்பதன் வாயிலாக அவனும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உரிய படைப்புகளைத் தருபவன் ஆகின்றான்.


இன்றைய சூழலில் திருநெல்வேலி சார் சுற்றுச் சூழல்களைத் தன் படைப்புகளில் அளித்துவருபவர் நெல்லைக் கண்ணன் ஆவார். இவரின் படைப்புகள் திருநெல்வேலி மண்சார்ந்த வட்டாரப் படைப்புகள் ஆகும். இப்படைப்புகளில் திருநெல்வேலி மாவட்டம் சார்ந்த நிகழ்ச்சிகள், இயற்கை அமைவுகள் பதிவு செய்யப்பெற்றுள்ளன. அவரின் கவிதைப் படைப்புகளான வடிவுடை காந்திமதியே (2002), திக்கனைத்தும் சடை வீசி (2008), காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் (சித்திரை விய ஆண்டு), பழம்பாடல் புதுக்கவிதை (2011) ஆகியவற்றிலும் உரைநடைப் படைப்பான குறுக்குத்துறை ரகசியங்கள் (2000) ஆகியவற்றில் சுற்றுச் சூழல் குறித்தான பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.
காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் – என்பது காதல் கவிதைகளின் தொகுப்பாகும். அதில் இடம்பெறும் ஒரு கவிதை பின்வருமாறு
நிறங்களை வைத்தா கண்களைப் பார்த்தேன் குணங்களை வைத்து
கடல்
என்று
அதனால்தான்
உளறவில்லை
உலகக் கழிவுகளெல்லாம் 
அதனுள்ளே
என்ற இந்தக் கவிதை கடல் மாசுபட்டுள்ளது என்பதால் அதனைத் தன் காதலியின் குணங்களுக்கு ஒப்பிடமுடியாது என்று குறிப்பிடுகின்றார் நெல்லைக்கண்ணன். காதல் தூய்மையானது. ஆனால் கடலின் தூய்மை தற்போது உலகின் கழிவுகளின் இருப்பிடமாக ஆகி அதன் தூய்மை கெட்டுவிட்டது. எனவே காதலியின் தூய்மைக்குக் கடலின் தூய்மையின்மை பொருத்தமாகாது என்று விலக்குகிறார் கவிஞர். இதன் வழியாக கடல் மாசுபட்டு வருகிறது என்பதையும் காதலைத் தூய்மையாகக் காக்க எண்ணும் மனித எண்ணம் கடலையும் தூய்மையாகக் காக்கவேண்டும் என்பதையும் இக்கவிதை சுட்டுகின்றது.
நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையானை
நீறணிவார் துயரங்கள் மாற்றுவானை
புல்லுக்கு அருள் செய்யும் பொருப்பினானை
பூவிதழின் உமை பங்கன் ஆயினானை
கல்லுக்கும் தன்னருளைக் காட்டுவானை
கங்காளனாகிப் பிச்சை யேற்பான் தன்னை
சொல்லுக்குள் அடைபடாச் சோதியானை
நெல்லைக்குள் கண்டதென் பேறுதானே
என்று கடவுளையும் சுற்றுச் சூழல் நோக்கில் காணுகின்றார் நெல்லைக் கண்ணன். திருநெல்வேலி என்பது நெல்லுக்கு வேலி செய்த காரணத்தினால் எழுந்த பெயராகும். இது ஒரு தொன்மம். வேதசர்மா என்பவர் ஆண்டவனுக்காக வைத்திருந்த நெல்லை மழை அடித்துக்கொண்டு போகாமல் காத்த திறமுடையவர் நெல்லையப்பர் ஆவார். இவரின் பெருமையை நெல்லையும் காத்தவர், அதனோடு ஒப்பு வைக்க முடியாத களையான புல்லுக்கும் கருணை செய்பவர் என்று ஆண்டவனை இயற்கை பாதுகாப்பாளனாகக் காண்கிறார் நெல்லைக்கண்ணன். இதுதவிர கல்லுக்கும் அருள் தரம் இனிய பண்பாளன் நெல்லையப்பன் என்பதைக் காட்டும் இவ்விறைவன் பற்றிய கவிதை சுற்றுச் சூழல் நிலை பாடும் கவிதையாகும்.
இறைவியைப் பற்றிப் பாடும் பாடல்களின் தொகுப்பின் பெயர் வடிவுடைக் காந்திமதியே என்பதாகும். இதில் வரும் பின்வரும் பாடலடிகள் சுற்றுச் சூழல் நிலை பாடுவதாகும்.
மலைவளம் தந்ததொரு
மழைவளம் தந்தனை
மனிதரைக் காப்பதற்காய்
மலைவளம் திருடியே
மழைவளம் தடுத்தனர் 
மனமிலார் வாழ்வதற்காய்
என்ற பாடலடிகளில் மலைவளம் திருடப்படுவதையும், அதன் காரணமாய் மழைவளமின்றி மக்கள் வாடுவதையும் காந்திமதியம்மையிடம் சொல்லி அதனை மாற்ற அவள் கருணைக் கண் வைக்க வேண்டுகின்றார் நெல்லைக்கண்ணன்.
ஆண்டாளின் காலத்தில் நன்னாரிவேரினால் செய்யப்பட்ட விசிறி இருந்தது. இயற்கையோடு இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தும் நன்முறை அவள் காலத்தில் இருந்தது, தற்காலத்தில் எல்லாம் செயற்கையாகிவிட்டது என்ற வருத்தத்தில் பின்வரும் கவிதை சுற்றுச் சூழல் பேணுகின்றது.
பெண்ணாளின் உள்ளம் காணப் பெருந்தகையாளன் தன்னால்
கண்ணாளா என்றழைத்தால் காணாமல் மயக்கமானேன்
நன்னாரை வேரைக் கொண்டு நல்லதோர் விசிறி செய்து
என்னதான் வீசினாலும் எப்படி மயக்கம் தீரும்
என்று தமிழர்கள் இயற்கை சார்ந்த பொருளை பழங்காலத்தில் பயன்படுத்தி இயற்கையோடு முரண்படாமல் வாழ்ந்தார்கள் என்பதை இக்கவிஞர் காட்டுகின்றார். தற்போது உணவிலும், உடையிலும், உறையுளிலும் அனைத்திலும் செயற்கை கலந்துவிட்டதன் ஏக்கம் இப்பாடலில் பதிவாகியுள்ளது.
இத்தொகுப்புகள் தவிர இவரின் வா மீத முலை எறி என்ற கவிதைத் தொகுப்பு பல சுற்றுச் சூழல் தெரிப்புக்கவிதைகளைக் கொண்டுள்ளது.
பன்னாட்டு
பூதகியின் 
பெப்ஸி
கோக் 
முலைகள் 
உறிஞ்ச
கண்ணனுக்கே அச்சம்
என்ற இந்தக்கவிதையடிகளில் குழந்தைகளுக்குத் தரப்படும் தாய்ப்பாலில் வெளிநாட்டுக்காரர்கள் உருவாக்கும் பெப்ஸி போன்ற பானங்களின் தாக்கம் அம்மாக்கள் அவற்றைக்குடிப்பதால் ஏற்படுகிறது என்பதைக் காட்டுகின்றார். தூய்மையான தாய்ப்பாலே தூய்மை இழந்து போகும் சூழ் நிலைக்கேட்டில் தற்போது உலகம் உள்ளது என்பதை இச்சிறுகவிதை எடுத்துக்காட்டிவிடுகின்றது
தண்ணீர் 
இல்லாக் 
குளங்கள் 
பசுமையற்ற
மரங்கள்
கோபிகையர் 
குளிக்க
வருவதில்லை
என்ற கவிதையில் கண்ணன் வாழ்ந்த காலத்தில் குளம் இருந்தது. அவற்றில் தண்ணீர் நிரம்பி இருந்தன. மரங்கள் சுற்றிலும் இருந்தன அவற்றில் பசுமை இருந்தது. அப்போது கண்ணனும் கோபிகையரும் வந்து விளையாடினர் என்று அந்தக்கால நினைவுகளுக்கு மாறாக இக்காலத்தில் குளமும் இல்லை, குளத்தில் தண்ணீரும் இல்லை, மரங்கள் இல்லை, மரங்களில் பச்சை இல்லை, இதனால் கண்ணன் இல்லை, கோபிகையர் இல்லை என்று பழங்காலப் பசுமையை இக்காலத்தில் இல்லாமையைப் பாடுகின்றார் நெல்லைக் கண்ணன்.
நாகரீகச் சென்னையின் சுற்றுச் சூழல் கேடுகளைக் காட்டுகிறது பின்வரும் கவிதை
நிலவொளி
தடுக்கும் 
நியான்சைன் விளக்குகள் 
மழைநீர் 
தடுக்கும் 
கான்கிரீட் பூமி
மனங்கள் 
தடுக்கும் 
ஆசை அவதி
விடியுமுன் 
ஓட
வேலை
தூரங்கள் உறவுகளுக்குள் 
ஷிப்ட் சிஸ்டம்
என்ற கவிதையில் இயற்கையை விழுங்கும் செயற்கை ஆதிக்கத்தை, இவ்வாதிக்கம் மிக்க நகர வாழ்க்கையை விமர்சிக்கிறார் நெல்லைக் கண்ணன்.
நிலவெளி இயற்கையானது. ஆனால் அதனை நகரத்தின் செயற்கை நியான் ஒளி மங்கச் செய்துவிடுகிறது. இதனால் மின்சாரச்செலவு, கூடுதல் வெப்ப வெளியேற்றக் கேடுகள் ஆகியன உண்டாகின்றன. மழைநீர் பூமியில் தங்கி நிலத்தடி வளம் பெருக வேண்டும். ஆனால் அதனைச் செய்யவிடாமல் கான்கிரிட் தளங்கள், சாலைகள் போடப்பட்டுவருகின்றன. விடிவதைக் காண முடியாமல் வேலைக்குச் செல்லும் அவசரம், கணவன் மனைவி பேசிக்கொள்ள முடியாமல் வேலை நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் முரணான காலச் சூழல் போன்றனவற்றைப் பட்டியலிட்டு நகர வாழ்க்கையின் செயற்கைத் தன்மையை இக்கவிதையில் எடுத்துரைக்கிறார் நெல்லைக் கண்ணன்.
நெல் வயல்கள் வீடுகளாய்ப் போவதைப் பற்றி ஒரு கவிதை கவலை கொள்கின்றது.
நெல்லுவயல்
ஒழிச்சிட்டு
கடைகள் 
அம்மா பிணத்தில் 
பிள்ளைகள் ஆட்டம்
இங்குச் சொல்ப்பெற்றுள்ள உவமை குறிக்கத்தக்கது. அம்மா இறந்த பிணத்தின் மீது பிள்ளைகள் அழுவார்கள் என்பது வருத்தம் மிகுதியால் நிகழ்வது. ஆனால் அம்மாவின் பிணத்தின்மீது குழந்தைகள் மகிழ்வாய் விளையாடுவதுபோல நெல்வயல்களை ஒழித்துக் கடைகளைக் கட்டுகிறார்கள் என்று இக்கவிதை வருத்தப்படுகின்றது.
அதுபோல பாதாளச் சாக்கடையால் நீர் ஆதாரங்கள் அழிந்து வருவதை மற்றொரு கவிதை காட்டுகின்றது.
கருமாரித்தீர்த்தம், 
பொற்றாமரைக்குளம், 
வெளித்தெப்பம்
தாமரைக்குளம் 
ஒண்ணுக் கொண்ணு 
தொடர்பாய் பழைய அமைப்பு 
பாதாளச் சாக்கடையால் பாழாய்ப் போச்சு
என்று நீர் ஆதாரங்களைக் குலைந்து விட்டது பாதாளச் சாக்கடைத் திட்டம் என்று இந்தக் கவிதை நீர் ஆதாரங்களுக்கு இரங்கற்பா வாசிக்கின்றது. குறிப்பாக இக்கவிதையில் திருநெல்வேலி நகரத்தின் நீர் ஆதாரங்களைப் பட்டியல் இட்டு அவை தன் கண்முன்னே அழியும் சோகத்தையும் பாடுகின்றது.
கோயில் வருமானம் 
கூட்ட தாமரைக்குளம்
கட்டிடமாகுது
என்ற மற்றொரு கவியடி தாமரைக்குளம் கட்டிடமான சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றது. கோயில் வருமானம் பெருகலாம், ஆனால் ஆண்டாண்டு காலமாக நீர் ஆதாரம் பெருக்கி வந்த குளம் அழிந்துபோனால் வருகிற சந்ததியே அழிந்து போகுமே என்ற கவலைக்குறி இக்கவியடியில் காணப்படுகிறது.
இவ்வாறு வா மீத முலை எறி என்ற கவிதை திருநெல்வேலியில் நடைபெறும் சுற்றுச் சூழல் கேடுகளை விமர்சனப் பார்வையில் அணுகுகின்றது. இவரைப் பொறுத்தவரையில் பழைய காலம் இயற்கையோடு இயைந்த வாழ்வுடைய காலம். தற்காலம் என்பது இயற்கைக்கு விரோதமான காலம் ஆகும் என்ற அடிக்கருத்தை மையமிட்டு இவர் கவிதையாக்கங்களைச் செய்துள்ளார்.
இவரின் உரைநடைச் சித்திரமான குறுக்குத்துறை ரகசியங்கள் என்பதிலும் சுற்றுச் சூழல் சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன.
திருநெல்வேலியில் பிறந்தவன் எப்படி குறுக்குத்துறையோடு தொடர்பில்லாமல் இருக்கமுடியும்? இரண்டு புறமும் ஓங்கி வளர்ந்த மருத மரங்கள், பசிய வயல்கள். இடையிடையே ஒன்றிரண்டு நாவல் மரங்கள், லெவல் கிராசிங், புத்திசாலி கேட் கீப்பர், எவரோ பதித்த சுவர் சூரிய நிழல் கடிகாரம், இசக்கியம்மன் கோவில்.
…ஒரு வயதிற்கு மேல் குறுக்குத்துறைக்குப் போவது யாராவது மண்டையைப் போட்டால்தான்….
என்று திருநெல்வேலியில் மிச்சமிருக்கும் இயற்கை அழகைப் பதிவு செய்கிறார் நெல்லைக்கண்ணன்.
இவ்வகையில் திருநெல்வேலி வட்டார சுற்றுச் சூழல்களை முன்வைத்து அவற்றின் அழிவிற்கு இரங்கும் கவிதைகளைப் படைப்பவராக நெல்லைக்கண்ணன் விளங்குகின்றார்.
முனைவர் மு.பழனியப்பன்
இணைப் பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.

No comments: