.
விடுதலைப் போர்க்களத் தோள்கள்
எவருடையவை?
“ஓரு துளி நீர் கடலைச் சேர்ந்தவுடன் தனது அடையாளத்தை
இழப்பது போல அல்லாமல், மனிதன் தான் வாழும் சமுதாயத்தில் தனது இயல்பை
இழந்துவிடுவதில்லை. மனிதனின் வாழ்க்கை சுயேச்சையானது. அவன் பிறப்பெடுப்பது
சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, தனது சொந்த
வளர்ச்சிக்காகவும்தான்.”
டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் அன்றே சொன்ன இந்த
வரிகளை இன்றைய இந்தியாவில் விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. மறுபடி
மறுபடி எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில்
மற்றவர்களைச் சார்ந்துதான் வாழ்கிறோம் என்றாலும், யாரும் அவரவரின்
தனிப்பட்ட அடையாளத்தை இழந்துவிடுவதில்லை. அந்தத் தனி அடையாளத்தை
வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுகிறவர்களாகப் பலர்
இருக்கிறார்கள். தனி மனிதர்களே தங்களது சொந்த அடையாளங்களை இழப்பதில்லை என்றால், சமுதாயத்தின் அங்கங்களாக உள்ள ஒவ்வொரு சமூகமும் கூட தனது
அடையாளத்தை இழந்துவிடுவதில்லை. தனி மனிதர்கள் பிறந்திருப்பது சமுதாயத்தின்
முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் தங்களது சொந்த முன்னேற்றத்திற்காகவும்தான்
என்றால், ஒவ்வொரு சமூகமும் கூடப் பாடுபடுவது தனது சொந்த
முன்னேற்றத்திற்காகவும்தான்.
இந்தியா தனது 70வது சுதந்திர
நாளைப் பெருமையோடு கொண்டாடுகிற இத்தருணத்தில், சமூகங்களின் இந்த
சுய அடையாளங்கள் பற்றி எந்த அளவுக்குப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது? இந்திய தேசத்தின் அங்கங்களாக இருப்பவை இங்குள்ள அத்தனை
சமூகங்களும்தான். மிக முன்னேறிய, எல்லா வசதி
வாய்ப்புகளையும் பெற்றிருக்கிற சமூகங்கள் மட்டுமல்ல, நாகரிகத்தின்
வாடையே படாதவர்களாகத் தீவுகளிலும் காடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிற பூர்வகுடி
சமூகங்களும் தேசத்தின் உயிர்த்துடிப்பான அங்கங்களேயாவர். இனம், மொழி, மதம், சாதி என பன்முகத் தன்மைகளோடு கூடிய அந்தச் சமூக அடையாளங்களை
அங்கீகரிப்பதே ஆரோக்கியமான தேசியம். சம உரிமையும் சம வாய்ப்பும் சம நீதியும்
நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்ற உறுதிப்பாடும் நம்பிக்கையும் ஒவ்வொரு
சமூகத்திற்கும் ஏற்படுவதிலிருந்தே உண்மையான, முழுமையான
தேசப்பற்று முகிழ்க்கும்.
ஆனால், நடப்பது என்ன? தேசியம் என்ற பெயரில் அந்தத் தனியடையாளங்களை மறுக்கிற
வன்மம் அரசியல் அதிகாரத் துணிச்சலோடு அரங்கேற்றப்படுகிறது. குறிப்பாக, மதச் சிறுபான்மையினரின் தனி இயல்புகளை இழக்கச் செய்கிற
கெடுபிடிகள் பல்வேறு வழிகளில் புகுத்தப்படுகின்றன. பொது சமூகச் சட்டம் தேவை என்ற
மேம்போக்கான வாதங்களால், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களின்
பண்பாட்டுத்தளத்தில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. சமஸ்கிருதமயமாக்கல்
நடவடிக்கைகளால் பெரும்பான்மை மதம் சார்ந்த பல்வேறு சமூகங்களின் மொழி அடையாளங்களை
அரிக்கும் கைங்கரியமும் முடுக்கிவிடப்படுகிறது. இந்திய மொழியில் பெயர் வைப்பதாகக்
காட்டிக்கொண்டு, மத்திய அரசின் திட்டங்களுக்கு சமஸ்கிருதம் அல்லது
இந்திப் பெயர்கள் சூட்டப்படுவதில் மறைந்திருப்பது சமூக அடையாளங்களை அழிக்கும்
ஆதிக்க வர்ணக் கோட்பாடுதான்.
இந்த அடையாள மறுப்பு யுத்தத்திற்கான வியூகத்தின் ஒரு
பகுதிதான், நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மதச் சிறுபான்மையினரின்
பங்களிப்பை மறைப்பது. முஸ்லிம்கள் என்றாலே சில குழுக்களின் தீவிரவாதத்தோடும்
பயங்கரவாதச் செயல்களோடும் மட்டும் சம்பந்தப்படுத்துகிற பிம்பங்கள்
கட்டமைக்கப்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் மன்னர்களின்
படையெடுப்புகளாலும், பேரரசுகளாலும் இந்தியத் தனித்தன்மைகள் சிதைக்கப்பட்டன
என்று கூசாமல் கூறுகிறார்கள் ஆதிக்கவாதிகள். இந்தியத் தனித்தன்மைகள் என்று
சொல்லிக்கொண்டாலும் அவர்கள் சொல்லவருவது உண்மையில் இந்து மதத்
தனித்தன்மைகளைத்தான். இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன, அங்கெல்லாம் மசூதிகள் எழுப்பப்பட்டன, கத்தி முனையில் குல்லாக்களும் பர்தாக்களும் கட்டாயமாக
அணிவிக்கப்பட்டன என்றெல்லாம், வரலாற்றைத்
தேடிப்படிக்கும் முனைப்பில்லாத இந்து இளைஞர்கள் மனங்களில் முஸ்லிம் மக்கள் மீதான
பகை நஞ்சு கலக்கப்படுகிறது.
அதே போல், 1947க்கு முந்தைய
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தது என்பதைக் காட்டிலும், அப்போது கிறிஸ்துவ மிஷனரிகள் இங்கே மதமாற்ற நடவடிக்கைகளில்
ஈடுபட்டார்கள் என்பதில்தான் ஆத்திரம் மிகுதியாகக் கொட்டப்படுகிறது. புத்தம், சமணம், சீக்கியம்
உள்ளிட்ட, இங்கிருந்தே புறப்பட்ட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த
மக்களின் பங்களிப்புகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது அல்லது அந்த மதங்கள் இந்து
மதத்தின் கிளைகள்தான் என்பதாகக்கூறி திருதிராஷ்டிர ஆலிங்கனம் செய்து
அடையாளமழிக்கிற உத்தி கையாளப்படுகிறது.
சிறுபான்மை மதங்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையினரின் இந்து மதத்திற்கு உள்ளேயே, மேட்டுக்குடி சாதிப்பிரிவுகளின் உணவு, உடை, ரசனைகள் உள்ளிட்ட பண்பாட்டுத்தள அடையாளங்களை
பிற்படுத்தப்பட்டோர் மீதும், தாழ்த்தப்பட்டோர்
மீதும் ஏற்றிவிடுகிற வேலை பல ஆண்டுகளாக நடந்துவந்துள்ளது. உலக அரங்கில் இந்தியா
என்றால் கோவில் கோபுரம், பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம்
ஆகியவை மட்டுமே நினைவுக்கு வரும் வகையில் அரசுத் தொடர்புகள், ஊடகங்கள், வணிக ஏற்பாடுகள்
மூலம் பதிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை வானொலி, தொலைக்காட்சி
மட்டுமல்லாமல் தனியார் ஊடகங்களிலும் தினமும் காலைப்பொழுதில் ஒலி/ஒளிபரப்பாகும்
வழிபாட்டுப் பாடல்களில் எதற்கு அதிகமான இடமளித்து முன்னுரிமை தரப்படுகிறது என்பதே
இதற்கு சாட்சி. ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் வருகிறபோது மட்டும்
அவர்களது பாடல்கள் முதலில் ஒலி/ஒளிபரப்பப்படும். அரசு அலுவலகங்களிலும் அரசுத்துறை
ஊடகங்களிலும் எந்த மதத்தின் சாயலும் படியக்கூடாது என்பதே மதச்சார்பற்ற நாடு
என்பதன் பெருமைக்குரிய வழிமுறை. ஆனால் இங்கோ இப்படி எல்லா மதங்களின்
வழிபாடுகளுக்கும் கூட்டிக்குறைத்து இடமளித்து, மதச்சார்பின்மை
என்பதன் அர்த்தமே சிதைக்கப்பட்டது. கொடுமை என்னவென்றால், இந்து மதவெறிக்கூட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதையே
காரணமாகக்கூறி தங்களது இன்றைய அத்துமீறல்களை நியாயப்படுத்துகிறார்கள் என்பதுதான்!
விடுதலைப் போராட்டத்தில் சிறுபான்மை மதத்தினருக்கு
முக்கியப் பங்கு எதுவும் இல்லை என்பது கடைந்தெடுத்த பொய் என்பதை பெரும்பான்மை
மதத்தினரிடையே – குறிப்பாக இளைய தலைமுறைகளிடையே – விளக்கமாகச் சொல்லப்பட வேண்டியுள்ளது. இந்தியா என்ற ஒரு
நாடு உருவானதற்கே முகலாயர் ஆட்சியும், பின்னர் வந்த
பிரிட்டிஷ் ஆட்சியும் தலையாய காரணம் என்றால் மிகையல்ல. அதற்கு முன் ஏது இந்தியா? சேர நாடு, பாண்டிய அரசு, சோழப் பேரரசு, நாயக்கர் ராஜ்யம், குப்தர்
சாம்ராஜ்யம், மௌரியர் தேசம், சாளுக்கியர்
பிரதேசம் என்றெல்லாம், அந்தந்த மன்னர்களின் பரம்பரையினர் வளைத்துப்போட்ட
நிலப்பகுதிகளே அந்தந்த நாடுகளாக இருந்தன. முகலாயர் வருகைக்குப் பிறகுதான், அவர்களும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றி ஆளத்தான் வந்தார்கள்
என்றாலும், ஒரே பேரரசாகப் பல்வேறு ராஜ்யங்கள் இணைக்கப்பட்டன.
பிரிட்டிஷ் வருகை இந்த இணைப்பை மேலும் விரிவுபடுத்தியது. மாகாணங்கள்
ஒருங்கிணைக்கப்பட்டதாக இந்தியக் காலனியாட்சி ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் நாட்டு
மக்களை அடிமைப்படுத்தினார்கள், வளங்களைச்
சுரண்டிச் சென்றார்கள் என்ற மறுக்க முடியாத உண்மையின் மறுபக்கமாக, அவர்களால் ஒருங்கிணைந்த இந்தியா உருவெடுத்தது என்பதும்
மறுக்க முடியாதது.
முகலாயப் பேரரசுகள் வேறு ஏதோவொரு நாட்டின்
மன்னர்களாலோ வணிக நிறுவனங்களாலோ இயக்கப்படவில்லை. இங்கேயே குடியமர்ந்து இந்த
மண்ணின் மக்களாகவே வளர்ந்தவர்களின் அரசுகளே அவை. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின்
மன்னராட்சிக் காலத்தில் இங்கேயிருந்த இந்து மன்னர்கள் எப்படி மக்களை
அடக்கியாண்டார்களோ அப்படியே முகலாய மன்னர்களும் ஆண்டார்கள்.
வெள்ளையர் ஆட்சியோ பிரிட்டனிலிருந்து லண்டன்
அரண்மனையால் இயக்கப்பட்டது. இந்திய மண்ணிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட வளங்கள்
அங்கே கடத்திச் செல்லப்பட்டன. அதைத் தடுக்க முயன்றவர்கள் – வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சி ராணி, மருது சகோதரர்கள், ராணி மங்கம்மாள்
உள்ளிட்டோரும், அவர்களது தலைமையில் கிளம்பிய மக்களும் – ஒடுக்கப்பட்டார்கள், ஒழித்துக்கட்டப்பட்டார்கள்.
பிரிட்டிஷார் பிடியில் இந்த மண் சிக்கிவிடக்கூடாது
என்பதற்காக வீரஞ்செறிந்த போர் நடத்தியவர் திப்புசுல்தான். 1799ல் ஸ்ரீரங்கப்பட்டனம் போர்க்களத்தில் அவரைக்கொன்ற ஆங்கிலேய
ராணுவ ஜெனரல் நெல் ஆணவத்தோடு திப்புவின் உடல் மீது காலை ஊன்றி, “இன்று முதல் இந்தியா நம்முடையது,” என்று கொக்கரித்ததை வரலாறு சொல்கிறது. இந்தியா அந்நியரிடம்
அடிமைப்பட்டுவிடக்கூடாது என்று கடைசிவரையில் தடுத்து நிறுத்திய பெருஞ்சுவராக
திப்பு திகழ்ந்தார் என்பதற்கான சாட்சியம்தான் ராணுவ அதிகாரியின் இந்தக்
கொக்கரிப்பு.
அடிமைத்தனத்திற்கும் அந்நியச் சுரண்டலுக்கும்
முடிவுகட்ட “வெற்றி வேல், வீர வேல்” என்ற முழக்கங்களோடு திரண்டவர்களைப் போலவே, “அல்லா ஹூ அக்பர்” என்ற
தொழுகைகளோடும் புறப்பட்டார்கள், “கர்த்தரே எமக்கு
ஜெயம் தாரும்” என்று ஜெபித்தவர்களும் இணைந்தார்கள். அவரவர்
குலசாமியைக் கும்பிட்டுக்கொண்டு வில்லும் அம்புமாய் அணிவகுத்த பூர்வகுடியினரின்
எழுச்சி ஒன்றும் குறைந்ததில்லை.
விடுதலைப் போருக்கு முன்னுரை எழுதிய கிளர்ச்சி 1806ம் ஆண்டின் வேலூர் எழுச்சி. கிழக்கிந்திய கம்பெனியின்
ராணுவத்தில் சிப்பாய்களாக இருந்த இந்து, முஸ்லிம்
இளைஞர்கள் நடத்திய அந்தப் போராட்டம் ஒரே நாளில் ஒடுக்கப்பட்டது, அதில் பங்கேற்றவர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு இணையாக, ஆனால் இதை விடவும் விரிவாக நீண்ட நாட்கள் பல்வேறு
பகுதிகளுக்கும் பரவியது 1857ம் ஆண்டின் ராணுவ வீரர்களது கிளர்ச்சி. பெருந்திரள்
மக்கள் போராட்டமாகவும் உருவெடுத்த அந்தப் போராட்டத்தில் இந்துக்களும்
முஸ்லிம்களுமாகப் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
பெண்களும் குழந்தைகளும் கூட விட்டுவைக்கப்படவில்லை.
விடுதலை வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயமாகிய
கிலாபத் இயக்கம் முதல், பிற்காலத்திய ஒத்துழையாமை இயக்கம் உள்பட 1947 ஆகஸ்ட் 14 வரையிலான அத்தனை
போராட்டங்களிலும் சமய வேறுபாடின்றி மக்கள் உணர்வுப்பூர்வமாகத் தோள் சேர்ந்து
நின்றார்கள். சொல்லப்போனால், அந்த ஒற்றுமையை
உடைப்பதற்காகத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதப்பகைமையைத் தூண்டுகிற
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார்கள். காந்தியை போராட்டத்தலைவராக ஏற்ற ஷைகுல்
ஹிந்த், மவுலானா முஹமது அலி ஜாவ்ஹர், முக்தார் அன்சாரி உள்பட, பின்னர்
களமிறங்கிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், காயிதே மில்லத்
என எத்தனை நாயக முகங்கள். இவர்களின் அறைகூவலை ஏற்று எதையும் இழக்கத்துணிந்து
போராட்டக்களம் புகுந்த முஸ்லிம் மக்களின் பங்களிப்பை மறைத்து இந்திய விடுதலை
வரலாற்றை எழுதிவிட முடியாது.
பிரிட்டிஷ் அரசின் ஆதரவோடு மதப்பிரச்சாரங்களில்
ஈடுபட்டு வந்த கிறிஸ்துவ மிஷனரி அமைப்புகளைச் சேர்ந்த ஆங்கிலேயப் பாதிரியார்கள்
பலர் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்கள். அதன் காரணமாகவே
நூற்றுக்கணக்கான பிரச்சாரகர்கள் பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். பல
மிஷனரி அமைப்புகளுக்கான நிதி உதவியை நிறுத்திய பிரிட்டிஷ் அரசு, சில அமைப்புகள் செயல்படுவதற்குத் தடை விதிக்கிற
நடவடிக்கையையும் எடுத்ததுண்டு.
தேசியப் போராட்டமாக அணி திரட்டிய காங்கிரஸ்
இயக்கத்தின் பல்வேறு மட்டங்களில் கிறிஸ்துவ அறிஞர்களும் தலைவர்களும்
பங்களித்திருக்கிறார்கள். தமிழகத்தின் பாளையங்கோட்டையில் கூடிய கிறிஸ்துவர்கள் சபை
உள்பட, நாடு முழுக்கக் கூட்டப்பட்ட கிறிஸ்துவ
சபைக்கூட்டங்களில், விடுதலைப் போராட்டத்துடன் ஒருமைப்பாட்டைத்
தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தத்துவப் பேராசிரியரும், கிறிஸ்துவ மக்கள் தலைவருமான ஜே.சி. குமரப்பா 1929ல் சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியை சந்தித்தார். அதைத்
தொடர்ந்து விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட குமரப்பாவை, சுதந்திரப் போராட்டச் செய்திகளுக்காகத் தாம் நடத்தி வந்த ‘யங் இந்தியா’பத்திரிகையில்
தொடர்ந்து எழுதச் சொன்னார் காந்தி. காந்தி சிறையிலடைக்கப்பட்டபோது அந்தப்
பத்திரிகையின் ஆசிரியராகவே பொறுப்பேற்றார் குமரப்பா. அவரது வழிகாட்டலில் எண்ணற்ற
கிறிஸ்துவ மக்கள் நேரடியாகப் போராட்டத்தில் பங்கேற்றார்கள்.
1973ல் தமிழக அரசு வெளியிட்ட, தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய
தொகுப்பில், இவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவ
தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சென்னை பிரம்மஞான சபை தலைவர் அன்னி
பெசன்ட் அம்மையார் தொடங்கிய தன்னாட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட
கிறிஸ்துவர் தலைவர்களது பங்களிப்புகளை விரிவாகச் சொல்லப்பட வேண்டியவை.
இந்தப் போராட்ட வரலாறு பெண்களின் பங்கேற்பின்றி
நிறைவுபெற்றுவிடாது. தொடக்கத்தில் குறிப்பிட்ட ஜான்சி ராணி லட்சுமி பாய், காந்தியின் இயக்கத்திலும் தோள்கொடுத்த கஸ்தூரிபா, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை
மரியாதையோடு நடத்துவதற்காகக் காலவரையற்ற பட்டினிப்போராட்டம் நடத்தி, அதற்காகக் கூடுதல் தண்டனை பெற்ற அருணா ஆசப் அலி, அவரோடு இணைந்து போராடிய பெண் கைதிகள், 1907ல் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட்டுகள் மாநாட்டில்
இந்திய விடுதலைப் போராட்டக் கொடியை உயர்த்திப் பிடித்த மேடம் காமா, லக்னோ போராளி பேகம் ஹஸ்ரத் மஹால், தேசிய இயக்கத் தாரகையாக ஜொலித்த சரோஜினி நாயுடு, அவரது மகள் பத்மஜா நாயுடு, தமிழக நாடக
மேடைகளில் துணிச்சலாக ஏறி, நாடகக் கதையோடு சுதந்திர தாகத்தை ஊட்டுகிற பணியையும்
செய்த கே.பி. ஜானகி அம்மாள்… இவர்களது பயணத்திற்கு
பக்க பலமாய் நின்ற வீரப்பெண்கள்…
நெடியதொரு
வரலாற்றைச் சில பக்கங்களில் சொல்வது மிகக்கடினம். ஆனால், இப்படி மாறுபட்ட மத நம்பிக்கை கொண்டவர்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், படிப்பாளிகள், கலை-இலக்கியவாதிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என
அனைத்துத் தரப்பினரின் ரத்தமும் வியர்வையும் கலந்து தீட்டப்பட்டதுதான் சுதந்திர
இந்தியா என்ற ஓவியம். அந்த ரத்தத் துளிகளுக்கும் வியர்வைத் துளிகளுக்கும் இருந்த
லட்சியம், இந்தியா விடுதலை பெற வேண்டும், விடுதலை பெற்ற இந்தியா மதச்சார்பற்றதாக, அனைத்து மக்களையும் சமமாய் அரவணைத்துக் கொண்டதாக விளங்கிட
வேண்டும் என்பதேயாகும்.
இயற்கையான
காட்டில் எல்லா வண்ணங்களிலும் பூக்கள் பூத்திருக்கும். எல்லா வண்ணங்களிலும் மக்கள்
சம மரியாதையோடும் முழு உரிமையோடும் மலர்ச்சியாக வாழ்ந்திருக்கும் நாடாக இந்தியா
பெருமித நடை போடட்டும். ஒவ்வொரு சமூகமும் ஒட்டுமொத்த சமுதாயத்தின்
வளர்ச்சிக்காகவும் தன்னுடைய வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிற நேசமும் இணக்கமுமாய்
இந்தியச் சமுதாயம் தனது சுதந்திரத்தைக் கொண்டாடட்டும்.
– அ. குமரேசன்
பகிர:
No comments:
Post a Comment