ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் - சௌந்தரி கணேஷன்

.

ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் ஆகஸ்டு 27, 28 ம் திகதிகளில் மலேசியாவில் பெனாங் என்னும் இடத்தில்  இடம்பெற்றது. அந்த நிகழ்வில் முதல் தடவையாக நான் கலந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இருந்து நானும் ஆழியாளும் சென்றிருந்தோம்.
இந்தப் பெண்கள் சந்திப்பு நிகழ்வுக்கு மையப்புள்ளி போல் செயல்படுகின்றவர் ஊடறு ரஞ்சி. இவர் சுவிசில் இருந்துகொண்டே அனைத்தையும் ஒருங்கிணைத்தார். மணிமொழியும் யோகியும் அவருக்குப் பேருதவியாக  மலேசியாவிலிருந்து மற்றைய ஒழுங்குகளை மேற்கொண்டனர்.
இலங்கையில் இருந்து யாழினி, புறொஃபி, விஜயலக்சுமி, கோகிலா, ஷாமிலா, சந்திரலேகா, பவனீதா, ஜெசீமா ஆகியோரும் இந்தியாவிலிருந்து புதிய மாதவி, மாலதி மைத்ரி, கல்பனா, ரஜனி, விஜயலக்சுமி, பாரதி ஆகியோரும் மலேசியாவிலிருந்து மணிமொழி, யோகி, பிரேமா, கஸ்தூரி, சிவரஞ்சனி, ரமேஸ்வரி ஆகியோரும் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.



எத்தனையோ விழாக்களை கண்டும் கலந்தும் கடந்தும் வந்தாலும் இந்த நிகழ்வு எனக்குள் ஓர் பெரிய பாதிப்பையும் உற்சாகமான மனநிறைவையும் ஏற்படுத்தியிருந்தது. சம்பந்தம் இல்லாமல் நேரத்தை வீணடிக்கும் நிகழ்வுகள் ஏதுமின்றி ஒவ்வொரு அமர்வும் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஊடகங்களில் பெண்கள் என்ற தலைப்பில் எனது வாசிப்பு இடம்பெற்றது.


சனியும் ஞாயிறும் காலையில் இருந்து மாலைவரை கட்டம் கட்டமாக நடைபெற்ற அரங்க நிகழ்வுகளில் பல காத்திரமான விடயங்கள் பேசப்பட்டன. தாம் வாழ்கின்ற காலத்தின் சமூகம் சார்ந்த பார்வைகள்பற்றியும் அவற்றிற்கான பணிகள் பற்றியும் பலர் உரையாற்றினார்கள்.  அவர்கள் பேசிய விடயங்கள் மக்களிடம் பரவலாகச் செல்ல வேண்டும் அதற்கான முயற்சியை அனைவரும் சேர்ந்து செயல்படுத்தவேண்டும் என்பது எனது அவா. இந்த நிகழ்வின் உடனடி விளைவு யாதென்று கேட்டால், எண்ணிப் பார்க்க முடியாத வண்ணம் பல புதிய கருத்துக்களை பல புதிய சிந்தனைகளை ஒருவருக்கொருவர் ஆழமாக விதைத்திருக்கின்றோம்.


தங்களை புதிதாக அடையாளப்படுத்திக் கொள்ளவோ தத்தமது இருப்பை மேலும் உறுதி செய்துகொள்ளவோ தேவையற்ற பல பெண் ஆளுமைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.  இவர்களது பேச்சுக்கு உயிரோட்டம் அதிகம். அவர்கள் தாம் வாழ்கின்ற சூழல், படித்த புத்தகங்கள், பழகிய மனிதர்கள் இவற்றினால் உருவாகப்பட்டவர்கள். அவர்களது தனித்துவமான சிந்தனைகள் இந்த சந்திப்புக்கு மகுடம் வைத்தது போல் அமைந்தது. கேட்பவையெல்லாம் பதிந்து விடுவதில்லை. பார்வையில் படுபவையெல்லாம் கவனத்தை ஈர்ப்பதுமில்லை. ஆனால் நான் கேட்டவற்றை பார்த்தவற்றை எண்ணி வியந்து போயிருக்கின்றேன். நான் செல்லும் மூலை முடுக்குகள் எல்லாம் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சில விடயங்கள் இன்றும் என் சிந்தனையுடன் தொடர்கின்றன.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியின் நிறைவில் என் அழகுத் தங்கை யாழினி பெண் கவிஞர்களின் சில கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுத்து ஓர் இசைக் கூத்து நிகழ்ச்சியின்மூலம் அழகான கலையனுபவத்தை ஏற்படுத்தியிருந்தார்.
ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் சென்றது. பெரும்பாலும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், சிரிப்பலைகள் என்று நள்ளிரவு கடந்தபின்னரே நாங்கள் தூங்கினோம். இரவில் ஒருவரையொருவர் கலாய்ப்பதற்காகவே தூக்கத்தைக் குறைத்துக்கொண்டோம். நாம் பேசிச் சிரித்து மகிழ்ந்தவற்றை பகிர்ந்து கொள்வதற்கு கொப்பி ரைட்இல்லாதபடியினால் அவற்றை நான் தவிர்த்துக்கொள்கிறேன்.


அதேநேரம் அதிகாலையில் எழுந்து போட்டிக்குக் குளிப்பது, காலையில் யாரையும் தூங்கவிடாமல் கும்மாளம் அடிப்பது போன்ற கருணையற்ற செயல்களுக்கும் குறைவில்லை. எட்டு நாட்கள் கலகலப்பாக இருந்த அந்த அழகிய வீடு இன்று ஓசையின்றி அமைதியாக எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கின்றேன்.
மலேசியத் தோழி மணிமொழியின் அண்ணா குடும்பத்தினரின் சமையலையும் அவர்களது அன்பான உபசரிப்பையும்  எடுத்துச்சொல்லவேண்டும். மீன்கறியும் சோறும், உள்ளூர் கடலுணவுகளும், வீட்டில் சிறப்பாகத் தயாரித்த விதவிதமான உணவுவகைகளும்  நிறைவைத்தந்தன. பெண்கள் சந்திப்பு முடிவுற்றபின் பெனாங் நகரை ஒன்றாகச் சேர்ந்து சற்றிப் பார்த்தோம்.
விமானநிலையத்தில் எம்மை வரவேற்று அழைத்துச்சென்று அனைத்து ஒழுங்குகளையும் சீரமைத்து பின்  திரும்பவும் விமானநிலையம் வந்து எம்மை வழியனுப்பிய முகங்கள் ஒவ்வொன்றும் நினைவில் எழுகின்றன. அனைவரையும் பற்றி விரிவாக எழுத நேரமில்லை. இத்தனை தீவிரமான அன்பான உள்ளங்கள் இலக்கியத் தளத்தில் இருக்கின்றார்கள் என்பதுதான் பெரும் வியப்பு. இணையம் என்னும் ஊடகத்தின் ஊடாக எமது நட்பு மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது என்பது பெரும் ஆறுதல்.
குறைகள் குறைந்த நிறைகள் நிறைந்த ஓர் அருமையான அமைப்பை ஊடறு உருவாக்கித் தந்திருக்கின்றதுஆழியாளையும் ரஞ்சியையும் தவிர அனைவருமே எனக்குப் புதியவர்கள். புதிய உறவுகளுடன் நெருங்கிப்பழக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எனது நண்பி ரஞ்சிக்கும்  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அரிய பணியை முன்னெடுக்கும் ஊடறு ரஞ்சிக்கும் அவர்தம் குழுவிற்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை மட்டும் தேடித்தேடிக் கடித்த நுளம்பையும், விமானப் பயணத்தினால் ஏற்பட்ட கால் வீக்கத்தையும், அதிக வெப்பம் மற்றும் தூசிகளினால் ஏற்பட்ட கண் வீக்கத்தையும், அவற்றைக் குறைப்பதற்காக  ஐஸ்கட்டியும் நுளம்புத்திரியுமாக நான் திரிந்ததையும் எனது செல்ல நச்சரிப்பாகக் குறித்துக்கொள்ளலாம்.   
இந்த நிகழ்வின் சாட்சியங்களாக சில புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளேன்.

ஊடறு பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பைத் தொடருங்கள்




No comments: