.
தனது கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடுகிறது என நம்பிக்கொண்டிருக்கிறது அந்தப்பூனை. சூரியவெளிச்சம் படர்ந்திருக்கும்போதும் அது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என நம்பியது.
பூனை கண்களை மூடிக்கொள்ளும் வேளைகளில் எலிகள் தம்பாட்டுக்கு சுதந்திரமாக நடமாடும். தமக்குத்தேவையானதை தேடிக்கொண்டு பொந்துகளுக்குள் பதுங்கிவிடும்.
அந்தப்பொந்துகளின் வாயிலில் அமர்ந்துகொண்டு , காத்திருக்கும் பூனை எப்போது எலிகள் வெளியே வரும் என்று விழித்திருக்கும்.
இக்காத்திருப்பும் விழித்திருப்பும் அதற்குக்கொடுமையானது. வலிதருவது. பொறுமையை சோதிப்பது. வெளியே பொந்தின் வாயிலில் பூனை இரைக்காக காத்திருக்கும் என்பதை தெரிந்துகொண்ட எலிகள், முதலில் ஒரு சுண்டெலியை வாயிலுக்கு அனுப்பிப்பார்க்கும்.
சுண்டெலி மெதுவாக வாயிலருகில் வந்து பார்த்து, பூனை உறங்கினால் உள்ளிருக்கும் உறவுகளுக்கு சமிக்ஞை தரும்.
அதன் பின்னர் எலிகள் ஒவ்வொன்றாக வெளியேறி திசை பல சென்று தத்தமக்குரிய உணவுகளை தேடிக்கொண்டு வரும்.
பூனை காத்திருந்து காத்திருந்து, பின்னர் மதில் மேல் ஏறி, தரையில் எலிகளின் நடமாட்டத்தை அவதானிக்கும்.
மதில்மேல் இருப்பது பூனைக்கு சௌகரியமானது. தனக்கு வசதிப்படும் பக்கமாக தாவிப்பாயமுடியும். இதனைத் தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டிருந்த அயல்வீட்டு சேவல், " என்ன பூனையாரே, யாருக்காக காத்திருக்கிறீர்..? மதில் மேல் உமக்கு என்னதான் கிடைக்கிறது?" எனக்கேட்டது.
" நீ.... உன் வேலையைப்பார்... நான் எனது எதிரிகளைத்தேடுகிறேன் " என்று கோபத்துடன் சொன்னது பூனை.
" நான் தினமும் எனது வேலையைத்தான் கவனிக்கின்றேன். அதிகாலையிலேயே, கூவி உலகம் விடிகிறது என்று மக்களுக்குச்சொல்கின்றேன். உம்மைப்போன்று கண்களை இறுகி மூடிக்கொண்டு உலகம் இருண்டுகிடக்கிறது என்று நம்பவில்லை. பிதற்றவில்லை." என்றது சேவல்.
உடனே பூனை மதிலிலிருந்து குதித்து சேவலின் அருகே வந்து சிநேகமாகப் பார்த்து, " சேவலே உன்னால் எனக்கு ஒரு காரியம் நடக்கவேண்டும். எனது எதிரிகள் எலிகள்தான். நீயல்ல. அவை சுறுசுறுப்பாக ஓடித்திரிகின்றன. தமது இனம் பெருக்குகின்றன. ஆனால், என்னால் அவ்வாறு செய்யமுடியவில்லை. எலிகளைப் பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கிறது. இந்த எலிகளை அழிக்கத்தான் அவற்றின் பொந்துகளுக்கு முன்னால் காத்திருக்கின்றேன். அப்படி இருந்தும் நான் உறங்கும் சமயம் பார்த்து எப்படியோ ஓடிவிடுகின்றன. அதனால், எலிகள் பொந்திலிருந்து வெளியே வருவதை அவதானித்து நீ எனக்கு அறிகுறி காண்பிக்கவேண்டும்"
" எப்படி...?"
" நீ அந்தச்சந்தர்ப்பம் பார்த்து கூவ வேண்டும். உனது கூவல் கேட்டு நான் விழித்துவிடுவேன்"
" சரிதான்... நான் உலகம் விடிகிறது என்பதை அறிவிக்கத்தான் கூவுகின்றேன். உமக்காக கூவத்தொடங்கினால், காலம் நேரம் அறியாது இந்தச்சேவல் கூவுகிறது என்றல்லவா இந்த ஊர் மக்கள் என்னைத் திட்டுவார்கள். அது சரிப்படாது." என்றது சேவல்.
பூனைக்கு ஏமாற்றமாகிவிட்டது. மீண்டும் மதில் மேல் தாவி ஏறியது.
தரையில் மேய்ந்துகொண்டிருந்த கோழி, சேவல் அருகில் வந்து, " பூனையார் என்னவாம்...? " எனக்கேட்டது.
" இந்தக்கள்ளப்பூனைக்காக நான் கூவவேண்டுமாம். அதாவது எலிகளை இதற்கு நான் காட்டிக்கொடுக்கவேண்டுமாம். சோம்பேறிப்பூனை. எலிகளும் எம்போன்று உயிர்கள்தானே. அவை தாம் வாழ்வதற்காக போராடுகின்றன. எலிகள், மனிதர்களுக்கும் இந்தப்பூனைகளுக்கும் பயந்து வாழ்கின்றன " என்றது சேவல்.
" நாங்களும்தான் பயந்து வாழ்கின்றோம். மனிதர்கள் எமது முட்டைகளுக்காக எம்மைப்பராமரித்தாலும், தம் பசிக்காக ருசித்து புசிக்கவேண்டுமானால் அடித்துக்கொலைசெய்தும் சாப்பிட்டுவிடுவார்கள். இந்தப்பூனை தனக்காக உழைக்கவேண்டியதுதானே.... எதற்கு மற்றவர்களின் தயவை நாடவேண்டும். நாம் இந்த மக்கள் தரும் தானியங்களை சாப்பிடுகிறோம். தேடி அலைந்து உண்கின்றோம். ஆனால், எப்பொழுதும் எதுவுமே செய்யாமல் மதில் மேல் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பூராயம் பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தப்பூனை " எனச்சொல்லிவிட்டு அகன்றது கோழி.
கோழி சொன்னது, மதில் மீதிருந்த பூனைக்கும் கேட்டது.
பூனை மதிலிலிருப்பதை அவதானித்த எலிகள் தாம் தேடிய உணவுகளுடன் பொந்துகளுக்கு திரும்பின. ஒரு சுண்டெலி தாமதித்துவிட்டது.
தருணம்பார்த்து காத்திருந்த பூனை மதிலால் குதித்து சுண்டெலியை விரட்டியது. சுண்டெலியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பூனையால் ஓடமுடியவில்லை.
சுண்டெலி, அந்த நிலத்திலிருந்து வேறு வேறு தரைகளுக்கும், பிரதேசங்களுக்கும் ஓடி ஓடித்திரிந்து உல்லாசமாக வாழ்ந்தது. செல்லும் இடமெங்கும் தனது இனத்தில் நண்பர்களைத் தேடிக்கொண்டது.
பூனை மீண்டும் படுத்துறங்கியது.
ஒருநாள் காலை சேவல் கூவிய ஒலிகேட்டு பூனை விழித்தெழுந்து சேவலின் அருகே வந்து, " அந்தச்சுண்டெலியைக் கண்டாயா..?" எனக்கேட்டது,
" யோவ்... பூனையாரே உமக்கு வேறு வேலையே கிடையாதா? சதா சுண்டெலிகள் என்ன செய்கின்றன..? என்றே தேடிக்கொண்டிருக்கிறீரா...?"
" ஆமாம். அந்தச்சுண்டெலி, அங்கே ஓடுகிறது, இங்கே ஓடுகிறது. தனது நண்பர்களை பெருக்குகிறது. அதுபோன்று என்னால் ஓட முடியவில்லை. எப்படியும் அதனை ஒழித்துக்கட்டிவிடவேண்டும். நீயும் இதுவிடயத்தில் எனக்கு உதவவில்லை. யாரும் உதவிக்கு வரவும் இல்லை. " என்று தனது ஆதங்கத்தை பூனை வெளிப்படுத்தியது.
" மற்றவர்களை அழிப்பதில் உமக்கென்ன அப்படி ஒரு ஆனந்தம். எல்லோரும் பிறந்தது வாழ்வதற்குத்தான். மற்றவர்களை அழித்து வாழும் எண்ணத்தை கைவிட்டு, உழைத்து வாழப்பழகிக்கொள்ளும் பூனையாரே... " என்றது சேவல்.
பூனைக்கு சேவலின் பதில் மீண்டும் ஏமாற்றத்தையே தந்தது.
மதில்மீது தாவி ஏறி கண்களை மூடிக்கொண்டது. உலகம் இருண்டுவிட்டதால் , இனி எலிகளுக்கும் எதுவும் செய்யமுடியாது என நம்பிக்கொண்டு ஆழ்ந்து உறங்கிவிட்டது.
அதன் உறக்கத்தை அவதானித்த அந்தச்சுண்டெலி, பொந்துக்குத்திரும்பி, வாயிலில் தரித்து நின்று, மற்ற எலிகளை வெளியே வருமாறு சமிக்ஞை தந்தது.
----0----

No comments:
Post a Comment