படித்தோம் சொல்கின்றோம் --- முருகபூபதி

.

ஆவணக்காப்பாளரை  ஆவணப்படுத்திய  நூலகர் செல்வராஜா
படைப்பாளிகளும்  பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய   அயராத  செயற்பாட்டாளர்
                                                       
" களிமண்ணால்  கட்டப்பட்ட  ஒரு  பழங்காலத்து  திண்ணை வீட்டின் ஒடுங்கிய  முன்  விறாந்தையில்  தமிழ்  எழுத்துக்கள்  பொறிக்கப்பட்ட ஈயத்தாலான  குற்றிகளைக்கொண்டு  தனது  நூல்களை  தானே அச்சுக்கோர்த்து,   ஒவ்வொரு  பக்கங்களையும்  மை  தடவி காகிதத்தில்  பதிந்து  Proof  பார்த்து,  பின்னர் எழுத்துப்பிழைகளை சரிசெய்து,  அவற்றை  அசையாமல்  பத்திரமாக  பஸ்ஸில் எடுத்துச்சென்று  அச்சகத்தில்  அச்சிட்டு  வெளியீட்டு  முயற்சிகளை ஆரம்பித்தவர் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன். "
என்ற  தகவலை   தமது  அருமைக்கணவர்  மறைந்த பின்னர் முன்னுரையாக  ஒரு  முடிவுரை  எழுதியிருக்கிறார்  திருமதி மஸீதா புன்னியாமீன்.
இன்றைய  நவீன  கணினி  அச்சுஊடக  சாதனங்கள்  இல்லாத அக்காலத்தில்  மலையகத்தில்  ஒரு  புறநகர்  பிரதேசத்தில்  தனது வாழ்நாள்  முழுவதும்  தொடர்பாடல், தேடல், எழுத்து, பதிப்பு, விநியோகம்  என்று  அயற்சியின்றி  தமிழ் சமூகத்திற்காக குறிப்பாக  மாணவர்களுக்காகவும்




 இலக்கியப்பிரதியாளர்களுக்காகவும், ஊடகவியலாளர்களுக்காகவும் உழைத்த பெருமகன் புன்னியாமீன் என்ற  ஒரு  மனிதநேயரின் கதையை எமக்கு  வரவாக்கியுள்ளார் லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா.
இந்த  நூலில்  திருமதி மஸீதா புன்னியாமீன் அவர்களின் வாக்குமூலத்திற்கு களம் தந்திருப்பது  முன்மாதிரியானது.  இவ்வாறு பதிப்புலகத்தில்  நிகழ்வது  அபூர்வம்.


வழக்கமாக  நூல்களுக்கு  முன்னுரை  எழுதுபவர்கள் இலக்கியப்பரப்பில்  நன்கு  அறியப்பட்டவர்களாகவும் விமர்சகர்களாகவும் பேராசிரியர்களாகவும்தான் இருப்பார்கள்.
ஆனால், இந்த நூலில்  முன்னுரையாக ஒரு முடிவுரையைத்தான் நாம் காண்கின்றோம். தனது கணவன் வாழ்விலும்  உயர்விலும் மரணத்திலும்  சந்தித்த சவால்களையும்  அருகிருந்தே பார்த்து, அக்கறையாய்  இயங்கிய  மஸீதா புன்னியாமீன் அவர்களின் நெகிழ்ச்சி  தரும்  முன்னுரையை  படிக்கையில்,  "காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து" என்ற பாரதியின்  கூற்றே  நினைவுக்கு  வருகிறது.
2003 ஆம் ஆண்டு புன்னியாமீனுடன் நூலகர் செல்வராஜாவுக்கு ஏற்பட்ட  தொடர்பு,  அன்னாரின் மறைவு வரையில்  எந்த விக்கினமும் இல்லாமல்  நீடித்திருக்கிறது.
இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும்  எனக்கும்  புன்னியாமீனை தொலைபேசி  வாயிலாக  அறிமுகப்படுத்தியவரும்  செல்வராஜாதான். எனினும்  அவருடைய   குரலைத்தான்  கேட்டிருக்கின்றேன்.  நேரில் பார்க்க  சந்தர்ப்பமே  இல்லாமல்போனது  துர்ப்பாக்கியம்தான்.
புன்னியாமீன் அமரத்துவம் அடைந்த செய்தியை  எனக்கு முதலில் தெரியப்படுத்தியவரும்  செல்வராஜாதான். வெறுமனே ஒரு அஞ்சலிக்குறிப்புடன்   தனது  கடமை   முடிந்துவிட்டதாக  இந்த நடமாடும்  நூலகர்  கருதவில்லை.
ஆவணப்படுத்தலுக்காக  தனது  வாழ்நாளை   செலவிட்ட புன்னியாமீன்  பற்றிய  கதையையே  ஒரு  ஆவணமாகத்தந்துள்ளார்.
இவர்கள்   இருவருக்குமிடையே  நீடித்த இணை பிரியாத நட்பு மெய்சிலிர்க்கவைக்கிறது.  இப்படி  ஒரு நண்பரை புன்னியாமீன் பெற்றமைக்கு புண்ணியம்தான் செய்திருக்கவேண்டும்.
புன்னியாமீன் மேற்கொண்ட ஆய்வு முயற்சிகள், எழுதிய பாட நூல்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்களையும் அதற்காக அவர் மேற்கொண்ட  அரிய பணிகளையும் சுவைபடக்கூறும்  நூலாகவே இது அமைந்துள்ளது.


செல்வராஜா  நூல்தேட்டத் தொகுப்புகளில்  தொடர்ந்து ஈடுபட்டுவருபவர்  என்பது  அறிந்த  செய்தியே.  அந்தப்பணிக்கு புன்னியாமீன் எவ்வாறு  பக்கத்துணையாக இருந்திருக்கிறார் என்பதையும்  நன்றியுணர்வோடு சொல்லியிருக்கிறார்.
இந்த  நூல்,   வெறுமனே புன்னியாமீன் பற்றியதாக இல்லாமல் இலங்கையின்  இன உறவு,  நூல் விநியோகம், லண்டனுடான உறவுப்பாலம் ,  இலங்கை  ஊடகங்களும்  எழுத்தாளர்களும் கவனிக்கத்தவறிய   பிரச்சினைகள் பற்றியெல்லாம் விரிவாகப்பேசுகிறது.
ஏழாவது அங்கத்தில் சொல்லப்படும், லண்டனில் 2007 இல் நிகழ்ந்த சந்திப்பு  தொடர்பான கட்டுரை  இலங்கையின் மூவின அரசியல் தலைவர்களுக்கும்  சமர்ப்பிக்கப்படவேண்டியது.
இலங்கையில்  உருவாகவிருக்கும்  புதிய  அரசியலமைப்பு சீர்திருத்தத்தில்  உள்வாங்கப்படவேண்டிய  பல  அம்சங்களையும்  அது கொண்டிருக்கிறது.  எனவே  இந்த  நூல்  இலங்கையில்  பரவலான வாசிப்புக்கு  எடுத்துச்செல்லப்படவேண்டியது.
லண்டனில் வதியும் தேசம்  இதழ் ஆசிரியர் ஜெயபாலனின் சமூக அக்கறையான செயல்பாடுகளையும்  இந்த நூலில் காணமுடிகிறது.
நூலகர் செல்வராஜா தன்முனைப்பின்றி, அனைவரதும் கருத்துக்களின் களத்தை  உருவாக்கியவாறே  இந்நூலை  நகர்த்திச்சென்று  புன்னியாமீன்   அவர்களின்  வாழ்வின்  முன்மாதிரிகளை இனம்காண்பிக்கின்றார்.
அந்த  வகையில் இது புன்னியாமீனின் கதையாக மாத்திரம் இல்லாமல்  சமூகங்களின்  கதையாகவும்  பரிமாணம்  பெறுகிறது.
---------------------------------------------------------


மலேசியாவில்  தமிழ்: பார்வையும் பதிவும்
சமகாலத்தில்  ஊடகங்களில்  முக்கிய  பேசுபொருளாகியிருக்கிறது மலேசியா.   மலேசியாவில்  வாழும்  தமிழர்களின்  அரசியல் விவகாரங்களுக்கு  மத்தியில்  அங்கு  தோன்றிய  இலக்கியச்செல்நெறி குறித்த  பார்வைகளை  பேசும்  மலேசியாவில்  தமிழ்: பார்வையும் பதிவும்  என்ற நூலையும்  செல்வராஜா  வரவாக்கியுள்ளார்.
செல்வராஜா  மலேசியாவுக்கு  பயணம்மேற்கொண்டு  பயண இலக்கியம்  படைக்கவில்லை.   மாறாக   அந்தத்தேசத்து  தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும்   ஊடகவியலாளர்களுக்கும் பயன்தரக்கூடிய  ஆவணத்தையே   எழுதியிருக்கிறார்.
மலேசியாத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை ஆய்வுசெய்ய முன்வரும்   இலக்கிய  மணாக்கருக்கு  இந்த  நூல்  உசாத்துணையாக அமையலாம்.
இந்த  நூல்  செல்வராஜா  எழுதி  வரவாக்கிய  நூல்களின்  வரிசையில் 40 ஆவது  இடத்தை  வகிக்கிறது.
மலேசிய  தமிழ்  இலக்கியம்:  ஒரு  வரலாற்றுப் பார்வை,  அங்கு நிகழ்ந்த  நூல்  வெளியீடுகளில்  ஈழத்தமிழர்களின்  பங்களிப்பு, மலேசிய  இலக்கியங்களின்  ஊடாக  வெளிப்படும் வரலாற்றுக்கூறுகள்,   அங்கு  ஆவணப்படுத்தும்  முயற்சிகள்,   மலேசிய  இதழ்கள்,  குறிப்பாக  வல்லினம்  இதழ்  பற்றிய  பார்வை என்பனவற்றையும்,   வரலாறுகளை  பதிவுசெய்ய  வேண்டிய தேவையையும்   இந்நூல்  வலியுறுத்துகிறது.
செல்வராஜா  இலங்கை,  இந்தியா,  மலேசியா,  சிங்கப்பூர்  முதலான நாடுகளுக்கு   பயணம்  செய்தால்  அவருடைய  பயண  பொதிகளில் சுமையை   அதிகரிப்பது  நூல்கள்தான்.  அந்தச்சுமைகளோடு  எங்கு  செல்லநேர்ந்தாலும் ஆக்கபூர்வமான  பணியையும் மற்றும் ஒரு பாரிய சுமையாக   முன்னேடுப்பதுதான்  அவரின்  இயல்பு.
எமது ஈழத்தமிழ் சமூகத்தில் மலாயன் பென்சனியர்களை எம்மவர்கள்  அறிந்துவைத்திருக்கும்  அளவுக்கு  மலேசிய  தமிழ்  இலக்கியங்களை அறிந்திருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில்  பெரும்பாலான  குடும்பங்களின்  முன்னோர்களில்  யாராவது  ஒருவர்  மலாயன்  பென்சனியராகத்தான்  இருப்பார்.  உலகத்தமிழராய்ச்சிக்கான  விதை  மலேசியாவில்தான்  முதலில் முளைவிட்டது   என்பது  வரலாறு.  அதனை  விதைத்த  தனிநாயகம் அடிகளாரின்  நூற்றாண்டு  விழாவையும்  கடந்து  வந்துவிட்டோம்.  இந்தப்பின்னணியில்,  ஈழத்தமிழர்  பற்றிய  உயரிய கருத்துக்களைக்கொண்டுள்ள   மலேசியத் தமிழர்களின் இலக்கியப்படைப்புகள்   ஏன்  இன்னமும்   இலங்கைத்தமிழர்களை வந்தடையவில்லை ?  என்று  செல்வராஜா  நியாயமான  ஒரு கேள்வியையும்   இந்நூலில் எழுப்பியுள்ளார்.
அத்துடன்,   இலங்கையில்  பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறையினர்   மலேசியத்தமிழ்  இலக்கியத்தையும்  தமது ஆய்வுப்பரப்புக்குள்   கொண்டுவரல்  வேண்டும்  என்ற ஆதங்கத்தையும்   தெரிவிக்கின்றார்.
எதிர்காலத்தில்  மலேசியத்தமிழ்  இலக்கியம்  தொடர்பாக ஆராய்வதற்கு   முன்வருபவர்களுக்கு  இந்நூல்  ஒரு  சிறு காலடித்தடம் என்றும்   செல்வராஜா  தன்னடக்கத்துடன்  சொல்கிறார்.
மலேசிய  இலக்கியங்களை  அங்கு  வாழும்  படைப்பாளிகளை வெளியாகும்  இதழ்களை  எமது  கவனத்திற்குள்   வரவழைப்பததற்கும்  இந்த  நூல் வழிவகை செய்துள்ளது.
மலேசியாவில் 2007  இல்  தலைநகர்  கோலாலம்பூரில்  நடந்த ஹிண்ட்ராப்  அமைப்பின் ( HINDRAF  HINDU  RIGHTS ACTION FORCE) எழுச்சிப்போராட்டம்  நடந்த  காலப்பகுதியில்  அங்கு  ஏழுநாட்கள்   தங்கியிருந்து  அவதானித்துவிட்டு, மலேசியத்தமிழர்களின்   நீள்  துயில்  கலைகிறதா ?  என்ற கட்டுரையை  செல்வராஜா  எழுதியிருக்கிறார்.
இக்கட்டுரையிலிருந்து   செல்வராஜா  ஒரு  ஊடகவியலாளர் தோற்றமும்   பெறுகிறார்.  ஆனால்,  அதனை  2008  இல்  இலங்கை வீரகேசரியில்   பதிவுசெய்தபோது  ஏன்  சதேசமித்திரன்  என்ற புனைபெயரில்   எழுதினார்  என்பதுதான்  புரியவில்லை.
மலேசிய  இலக்கிய  நிகழ்வுக்கண்ணோட்டம்  தொடர்பாக  லண்டன் ஐ.பீ.சீ . வானொலியில்  ஆற்றிய  உரையும்  இந்த  நூலில் இடம்பெற்றுள்ளது.
அதில்  இடம்பெறும்   மோகனன்  பெருமாள்  என்பவரின்  கவிதை கவனத்தைப்பெறுகிறது:
சீனன்  ஒருவன்  என்னை  எட்டி  உதைத்தான்
எனக்கு  வலி  தெரியவில்லை
மலேயன்  ஒருவன்  என்னைத் திட்டித்  தீர்த்தான்
எனக்கு  மொழி  புரியவில்லை
யாழ்ப்பாணத்து  அதிகாரி  என்னைக்  "கூலி"  என்றான்
எனக்கு  வலித்தது
ஏனென்றால்   அவன்  மொழி  புரிந்தது.
வல்லினம்   இதழுக்கு  செல்வராஜா  வழங்கியிருக்கும்  நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.
மலேசியா   தமிழ்   இலக்கியப்  போக்குகளை   தமது கண்ணோட்டத்தில்  பதிவு   செய்திருக்கும்  அதே  வேளையில,  உலகத்தமிழ்   இலக்கியத்திற்குள்  மலேசியாவையும்  உள்ளடக்குவதற்கு  ஒரு பாலமாக  விளங்கியிருக்கும்  செல்வராஜாவின்   பணிகளில்   இந்த   நூல்  மற்றும்  ஒரு மைல் கல் எனலாம்.
-------------------------------------------------
ஈழத்தின்  தமிழ்  வெளியீட்டுப் பெருவெளி:  ஒரு நூலகவியலாளரின்  பார்வை
இன்று  தம்மிடம்  நூலகங்களைக் கொண்டுள்ள தமிழ்ப் பாடசாலைகளில்   திறந்த  வாசிப்பு  முறைக்கு  எத்தனை  அதிபர்கள் தயாராகவுள்ளார்கள் ?  புத்தகக்கொள்வனவில்  பாட விதானத்துடன் தொடர்புடைய  பயிற்சிப்புத்தகங்களைத்தவிர,  விரிந்த வாசனைக்கான  நூல்களைக்கொள்வனவு  செய்வதில்  எத்தனை பாடசாலைகள்  அக்கறை  செலுத்துகின்றன ?  பள்ளிச்சிறார்களுக்குப் பாடம்   நடத்தும்  எத்தனை  ஆசிரியர்கள்  தங்களை  நல்ல  வாசகர்கள் என்று   சொல்லிக்கொள்ளும்  திராணியுள்ளவராக  இருக்கிறார்கள் ? இவ்வாறு    கேள்விகளை  தொடருகிறது  நூலகர்  செல்வராஜாவின் மற்றும்  ஒரு  நூல்  ஈழத்தின்  தமிழ்  வெளியீட்டுப் பெருவெளி: ஒரு நூலகவியலாளரின்  பார்வை.
இந்தக்கேள்விகளை   தமிழர்  புலம்பெயர்ந்த  நாடுகளில்  இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில்   பணியாற்றும்  ஆசிரியர்களிடமும் கேட்கலாம்.
" நூலக   சேவையில்  ஈடுபடுவதென்பது  சமூகத்திற்கு  ஆற்றுகின்ற உன்னதமான   பணியாகும்.   அதற்கான  காரணம்  பற்றி எடுத்துரைக்கவேண்டியது    அவசியமன்று.   அத்தகைய  பணியில் ஈடுபடுவோர்   பலர்  கடினமான  அப்பணி  காரணமாக  களைப்புற்று அப்பணியை   ஆற்றுவதோடு  மட்டும்  ஓய்ந்துவிடுகின்றனர். இந்நூலாசிரியர்   அதற்கு  மாறானவர்.   நூலக  சேவையோடு தொடர்புபட்ட   பல்வேறு    விடயங்களைச்  செயற்படுத்திவருபவராகத் திகழ்கின்றார்"   -  என்று  இந்த  நூலுக்கு  அணிந்துரை   எழுதியுள்ள பேராசிரியர்   செ. யோகராசா,   செல்வராஜாவுக்கு  புகழாரம் சூட்டியுள்ளார்.
அந்த   வார்த்தைகள்  அர்த்தம்  பொதிந்தவை  என்பதற்கு  இந்த  நூலின்  உள்ளடக்கம்  சான்று.
35  கட்டுரைகளைக்கொண்டுள்ள   இந்நூல்  ஆவணப்படுத்தல், வெளியீட்டுத்துறை,    வாசிப்புத்திறன்,   தமிழாராய்ச்சி  மாநாடுகள், நூல்  வெளியீட்டு  அரங்குகள்,  பல்கலைக்கழகப் பின்புலத்தில் உருவான  சிறுகதைத்தொகுதிகள்,  மொழிபெயர்ப்பு  முயற்சிகள், ஈழமண்ணில்  இந்திய  இராணுவம் - நூல்வழிப்பதிவுகள், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன்  பின்னர்  எழுந்த  ஈழத்தவர்கள்  சார்ந்த குரல்களில்  நூலியல்  தேடல்,  சிலருடைய  இலக்கிப்படைப்புகள்,  சில ஆளுமைகள்   குறித்த பதிவுகள் முதலான  ஆக்கங்களைக்கொண்டது.
சமகால  ஈழத்து  இலக்கிய  உலகையும்  புகலிடத்தில்  எம்மவர்  சிலரது இலக்கியப்பங்களிப்பையும்   வரலாற்றுக்கண்கொண்டு  பேசுகின்றன.
ஆளுமைகள்   பகுதியில்,   தனிநாயகம்   அடிகளார்,   பேராசிரியர் சிவத்தம்பி,   எஸ்.பொன்னுத்துரை,    தங்கம்மா   அப்பாக்குட்டி, சாரல்நாடன்   முதலானோர்   குறித்த  தமது  எண்ணங்களை சொல்கிறார்.



இந்த  நூலும்  ஒரு  ஆவணப்பெட்டகமாகவே  காட்சியளிக்கிறது.
நூலகர்   செல்வராஜாவைப்பற்றி   தேசம் ஜெயபாலன் இவ்வாறு சொல்கிறார்:
" தமிழ்  சமூகத்தின்  பொதுச்சிந்தனைக் கட்டமைப்புக்குள்  உருவாகி, வளர்ந்து   அப்பொதுச் சிந்தனைக் கட்டமைப்பை  உடைத்து  வெளியே வந்த   சிந்தனையாளர்கள்,   செயற்பாட்டாளர்களில்  நூலகவியலாளர் என். செல்வராஜா   குறிப்பிடத்தகுந்தவர்.   தனிமனித  ஆளுமை சமூகத்தின்  மீது  மிகுந்த  செல்வாக்குச்  செலுத்தக்கூடியது  என்பதை அவர்   மீண்டும்  ஒருமுறை  நிரூபித்துள்ளார்.   தனிமரமாக  நின்று விழுதுகளை   விட்டு  தோப்பையே  உருவாக்கி  உள்ளார்.  அவருடைய இலக்கில்   இருந்து  பயணத்தைத்  தொடருவது  சமூகத்தின் பொறுப்பு."
சமூகம்   அவ்வாறு  பயணத்தை  தொடருமா ....? என்பதுதான்  எனது ஆதங்கமாக   இருக்கிறது.   ஆதங்கத்தை  புறம்  ஒதுக்கிவிட்டு,  அயர்ச்சியற்ற   பணியாளன்  நூலகர்  செல்வராஜாவின்  வழித்தடத்தில் வாசகரையும்  அழைக்க  விரும்புகின்றேன்.
செல்வராஜாவின்   பெறுமதியான  உழைப்பைக்கூறும்  இந்நூல்களை பெற்றுக்கொள்ள  விரும்பும்    வாசகர்கள்,   அவருடைய   பின்வரும் மின்னஞ்சலில்   தொடர்புகொள்ளலாம்:-
noolthettam.ns@gmail.com
---0---

No comments: