இலங்கைச் செய்திகள்


சவுதி மற்றும் குவைட்டில் பணிபுரிந்த 134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்

யாழ். பல்கலைக்கழகத்தில் தொழுகை அறை மீது 3ஆவது தடவையாகவும் தாக்குதல்!!

ஜோசப் பரராஜசிங்கம் கொலை : பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை

தமிழ் மொழியில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவு

ஐ.தே.க. சம்மேளனத்தில் தமிழில் தேசிய கீதம்







சவுதி மற்றும் குவைட்டில் பணிபுரிந்த 134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

05/09/2016 சவுதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பணிப்பெண்களாக தொழில்புரிந்த 134 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் இன்று காலை (05) நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய பெண்கள் இலங்கை தூதரங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு திரும்பிய இரண்டு பெண்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நன்றி   வீரகேசரி 











மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்

05/09/2016 மலேஷியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சு நேற்றுமாலை இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது.  
தாக்குதலில் காயமுற்ற மலேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் அவரது இரண்டாவது செயலாளர் ஆகியோர்  கோலாலம்பூர் வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டனர்.    
மஹிந்த ராஜபக்ஷவுடன் மலேஷியாவுக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த  கூட்டு எதிரணியின் தலைவர்  தினேஷ் குணவர்தன நாடு திரும்ப இருந்தமையால் அவரை வழியனுப்ப கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு  வந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  
மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் தாக்குதலுக்குள்ளானர் என்ற தகவலை வெ ளிவிவாகார அமைச்சு உறுதிப்படுத்துகிறது. நேற்றுமாலை சிலர் உள்ளிட்ட குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் மிகவும் வன்மையான முறையில் கண்டிக்கின்றது. 
தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகமானது உள்நாட்டு சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. 
தாக்குதல் நடத்தியோரை அடையாளம் காணவும், விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜதந்திர பிரிவுகளூடாக தேவையான நடவடிக்கைகளை வெ ளிவிவகார அமைச்சு எடுத்துள்ளது என்பதை வலியுறுத்துகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை  தாக்குதல் நடத்திய குழுவினர்  விமான நிலையத்தில்  குறித்த குழுவினர் உயர்ஸ்-தா¬னி¬கர்  அன்சாரிடம் தற்சமயம் மலேஷியாவில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ''மஹிந்த ராஜபக்ஷ எங்கே?'' என கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கவர் ''அது பற்றி பொலிசாரிடம் கேளுங்கள்'' என பதிலளித்துள்ளார். இதனையடுத்தே உயர்ஸ்¬தா-னி¬கர்  அன்சார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மலேசியா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யின் குழுவில் அடங்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் அவருடன் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதிநிதிகளான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் மேல்மாகாண அமைச்சர் உபாலி கொடிகாரமற்றும் மகிந்தவின் பிரத்தியேக செயலாளர் உதித்த லொக்குபண்டார ஆகியோர் இன்று நாடு  திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி   வீரகேசரி 














யாழ். பல்கலைக்கழகத்தில் தொழுகை அறை மீது 3ஆவது தடவையாகவும் தாக்குதல்!!

05/09/2016 யாழ். பல்கலைகழகத்தினுள் அமைந்துள்ள முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்தின்  மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (5) வழமை போன்று அவ்வறைக்கு தொழுகைக்காக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் அறை கதவு மூடப்பட்ட நிலையில் பொருட்கள் உடைக்கப்பட்ட நாசமாக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    நன்றி   வீரகேசரி 














ஜோசப் பரராஜசிங்கம் கொலை : பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

07/09/2016 முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21.9.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக இன்று முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் 21.9.2016 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. 
இதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோர் எதிர்வரும் 21.9.2016 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் கடந்த 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நல்லிரவு ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி   வீரகேசரி 












சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

08/09/2016 மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம் புனரமைப்பு பணிக்கு மண் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளினால் இன்று (08)  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நீர்பாசன திணைக்களத்தினால் மாவடியோடை பாலம் மற்றும் அதன் அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டுவந்த பணிகள் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் தலையீடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த மாவடியோடைப்பாலம் மழைகாலத்திற்கு முன்பாக பூர்த்திசெய்யப்படாவிட்டால் விவசாயிகள் பாரிய அழிவினை எதிர்நோக்கும் நிலையேற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது பிரச்சினைகள் தொடர்பில் அவரை தெளிபடுத்தமுடியாத நிலையிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆற்றுப்பாய்ச்சல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வினை முற்றாக நிறுத்துவதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வேளையில் அவற்றினை குழப்பும் வகையில் சில மண் கொள்ளையர்கள் இவ்வாறான விவசாயிகளை தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக மண் அகழ்வில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சட்ட விரோத மண் அகழ்வுகளில் ஈடுபடுபவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்புலமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி   வீரகேசரி














துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை

08/09/2016 பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் பிரதிவாதிகளான துமிந்த சில்வா மற்றும் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
இந்த உத்தரவினை  மேல் நீதிமன்ற நீதபதிகளான ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ். மொராயஸ் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் வழங்கியுள்ளது.    நன்றி   வீரகேசரி












தமிழ் மொழியில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவு

11/09/2016 வட மாகாணத்தில் பொலிஸ் அவசர சேவைப் பிரிவினை தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்தார். 
வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
மேலும், இதன்போது  மக்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மொழி பற்றிய விழிப்புணர்வு அவசியம் எனவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி   வீரகேசரி











ஐ.தே.க. சம்மேளனத்தில் தமிழில் தேசிய கீதம்

10/09/2016 ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
நன்றி   வீரகேசரி
















No comments: