இனிப்பாயவாழ எண்ணிடுவோம் ! ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ....

.

       சர்க்கரைநோய் நோயல்ல எனச்சாற்றும் உரைகேட்பார்
           சந்தோஷக் கடல்மூழ்கி சர்க்கரையை நினைந்திடுவார்
      சர்க்கரைநோய் விளைவுபற்றிச் சரியாக விளங்காமல்
            தாம்விரும்பும் சர்க்கரையை தனியாகச் சுவைத்துநிற்பார் !

     உரைகள் பலகேட்டாலும் உளமதனில் இருத்தாவிடின்
           விளைவு பலவந்தெம்மை வீழ்த்திவிடும் எனுமெண்ணம்
     பலர்மனதில் பதியாமல் பாதிவழி  நிற்பதுவே
            நலனிழந்து போவதற்கு நற்சான்றாய் இருக்குதன்றோ !

     நோய்க்கெல்லாம் தாயாக சர்க்கரைநோய் விளங்குதென
             நாட்டிலுள்ள வைத்தியர்கள் நாளாந்தம் சொல்லுகிறார்
     பேய்க்குணத்தால் இவையெதையும் எம்மனது ஏற்காமல்
           வாய்க்கின்ற உணவையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்துவிடும்  !

     சமாதானம் பலசொல்லி சர்க்கரையை எடுத்திடுவார்
           சலரோகம் அவரிடத்தில் சன்னதமேஆடிநிற்கும்
     சிலவேளை மருந்தெடுப்பார் பலவேளை அதைமறப்பார்
            அதனாலே அவரின்பம் அத்தனையும் பறிகொடுப்பார் !

     உடல்பருக்கும் உடல்மெலியும் உற்சாகம் குறைந்துவிடும்
            நடைகூடத் தளர்ந்துவிடும் நடுக்கமும் வந்துநிற்கும்
    இவையெல்லாம் இனிப்பென்னும் இம்சைதரும் விளைவாகும்
           இன்சுலினை எடுத்தெடுத்து எல்லோரும் ஏங்கிநிற்பார் !


      இனிப்புக் கண்டவிடமெல்லாம் இளித்துநிற்கக் கூடாது
             தனித்துநின்று இனிப்பதனை சுவைத்துநிற்றல்  கூடாது 
      மனம்விரும்பும் உணவுகளை வாயில்போடக் கூடாது
              மருந்தோடு உடற்பயிற்சி மறந்துவிடல் கூடாது !

       நேரங்கெட்ட நேரத்தில் நிறையவுண்ணக் கூடாது 
             நாருள்ள  உணவுகளை நாம்மறக்கக் கூடாது 
       ஊர்விட்டுச் சென்றாலும் உணவுண்ணும் முறையனைத்தும்
             மாறாமல் இருப்பதற்கு மறந்துவிடக் கூடாது !

         பச்சையாய் காய்கறிகள் பழவகைகள் எடுக்கவேணும்
              இச்சையுடன் நாமவற்றை எப்பொழுதும் ஏற்கவேணும்
        அச்சம்தரும் உணவுகளில் ஆசைகொள்ளல் தவிர்த்துவிட்டால்
              அநேகம்பேர் நிம்மதியை அடைவதினைக் கண்டிடலாம் !

         நாவிரும்பும் உணவுகளை நாமொதுக்க எண்ணிடுவோம்
              நலன்விளைக்கும் உணவுகளை நாவேற்கச் செய்திடுவோம்
         நோய்பற்றித் தெளிவுற்று நுடங்காது இருந்திடுவோம்
               வாழ்நாளை மனமிருத்தி வாழ்ந்திடுவோம் நல்வழியில் !

                     மைசூர்பாகை மறந்துவிடு
                     மணக்குமல்வாவை தூக்கியெறி
                     கேசரிகிட்டவே போகாதே
                     கிறுகிறுப்புனக்கு வந்துவிடும்
                     எந்தலட்டையும் எடுக்காதே
                      வந்திடுமுனக்குச் சங்கடமே 
                     இனிப்புமுறுக்கை எடுத்துவிடின்
                      தவித்துநிற்பாய் நோயாலே 
                      சர்க்கரைப்பொங்கலை தவிர்த்துவிடு
                      சந்தோஷமுன்னைத் தேடிவரும்
                      இனிப்பைக்கண்டால் நாவூறும்
                      இவைகளனைதும் இடையூறே 
                      இனிப்பைப்பற்றி நினையாமல்
                       இனிப்பாயவாழ எண்ணிடுவோம் !

        வருமுன்னர் காப்பதற்கு வழிகள்பல இருக்கிறது
              வந்தபின்னர் எமைக்காக்கும் வழிகளுமே விரிகிறது 
       தினமும்நாம் நலன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்
              தினமுமே எம்வாழ்வு தித்திப்பாய் இருக்குமன்றோ !
               



No comments: