என்னாளும் மகிழ்ச்சியன்றோ ! -எம் .ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.
வானம் மகிழ்வடைந்தால்
  மழையினைத் தந்துவிடும் 
  பூமி மகிழ்வடைந்தால்
  புதுவிளைச்சல் கொடுத்துவிடும்
  சாமி மகிழ்வடைந்தால் 
  சகலதும் கிடைத்துவிடும்
  ஆதலால் மகிழ்ச்சியினை
  அகிலமெலாம் விரும்புறதே !

  பூக்கொடுக்கும் மரங்களெல்லாம்
  பூமிக்கு மகிழ்ச்சிதரும்
  பழங்கொடுத்து மரங்களெல்லாம்
  பலருக்கும் மகிழ்ச்சிதரும்
  சினமகற்றி வாழ்ந்துவிடின்
  தினமுமே மகிழ்ச்சிதான்
 அதைமனதில் கொண்டுவிட்டால்
  அகிலமே மகிழ்ச்சியுறும் !


  பசித்தவர்க்கு உணவளித்தால்
  பசிதீர மகிழ்ச்சிவரும்
  அடித்தவரை அரவணைத்தால்
  அவர்மனமும் மகிழ்ச்சியுறும்
   பிடித்தமுடன் நடந்துகொள்ளின்
  பெரும்பாலோர் மகிழ்வுறுவர்
  அர்த்துமுடன் நாம்பழகி
  அனைவருமே மகிழ்ந்திடுவோம் !

   மற்றவரை மதித்துநின்றால்
   மகிழ்வுந்தன் கூடவரும்
  பெற்றவரை பேணிநின்றால்
  பெருமகிழ்ச்சி பெருகிவரும்
   கற்றவரைச் சேர்ந்துநின்றால்
   காலமெல்லாம் மகிழ்ச்சிவரும்
   கயவர்தமை ஒதுக்கிவிட்டால்
   கண்டிடலாம் மனமகிழ்ச்சி !

  நல்லநட்பு எப்போதும்
  நல்மகிழ்ச்சி நல்கிநிற்கும்
  பொல்லாத நட்பினால்
  பொசுங்கிவிடும் மகிழ்ச்சியெலாம் 
  எல்லையில்லா மகிழ்ச்சிபெற
  எல்லோரும் விரும்புகிறோம் 
  இறைவனிடம் சரணடைந்தால்
  என்னாளும் மகிழ்ச்சியன்றோ !

No comments: