இலங்கைச் செய்திகள்


முகாம்களில் இருந்தது போன்றே தற்போதும் உணருகிறோம் ; நல்லிணக்கபுரம் மக்கள் தெரிவிப்பு

“ஆவா” குழு தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியானது

தேரரின் இனவாதப்பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.!

சர்ச்சைக்குரிய பிக்குவின் மற்றுமொரு செயற்பாட்டால் செங்கலடியில் பதற்றம் (படங்கள் இணைப்பு)

 புலம் பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய பிக்கு பொலிஸில் முறைப்பாடு

தொடரும் சர்ச்சை : மங்களராமய விகாராதிபதியின் மற்றுமொரு காணொளி வெளியானது : மட்டு. அரச அதிபரிடம் ஆக்ரோஷம்

 தேரரின் நிந்தனைக்குள்ளான கிராம சேவகர் மனோவிடம் நேரில் சென்று முறையீடு

எங்கள் இரத்தத்தின் பாதியே முஸ்லிம், தமிழ் மக்கள் : எந்தவொரு இனவாதியாலும் அவர்களை வெளியேற்ற முடியாது : பிக்குவின் அதிரடி பேச்சு


முகாம்களில் இருந்தது போன்றே தற்போதும் உணருகிறோம் ; நல்லிணக்கபுரம் மக்கள் தெரிவிப்பு

14/11/2016 நல்லிணக்கபுரமென்ற பெயரில் கிராமத்தை உருவாக்கியிருக்கின்ற போதும் வீடுகள் பலவும் இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாது, அடிப்படை வசதிகள், தண்ணீர் வசதிகள் போன்றன ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அங்கு குடியிருக்கும் மக்கள் பெரும்கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற நிலையில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது காணிகளை விடுவித்து தங்களை தமது சொந்த காணியில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி வந்தனர்.

இந் நிலையில் அந்தப் பகுதி மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு நேரடியாகச் சென்ற ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட ஆறு மாத காலத்திற்குள் இந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அனைவரும் சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என வாக்குறுதியளித்திருந்தார்.
எனினும் ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிக் காலம் கடந்த நிலையில் அந்த மக்களுடைய காணிகளை வழங்கி சொந்த நிலத்தில் அவர்களைக் குடியேற்றாது மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் இராணுவத்தின் உதவியுடன் கீரிமலையில் இருந்த அரச காணியில் சுமார் நூறு குடும்பங்களை உள்ளடக்கியதாக அவர்களுக்கு காணிகளையும் வழங்கி வீடுகளை அமைத்து அந்தப் பகுதியில் நல்லிணக்கபுரம் என்ற புதுப்பெயருடன் கிராமமொன்றையும் உருவாக்கியுள்ளனர். 
முகாம்களில் தற்போதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் குறிப்பிட்ட நூறு குடும்பங்களுக்காக அமைக்கப்படும் இந்த நல்லிணக்கபுரம் குடியேற்றத்தை வைத்து அனைவரும் குடியமர்ந்துவிட்டதாக வெளியுலகிற்குகக் காட்டுவதற்காக கடந்த சில வாரங்களிற்கு முன்னர் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளையும் கையளித்திருந்தார்.
இவ்வாறு அரசினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் ஒவ்வொன்றினுள்ளும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இராணுவத்தினரின் படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அத்தோடு அந்த புதிய கிராமத்தில் இராணுவத்தினர் காவலரண் அமைத்து காவல் இருந்து அங்கு செல்பவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.
நல்லிணக்கபுரமென்ற பெயரில் அவசர அவசரமாக வீடுகளை உள்ளடக்கி கிராமத்தை உருவாக்கியிருக்கின்ற போதும் இங்கு அமைக்கப்பட்ட வீடுகள் பலவும் இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும் அங்கு குடியமர்நதுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.  குறிப்பாக அங்கு தண்ணீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அம் மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது வீடுகளில் தண்ணீர் தாங்கிகள் வைத்தும் வீடுகளுடன் இணைந்ததாக குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதும் தண்ணீர் வழங்கப்படாததால் இவை அனைத்தும் பயனற்றதாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் இரண்டு மூன்று நாளைக்கு ஒரு தடவை தான் தண்ணிர் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்ட மக்கள் முகாமில் கூட தாம் இவ்வாறு தண்ணீர் இல்லாமல் இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். 
மேலும் ஒரு வெட்ட வெளியில் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ள போதும் அதற்கான வேலிகள் எவையும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் தாமும் வேலிகளை அமைக்க இராணுவத்தினர் அனுமதிக்கின்றனர் இல்லை என்றும் தமது வாழ்வாதாரத்திற்கான தொழில் வசிதிகள் எவையும் இதுவரையில் அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் அம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  
இதேவேளை அரசினால் அமைக்கப்பட்ட இந்த நல்லிணக்கபுர கிராமமும் கீரிமலை செம்பொன்வாய்க்கால் மயானமும் ஒன்றாக அருகருகே காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சுடலை என்பதை எட்டத்தேயே வைத்திருப்பார்கள். இங்கு என்னவென்றால் சுடலைக்கருகிலேயே தாம் இருப்பதாகவும் சுடலைக்கும் தமது வீடுகளுக்கும் ஒரு வேலி கூட இல்லாமல் எல்லாம் ஒன்றாகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 
“ஆவா” குழு தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியானது

15/11/2016 யாழில் குற்றச்செயல்களை புரிந்து வருவதாக கூறப்படும் ஆவா குழுவில் மொத்தமாக 62 பேர் இருப்பதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்க தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
ஆவா குழுவில் 62 பேர் இருக்கின்றனர். இதில் 38 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 
இவர்கள் கையாளும் வாள் ஒன்று பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதுடன், குறித்த வாளினை போன்று ஏனைய வாள்கள் நாட்டில் உருவாக்கப்படுகின்றன. அதுமாத்திரமின்றி இவர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் குற்றச்செயல்கள் புரிவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்  இது தொடர்பான மேலதிக  விசாரணைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
 இதேவேளை இராணுவத்திற்கும் ஆவா குழுவிற்கும் தொடர்புள்ளதா? என அனுரகுமார திசாநாயக்க கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இராணுவத்திற்கும் ஆவா குழுவுக்கும் நேரடியாக தொடர்பு இல்லாத போதும், இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர் ஒருவர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் எனவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது எனவும் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 
தேரரின் இனவாதப்பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம்

15/11/2016 மட்டக்களப்பு விகாரதிபதி அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் நில அபகரிப்பை தடுப்பதற்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழவினரையும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை தேசிய இனங்களையும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருவரையும் மிக கடுமையாக இனத்துவேச வார்த்தைகளை பயன்படுத்தி  திட்டிய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
அம்பிட்டிய தேரரின் இனவாத பேச்சையும் அடாவடித்தனத்தையும் கண்டித்தும் பிரதேச செயலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால்  இன்று குறி்த்த கண்டன ஆர்பாட்டமொன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.!

16/11/2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிபதி எம்.பி.எம்.முஹைதீன் முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதணையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த 11.10.2015 அன்று சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதிவரை 4 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி 

சர்ச்சைக்குரிய பிக்குவின் மற்றுமொரு செயற்பாட்டால் செங்கலடியில் பதற்றம் (படங்கள் இணைப்பு)

16/11/2016 நீதிமன்ற ஆணையையும் மீறி பதுளை வீதியில் உள்ள பன்குடாவெளி பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி மேற்கொண்டுள்ளதால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மற்றும் பொதுமக்கள் பௌத்த பிக்குவை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பொலிசாரின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி பிற மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்களை பஸ் வண்டிகளில் ஏற்றி வந்து பதுளை வீதியில் உள்ள பன்குடாவெளி பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைக்க முயற்சித்துள்ளார்.
இதனை தடுப்பதற்கு பொதுமக்கள் பலர் ஒன்று சேர்ந்து உள்ளதாகவும் இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி 


புலம் பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய பிக்கு பொலிஸில் முறைப்பாடு

16/11/2016 தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி புலம் பெயர் தமிழ் மக்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறைப்பாட்டில் புலம் பெயர் தமிழ் மக்களால் தொடர்ந்து தமது தொலைபேசியிற்கு  அழைப்பு வருகின்றது என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது அவரின் தொலைபேசியிற்கு அழைப்பினை மேற்கொண்டவர்களின் இலக்கங்களும் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

தொடரும் சர்ச்சை : மங்களராமய விகாராதிபதியின் மற்றுமொரு காணொளி வெளியானது : மட்டு. அரச அதிபரிடம் ஆக்ரோஷம்

17/11/2016 யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உணவு வழங்கி அவர்களின் காயத்திற்கு மருந்திட்ட என்னை புலி பயங்கராவதி என கூறி எனக்கெதிராக தேரரொருவரே வழக்குத்தாக்கல் செய்தார். அதேபோல தற்போது என்னுடைய மக்களின் பிரச்சினைகளுக்காக  போராடும் என்னை இனவாதி என பட்டிப்பளை பிரதேச செயலாளரும், மட்டக்களப்பு கிராம உத்தியோகத்தரும் மக்களிடம் பொய்கதைகளை சித்தரித்து வருகின்றனர். 
இதன் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் புலி கொடியை ஏந்தியவாறு என்னை கொலை செய்வேன் என இலட்சக் கணக்கான குறுந்தகவல்களை அனுப்புகின்றனர். எனது மக்களுக்காக நான் இறப்பதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அஞ்சியவன் நானல்ல என்று மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்த தேரர் தெரிவித்துள்ளார்.
கிராமசேவகரின் ஊடாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆறு சிங்கள குடும்பங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு வலியுறுத்திய மகஜர் ஒன்றை மட்டு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கையளித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் இனவாதியோ மதவாதியோ அல்ல. தமிழர்களுக்கு எதிரானவனும் அல்ல. சிங்கள மக்களின் உரிமைகளுக்கே போராடுகிறேன். நான் இனவாத ரீதியில் செயற்படுவதாக செய்திகள் பரப்பட்டுள்ளதால் என்னை கொலை செய்யப்போவதாக வெளிநாட்டில் உள்ளவர்கள் இலட்சக்கணக்கான குறுந்தகவல்களை அனுப்பி கொண்டு இருக்கின்றனர்.
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை பிரச்சினை இருந்து வருகிறது. அதேபோன்று சிங்களவர்களுக்கு காணிப் பிரச்சினை இருக்கின்றது. இது தொடர்பில் போராட்டம் நடத்திய சிங்களவர்கள் மீது அச்சுறுத்தல் விடுத்த பட்டிப்பளை பிரதேச செயலாளரும் கிராம உத்தியோகத்தரும் தற்போது ஆறு குடும்பங்களுக்கு எதிராக வழங்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு வழக்கு தொடரப்பட்டவர்களில் சிலர் தந்தை இன்றி தமது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றனர். பான் கூட வாங்க முடியாத இந்த அப்பாவி மக்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து அம் மக்களை காணியிலிருந்து வெளியேறுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இவர்களுக்கு எந்தவிதமான உதவிகளும் இல்லாததால் நானே அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு உதவி இன்றி இருப்பவர்களிடம் தற்போது இருக்கும் வீட்டையும் விட்டு வெளியேறுமாறு கூறினால் அவர்கள் எங்கு செல்ல முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நான் அந்த குடும்பங்களுக்காகவும் சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவுமே போராடுகிறேன். இது மாத்திரமன்றி விகாரைகளுக்கு சொந்தமான நிலப்பிரதேசங்களை இன்று நெற்செய்கைக்காக பயன்படுத்துகின்றனர்
இந்நிலைமைகள் மோசமானவை. இவற்றுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நினைத்ததினாலேயே நான் இன்று உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றேன். 
நான் அவதூறு பேசுவதாகவும் இனவாதம் மதவாதம் பேசுவதாகவும் பிரதேச செயலாளரும், கிராம உத்தியோகத்தரும் தமிழ் மக்களிடத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் இனவாதியும் அல்ல மதவாதியும் அல்ல.
என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை. ஆனாலும் எனது மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தற்போது வழக்கு பதியப்பட்டுள்ள ஆறு குடும்பத்தவர்களுக்கும் தாங்கள் நியாயம் வழங்க வேண்டும். தங்களை நான் அச்சுறுத்தவில்லை. மாறாக கோரிக்கையாகவே முன்வைக்கின்றேன். 
இப்பகுதியில் தமிழ், முஸ்லிம் அதிகாரிகளே அரச சேவையில் உள்ளனர். சிங்கள அரச அதிகாரிகள் இல்லை என்பதால் எம்மக்களுக்கும் பாரபட்சம் இன்றி நீங்கள் உதவ வேண்டும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த அப்பாவி மக்களுக்கு எதிராக யாரும் செயற்பட வேண்டாம்.
ரஜமகா விகாரையை ஒவ்வொரு நாளும் மண்ணால் மூடிகொண்டு வருகிறார்கள். இதுவா நல்லாட்சி? இன்னும் ஒரு மாதம் மாத்திரமே பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் எல்லோரும் இறப்பதற்கும் தயாராக உள்ளோம்.
தமிழ் சிங்கள மக்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் தேவை. கருப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றார்.
எனவே எமக்கு நியாயமான பதிலை நீங்களே பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்து அரச அதிபரிடம் மகஜரை கையளித்தார்.
இந்நிலையில் விகாராதிபதியின் ஆக்ரோஷமான விளக்கத்தை அவதானித்துக் கொண்டிருந்த அரச அதிபர் சார்ள்ஸ் அமைதியாக நின்றிருந்தவாறு மகஜரை பெற்றுக்கொண்டார்.    நன்றி வீரகேசரி தேரரின் நிந்தனைக்குள்ளான கிராம சேவகர் மனோவிடம் நேரில் சென்று முறையீடு

17/11/2016 மட்டக்களப்பு, மங்களாராமைய விஹாராதிபதியினால் மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில் கடுமையாக அச்சுறுத்தலுக்கும் துவேஷ நிந்தனைக்கும் உள்ளாகிய  கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனிடம் அமைச்சின் அலுவலகத்தில்  நேரில் சந்தித்து முறையீடு செய்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, அப்பிராந்திய குடியேற்ற அதிகாரி அரியரத்தினம் சிவகுமார், அயல் வலய கிராமசேவகர் ஜதீஸ்குமார் சயந்தன், ஜ.ம.மு. தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், அமைச்சு அதிகாரியும் ஜ.ம.மு. நிர்வாக செயலாளருமான பிரியாணி குணரத்ன, மனித உரிமை மற்றும்  அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் டொமினிக் பிரேமநாத் ஆகியோர் உடனிருந்தனர்.          
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,
கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதனுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி சட்ட ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கு நான் அறிவித்துள்ளேன். அதேபோல் கிராம சேவகர்களின் கடமைக்கு பொறுப்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும் இது தொடர்பில்  அறிவித்துள்ளேன்.
இந்நிலையில் பிரபல சட்டத்தரணியும் மனித உரிமையாளருமான இரத்தினவேலின் வழிகாட்டலில் கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.  இவருக்கு துணையாக மனித உரிமை மற்றும்  அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் டொமினிக் பிரேமநாத் செயற்பட்டுள்ளார்.    
 
இந்த பிரச்சினை தொடர்பிலும் நாட்டில் இன்று தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக எழுந்துள்ள பொதுவான பேரினவாத கருத்தோட்டம் தொடர்பிலும் இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சந்திக்க உள்ளேன். அதேபோல் நேற்று மாலை சோபித தேரரின் பெயரில் இயங்கி வரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை சார்ந்த சிங்கள முற்போக்கு சிவில் சமூக பிரதிநிதிகளுடனான முதல்கட்ட சந்திப்பு நடந்தது. இவ்வார இறுதியில் பெருகிவரும் இனவாதம் தொடர்பில் காத்திரமான நிலைபாட்டைவெளிப்படுத்த உள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் சரத் விஜெசூரிய என்னிடம் உறுதியளித்துள்ளார்.

நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் பெற இன்று பொது எதிரணி தயாராக இருக்கின்றது. பொது எதிரணி என கூறப்படும் பிரிவினரின் மிக முக்கியமான தலைவர் சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்களாராமைய விகாரைக்கு விஜயம் செய்து விஹாராதிபதியிடம் கலந்துரையாடியுள்ளார். இதன் பிறகே கடைசியாக நடைபெற்ற இந்த இனவாத கூச்சல் மட்டக்களப்பில் நடந்தேறியுள்ளது.

நேற்று செங்கலடி பன்குடாவெளியில் இந்த குறிப்பிட்ட மங்களாராமைய தேரர் முன்னெடுத்த அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டது. இந்நிலையில் பொதுவாகவும் சமூக ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கும்போது தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஏனையோரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.
பிரச்சினைகள் தொடர்பில் எவரும் மிக சுலபமாக கருத்துகளை ஊடகங்களில் கூறலாம். ஆனால் பின்விளைவுகள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்ள எவரும் பெரும்பாலும் ஸ்தலத்தில் இருப்பதில்லை.
இதுவே இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டு வரும் தூரதிஷ்டவசமான வரலாறு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே பொறுப்புடன் செயற்படும் அதேவேளை, காத்திரமான  மாற்று நடவடிக்கைகளையும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் என்ற முறையில் பொறுப்புடன் எடுத்து நிலைமைகளை நான் கையாண்டு வருவதாக நம்புகிறேன் என தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி எங்கள் இரத்தத்தின் பாதியே முஸ்லிம், தமிழ் மக்கள் : எந்தவொரு இனவாதியாலும் அவர்களை வெளியேற்ற முடியாது : பிக்குவின் அதிரடி பேச்சு


17/11/2016 எங்களின் இரத்தத்தின் பாதியே நீங்கள். எங்கள் சதையின் பாதியே நீங்கள். பொதுபல சேனா அல்ல எந்த சேனாவாலும் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. உங்களை வெளியேற்ற முயற்சிப்பது எங்களை வெளியேற்றுவதற்கு சமனாகும். நாம் அனைவரும் சமாதானத்தால் நாட்டை வெற்றிகொள்ள வேண்டும் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில்,  ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த மேற்படி தேரரின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நான் இவ்விடத்தில் ஒன்றைக் கூற விரும்பிகின்றேன்.
உங்களுடைய தந்தையர்கள் மட்டுமே இலங்கைக்கு வந்தார்கள். தமிழ், சிங்களம் தாய்மார்களேயே திருமணம் செய்து கொண்டார்கள். நீங்கள் ஒரு நாளும் இதனை மறவாதீர்கள். நீங்கள் எங்களுடைய இரத்தத்தில் ஒரு பாதி.. சதையில் ஒரு பாதி... அதை ஒரு நாளும் இல்லாமல் செய்ய நாம் இடமளிக்கபோவதில்லை.  
உங்களை வெளியேற்ற முயற்சிப்பது எங்களை வெளியேற்றுவதாகும். நாம் ஒருநாளும் அதற்கு இடமளிக்கபோவதில்லை. எந்த கடும்போக்கு வாதிகள் வந்தாலும் நமது ஒற்றுமையால் நாம் அதனை முறியடிப்போம். 
மீண்டும் நாம் இலங்கை தாய் நாட்டை பற்றி சிந்திப்போம். நாம் நாட்டை மீள்கட்டியெழுப்புவோம். பொதுபல சேன மாத்திரம் இல்லை யார் வந்தாலும் எப்படி சண்டைபோட்டாலும் முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ இந்நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். 
யாரும் கடலில் குதிக்கபோவதில்லை எனக்கூறுங்கள். இது நாம் நாடு. நாம் பிறந்த நாடு. இறப்பதும் இங்கே வாழ்வதும் இங்கே. நாம் இந்நாட்டை விட்டு வெளியேறபோவதில்லை. 
ஆனாலும் நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும். 
நாம் இறப்பதற்கு முன்னர் இனிவரும் நமது இளம்சந்ததினருக்கு முஸ்லிம், தமிழ், சிங்கள இனபாகு பாடுயின்றி அனைவரும் ஒன்றாக வாழ வழி செய்வோம். என குறித்த பிக்கு மேலும் தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி 
No comments: