.
தமிழில், கரிசல்காட்டு இலக்கியத்தின் முடிசூடா மன்னர் எனக் கருதப்படுபவர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிய தளத்தில் ஆரவாரமின்றி இயங்கி வரும் மதிப்புக்குரிய ஆளுமை. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கென கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு `இயல்` விருதினை இவருக்கு இந்த ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.
கோவில்பட்டிக்கு அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில் பிறந்த கி.ரா. இயல்பில் ஒரு விவசாயி. கிராமத்துக்காரர். தேர்ந்த கதை சொல்லியும் கூட. அவருக்கு வாய்த்த கிராம வாழ்வே அவரின் சுற்றுச்சூழலான கரிசல் நிலத்து வாழ்வின் பல்வேறு அம்சங்களை எழுத்துப்படம் பிடிக்கவைத்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என அவரது படைப்புகள், அந்தப் பகுதியில் மனிதவாழ்வின் போராட்டம், இயலாமை, பரிதவிப்பு, சோகம், ஆசை என வாழ்வின் தவிர்க்கமுடியா படிகளை எழுத்து வடிவில் பிரதிபலித்தன. கரிசல் நிலத்தின் வெட்ட வெளி, வறுத்தெடுக்கும் வெயில், வேர்வையில் மின்னும் விவசாயிகள், வேப்பமரக் கிராமங்கள் என விதவிதமாகத் தெரியும் ஒரு காலகட்டத்தின் தமிழ்ப்பிரதேசத்தின் மறக்க முடியாக் காட்சிகள் அவரது எழுத்தில் பிரகாசம் அடைகின்றன.
1958ல் சரஸ்வதி இலக்கிய இதழில்தான் இவரது சிறுகதை வெளிஉலகப் பிரவேசம் செய்தது. அதற்குப்பின் ஏகப்பட்ட சிறுகதைகளை எழுதினார் கி.ரா. ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த இவரது நாவல் `கோபல்லபுரத்து மக்கள்` 1991-ல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. புகழ்பெற்ற பெங்குயின் பதிப்பகம் (Penguin) இந்நூலின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டுள்ளது. கதவு, கோமதி, கன்னிமை, காலம் காலம், இல்லாள், தமிள் படிச்ச அளகு, தேள்விஷம், நாற்காலி போன்ற இவரது சிறுகதைகள் சுவாரஸ்யமானவை. இவற்றில் சில நாட்டுவழக்கோடு நகைச்சுவையும் கொண்டவை. குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் கதைகள் எழுதியுள்ளார் கி.ரா. பெரிசுகளுக்காக அவர் எழுதிய `மறைவாய்ச் சொன்ன கதைகள்` தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தமிழின் முதல் வட்டார சொல்வழக்கு அகராதியைப் தொகுத்தவர். நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம் என்கிற நூலையும் எழுதியுள்ளார் கி.ரா.
‘கதைசொல்லியாக அவரே எனது ஆசான், தமிழ் இலக்கியத்தில் கரிசலின் குரலை உயர்த்திப் பிடித்த அவரே தமிழின் உன்னதக் கதைஞன்’ என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்தாளர் சுந்தரராமசாமி, கி.ரா.வின் கதைகளில் ரஷ்ய எழுத்தாளர் ஆன்ட்டன் செகாவின்(Anton Chekhov) சாயல் இருப்பதாகச் சொன்னார். `அதைப் படித்தபின்தான் நான் செகாவின் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்` என்கிறார் கி.ரா.!
கி.ரா.வை 2012 அக்டோபரில் புதுடெல்லியில் பார்த்திருக்கிறேன். தில்லித் தமிழ்ச்சங்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தாளராக வந்திருந்த கி.ரா. தமிழ்நாடு ஹவுஸில் தங்கியிருந்தார். காங்கோவில் இந்திய தூதரகப்பணியில் இருந்த நான் விடுப்பில் இந்தியா வந்து டெல்லி-முனிர்க்காவில், சகோதரரின் வீட்டில் தங்கியிருந்தேன். எனது மைத்துனி ஒரு இலக்கிய வாசகர். ரசிகர். அவருடன் மாலையில் தமிழ்நாடு ஹவுஸ் சென்று கி.ரா.வை சந்தித்துக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
95 வயதான கி.ரா. பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கிறார்.
nantri aekaanthan.wordpress.com
No comments:
Post a Comment