.
Mathan Sathasivam
நாடகங்கள் பல வகையின. அவற்றுள் கவிதை நாடகமும் உள்ளடங்கும். “பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே” என்று பணித்தான் மகாகவி பாரதி. அவனுக்குப் பின் ஒரு புதிய கவிஞர் பரம்பரையே தோன்றிற்று. இந்திய கவிதை நாடகாசிரியர்களான பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் வி.கோ.சூரியநாரயண சாஸ்திரியாரும் திருச்சிற்றம்பலக் கவிராயரும் வேறு சிலரும் கவிதை நாடகத்தை எழுதியுள்ளனர். இதே போல் ஈழத்திலும் பல கவிதை நாடகாசிரியர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். அந்த வகையில் இ.முருகையன், து.உருத்திரமூர்த்தி, நீலாவணன், இ.அம்பிகைபாகன், க.சொக்கலிங்கம் போன்ற பாநாடகாசிரியர்களின் பணி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கும் கவிதைகளுக்கும் கவிதை நாடக வளர்ச்சிக்கும் காலாயமைந்தது. அந்த வகையில் இக்கட்டுரை ஈழத்துத் தமிழ் இலக்கிய , நாடகத் துறையின் வளர்ச்சிக்கு கவிஞர் இ.முருகையனின் படைப்புகள் எவ்வாறு பங்காற்றின என்பதை ஆராய்வதாகவுள்ளது.
கவிஞர் இ.முருகையன் சாவக்சேரியின் கல்வயல் எனும் பிரதேசத்தில் 1935.04.23 அன்று பிறந்தார். தனது கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் யாழ் இந்துக்கல்லூரியிலும் தொடர்ந் ததையிட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் கற்று பட்டதாரியானார்(1956). அதனைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் “கலைப்பட்ட பாடநெறியை” முழுமை செய்ததோடு தனது “முதுகலைமாணிப் பட்டத்தை” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தார்.
1956 இல் விஞ்ஞானப் பட்டதாரியாக வெளிவந்ததைத் தொடர்ந்து சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் விஞ்ஞான, கணிதப் பாடங்களை பயிற்றுவித்து ஏழாண்டு ஆசிரியராக கடமையாற்றியதைத் தொடர்ந்து அரச கரும மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக பதவியேற்று அதனையடுத்து கல்வித் திணைக்களத்தில் பதிப்பாசிரியராகவும் பிரதம பதிப்பாசிரியராகவும் பதவி வகித்தார். 1978–1983 வரையான காலப்பகுதிக்குள் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியதை அடுத்து 1984 இல் முல்லைத்தீவுப் பிராந்தியக் கல்விப் பணிப்பாளராக பதவியேற்றுப் பின் வவுனியாப் பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். அதனை அடுத்த காலப்பகுதியில் அதாவது 1986 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக முது துணைப் பதிவாளராகப் பதவியேற்று 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின் 2002 வரை பல்கலைக்கழக தமிழ்த் துறையில் வருகை தரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பிரசித்தி பெற்ற தமிழாசிரியனின் மகனாகப் பிறந்த முருகையன் தமிழ்ப் பற்றும் தமிழ் உணர்வும் மிகக் கொண்ட ஒரு கல்வியியலாளராகவே திகழ்ந்தார். மானுடநேயம் மிகுந்த விஞ்ஞான ரீதியான கல்விப்புலமையையுடைய ஒரு கவிஞனாகவே வாழ்ந்துள்ளார். தமது மாணவப் பருவத்திலேயே கவிதை ஊடாக இலக்கியப் பிரவேசம் செய்த முருகையன் அவர்கள் கவிதை, நாடகம், வானொலி பாநாடகம், பாடலாக்கம், கட்டுரை, கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று பல துறைகளில் ஒரு தீவிரத்துடனும் மிகத் தேர்ச்சியுடையவராகவும் மக்கள் மத்தியில் விளங்கினார்.
ஈழத்தில் 1970 களில் சுதேச நாடகக் கலைக்கு முன்னோடியாக அமைந்த அதாவது தமிழில் பா நாடகம் வளர்வதற்கு வித்திட்டவர்களுள் கவிஞர் இ.முருகையன், து.உருத்திரமூர்த்தி, இ.அம்பிகைபாகன், நீலாவணன், க.சொக்கலிங்கம் போன்ற பலரைக் குறிப்பிடலாம். மகாகவி து.உருத்திரமூர்த்தியினால் புதியதொரு வீடு, கோடை(1969), முற்றிற்று போன்றன மேடைக் கவிதை நாடகமாக இயற்றப்பட்டுள்ளன. ஈழத்தமிழ் கவிதைத் துறையிற் பேச்சோசப் பண்பு பொருந்திய கவிதைகளின் பிதாமகரான து.உருத்திரமூர்த்தி நெறியாளரான தாசீசியஸின் ஆலோசணைகளுடனேயே புதியதொரு வீடு நாடகத்தை மேடைக்கென திட்டமிட்டு எழுதினார்.
புதியதொரு வீடு நாடகமானது மீனவர் குடும்பத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட உணர்ச்சிமயமான கதையாக அமைகிறது. கரையோரப் பிரதேச மீனவ சமூகத்தின் வாழ்க்கையின் உயிர்த்தன்மை நிரம்பிய இயக்கங்களாக இந்நாடகமுள்ளது. கரையோரக் கிராமங்களில் மீனவரிடையே வழங்கும் நாடோடிப் பாடல்களின் சந்தத்தில் அமைந்த பாடல்கள் மீனவரின் இன்ப துன்ப மகிழ்ச்சிகளையும் சோகங்களையும் எடுத்துரைப்பதாகவுள்ளது. இன்ப துன்ப துயரங்களிலிருந்து அவற்றை மீறி மனிதன் வாழ வேண்டும் என்ற உறுதியை புதியதொரு வீடு நாடக எழுத்துருத் தயாரிப்பு வெளிப்படுத்துகிறது.
து.உருத்திரமூர்த்தியின் கோடை நாடகமானது, மாணிக்க நாயனக்காரரின் மகள் கமலி தன் தந்தையின் சீடப் பிள்ளையான சோமுவைக் காதலிப்பதும் அக்காதலை விரும்பாத கமலியின் தாய் செல்வம் பொலிஸ்காரனான முருகப்புவிற்கு அவளை திருமணம் செய்து வைக்க முயல்வதும் காதலர் நள்ளிரவொன்றில் ஊர்க்கோயில் மண்டபத்திலே ஒன்று சேர்வதுமான குடும்பக் கதையாகவுள்ளது. இந்நாடகத்தை நெறிப்படுத்திய பெருமை அ.தாசீசியஸ் அவர்களையே சாரும்.
இ.அம்பிகைபாகனின் வேதாளம் சொன்ன கதை எனும் பா நாடகமானது, மனிதர்களுக்கு இயல்பாக உள்ள குணங்களைப் பழைய கதை ஒன்றின் மூலம் கூறும் நாடகமாகவுள்ளது. நாடக நெறியாளரான சுஹைர் ஹமீட்டின் ஆலோசனைகளுடனேயே இந்நாடகமும் எழுதப்பட்டது. அதாவது விக்கிரமாதித்தன் கதையில் விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதையொன்றைத் தழுவி எழுதப்பட்ட நாடகமாக அமைகிறது. வனத்தில் வேட்டையாடச் சென்ற அரசன் ஒருவன் அங்கு ஒரு முனிகுரத்தியைக் காதலித்து முனிவரின் அனுமதியோடு தன் குதிரையில் அவளை ஏற்றி நாடு திரும்புகையில் வழியிற் பிசாசு ஒன்று அப்பெண்னைப் பலி கேடகிறது. அரசன் மறுக்க அவளை உயிருடன் விடுவதாயின் அவளுக்குப் பதிலாக பிராமணச் சிறுவன் ஒருவனை 6 நாட்களுக்கிடையில் பலி தர வேண்டும் என நிபந்தனையிடுகிறது. அந்நிபந்தனையினை அரசன் நிறைவேற்றிய வகையே வேதாளம் சொன்ன கதையாக அமைகிறது.
முருகையனின் கடூழியம், து.உருத்திரமூர்த்தியின் புதியதொரு வீடு, அம்பியின் வேதாளம் சொன்ன கதை போன்ற மூன்று பா நாடகங்களும் ஈழத்தின் தலை சிறந்த கவிஞர்களால் நெறியாளர்களின் ஆலோசணைகளுடனேயே எழுதப்பட்டு நடிக்க மாத்திரமின்றி படிக்கவும் கூடியனவாக அமைந்ததோடு மேடையேற்றச் சோதனைக்கு உட்பட்டு தேறித் தேர்ச்சியடைந்து வெற்றியடைந்த நாடகங்களாக அமைகின்றன. இம்மூன்று நாடகங்களும் இறுக்கமான உரையாடலையும் சொற்சேட்டையுமுடையதாக விளங்குகின்றன. இம் மூன்று நாடகங்களினதும் வெற்றி ஈழத்தின் எதிர்காலத் தமிழ் நாடக வளர்ச்சியின் போக்கை சுட்டிக்காட்டியதோடு சிறந்த உள்ளடக்கம், பொது மக்களிடையே வழங்கும் நாடக, இசை மரபுகள் என்பன இணைந்து ஓர் இயக்கமாக ஈழத்துத் தமிழ் நாடக உலகு பரிணமிப்பதை இந்நாடகங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. நீலாவணனின் பா நாடகங்களாக மழைக்கை, துணை போன்றன அமைகின்றன.
கவிஞர்.இ.முருகையனின் கவிதைகள் ஈழத்து இதழ்களிலும் இந்திய இதழ்களிலும் வெளிவந்திருப்பதோடு ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றை தமிழிலும் தமிழ்க்கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கின்றார். சிறந்த நடையும் கருத்தாழமும் முருகையனின் கவிதைகளில் பொருந்தியிருப்பதைக் காணலாம். இத்தன்மையினை அவரது வந்து சேர்ந்தன எனும் படைப்புக்கூடாகவும் காணமுடிகின்றது.
கவிஞர் இ.முருகையனின் படைப்புகளாக கவிதை நூல்கள், பாநாடக, மேடைநாடக எழுத்துருக்கள், இலக்கிய நாடகங்கள், வானொலி நாடகங்கள் போன்றனவுள்ளன. மொழிபெயர்ப்புக்கள் மூலமும் தமிழ்க் கவிதையுலகிற்குசெழுமை சேர்த்தவர்களுள் முருகையனும் குறிப்பிடத்தக்கவராவார். இவருடையே முதல் நூலே “ஒரு வரம்” எனும் பெயருடன் 1964 இல் மொழிபெயர்ப்புக் கவிதை நூலாக வெளிவந்தது.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் முருகையனின் பாடசாலை காலத்து நண்பராவதோடு இருவரும் இணைந்து “கவிதை நயம்” எனும் நூலை வெளியீட்டதோடு ஒரு முற்போக்கு வாதியான ஆங்கிலப் புலமை மிக்க மொழிச் செழுமைக்கு விஞ்ஞானத்தின் தேவை பற்றி வற்புறுத்திய தன் பாடசாலை காலத்து நண்பனை கவிஞர்களில் கவிஞன் என்று க.கைலாசபதியவர்கள் பாராட்டியதில் எவ்விதவியப்புமில்லை.
கவிஞர் முருகையனும் இ.இரத்தினமும் இணை ஆசிரியர்களாக தொழிற்பட்டு “நோக்கு” எனும் காலாண்டிதழை வெளியிட்டனர். இவ்விதழிலும் நிறைய மொழிபெயர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கவிஞர் இ.முருகையனின் ஆங்கிலப் புலமை மிகவும் அசாத்தியமானதுடன் சேக்ஸ்பியர் எனும் சிறப்பிதழை வெளியீட்டுமுள்ளார். யாழ் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு “மொழிபெயர்ப்பு நுட்பம்” பற்றி விரிவுரையாற்றியுள்ளதோடு அவ்விரிவுரைகள் அனைத்தும் அதே பெயரில் நூலுருப்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு உற்சாகத்துடனேயே மொழிபெயர்ப்புத் துறையிலும் ஈடுபட்டும் உள்ளார்.
கவிதை நூல்களாக ஒரு வரம்(1964), நெடும் பகல்(காவியம் -1967), அது அவர்கள் நீண்ட கவிதை(1986), மாடும் கயிறு அறுக்கும்(1990), நாங்கள் மனிதர்(1992), ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்(2001), ஆதிபகவன் போன்ற இன்னோரன்ன கவிதைகளை படைத்துள்ளார்.
கவிஞர்.இ.முருகையனின் பா நாடக, மேடை நாடக படைப்புகளாக வந்து சேர்ந்தன, தரிசனம், கோபுர வாசல்(1969) , வெறியாட்டு(1989), மேற்பூச்சு(1991), சங்கடங்கள்( 2000), கடூழியம்(1970), அப்பரும் சுப்பரும், குற்றம் குற்றமே, பொய்க்கால், உயிர்த்த மனிதர் கூத்து, நாமிருக்கும் நாடு நமது (அரசியல் நாடகம்), மானுடம் சுடரும் ஒரு விடுதலை, வழமை, சும சும மகாதேவா, கொண்டு வா தீயை கொளுத்து விறகை எல்லாம் (சமூக நாடகம்), கந்தப்பமூர்த்தியர், இடைத்திரை, குனிந்த தலை, எல்லாம் சரி வரும், கலிலியோ, தந்தையின் கூற்றுவன், இருதுயரங்கள், செங்கோல், உண்மை போன்ற பல நாடகங்களை குறிப்பிடலாம்.
இ.முருகையன் அவர்களால் முதன் முதல் எழுதப்பட்ட நாடகமாக சிந்தனைப்புயல் எனும் நாடகம் அமைகிறது. பொய்க்கால், உயிர்த்த மனிதரின் கூத்து, நாமிருக்கும் நாடு நமது, மானுடம் சுடரும் ஒரு விடுதலை போன்ற அரசியல் நாடகங்களை காத்திரமாக தயாரித்த பெருமை ஈழத்து வீதி நாடக முன்னோடியான கலாநிதி.க.சிதம்பரநாதன் அவர்களையே சாரும். மானுடம் சுடரும் ஒரு விடுதலை எனும் நாடகமானது தெருவெளி நாடக முயற்சியாக அமைகிறது. கவிஞர்.இ.முருகையனின் கவிதை நாடகத்தை மேடையேற்றும் முயற்சி முதன் முதல் குற்றம் குற்றமே எனும் நாடகத்தின் ஊடாகவே நிகழ்ந்தது. 1962 காலப்பகுதியில் குற்றம் குற்றமே எனும் கவிதை நாடகத்தை மேடையேற்றிய பெருமை பேராசிரியர்.க.சிவத்தம்பி அவர்களையே சாரும்.
இலங்கையில் வானொலிக்காகவே முதன் முதலில் கவிதை நாடகமாக நித்திலக்கோபுரம்(1953) எனும் நாடகம் எழுதப்பட்டது. அது வானொலியில் ஒலிபரப்பான பின்னரே அந்தகனேயானாலும், கலைக்கடல், பில்கணியம், தரிசனம்(1965) முதலான கவிதை நாடகங்களை இ.முருகையன் வானொலிக்காக எழுதினார்.
வந்து சேர்ந்தன என்ற கவிதை நாடகமானது வாதவூரடிகள் வரலாற்றேட்டில் ஓர் இதழை விரித்துக்காட்டுவதாகவுள்ளது. அதாவது பலருக்குத் தெரிந்த வாதவூரர் குதிரை வேண்டிய கதையைப் புதிய கோணத்தில் நோக்கி அழகோடும் அர்த்தத்துடனும் வந்து சேர்ந்தன என்ற நாடகத்தை உருவாக்கியிருந்தார். முருகையனின் கோபுரவாசல் நாடகமானது(1969) திருநாளைப் போவாராகிய நந்தனாரின் வரலாற்றை விபரித்து அதனோடு அன்று கோயிலினுள்ளே தாழ்த்தப்பட்ட மக்களை நுழையவிடாத தீய சக்திகளை ஒப்பிட்டுக் காட்டிசிந்தனையைத் தூண்டும் முழு நேர மேடைக்கவிதை நாடகமாக படைத்துள்ளார்.
சுரண்டுபவர்களுக்கெதிரான உழைப்பாளர் போராட்டங்களை அவர்களின் வெற்றிகளை மையக்கருவாகக் கொண்டு நாடக நெறியாளரான நா.சுந்தரலிங்கத்தின் ஆலோசணைகளுடனேயே மேடைக்கெனத் திட்டமிட்டு கடூழியம் எனும் மேடைக் கவிதை நாடகம் இ.முருகையனால் 1969 காலப்பகுதியில் எழுதப்பட்டது. உள்ளடக்கத்தாலும் நெறிப்படுத்தப்பட்ட நடிப்பாலும் காட்சியமைப்பாலும் கடூழியம் நாடகமானது ஈழத்தமிழ் நாடக உலகில் பாரிய வெற்றித் தயாரிப்பாகவும் ஒரு பாய்ச்சலாகவும் அமைந்திருந்தது. அன்றைய கால கட்டத்தில் இலங்கையின் இரு மொழிகளிலும் வெளிவந்த சிறந்த நாடகம் என்ற பாராட்டையும் கடூழியம் பெற்றுக்கொண்டது.
ஏறத்தாழ பதினைந்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்ட இவரது நூல்கள் வெளிவந்துள்ளதோடு நூலுருப்பெறாத நிறைய எழுத்துக்களும் உள்ளன என்பதை மனங்கொள்ள வேண்டும்.
இவரட தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்து பணியாற்றியுமுள்ளார்.
கவிஞர்களுள் கவிஞனும் மூத்த கவிஞரும் எழுத்துருப் படைப்பாளியுமான இ.முருகையன் அவர்கள் ஏராளமான கவிதைகளையும் ஏறத்தாழ இருபத்தைந்துக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியும் உள்ளார். இவரது கவிதைகளும் செய்யுள் நாடகங்களும் சமூகத்து மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை கூறுவதாகவுள்ளன. இலங்கையரசு தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய பணிக்காக சாகித்ய இரத்னா விருதை 2006 இல் வழங்கியதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தை கொடுத்து கௌரவித்தது. இவர் தனது இறுதிக்காலத்தில் நோய்ப்பட்டிருந்ததோடு 27.06.2009 அதாவது தனது 74 வது வயதில் ஒரு சனிக்கிழமை மாலை வேளையில் இறைவனடி சேர்ந்தார். இவரது இடம் இற்றை வரைக்கும் நிரப்பப்பட முடியாததொரு இடமாகவேயுள்ளது. இவரது இடத்துக்கு மாற்றீடாக இவரது எழுத்துக்களே என்றென்றும் மக்களுடனே வாழ்ந்து கொண்டிருக்கும்.
பாக்கியராஜா மோகனதாஸ் (நுண்கலைமாணி)
No comments:
Post a Comment