விக்னேஸ்வரன் போட்ட குண்டு

.


தனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கையில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த முதலாம் திகதி புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு டொனமூர் தொடக்கம் உத்தேச சிறிசேன யாப்பு வரை என்ற நூலின் அறிமுக விழாவுக்கு அனுப்பியிருந்த சிறப்புரையில் தான் இந்த விடயத்தை அவர் கூறியிருக்கிறார்.
எழுக தமிழ் நிகழ்வுக்குப் பின்னர் அதன் விளைவாக தென்னிலங்கையில் விக்னேஸ்வரனுக்கு எதிரான தீவிரமான பிரசாரப் போர் ஆரம்பித்த பின்னர் அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அவர் அதிகம் கருத்து வெளியிட்ட முதல் நிகழ்வாக அது அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் அவர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. பல்வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகளைக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே மேடையில் அமர வைத்த அந்த நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்கு விக்னேஸ்வரனும் இணங்கியிருந்தார். ஆனால் கடைசியில் அவர் தனது உரையை மாத்திரமே அனுப்பியிருந்தார்.
அந்த உரை நிகழ்வின் தலைவராக இருந்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தால் வாசிக்கப்பட்டிருந்தது. இந்த உரையில் தான் தனது உயிருக்கு உலை வைக்கும் திட்டங்கள் தெற்கில் தீட்டப்படுவதாக தாம் அறிய முடிந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் இந்தக் கருத்தை அதற்கு முன்னரோ, பின்னரோ தனது வாயினால் ஒருபோதும் கூறவில்லை. எனினும் எழுத்து மூல உரை அவரது வாய்மொழி உரையை விட வலிமையானது என்பதால் அவர் இந்தக் கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது.


அதேவேளை தனது உயிருக்கு உலை வைக்கவும் தென்னிலங்கையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற அவரது குற்றச்சாட்டு பாரதூரமானது, இலகுவாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாதது.
அதனால் தான் பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அரசாங்கத்துடன் பேசி விக்னேஸ்வரனுக்கு உரிய பாதுகாப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் அரசியல் தலைமைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்படக்கூடாது என்ற இறுக்கமான நடைமுறை இருந்தாலும் சிவில் பாதுகாப்பு கட்டமைப்புக்களால் அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க முடியாது போனால் தாம் பாதுகாப்பு வழங்கத் தயார் என்று இலங்கை இராணுவம் கூறியிருக்கிறது.
எவ்வாறெனினும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி அரசியல் செய்யும் தரப்புகள் வழக்கத்துக்கு மாறாக இந்த விடயத்தில் மௌனம் காத்து வருவது ஆச்சரியமானது.
முதலமைச்சரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாரதூரமானதாக இருக்கும் அதேவேளை அதில் எந்தளவுக்குப் பொறுப்புணர்வு உள்ளது என்ற கேள்வி இருக்கிறது.
குற்றச்சாட்டுகள் எதையும் எவராலும் சுமத்துவது இலகுவானது. அதனை நிரூபிப்பது தான் கடினமானது. ஆதாரங்கள் ஏதுமின்றிக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விட்டு அவற்றை நிரூபிக்க முடியாமல் திணறுவது போன்ற பாதகமான நிலை வேறேதும் இருக்க முடியாது.
அரசியலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அண்மைக்காலத்தில் கூறப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படைத் தன்மைகள் மற்றும் உண்மைத் தன்மைகள் குறித்து நிறையவே சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கின்றன.
உதாரணத்துக்கு வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை தொடர்பாக அவரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு வடக்கில் ஒன்றரை லட்சம் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தொடர்ச்சியான குற்றச்சாட்டை சுமத்தி வந்தாலும் அதனை ஆதாரபூர்வமாக அவரால் இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
வடக்கில் காணாமற்போனோர் தொடர்பாக இதற்கு முன்னர் கூறப்பட்டு வந்த புள்ளிவிபரங்களுக்கு முரணான வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திரட்ட முடியாத புள்ளிவிபரங்கள் மிகக் குறைந்தளவேயாகும்.
அண்மையில் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது முதலமைச்சர் விக்னேஸ்வரனால் காணாமற்போனவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டது.
அந்த ஆவணத்தில் காணாமற்போன சுமார் 4000 பேரின் விபரங்களே உள்ளடக்கப்பட்டிருந்தன. இது அவரே வெளியிட்ட தகவல் தான். அதுபோலவே முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
அதனை இதுவரையில் அவரது தலைமையிலான மாகாண சபையின் சுகாதார அமைச்சு நடத்திய மருத்துவ பரிசோதனைகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.
அது மாத்திரமன்றி நூற்றுக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு நோய்களால் மர்மமாக மரணமாகியிருப்பதைாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போதும், அதனை உறுதிப்பபடுத்தும் புள்ளிவிபரங்கள் கூட சரியாகத் திரட்டப்படவில்லை.
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் அதனை விடப் பெரிய போர்க்குற்ற ஆதாரம் வேறேதும் இருக்க முடியாது. அப்படியொரு ஆதாரத்துடன் முன்னாள் போராளிகளை விடுவிக்கும் அளவுக்கு முன்னைய அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கும் என்று நம்ப முடியவில்லை.
எவ்வாறாயினும் பொறுப்பு வாய்ந்த முதலமைச்சராக அந்தக் குற்றச்சாட்டை இதுவரையில் நிரூபிக்கவில்லை என்பதே இங்குள்ள முக்கியமான விடயம்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிடும் கருத்துக்கள் வெறுமனே மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் மாத்திரம் முக்கியத்துவம் பெறவில்லை. முன்னாள் நீதியரசர் என்ற வகையிலும் கூட அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உன்னிப்பாக நோக்கப்படுகின்றன.
எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் போது அவற்றின் உண்மைத் தன்மைகளை உறுதிப்படுத்துவதில் கரிசனை காட்ட வேண்டும் என்பதில் மாத்திரமன்றி அதன் எதிர்விளைவுகளையிட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மைகள் கேள்விக்குட்படுத்தும் போது முதலமைச்சரின் எல்லா நிலைப்பாடுகள் தொடர்பாகவும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு நிலையை ஏற்படுத்தி விடும்.
அத்தகையதொரு நிலை உருவானால் அதன் ஒட்டுமொத்த பாதிப்புகளையும் தமிழ் மக்களே சுமக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் படுகொலைகள் ஒன்றும் புதிய விடயமல்ல. பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பௌத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜனாதிபதியாக இருந்த பிரேமதாச குண்டுவெடிப்புக்குப் பலியானார். ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா படுகொலை முயற்சி ஒன்றில் தனது கண்ணை இழக்க நேரிட்டது.
அதுபோல காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் என்று ஏராளமான அரசியல் படுகொலைகளை இலங்கையின் வரலாறு கண்டிருக்கிறது.
எனவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இத்தகையதொரு குற்றச்சாட்டை சுமத்திய போது அதனை யாரும் விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் போர்க்காலத்திலேயே அதிகளவிலான அரசியல் படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. அந்தக்காலகட்டங்களில் புலிகளாலும் அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.
புலிகளின் பெயரைப் பாவித்து வேறு தரப்பினராலும் அரசியல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அத்தகைய கொலைகளுக்கு அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதமும் இருந்ததாக பரவலாக நம்பப்பட்டது.
போருக்குப் பின்னர் அத்தகைய சம்பவங்கள் குறைந்து அண்மைக்காலத்தில் அத்தகைய நிகழ்வுகள் ஏதும் இட்மபெறவில்லை என்ற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.
இலங்கையில் இப்போது ஒப்பீட்டளவில் அதிகளவு ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட ஒரு ஆட்சி நிலவுகின்ற சூழலில் அரசியல் படுகொலைகளுக்கான வாய்ப்புகள் மிக அரிதாகவே உள்ளன.
அதனையும் மீறி ஒரு அரசியல் படுகொலை இடம்பெறுமானால் அது அரசாங்கத்தையும் சிங்கள இனவாத சக்திகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுவும் விக்னேஸ்வரன் போன்ற ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படுவது சாதாரணமான விளைவுகளை ஏற்படுத்தாது. இதனை தெற்கிலுள்ள எல்லா சக்திகளாலும் இலகுவாகவே புரிந்து கொள்ள முடியும்.
அதைவிட விக்னேஸ்வரன் இருக்கும் வரையில் தென்னிலங்கை கடும்போக்காளர்களுக்கு அரசியல் செய்வது இலகுவாக இருக்கும். எனவே பொன் முட்டையிடும் வாத்து ஒன்றை அறுத்துப் பார்க்க அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்.
அதற்கு அப்பால் விக்னேஸ்வரனுக்கு தீங்கிழைத்து விட்டு அந்தப் பழியை புலிகள் மீதும் அவ்வளவு இலகுவாக போட்டுவிட முடியாது. புலிகள் இயக்கம் இப்போது இலங்கையில் இல்லை என்பது மா்திரமன்றி விக்னேஸ்வரன் ஒன்றும் புலிகளுக்கு எதிரான கொள்கையைப் பரப்புகின்ற ஒருவருமல்ல.
புலிகளின் தனிநாட்டுக் கொள்கை தவிர்ந்த மற்றைய கோட்பாடுகளுக்கு அவர் இசைவாளராகவே இருக்கிறார். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களால் அவர் கொண்டாடப்படுகிறார்.
இதனால் அவரைப் புலிகள் குறி வைத்தனர் என்று எவரையும் எவராலும் அவ்வளவு இலகுவாக நம்ப வைத்துவிட முடியாது.
எனவே முதலமைச்சர் தனது குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களை வெளியிடும் வரை அல்லது கிடைக்கும் வரையில் அதனை அவரது அரசியல் குண்டாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது நன்றாகவே அரசியல் செய்யவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

நன்றி tamilwin.com

No comments: