காவிரி பிரச்னை கடந்து வந்த பாதை...!

.

மீண்டும் தண்ணீர் எண்ணெயாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட முடிகிறது. ஆனால், ஒரே தேசத்திற்குள் உள்ள மூன்று மாநிலங்களுக்குள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்னைகள். பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம், இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத இறந்த காலம் ஆகிவிட்டது. வெறும் 15,000 கன அடி நீர் பத்து நாட்களுக்கு பகிர்ந்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் சொல்லியதற்கே சாலை மறியல், முழுக் கடையடைப்பு என கர்நாடகவுக்கு காய்ச்சல் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கர்நாடகாவுக்குள் நுழைய முடியாமல் வரிசைகட்டி ஒசூரில் நிற்கிறது. கர்நாடகாவும் தமிழகத்துக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்திவிட்டது. மாண்டியா பகுதியில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இது எதுவும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அப்படியே அமல்படுத்தச் சொல்லியதற்காக இல்லை. வெறும் 15,000 கன அடி நீர் தரச் சொல்லியதற்கு தான் இவ்வளவும்.காவிரி நதிநீர் பங்கீடு நூற்றாண்டு பிரச்னை:
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை ஏதோ சில தசாப்தப் பிரச்னை அல்ல; அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலச் சிக்கல். 1807-ம் ஆண்டே காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் துவங்கிவிடுகிறது. பேச்சு வார்த்தையும் அதே காலக்கட்டத்தில் துவங்கிவிடுகின்றன. பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க 1866-ம் ஆண்டு மைச்சூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பெருந்திட்டத்தைத் தீட்டுகிறார். இதற்கு முதலில் மெட்ராஸ் மாகாண அரசு ஒத்துக்கொண்டாலும், நாட்கள் செல்லச் செல்ல... இதனால் மெட்ராஸ் மாகாணத்துக்கு வரும் நீரின் அளவு குறையுமே என்று அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஒரு ஒப்பந்தம் தயராகிறது. இதுதான் காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் படி மைசூர் அரசு காவிரியின் குறுக்கே ஏதேனும் அணை கட்டத் திட்டமிட்டால், அதற்கு மெட்ராஸ் மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும். பாசனப் பரப்பை பெருக்குவதற்கும் மெட்ராஸ் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படுகிறது.


மீண்டும் 1910-ம் ஆண்டு ஒரு பிரச்னை வெடித்தது. மைசூர்அரசு காவிரியின் குறுக்கே கண்ணாம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி கொள் அளவில் ஒரு அணை (கிருஷ்ணராஜசாகர் அணை) கட்டத் திட்டமிடுகிறது. அதே காலக்கட்டத்தில், மெட்ராஸ் அரசும் சேலம் மாவட்டம் மேட்டூரில் ஒரு அணை கட்டத் திட்டமிடுகிறது. இது குறித்தப் பேச்சுவார்த்தை பல சுற்றுகளா நடக்கிறது. ஆனால், ஒருமித்த கருத்து எதுவும் எட்டப் படாதததால், இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சகம் இதில் தலையிட்டதால், 1924-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த ஒப்பந்தம், இருவரும் அணையை கட்டிக் கொள்ள அனுமதி வழங்குகிறது. அது மட்டுமல்லாமல், இரு மாகாணங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்குகிறது. அதே நேரம், இந்த ஒப்பந்தத்துக்கான ஆயுள் 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படுகிறது.
மீண்டும் சிக்கல்...!
எல்லாம் சரியாகப் போய்கொண்டிருந்தது போல், ஒரு வெளித் தோற்றம் இருந்தாலும், உள்ளூர பிரச்னை புகைந்து கொண்டே இருந்தது. பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு கர்நாடகா, தான் வஞ்சிக்கப்பட்டதாகவே எண்ணியது. காவிரி ஆறு, கங்கை, பிரம்மபுத்திரா போல் வற்றாத நதி இல்லை. அது பெரும்பாலும் மழையை நம்பியே இருப்பதால், மழை குறையும் போதெல்லாம் நதிநீர் பங்கீட்டில் சிக்கல் வெடித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையே 1960 களில், கர்நாடக அரசு மேலும் இரண்டு அணைகள் கட்டும் பணிகளைத் துவங்கியது. அதற்குத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. ஒப்பந்தத்தின்படி, புதிதாக அணைகளை ஏற்படுத்த தமிழகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், கர்நாடகம் இதைப் பொருட்படுத்தாமல் பணிகளைத் துவங்கியது. ஒப்பந்தம் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு தலைபட்சமாகப் போடப்பட்டது. அதற்கு கீழ்படிய முடியாது என்பதுதான் கர்நாடகத்தின் வாதம். இதற்குள் 1924-ம் ஆண்டு ஒப்பந்தமும் காலாவதி ஆனது.

பல சுற்றுப் பேச்சுவார்த்தை...!
கர்நாடகாவின் வாதம், காவிரி கர்நாடகத்தில்தான் உற்பத்தி ஆகிறது. அதனால், எங்களுக்கு அதன் மீது அதிக உரிமை இருக்கிறது என்பதாக இருக்கிறது. இன்னொரு பக்கம், தமிழ்நாடு, காவிரி ஆறு தமிழநாட்டில்தான் அதிக தூரம் பயணிக்கிறது. அதனால், எங்களுக்கே அதிக உரிமை இருக்கிறது என்பதாக இருக்கின்றது. மீண்டும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. 1976-ம் ஆண்டு, காவிரி உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கொண்டு, இரு மாநிலமும் ஏற்றுக்கொண்ட ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, தமிழக அரசு கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசு ஆட்சி வருகிறது. அதன்பின், பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் அரசு, இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீண்டும் 1892 - 1924 ஒப்பந்தமே செயல்படுத்தவேண்டும் என்கிறது.
நீதிமன்றம் சென்ற விவசாயிகள்...!
எந்த உருப்படியான தீர்வும் எட்டப்படாததால், தஞ்சை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை எடுத்துச் செல்கிறார்கள். வழக்கை விசாரித்த நீதிமனறம், பிப்ரவரி 1990-ம் ஆண்டு, இரண்டு மாநிலங்களும் பேசி, இந்தப் பிரச்னைக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஒரு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்தச் சுமூகமான தீர்வும் எட்டப்படாததால், நீதிமன்றம், மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் ஏற்ப்படுத்த உத்தரவிடுகிறது. ஜூன் 2, 1990-ம் ஆண்டு ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்படுகிறது.

பற்றி எரிந்த கர்நாடகா...!
1980 முதல் 1990 வரை தமிழகமும், கர்நாடகமும் பங்கிட்டுக் கொண்ட நதி நீர் அளவை ஆராய்ந்து, 1991-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்குகிறது. அதன்படி, 205 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும். அதே நேரம் கர்நாடகா, தன் சாகுபடிப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் பெரும் வன்முறை வெடிக்கிறது. ஏறத்தாழ 12 தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடாகாவிலிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள். தமிழர்கள் கணிசமான வாழும் பகுதியில் ஏறத்தாழ ஒரு மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறது. கர்நாடக அரசு, இடைக்கால தீர்ப்புக்கு தடைவிதித்து ஒரு அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, அவசர சட்டத்தை ரத்து செய்கிறது.
டிசம்பர் 11, 1991-ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுகிறது. ஆனால், கர்நாடக அரசு அந்த ஆணைக்கு கீழ்ப்படிந்து, உரிய அளவு தண்ணீரைத் தர மறுக்கிறது. ஜூலை 1993, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி அருகே , தண்ணீர் கோரி உண்ணாவிரதத்தில் அமர்கிறார்.
அடுத்தடுத்து ஆண்டுகளில் பெய்த பெருமழையால் காவிரிப் பிரச்சனையின் வெப்பம் குறைகிறது. எல்லாம் சில ஆண்டுகள் தான். மீண்டும் 1995-ம் ஆண்டு, போதிய மழையின்மையால் காவிரிப் பிரச்னை பூதகரமாகிறது. தமிழ்நாடு மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது. உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட வேண்டுமென்று கோருகிறது. உச்சநீதிமன்றம் 11 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுகிறது. ஆனால், இதையும் கர்நாடகா அரசு நிராகரிக்கிறது. தமிழகஅரசு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.
உச்சநீதிமன்றம், இதில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது. அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். அதில் இரண்டு மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு  6 டி.எம்.சி மட்டுமே  தரச் சம்மதிக்கிறது.
1998-ம் ஆண்டு, பிரதமரின் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்படுகிறது. இதில் புதுச்சேரி, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தின் முதல்வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இதற்கு ஆலோசனை வழங்க, காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது.
மழையின் காரணமாக எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்க, 2002-ம் ஆண்டு மீண்டும் நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வெடிக்கிறது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையம், தமிழகத்துக்கு 9000 கன அடி நீர் வழங்க உத்தரவிடுகிறது. ஆனால், இது தமிழகத்துக்கு உவப்பானதாக இல்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக முடிவு செய்கிறது. கெடுவாய்ப்பாக, தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்த செய்தி கர்நாடகவுக்கும் நல்ல செய்தியாக இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து, செப்டம்பர் 18, 2002 ஒரு விவசாயி, கபினி அணையில் குதித்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்.
இறுதி தீர்ப்பு!
ஏறத்தாழ 16 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை, காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007-ம் ஆண்டு வழங்குகிறது. அதன்படி, கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும், கேரளாவுக்கு 21 டி.எம்.சி-யும் பகிர்ந்துக் கொள்ளவேண்டும். இம்முறையும் கர்நாடகா எதிர்த்தது. பிப்ரவரி 12-ம் தேதி, தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அளவில் கடையடைப்பில் ஈடுபட்டது.
மார்ச் 18, 2007-ம் தேதி, அப்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஆனால், அதன் பிறகும் பிரச்னை ஓய்ந்தப்பாடில்லை. உச்சநீதிமன்ற நீதிபதியே... ‘வாழுங்கள்... வாழவிடுங்கள்...’ என்று கருணை அடிப்படையில் தமிழகத்துக்கு நீரை ஒதுக்குங்கள் என்று கூறும் நிலையில்தான் நிலை உள்ளது.
‘நடந்தாய் வாழி காவிரி...’ என்றது சிலப்பதிகாரம். ஆனால், உண்மையில் காவிரி தவழ்ந்துக்கூட வரவில்லை.
என்னதான் பிரச்னை...?
தண்ணீர் பிரச்னை இல்லை. உண்மையில் காவிரியுடன் பின்னி பிணைந்திருக்கும் அரசியல்தான் பிரச்னை. கர்நாடகா காவிரி முழுவதையும் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. ஆனால், உலக அளவில் நதி நீர் பங்கீட்டுக்கு வழிகாட்டியாக இருக்கும் ‘நைல்’ ஒப்பந்தம். ஆறுகள் ஜனிக்கும் மாநிலத்தைவிட, அது பயணிக்கும் மாநிலத்துக்குத்தான் அதிக உரிமை என்கிறது. இதன்படி பார்த்தால், காவிரியில் தமிழகத்துக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. ஆனால், இதைக்கூட முன் வைக்கவேண்டாம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்யையே பார்ப்போம்.
அதன்படி, காவிரியில் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அப்படியானல், தமிழகத்துக்கு ஏறத்தாழ 45 சதவிகித உரிமை இருக்கிறது. இது போன்ற, மழை குறைவான இக்கட்டான சூழலில் இருக்கின்ற தண்ணீரை, இந்த சதவிகிதக் கணக்கை வைத்துப் பகிர்வதுதான் அறமாக இருக்கும். ஆனால், காவிரி விஷயத்தில் கர்நாடகா என்றும் அறத்தின் பக்கம் நின்றதில்லை...!

நம் தவறு!
காவிரி நதிநீரைப் பெறவேண்டும். அது நம் உரிமை. அதில் எள் முனை அளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளில் தமிழகத்தில் நீர் ஆதாரத்தைப் பெருக்க நாம் என்ன செய்திருக்கிறோம்...? காவிரி தண்ணீரைச் சேமிக்கப் புதிதாக 400 ஏரி, குளங்களை கர்நாடக அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இது ஏதோ, கர்நாடகாவை குற்றம் சுமத்துவதற்காக நாம் இட்டுகட்டும் குற்றச்சாட்டு கிடையாது. இது கர்நாடாகாவே ஒப்புக் கொண்ட பேருண்மை. நாம் என்ன செய்திருக்கிறோம்... எத்தனைப் புதிய நீர் நிலைகளைப் உருவாக்கி இருக்கிறோம். எத்தனை நீர் நிலைகளைச் செப்பனிட்டு இருக்கிறோம். நாம் நம்மையும் கொஞ்சம் சுயப்பரிசோதனை செய்து கொள்வோம்.
உரிமையைக் கோரும் அதே நேரம். நம் கடமையிலும் பழுதில்லாமல் பார்த்துக் கொள்வோம்.
மத்திய அரசின் பாகுபாடு!
இது கர்நாடக அரசு நியாயத்தின் பக்கம் நின்றதில்லை என்பதையெல்லாம் கடந்து, மத்திய அரசின் துரோகமும் இதில் இருக்கிறது. ஆம். கிருஷ்ணா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், நர்மதா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்தவுடன், அத்தீர்ப்பு உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய அரசு குறுகிய காலத்தில் அதற்கான பொறியமைவையும்  ஏற்படுத்தியது. ஆனால், காவிரி விஷயத்தில் அவ்வாறு மத்திய அரசு செயல்படவில்லை. தீர்ப்பு வந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான், அத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதுவும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
தீர்ப்பில், கிருஷ்ணா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், ஏற்படுத்தப்பட்ட பக்ரா மேலாண்மை வாரியம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இது நாள் வரை அது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை.  இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால், நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில்,  மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ள இந்த அமைப்பின் முடிவு தான் இறுதியானதாக இருந்திருக்கும். அதாவது அணைகள் சுயேட்சை அதிகாரம் கொண்ட இந்த அமைப்பின்  கண்காணிப்பின் கீழ் வந்திருக்கும்.  ஆனால், அரசிதழில் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டு காலம் ஆகியும், இந்த வாரியம் அமைக்கப்படவில்லை.
மத்திய அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்க, காவிரியை எப்போதும், தமிழக - கர்நாடகா பிரச்னையாக மட்டுமே வைத்திருக்க விரும்புகிறதோ... அதனால் தான், தீர்ப்பின்  படி இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது...? உண்மையாக காவிரி பிரச்னையில் மத்திய அரசிற்கு அக்கறை இருந்தால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அது தான் இப்பிரச்னைக்கு நியாயமான தீர்வாக இருக்கும்.
nantri http://www.vikatan.com/

No comments: