மெல்பனில் மனிதநேயமிக்க மனித உரிமைப்போராளியின் அறைகூவல் - முருகபூபதி

.
இன மத மொழி  வேறுபாட்டிற்கு   அப்பால்    ஒலித்த ஜயதிலக்க  பண்டாரவின்  நல்லிணக்கத்திற்கான குரல்
   
                                                               
" ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா "
சுமார்  ஐம்பது  வருடங்களுக்கு  முன்னர்  எங்கள்  ஊருக்கு  வந்திருந்த மகாகவி பாரதியின்  பேத்தி விஜயபாரதி   இந்தப்பாடலை  தமது மதுரமான  குரலுடன் பாடினார்.  இதே  பாடலை  நாம்  பல அரங்குகளிலும்   பாடசாலை  விழாக்களிலும்  வானொலிகளிலும் பாரதி  நினைவு  கொண்டாட்டங்களிலும்  கேட்டிருப்போம். பல நடன ஆசிரியர்கள் இந்தப்பாடலுக்கு  குழந்தைகளை  ஆடவைக்கும் காட்சி இன்றும் தொடருகின்றது.
சமூகத்திற்கான செய்தியை அந்தப்பாடல்  நூற்றாண்டு காலத்துக்கு முன்பிருந்தே   ஒலித்துக்கொண்டிருக்கிறது.
  அதே சமயம் பாரதியார் " சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் " என்று ஏன் பாடினார் ? என்று இன்றும் எங்காவது ஒரு  குரல் கேட்டவண்ணமிருக்கிறது.




இந்தப்பின்னணியில்  இலங்கையிலிருந்து  அவுஸ்திரேலியாவுக்கு அண்மையில் வந்திருந்த கலைஞர் தோழர் ஜயதிலக்க பண்டாரவின் குரலில் பாரதியின் அர்த்தம் பொதிந்த காலத்தால் அழியாத சாகவரம்பெற்ற அந்தப்பாடல்  இனநல்லிணக்கத்திற்காக பாலம் அமைக்கும் குரலாக அவுஸ்திரேலியா  மெல்பனில்  அண்மையில்  ஒலித்தது.
அவுஸ்திரேலியாவில் 1997 ஆம் ஆண்டு முதல் இயங்கும் மனித உரிமைக்கும் சமத்துவத்திற்குமான மக்கள் இயக்கம் ( People for Human Rights & Equality) மெல்பனில் கடந்த சனிக்கிழமை மாலை ஒழுங்குசெய்திருந்த  ஜயதிலக்க பண்டாரவின் இசை நிகழ்ச்சி Glen Waverley Community Centre மண்டபத்தில் நடைபெற்றபோது அவர் பாரதியின் பாடலையும் அழகாகப்பாடினார்.
இலங்கையில்  1978 - 1982 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சி அரங்கேறிய பல மேடைகளில் இவரைப் பார்த்திருக்கின்றேன்.

தோழர்கள் லயனல் போப்பகே, மாரசிங்க ஆகியோரினால் தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட  விடுதலைக்கீதம்  நிகழ்ச்சிக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுவருவார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி தோழர்கள் 1971 ஏப்ரில் கிளர்ச்சியையடுத்து,  சிறையில் வதைபட்ட  காலப்பகுதியில்  அங்கு கையில் கிடைத்த  சாப்பாட்டுத்தட்டம், தண்ணீர் குவளை, மற்றும்  தகர  டின்களில்  இசை எழுப்பி  பாடிய விடுதலைக்கீதங்கள் பின்னாளில் அவர்கள் சிறையிலிருந்து மீண்டதையடுத்து,    வாத்தியக்கருவிகள் சகிதம் மக்கள் திரண்ட அரங்குகளில் ஒலித்தன. தெற்கிலும்  வடக்கிலும்  கிழக்கிலும்  மலையகத்திலும் விடுதலைக்கீதம்  நிகழ்ச்சி  மக்களிடம்  வரவேற்பைக்கண்டிருக்கிறது.  அதில்  தமிழிலும் பாடல்கள் சிங்களத்தோழர்கள் சகோதரிகளினால்   பாடப்பட்டன.   அவை  டப்பாங்குத்து  பாடல்கள் அல்ல.
மக்களின் துயரை,  மக்கள் மீதான அடக்குமுறையை  பகிரங்கப்படுத்தும்,  அதிகாரவர்க்கத்தின்  ஏவல்படையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட  பிரேமாவதி மனம்பேரிக்காக பாடப்பட்ட  பாடல்களாக சமூகச்சிந்தனையோடு ஒலித்தன.
அந்த மேடைகளில்  பாடகராகவும் சித்தார் வாத்தியம் இசைக்கும் கலைஞராகவும் தோன்றிய தோழர்   ஜயதிலக்க பண்டார, இயல்பிலேயே மனிதநேயம் மிக்கவர். மனிதஉரிமைப்போராளி.


ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து 1971 ஏப்ரில் கிளர்ச்சியின்போது கைதானவர். விடுதலையானதன் பின்னர் அநுராதபுரத்தில் தொடங்கப்பட்ட  இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்புச்சேவையில் பணியாற்றினார்.
எப்பொழுதும் மனிதநேயத்திற்காகவும் மனித உரிமைக்காகவும் குரல்கொடுத்துவந்திருக்கும் தோழர் ஜயதிலக்க பண்டார முன்னைய அரசுகளின் காலத்தில்  அடக்குமுறைகளுக்கு ஆளானவர். தடுத்து வைக்கப்பட்டவர்.
இனச்சமத்துவம் பேசியதனால்  தீயசக்திகளின்  தாக்குதல்களுக்கும் ஆளானவர். எனினும் அந்த வர்க்கங்களுடன் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்தும் நீதிக்கும் சமத்துவத்திற்கும் மனிதநேயத்திற்கும் ஓயாமல் குரல்கொடுத்துவருபவர்.
உண்மையான கலைஞனிடம்  இனமத மொழி குல பேதமிருக்காது . பெரும்பான்மை சிங்கள சமூகத்திலிருந்து இவர் வந்திருந்தாலும்  தமிழ், முஸ்லிம், பறங்கியர் சமூகத்திற்காகவும் உலகெங்கும் வாழும் பாதிக்கப்பட்ட  மக்களுக்காகவும் தமது பாடல்களினால் குரல்கொடுத்துவருபவர். அதனால் சர்வதேசியவாதியாக இனம்காணப்படுகிறார்.
அன்று  மெல்பனில் நடைபெற்ற இவருடைய இசை நிகழ்ச்சியில் கணிசமான சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களும் அவுஸ்திரேலியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
திருமதி நளினி காசிநாதர் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் லயனல் போப்பகே,  கலைஞர் ஜயதிலக்க பண்டாரவை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். திரு. பிரையன் ஜெகநாதன் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
மெல்பனில் இசைவகுப்புகள் நடத்தும் மிருதங்க கலைஞர் எம்.ரவிச்சந்திராவின் மாணவர்கள் செல்வன்கள் நரேந்திரன் சிவகுமார், ஆதவன் விஜயமனோகரன் ஆகியோர் மிருதங்கம், கலாநிதி ஷண்ண விக்ரமசேகர தபேலா, அருணஶ்ரீ பிரசாந்த கீபோர்ட், கிறிஸ்டி பெர்ணான்டோ கிட்டார் இசைத்தனர்.


ஜயதிலக்க பண்டார  தாம் பாடிய பாடல்கள் பிறந்த கதையையும் சொன்னார். அவற்றுள் இலங்கை எதிர்நோக்கும் தேசிய இனப்பிரச்சினை, நீடித்த போர், மக்கள் சந்தித்த அடக்குமுறைகள்,  அவ்வப்போது நடந்த இனவாத வன்செயல்கள், தொடர்ச்சியாக நிகழ்ந்த காணாமல் போகும் துன்பியல், தொழிலாளர்கள் விவாசாயிகள் பாட்டாளி மக்களின் வாழ்வாதாரப்போரட்டங்கள் 1983 கலவர காலத்தில் வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற படுகொலைகள், முதலான பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்திகளையும் குறிப்பிட்டார்.
அவை வரலாறு மாத்திரமல்ல, அடக்குமுறையை எதிர்க்கும் மனிதநேயத்தை வலியுறுத்தும் மனித உரிமைக்காக குரல்கொடுக்கும் இனவேறுபாட்டை ஒழித்து ஒருமைப்பாட்டை வளர்க்கும் அறைகூவலுக்கான  செய்திகளையும் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
கலைஞர்கள், படைப்பாளிகள் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்பார்கள். நிற்கவேண்டும் என்பதே அவருடைய பாடல்களில் அடிநாதமாக ஒலித்த தார்மீகக்குரலாகவும் அமைந்திருந்தது.
அவருக்கு எமது மகாகவி பாரதி மிகவும் பிடித்தமான கவிஞராக இருந்தமையால் ஔிபடைத்த கண்ணினாய் பாடலையும்  பாடினார்.
என்னை இந்த நிகழ்வில் பெரிதும் ஆச்சரியப்படுத்திய விடயம் அவர், மறைந்த  எங்கள் கவிஞர் சிவரமணியையும் கொழும்பில் கொல்லப்பட்ட பிரபல ஊடகவியலாளர் தராக்கி சிவராம் ஆகியோரையும் நினைவுகூர்ந்து பாடியதுதான்.
சிவரமணியை எமது தமிழ் இலக்கிய உலகம் மறந்திருந்த சூழலில் அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார், அதற்கான சமூக அழுத்தங்கள் யாவை என்பதையும்  ஜயதிலக்க பண்டார சுட்டிக்காட்டி  அத்தகைய மரணங்கள் இனியும் தொடரக்கூடாது என்று சொன்னதுடன், அந்தச் சகோதரியின் ஆத்மா சாந்திடையவேண்டும் என்று பாடினார். அத்துடன் பிரேமாவதி மனம்பேரியையும் பாலியல் வன்முறையால் அழிக்கப்பட்ட   தமிழ்ச்சகோதரிகளையும் நினைவுபடுத்தி,   உயிருக்கு  நிறம் இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை, இனம் இல்லை. அனைவரும் சமமே என்று உரத்துக்குரல் கொடுத்தார்.
 கொதிக்கும் உச்சிவெய்யிலில்  தார்  உருகும் வீதியில் அமர்ந்து விவசாயிகள் சாத்வீகப்போராட்டம் நடத்தியவேளையில் அதனைப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு கவிஞர் தாமும் அதில் இணைந்துகொண்டு எழுதிய பாடலையும் அவர்  பாடினார்.
தனக்கு பாடல்கள் எழுதித்தந்த கவிஞர்களையும் அவர் நினைவுகூர்ந்தார். அதில் ஒருவர் மதுரகவி பாஸ்கரன்.
வெலிக்கடைச்  சிறை படுகொலை தொடர்பாக பாஸ்கரன் இயற்றி, ஜயதிலக்க பண்டார பாடிய பாடல் இதோ:
உலகம் அறியா அதிசயமொன்றை உரைப்பேன் கேட்பாயோ
உள்ளம் வெந்து வெதும்பிய வேதனை இசைப்பேன் கேட்பாயோ
வெலிக்கடை படுகொலை மனிதத்தின் படுகொலை
இனவெறி என்றொரு பேயிங்கே   தலைவிரித்தாண்டவம் ஆடியதே
தர்மமும் நீதியும் மானுட நேயமும் பாதங்களின் கீழ் வாடியதே
புத்தன் என்ன போதித்தான், போதித்தென்ன சாதித்தான்
பூட்டிய சிறையில் கைதிகள் மீது வேட்டைப்பற்கள் பதிந்தனவே
வெலிக்கடை படுகொலை மனிதத்தின் பலிக்கதை
நாட்டின் காவல் அரனாக அரசென்ரொன்று இருக்கையிலே
சிறைகளின் கதவுகள் திறந்ததும்
உள்ளே இனவெறி நூழைந்தது அதிசயமே
பேயரசாட்சி செய்ததுவோ பிணங்கள் தின்றது சாத்திரமோ
மானுட  தர்மம் மரித்தது என்று உதிரம் சரிதம் எழுதியதோ
வெலிக்கடை படுகொலை மனிதத்தின் பலிக்கதை உ லகம் அறியா......
----------0------

No comments: