காஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …பாரதி சுப்பிரமணியம்

.



(படம்: காஷ்மிர் நவ்ரோஸ் திருவிழாவின் அடிப்படை நம்பிக்கையோடு தொடர்புடைய பழங்கதையின் அடிப்படையிலான எருதும், சிங்கமும் சிற்பம் (இரானில் அமைந்தது)
சோமுவை, ஹரி கட்டையால அடிசுட்டாராமா, தெரியுமா உங்களுக்குஎன்றார் செந்தில், டீ கடையில்.
தெரியவில்லையேஎன்றார் சுப்பு.
கையே முறிஞ்சு போச்சாம், ஹாஸ்பிட்டல்ல இருக்காராம், ஹரியோட பக்கத்து வீட்டுக்காரர் தான் சொன்னார்என்றார். ஆயிரம் தான் இருந்தாலும், கையை முறிக்கிற மாதிரி அடிக்கலாமா. தப்பில்லையா?” என்றார்.
நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, ஹரி செய்தது தவறு தான்என்றார் சுப்பு.
அதுவரை அமைதியாக டீ குடித்துக்கொண்டிருந்த லெனின், “மொதல்ல, உங்களுக்கு என்ன நடந்ததுன்னு முழுசா தெரியுமா. சோமு, ஃப்யூஸ் மாட்டிட்டு இருந்தப்ப ஷாக் அடிச்சுருச்சு. அதை பார்த்த ஹரி அருகிலிருந்த கட்டைய எடுத்து அடிச்சிருக்கார். பதட்டத்துல கொஞ்சம் பலமா அடிச்சதால, கை முறிஞ்சுருச்சு. ஹரி மட்டும் கட்டைல அடிக்காம இருந்திருந்தா இந்நேரம் பெரிய விபரீதம் நடந்திருக்கும்என்றார்.


மேலும், “ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அப்போது நடந்த சம்பவத்தை மட்டும் பார்தோமென்றால், அது தவறாகி விடும். அதற்கு முன் என்ன நடந்தது, அதற்கும் நடந்த சம்பவத்துக்குமான தொடர்பென்ன, ஆகியவற்றையும் பார்த்து முடிவெடுத்தால் தான் அது சரியான முடிவாய் இருக்கும்என்றார்.
———
இப்பொழுது, ஆர்டிகிள் 370 பற்றிய குறிப்பொன்று வாட்சாப்பில் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆர்டிகிள் 370 காஷ்மீர் மக்களுக்கு அளிக்கும், (பிற மாநிலத்தவர்கள் அங்கு இடம் வாங்க முடியாது, அவர்களுக்கு தனி தேசியக்கொடி வைத்துக்கொள்ளலாம் போன்ற) சலுகைகளை பட்டியலிட்டு, இந்தியாவிலிருக்கும் ஒரு மாநிலம் மட்டும் இப்படி சலுகைகள் அனுபவித்துக்கொண்டிருப்பது நியாயமா, என்ற கேள்வியுடன் முடிகிறது.
இதை படிக்கும் அனைவருமே, மேலே உள்ள கதையில் வரும் சுப்புவைப் போல், அதானே, காஷ்மீர் மட்டும் இந்தியாவின் ஒரு பகுதியில்லையா? அவங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்குது? மத்த ஸ்டேட்டுல இருக்கவனெல்லாம் என்ன தாழ்ந்து போய்ட்டான்? அவங்களுக்கு மட்டும் சலுகை கொடுப்பது மாநில சமத்துவத்திற்கு எதிரானது. அதனால் 370 பிரிவை நீக்குவது தான் சரி என்று எண்ணுவர்.
ஆனால் அதற்கு முன் இருக்கும் காஷ்மீர் வரலாறும், அதற்கும், ஆர்டிகிள் 370 க்கும் உள்ள தொடர்பு பற்றியும் இதை பகிர்ந்திருந்த எவருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.
மேலே உள்ள கதையில், லெனின் சொன்னதைப் போல், ஆர்டிகிள் 370 வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றி முடிவெடுக்க, ‘காஷ்மீர் வரலாறுஎன்று அதற்கு முன் நடந்ததைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? அப்பொழுது தானே அது முதிர்ச்சியுடைய முடிவாய் இருக்கும்? இல்லை என்றால், அது அரை வேக்காட்டு முடிவாகி விடாதா?
சுருக்கமாக, நான் அறிந்த வரலாற்றை பற்றி இங்கு கூற முயற்சிக்கிறேன்.
முழு இந்தியாவையும் பிரிட்டிஷ் அரசாங்கம் நேரடியாக ஆட்சி செய்திருக்கவில்லை. இந்தியாவின் நாற்பது சதவிகித நிலப்பரப்பை சமஸ்தான மன்னர்களின் மூலமே ஆட்சி செய்தது.
இந்தியா சுதந்திரம் அடையும் போது அதில் ஐநூற்று நாற்பது சொச்சம் சமஸ்தானங்கள் இருந்தன.
சுதந்திரம் கொடுப்பதற்கு பத்து தினங்கள் முன், அதாவது ஜூலை இருபத்தைந்து தேதியில் மௌண்ட் பேட்டன், சமஸ்தான மன்னர்கள் அனைவரையும் அழைத்து, “இன்று முதல் நீங்கள் சுதந்திர சமஸ்தானங்கள். இந்தியாவை இரண்டாகப் பிரிக்க முடிவெடுத்திருப்பது உங்களுக்குத் தெரியும். இந்தியாவுடன் இணைவதா, இல்லை பாக்கிஸ்தானுடன் இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பது உங்கள் முடிவு. ஆனால், நீங்கள் அளவில், சிறு சிறு சமஸ்தானங்களாய் இருப்பதால், ராணுவ, மற்றும் பொருளாதார காரணங்களுக்காக இவர்கள் யாரேனும் ஒருவருடன் இணைவது தான் உங்களுக்கு நல்லது என்று அறிவுறுத்த விரும்புகிறேன்என்று கூறினார்.
அவரது பரிந்துரையை ஏற்று, பெரும்பாலான சமஸ்தானங்கள், பூகோள காரணங்களை முன்னிட்டோ, மத காரணங்களை முன்னிட்டோ பிரச்சினை இல்லாமல் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைந்து விட்டது, மூன்றைத் தவிர. அவை, ஹைதராபாத், காஷ்மிர் மற்றும் ஜுனோகத் சமஸ்தானங்கள்.
ஹைதராபாத் சமஸ்தானத்தின் மன்னர் இஸ்லாமியர், ஆனால் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். மன்னர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார், ஆனால் மக்கள் இந்தியாவுடன் இருக்க விரும்பினர். பூகோள ரீதியாக ஹைதராபாத் பாகிஸ்தானுடன் இணைய சிக்கல்கள் இருந்ததாலும், சமஸ்தான மக்கள் மன்னருக்கெதிராக புரட்சி செய்ததாலும், இந்திய அரசாங்கம் சுலபமாக மன்னரை பணியவைத்து ஹைதராபாத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
ஜுனோகத் சமஸ்தானத்திலும் இதே நிலைதான். மன்னர் இஸ்லாமியர், பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். ஆனால் ஒரே வித்தியாசம் என்னவென்றால், பூகோள ரீதியாக இது பாகிஸ்தானுக்கு அருகில் இருந்தது. அதனால் பாகிஸ்தானும் ஜுனோகத் தனக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மன்னர் பாகிஸ்தான் பக்கமிருந்தது அதன் கோரிக்கைக்கு வலு சேர்த்தது. ஜுனோகத் யாருக்கு என்ற சிக்கல் நீடித்ததால், பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, இந்த சமஸ்தானம் யாருக்கு என்று தீர்மானிக்கலாம் என்று முடிவானது. வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் இந்தியாவுடன் தான் இருப்போம் என்று கூறியதால், ஜுனோகத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், பெரும்பான்மையான இஸ்லாமியர்களும், இந்தியாவுடன் சேரவே விருப்பம் தெரிவித்து வாக்களித்திருந்தனர். இந்தியா சார்பாக 1,90,870 வாக்குகளும், பாகிஸ்தான் சார்பில் வெறும் 91 வாக்குகளே பதிவாயின. இதை இந்தியாவின் மீதான இஸ்லாமியரின் நம்பிக்கையாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஜுனோகத் மற்றும் ஹைதராபாத் சமஸ்தானத்திற்கும் காஷ்மீர் சமஸ்தானத்திற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஜுநோகத் மற்றும் ஹைதராபாத் சமஸ்தானங்களில், மன்னர் இஸ்லாமியர் ஆனால் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். ஆனால் காஷ்மீர் சமஸ்தானத்தில் மன்னர் ஹிந்து, பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமியர்கள். மேலும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர விரும்பவில்லை, தனி நாடாகவே இருக்க விரும்பியது.
பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிரிவினைக்கு வெகு காலம் முன்பே, முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் லீக் வைத்திருந்தது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சில பகுதிகளை அன்றே அடையாளம் கண்டு, அதன் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து, தனது நாட்டின் பெயரையும் முடிவு செய்து வைத்திருந்தது. அது, ‘Pakstan’. (‘Pakisthan’ அல்ல, அது பிறகு திரிந்தது). P-Panjab, A- Afgan province, K- Kashmir, S-Sind, Tan-Baluchistan னுடைய கடைசி மூன்று எழுத்துக்கள். தனது பெயரிலேயே நம்பிக்கையுடன் காஷ்மீரை வைத்திருப்பவர்களுக்கு அது தனக்கில்லை என்ற போது அதிர்ச்சி வருவதில் ஆச்சர்யமில்லைதானே.
தனது பூர்விகம் காஷ்மீர் என்பதால் நேருவிற்கும் எப்படியாவது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் பெயரே பண்டிட்ஜவஹர்லால் நேரு தானே. அவரது ஆசை எந்த அளவிற்கு இருந்தது என்றால், காஷ்மீர் நமக்கு கிடைக்காது என்ற நிலை வந்த பொது தனது அமைச்சரவை சகாக்கள் முன் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு எற்று சொல்கிறார்கள். தனக்கு அவ்வளவாக உடன்பாடில்லாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் கோல்வால்கரை, காஷ்மீரின் ஹிந்து மன்னரை வழிக்கு கொண்டுவர அனுப்ப ஒப்புதல் அளித்ததை வைத்து பார்க்கும் போது அவருக்கு காஷ்மீரை அடையும் பேரவா இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
காஷ்மீரை இணைக்க மன்னரை இணங்கவைக்கும் இது போன்ற வேலையை இந்தியா செய்து கொண்டிருந்த பொது, பாகிஸ்தான் வேறொரு வேலையை செய்தது.
நேரடியாகப் போரில் இறங்கினால் சர்வதேச நிர்பந்தங்கள் வரும் என்ற காரணத்தினால், ‘பதான்என்ற முரட்டு கும்பலுக்கு ஆயுதங்கள் கொடுத்து காஷ்மீரை பிடிக்க அனுப்பியது. காஷ்மீரை பிடித்தவுடன் ஸ்ரீநகரை நீங்கள் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை காட்டியது நன்றாகவே வேலை செய்தது.
அவர்களும், ஊரை அடித்து நொறுக்கி, பெண்களை வன்புணர்வு செய்து, என்று மிக அடாவடியாக முன்னேறிக் கொண்டிருந்தனர். இவர்களை தடுத்து நிறுத்துமளவு வலிமையான ராணுவம் மன்னரிடம் இல்லை. அதனால் ராணுவ உதவி கேட்டு இந்தியாவிற்கு தகவல் அனுப்பினார்.
இந்தியா ராணுவத்தை அனுப்பினால், பாகிஸ்தானும் அதை காரணம் காட்டி போரில் குதிக்கலாம், சர்வதேச நிர்பந்தங்களும் வரலாம், அதனால், தான் உதவ முடியாது என்று இந்தியா சொல்லியது. ஆனால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால், அது இந்தியப் பகுதி ஆகி விடும் என்றும் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் படைகளுக்கெதிராக எடுக்கும் ராணுவ நடவடிக்கையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியது.
காஷ்மீர் மன்னருக்கு இதில் துளியும் விருப்பமில்லை. அவர் மீண்டும் ராணுவ உதவியையே கோரினார். பதான்களோ ஸ்ரீநகரை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். தலைநகரை பிடித்து விட்டால் இந்தியாவிற்கு பெரும் சிக்கல். மன்னரோ காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க தயக்கம் காட்டுகிறார். ஏதேனும் செய்து மன்னரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இந்தியாவிற்கு. பதான்களிடமிருந்து எப்படியாவது நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் மன்னருக்கு. மேலும் கீழும் பல அவசர பேச்சுவார்த்தை நடந்த பின், மன்னர், வேறு வழி இல்லாமல், ஒரு சில நிபந்தனைகளுடன் இணைப்பிற்கு ஒத்துக்கொள்கிறார். போர் முடிந்த பின், காஷ்மீர் யாருடன் இருக்க வேண்டும் என்பதை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும், மற்றும் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்றில் மட்டும் தான் காஷ்மீர்க்கும் சேர்த்து முடிவெடுக்கும் உரிமையை இந்தியா பெறும், போன்றவை அதிலுள்ள சில நிபந்தனைகள். இதற்கு இணங்கித்தான் இணைப்பை இந்தியா ஏற்படுத்தியது.
போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது ஐ.நா. சபை தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்துகிறது. ராணுவம் அப்போது எந்த நிலையில் இருக்கிறதோ அதுவே லைன் ஆப் கண்ட்ரோல் என்கிறது. அப்பொழுது இந்தியா காஷ்மீர் முழுமையையும் மீட்டிருக்கவில்லை. ஒரு பகுதி மீட்கப்படாமல் இருந்தது. அது தான் பின்னாளில் Pakistan Occupied Kashmir(POK) or Azad Kashmir (சுதந்திர காஷ்மீர்) என்றானது.
அமைதி திரும்பிய பின் காஷ்மீர் யாருடன் என்றறிய மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தத் தயார் என்று ஐநா சபையிலேயே இந்தியா அறிவித்தது.
ஆனால் இன்றுவரை இந்தியா வாக்கெடுப்பு நடத்தவில்லை.
இந்துக்கள் பெரும்பான்மையாய் இருந்து, தனக்கு ஆதரவாய் சூழல் இருந்த ஜுனோகத் சமஸ்தானத்தில் வாக்கெடுப்பு நடத்திய இந்தியா, இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தாதது நியாயத்திற்கு புறம்பானது என்ற கூற்றை நேர்மையுடன் கவனித்தால் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
வாக்கெடுப்பு நடத்தாதது, ஏற்க்கெனவே வாக்களித்த படி உரிமைகளை கொடுக்காதது, போன்றவை தனி நாடு கோஷத்தையும், பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்ற கோஷத்தையும் பற்ற வைத்ததாக சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில், அப்போதைய காஷ்மீர் முதல் மந்திரி ஷேக் அப்துல்லாவின் கோரிக்கையான ஏற்கெனவே வாக்களித்த காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை, இந்திய அரசியல் சட்டப்படி உறுதி செய்ய வேண்டும்என்பதை ஏற்று 306 A என்ற சட்டப் பிரிவு உறுவாக்கப்பட்டது. அது பிறகு 309 பிரிவாக சட்டமாக்கப்பட்டது. பிறகு மேலும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு, 370 ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால், இது அனைத்தையும் மீறி, ஒரு கட்டத்தில் இந்தப் போராட்டம், தீவிரவாதமாக மாற, இந்திய ராணுவம் பொறுப்பெடுத்துக் கொள்கிறது, அளவில்லாத சிறப்பதிகாரங்களுடன்.
ராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் அத்துமீறலும் அராஜகமும் இருக்கும் என்பது தான் உலக வரலாறு. பல ஆண்டுகளாக சிறப்புரிமை கொடுக்கப்பட்ட ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிலும் அராஜகத்திற்கும், வன்முறைக்கும் பஞ்சமில்லை என்பதை பல சம்பவங்கள் மூலமாக நாம் உணரலாம். ராணுவமே செய்யும் பணத்திற்கான ஆள்கடத்தல். வன்புணர்வு, சர்வ சாதாரணமான கொலைகள், மக்கள் திடீர் திடீர் என காணாமல் போவது போன்றவை அங்கும் நடந்து கொண்டிருக்கிறது என்றே சொல்கிறார்கள். யாரையும் விசாரனையின்றி கைது செய்யும் சிறப்பதிகாரத்தை ராணுவம் அங்கு பெற்றிருக்கிறது. இவ்வளவு சிறப்பதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு புத்தனைப்போலவோ காந்தியைப்போலவோ ராணுவம் நடக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதால் அது புத்திசாலித்தனமில்லை.
சொன்னபடி வாக்கெடுப்பும் நடத்தவில்லை, வாக்களித்தபடி சிறப்பதிகாரங்களும் முழு அளவில் தரவில்லை, ராணுவ அத்துமீறலையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் செத்துவிட்ட தாய் நாட்டின் மீதிருந்த நம்பிக்கையை தட்டி எழுப்பும் நடவடிக்கை தேவையா, இல்லை 370 போன்று இருக்கும் அந்தஸ்தையும் பிடுங்கி அவர்களது வெறுப்பிற்கு மேலும் என்னை ஊற்றுவது அறிவுடைமையா? மீண்டும் வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீரை யாருடன் இணைப்பது என்பதைச் செய்யாவிட்டாலும், அம்மக்களின் மனதில் தொலைந்து போன நம்பிக்கையை ஏற்படுத்தா விட்டாலும், குறைந்தபட்சம் இருக்கும் அமைதி கெடாமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?

 நன்றி http://maattru.com/

No comments: