'யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ' - கணநாதன் மெல்போன்

.


ஒரு நாள் எங்கள் பெரியண்ணாவுடன் நாங்கள் நால்வரும் கூடியிருந்து தேனீர் அருந்தி பல கதைகள் பேசிக்கொண்டிருந்தோம்அவர்  எங்களைப் பார்த்து,  “எங்கள் தகப்பனார் ஐந்து ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தார். நாங்கள் ஐவரும் மூன்று பையன்களையே பெற்றோம், என்றார். இது அவரின் ஆதங்கம்.
எங்களை பஞ்ச பாண்டவருக்கு பலர் ஒப்பிடுவர். என் பெரியண்ணா பாண்டவருள் மூத்தவர் போல் ஒரு தர்மன். அவர் தம் வாழ்க்கையை எங்களுக்கும் வறுமைப்பட்ட  உறவினருக்கும் அர்ப்பணித்தார்.
என் அப்பா இறந்த போது நான் எட்டு மாதக் குழந்தை.  ஆழ்ந்த துக்கத்தில் இருந்த எங்கள் அம்மா, மன வைராக்கியத்துடன் எங்கள் எல்லோரையும் கட்டிக்காத்து வளர்த்தார். அம்மா எங்களுக்கு ஒரு தெய்வம்.
பெரியண்ணா மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ணி,  பின்னர் டாக்டர் சின்னத்தம்பியிடம் கொழும்பில் வேலை பார்க்கும் போது, அந்த டாக்டர் கொடுத்த ஊக்குதலால் அவர் மருத்துவ படிப்புக்கு வாய்ப்புக் கிடைச்சது.  பெரியண்ணா பகலில் மருத்துவக் கல்லூரியில் படித்த பின்னர், இரவில் டாக்டரின் கிளினிக்கில் வேலை பார்த்தார்மாசச் சம்பளத்தில்  தன் செலவு போக மீதியை அம்மாவுக்கு தவறாமல் அனுப்புவார்
அதன் பின்னர் அம்மா வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.

என் மூன்றாவது அண்ணன் பேரும்  புகழும் சேர்த்து தமிழ் சமூகத்தில் மதிப்பும் மரியாதைக்கும் ஏற்ற குடும்பம் என்ற பெயரை பெற்றுத்தந்தவர்.


நான் மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்று, அவர்களைப் படிக்க வைத்து, அவர்கள் பட்டம் பெற்று, திருமணம் செய்த பின்னர்,  அவர்கள் இப்போ  தம்  குழந்தைகள் நலத்தைப் பேணிக்கொண்டிருகிரார்கள். குழந்தைகள் வளர்ந்தபின் அவர்களும் என் மனைவிபோல் எழுத்தாளராகலாம். அல்லது வேறு துறைகளில் சாதனை புரியலாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.

நான் வீட்டிலிருந்து புத்தகங்கள் படிப்பேன். எனக்கு சரித்திர வரலாறு வாசிக்கப்  பிரியம். ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறையப் படிப்பேன்.
நான் இப்போ அன்பு பாட்டாவாக இருக்கிறேன். சும்மா இருக்காமல் புத்தகம் வாசிப்பதும் என் மனைவி எழுதும் கதைகளை படித்து என் அபிப்பிராயத்தை கூறுவதோடு இருக்காமல், எனக்கும் எழுத வரும் என்று நினைத்து, முப்பது வருடங்களுக்கு முன் என் மாமியார் யாழ்ப்பான போர்க்காலத்தில் .கொழும்புத்துறையிலிருந்து ஒரு மீன்பிடி தோணியில் தப்பி ஓடியவர்களுடன் சேர்ந்து, அவரின் தள்ளாத வயதில் துணிச்சலாக இராமேஸ்வரம் வந்திறங்கிய சம்பவத்தை ஆங்கிலத்தில் எழுதினேன்.
இதை என் மனைவி வாசித்து விட்டு, என் அம்மாவின் இக்கதையை நன்றாக எழுதியுள்ளீர்கள்இதை கொமொன்வெல்த் சிறு கதைப்போட்டிக்கு அனுப்பிவைக்க விரும்புகிறேன்,” என்று கூறினார்.

நான் இதைக்கேட்டு அசந்து போனேன். என் கதை ஒரு உண்மைச் சம்பவம். கண் மூக்கு செவி என்று வைக்காத கதை. வாசகர்களுக்கு வாசிப்பதற்கு நன்றாக இருக்குமோ?” என்று கேட்டேன்.
நீங்கள் உள்ளதை உள்ளவாறே, எப்படி அம்மா சொன்னாவோ அப்படியே எழுதியிருக்கிறீர்கள். வாசகர்களுக்கு நன்றாகப்பிடிக்கும்,”  என்று கூறினார்.
பரிசு பெறுமோ?” என்று கேட்டேன்.
அனுப்பிப்  பார்ப்போமே,” என்று சொல்லி அதை அனுப்பினார்.

என் மனைவியின் அபிப்பிராயமும் ஊக்கமும் எனக்கு எழுத முடியும் என்ற எண்ணத்தையும் ஆர்வத்தையும் தந்தது.
இதை அடுத்து என்னைப்பற்றி இதுவரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். என் மனைவி அதைப்பார்த்து விட்டு,  "இதனை  எங்கள்  பேரப்பிள்ளைகளுக்கு  அர்ப்பணியுங்கோ. அவர்கள்  இதனை ஆவலுடன் வரவேற்பர். பின்னர் அவர்கள் எங்கள்  வயதை எட்டியதும்தத்தம் பேரப்பிள்ளைகளுக்கு அதை வாசித்து  மகிழ்வர்.

நாம் விக்டோரியா தமிழ் இலக்கிய கழகத்தில் அங்கத்தவரனோம். திரு. முருகபூபதி போன்ற எழுத்தாளர் எங்களுக்கு அறிமுகமானார். ஈழத்து எழுத்தாளர் வரிசையில் மெல்போர்னில் வசிக்கும் ஜே கே, சுதாகர் போன்ற  எழுத்தாளர்களையும், சிசு நாகேந்திரன் போன்ற மூத்த எழுத்தாளர்களையும் சந்தித்து அவர்களின் சிறு கதைகளையும் நாவல்களையும் படிக்க சந்தர்ப்பம் கிட்டியது.
தமிழ் இலக்கிய விழாக்களிலும் புத்தக வெளியீடுகளிலும் எழுத்தாளர்களை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. சிலர் என் மனைவி சகுந்தலாவிடம் உங்கள் தமிழ் படைப்புகளையும் வாசிக்க விரும்புகிறோம் என்று பல தடவை கூறக்கேட்டிருக்கிறேன்.

என் பேரப்பிள்ளைகளுடன்  சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கேள்விக்கு தக்க மறு மொழி  கொடுப்பது வழக்கம். இரு பேரன்மாரும் எங்கள் அறைக்குள் வந்து என்ன எழுதுகிறோம் என்று கேட்பார்கள். அவர்கள் அவுஸ்த்ரலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள். எங்கள் இலங்கை அனுபவங்களை அவர்களுக்கு கூறியது கிடையாது. இப்போ ஏழாம் வகுப்பில் படிக்கின்றனர். பல இனத்தவருடன் படிக்கிறார்கள். தங்களுக்குள் பலதையும் விவாதிப்பார்கள்.

ஒரு நாள் என் பேரன் விக்கி என்னிடம் வந்து, "யுத்தம் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.  டிவி செய்திகளும் பத்திரிக்கை செய்திகளும் நாள்தோறும் அறிவித்தபடி இருக்கின்றன.  எனக்குப்  புரியவில்லை, பாட்டா. என்ன யுத்தம்? ஏன் ஆளை ஆள் குண்டு வீசி அநியாயமாய் மக்களைக் கொன்று குவிக்கிறார்கள்?" என்று கேட்டான்.

எனக்குத் திக்கென்று இருந்தது. பத்திரிகை செய்திகளும், டிவி காட்சிகளும் தினம் தினம் சின்னப்பிள்ளைகள் மனதை சஞ்சலப்படுத்துகின்றன.  என் பேரன் கேள்விக்கு நல்ல பதில் கொடுக்க வேண்டும். இந்தக்காலத்துப்  பிள்ளைகள் மிக்க அறிவும் ஆற்றலும் படைத்தவர்கள். அவர்கள்  அறிவு எங்கள் அனுபவத்திலும் பார்க்க மிக விசாலமானது.
சில நிமிடம் யோசித்து விட்டு,  ”உன் பள்ளி வேலைகளை எல்லாம் செய்து விட்டு வந்து சில நிமிடங்கள் என்னோடிருந்தால்  நான் உனக்கு யுத்தத்தைப் பற்றி விளக்க முடியும்.”
என் இரண்டாவது பேரன் லக்கி உள்ளே வந்தான். “அதெல்லாம் நானும் விக்கியும் நேற்று இரவே செய்து முடித்திட்டோம்.  நீங்கள் எங்கள் சந்தேகத்தை தீர்த்து வையுங்கோ.” என்று வற்புறுதினான்
நான் அவர்களைப் பாசத்துடன் அணைத்து பின்னர் ஓர் நாற்காலியில் உட்கார்ந்து ஆரம்பித்தேன்

இந்தப்பூமியிலே மனிதன் எப்போ குடும்பமாக வாழ ஆரம்பித்தானோ அன்றிருந்து தனக்கு,  தன் குடும்பத்துக்கு  என்று  தன்னலத்தோடு வாழ  முற்பட்டான்.
ஆதிகால மனிதன் ஒரு இடத்தில் நிரந்தரமாக இருந்ததில்லை. காலநிலைக்கேற்ப தன் குடும்பத்துடன் இடம் பெயர்ந்து வாழ்ந்தான். காலப்போக்கில் ஒரு சாரார் இருக்கும் இடம் சென்று அவர்களைக் கலைத்து விட்டு அவ்விடத்தை ஆட்சி கொண்டான்.  பண்டைய  காலத்தில் அந்நியனை விரட்டி அடிப்பதும், சண்டை போட்டு வென்றவன் தன்னாட்சி புரிவதும், சிறிதிலிருந்து பெரிதாகி, பெலசாலியானவன்  தலைவனானான்.  காலச்சுழலில் அரசனாகத்  தன்னை உயர்த்திக்கொள்வதும் நடைமுறையாக வளர்ந்தது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இரு குழுவிவனர் சண்டை போட்டு இடங்களைக் கைப்பற்றியது  நாமறிந்த உண்மைபேராசையால் ஓர் அரசன் பல உயிர்களைக்
கொன்று பல சிற்றரசர்களை வென்று சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.

பண்டைய காலப்போர்களில் போர்கள் தினமும் சூரியஉதயத்தோடு தொடங்கி மாலை சூரிய அஸ்தமனத்தோடு முடியும். அதன் பின்னர் அடுத்த நாள் காலை வரை வீரர் எதிரிகளைத் தாக்கமாட்டார்.
மேலும் நேருக்கு நேர் நின்று போர் தொடுத்தனர். யானைப்படை எதிரியின் யானைப்படையுடன் மட்டுமே சண்டை பிடித்தனர். கால் படையினரை அவர்கள் தாக்க வில்லை. ஒருத்தன் எதிரியின் பின் முதுகுக்கு அம்பு எய்யமாட்டான். பெண்கள் குழந்தைகளை ஒரு போதும் தாக்க மாட்டான். கீழே விழுந்தவனை வீரன் தாக்க மாட்டான். ஒரு மன்னன் போர்க்களத்துக்கு நேரே சென்று  எதிரி மன்னனுடன்  போர்தொடுத்தான்.
ஆனால் தற்போது இந்தத் தர்மத்தை போர் தொடுக்கும் நாடுகள் கடை பிடிப்பதில்லை. இரவு பகல் என்று பார்க்காமல் குடும்பப் பெண்கள், குழந்தைகள் என்று அப்புறப்படுத்தாமல் நிறைய நாசம் விளைவிப்பர். எதிரி நாட்டை அழிப்பதே அவர்கள் குறிக்கோளாயிருக்கும்.

இதனைக் கேட்ட என் பேரன்மார் ஆச்சரியத்தில் மூழ்கினர். “அந்தக்காலத்தில் எவ்வளவு உகந்த கோட்பாடுகள்? நம்ப முடியவில்லை, பாட்டா.” 

இப்போ அரசர் ஆண்ட காலம் போய், மக்களால் தேர்ந்தெடுத்த ஜனநாயக ஆட்சிமுறை பல நாடுகளில் உருவெடுத்துள்ளது. இந்நாடுகளில் சில, பெரும் செல்வங்களை திரட்டி செல்வந்தர் நாடாக அமைந்துள்ளளனஇவை ஒவ்வொன்றும் தம் நாட்டை பாதுகாக்க பல வித யுக்திகளை பயன்படுத்திஆயுதங்களையும் மக்களைக் கொடூரமாக அழிக்கும் வெடி குண்டுகளையும் தயாரித்துதுள்ளன, மற்றவர் தங்களைப் பார்த்து பயந்து வாழவேண்டும் என்று நினைக்கின்றன.
தம்மைவிட பலசாலி ஒருவர் இருக்கக் கூடாதென்று, தேடிச்சென்று அவர்களை அழித்தும், தம்மை காப்பாற்றிக்கொள்ள முயல்கின்றன.

இவற்றுக்கெல்லாம்  மூல காரணம் பயம். பயம் எல்லா உயிரனத்துக்கும் உள்ளது. தன்னை என்ன தாக்குமோ என்ற  பயம், தன் உடைமைகள் பறி போகுமோ என்ற  பயம்தான் நோய் வாய்ப்பட நேருமோ என்ற பயம். இப்படி ஏராளமான பயத்துடன் மனிதன் வாழ்கிறான்.

நான் பேசுகையில் என்னை லக்கி இடைமறித்தான். "பாட்டா, நீங்கள் தானே சொல்வீர்கள் மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை. கடுமையாக உழைத்தால் எதுவும் முடியும் என்று."
"லக்கி, நீ சொல்வதும் உண்மைதான். நூற்றாண்டுகளாக  இதைத்தான் சொல்லி எங்கள் சமுதாயத்தை வளர்த்துள்ளோம். யுத்தம் இல்லாத உலகம் வேண்டும்., நாம் என்றும் ஒற்றுமையாய் இருப்போம்ஏன் ஒருவன் மற்றவனை எதிரியாக ஐயத்துடன் பார்க்க வேண்டும்
நண்பனாக பழகி, ஒருவனுக்கொருவன் விட்டுக்கொடுத்துநாம் சம்பாதிப்பதை எங்களிலும் பார்க்க வறுமைப்பட்டவர்களுடன் பகிர்ந்து,   நாமும் சந்தோசமாகவும் மற்றவர்களையும்  சந்தோசமாக்க பழகிக்கொண்டால்நாங்கள் எல்லோரும் சண்டையும் அழிவும் பசி பட்டினியும் நோய் நொடியுமின்றி வாழ முடியும்.
ஆனால் எங்கள் சமுதாயம் பலவிதமாக மாறுபட்டுக்கிடக்கிறது. எத்தனை சாதிகள், சமயங்கள், மொழிகள், மனித நிறங்கள்ஒவ்வொரு ஊர் கால நிலைப்படி ஒருவர் பழக்க வழக்கங்கள் உடைகள் இப்படி எத்தனையோ வேறுபாடுகள்.

அப்போ இதற்கு என்ன தீர்வு,?”  என்று விக்கி  கேட்டான்.
நல்லதோர் கேள்வி,” என்றேன்.  “என் அன்பு   பேரன்களே!,  மனிதனால் யுத்தத்தையும் அழிவையும் நிறுத்த முடியும். இதை அடைய நல்ல உள்ளம் படைத்த தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். ஒரு மனதுடன் மனிதனை அழிக்க உருவாக்கிய ஆயுதங்களை எல்லாம் அழிக்க வேண்டும்.
"போர் ஆயுதமற்ற சமுதாயத்தை உருவாக்கினோமானால், யுத்தம் வராமல் எம்மை நாமே காப்பாற்ற முடியும்."


No comments: