பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்துவோம்
நாடு திரும்பினார் ஜனாதிபதி
'அரசியல் கைதிகள், குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யுங்கள் ' : கொழும்பில் ஆர்ப்பாட்டம்
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : யாழ்ப்பாணத்தில் போராட்டம்.!
ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த
விளம்பர படத்தில் காணாமல் போன மகள் : நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது : தாய் கதறல்
1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய பெண் ; பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படும்.!
பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை
மோடியை சந்தித்தார் ஜனாதிபதி..!
பிரதமர் பெல்ஜியம் நோக்கி பயணமானார்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்துவோம்
10/10/2016 யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தி தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற `நண்பேண்டா` இசை நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கு கொள்வதற்காக வருகைதந்த இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்வின் ஹோட்டலில் நேற்று நண்பகல் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த சிறார்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை இலவசமாக நடாத்தினால் நல்லதாக அமையும். அதற்கான முயற்சிகளை எடுப்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் நின்று கொண்டே சொல்கின்றேன். இங்கு உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகளை இலவசமாக நடாத்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஆனால் அந் நிகழ்ச்சியானது எதற்காக பயன்பட வேண்டுமோ அதற்காக முழுமையாக பயன்பட வேண்டும். இவ்வாறான முயற்சிக்கு நாங்கள் நிச்சையமாக பங்களிப்பு வழங்குவோம்.
இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்கு பல குழுக்கள், நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரையும் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் குறைகூறுவதை நிறுத்த வேண்டும்.
நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது, அனைத்து கழகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான நிகழ்களை இங்கு நடாத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இவ்வாறான நிகழ்வுகளை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் ஒன்றிணைந்து வாருங்கள் ஒன்று சேர்ந்து நடாத்துவோம்.
இலங்கை இசைக்கலைஞர்களும் இசைக் கல்வியை கற்றுக்கொள்ள கூடிய ஒர் கல்லூரியை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் இதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தை யாழ்.இந்திய துணைத்தூவர் ஊடாக மிக விரைவில் கலைஞர்களுக்கும் மக்களும் அறிவிப்போம். அத்துடன் இக் கல்லூரியில் நாமும் வந்து இசைக் கல்வியை போதனை செய்வோம் என தெரிவித்திருந்தனர். நன்றி வீரகேசரி
நாடு திரும்பினார் ஜனாதிபதி
11/10/2016 தாய்லாந்து நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார்.
இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
பாங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
'அரசியல் கைதிகள், குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யுங்கள் ' : கொழும்பில் ஆர்ப்பாட்டம்
11/10/2016 குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் குமார் குணரட்ணம் மற்றும் அரசியல் கைதிகள் உடனடியாக உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுகின்ற அடக்கு முறைகள் உடன் இரத்து செய்யப்பட வேண்டும் எனக் கூறியும் இன்று ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் பாரிய பாதயாத்திரையொன்றை முன்னெடுத்தனர்.
கொழும்பு மருதானை டெக்னீகள் சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரை கொழும்பு ஒல்கொட் மாவத்தை வரைக்கும் சென்றதோடு கொழும்பின் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு பிரதான பஸ் நிலையம் வரைக்குமான பாதை முற்று முழுதாக வாகன நெரிசலுக்கு உள்ளாகியிருந்தது.
குறித்த பாத யாத்திரையில் அகில இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை பிக்கு முன்னணி , கட்சிகள் கலந்துக் கொண்டிருந்ததோடு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கலந்துக் கொண்டிருந்தது. நன்றி வீரகேசரி
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : யாழ்ப்பாணத்தில் போராட்டம்.!
11/10/2016 தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாகவும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் முதலாளிகளின் பக்கம் அல்லாமல் தொழிலாளிகளின் சார்பில் சிந்தித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தவறும் பட்சத்தில் இதேபோல் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக வட பகுதி முழுவதும் பாரிய போராட்டங்களை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி நவ சமாஜ கட்சிய ஆகியனவும் ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த
11/10/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். கடந்த 2015 இல் ஜனாதிபதி தேர்தல் தோல்வியினை தொடர்ந்து இவர் இன்று முதன்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த இவர் விகாரையில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைக்கும் வைபவம் கிழக்கு மாகாண பிரதம சங்கநாயக்கரும் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்ண தேரரரின் தலைமையில் இடம் பெற்றது.
முன்னாள் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்களும இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ வருகையையொட்டி மட்டக்களப்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நன்றி வீரகேசரி
விளம்பர படத்தில் காணாமல் போன மகள் : நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது : தாய் கதறல்
12/10/2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளை தேடி திறிகின்றனர்.
ஜனாதிபதியை சந்தித்து நான் எனது மகள் தொடர்பான தகவல்களை கூறிய சந்தர்ப்பத்தில் ஒரு மாதத்திற்குள் தீர்வை பெற்று தருவதாக உறுதியளித்தார். ஆனால் இது வரை தீர்வு கிடைக்கவில்லை என வவுனியாவைச் சேர்ந்த ஜெயவனிதா என்ற தாய் கண்ணீர்மல்க தெரிவித்தார்.
மருதானையில் அமைந்துள்ள சீ.எஸ்.ஆர். நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். நன்றி வீரகேசரி
1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
12/10/2016 தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து, அவிசாவளை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆரம்பித்து ஜனாதிபதி செயலத்திற்கு சென்று நிறைவடைய ஏற்பாடகியிருந்த நிலையில் பொலிஸார் வீதியில் தடைகளை போட்டு ஆர்ப்பாட்டத்தை தடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள 10 பேரடங்கிய குழுவினர் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும் வரை தாம் வேலைக்கு செல்லப்போவதில்லையெனவும் இப் போராட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித அக்கறையும் செலுத்தவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளோர் விசனம் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய பெண் ; பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு
12/10/2016 யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்னால் வேலுப்பிள்ளை பிரபாகரனது உருவம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து இதனை ஒட்டியது யார் என்பது தொடர்பாக விசாரனையை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் ஆஞ்சநேயர் ஆலய சூழலில் ஒட்டப்பட்டிருந்த கண்கானிப்பு கமராவின் மூலம் அதனை ஒட்டியது பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பெண் அடையாளம் காணப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரனையின் அடிப்படையில் ஜேர்மன் நாட்டில் இருந்து வந்திருந்த பெண்ணொருவரே இவ்வாறு ஒட்டியதாக தெரியவந்ததையடுத்து அவர் தங்கும் விடுதியொன்றில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை மேலதிக விசாரனைகளுக்கு உட்படுத்துவதற்காக அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருத்தார். நன்றி வீரகேசரி
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படும்.!
13/10/2016 தொழிற்சங்கங்களின் பொறுப்பற்ற வாக்குறுதிகளினாலேயே தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா சம்பளம் வழங்க முடியாது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின் மூலம் குறித்த விடயத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. எனவே நாளை மாலை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் கோரி முன்னெடுத்துள்ள எதிர்ப்பு நடவடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை
14/10/2016 விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தமை சம்பந்தமாக கைது செய்யப்பட தமிழ் பெண் ஒருவரை நாடு கடத்துமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நிதிமன்றம் போலிசாருக்கு உத்தரவிட்டது. ஜெர்மன் நாட்டின் குடியுரிமை கொண்ட மலர்விழி ஈஸ்வரராஜா எனும் பெண்ணை அண்மையில் யாழ் சுன்னாக்கம் பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் இருந்து விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படம் அடங்கிய 34 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நாடு கடத்தும் படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேக நபரை உடனடியாக நாடு கடத்துமாறு குடிவரவு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் நன்றி தேனீ
மோடியை சந்தித்தார் ஜனாதிபதி..!
16/10/2016 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று காலை ஆரம்பமான பிராந்திய அமைப்புகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டிற்கு முன்னரே இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை - இந்திய இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் உள்ளிட்ட தெற்காசிய வலய விவகாரங்கள் தொடர்பில் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. நன்றி வீரகேசரி
பிரதமர் பெல்ஜியம் நோக்கி பயணமானார்
16/10/2016 பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பெல்ஜியம் நோக்கி சென்றுள்ளார்.
எமிரேட் விமானச்சேவைக்கு சொந்தமான EK349 என்ற விமானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் 8 தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 3:15 மணிக்கு இலங்கையில் இருந்து பெல்ஜியம் நோக்கி சென்றதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விஜயத்தின் போது இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரதமரின் இவ் விஜயத்தின் போது, பெல்ஜியம் பிரதமரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment